மூட்டை சுமந்து
மூச்சு வாங்கிய முதியவர்
மூலையில் சுருண்டார்...!
முந்நூறு ரூபாய் அரை நாள் கூலியாம்
முழுநாள் உழைப்பில்
கால் நாள் உழைப்பு
காலடியில் விழுந்து விட்டது..!
கால் நாள் கூலி
காணாமல் போய்விட்டது..!
இல்லையில்லை பிடித்து வைத்துகொண்டார்கள்..!
இருக்கின்ற இந்த மூன்று நூறில்
அரிசி வாங்குவேனா - மூச்சு விட
அல்லல்படும் மனிசிக்கு
முட்டுக்குளிசை வாங்குவேனா?
முந்தை நாள் வாங்கிய
முன் வீட்டுக்கடனைக்கொடுப்பேனா?
இழுக்கின்ற மூச்சு
இன்னும் அதிகமாய் இழுக்க
முனகியபடி முதியவர் - அந்த
மூலையினை வெறித்துப்பார்த்தார்...!
முதியவனை போன்றே
முதுகில் மூட்டைகளை
சுமந்து அணிவகுத்து செல்லும்
துரு துருத்தான் எறும்புகளை நோக்கினார் ..!
துரும்பாய் வாழும் சின்ன ஜீவன்கள்
துடிப்போடு தமக்கான உணவினை
முன்னேற்பாடாய் சேமிக்கின்றன...!
முட்டி மோதி இடித்து தள்ளி
முழுப்படியே நசித்துச்செல்லும்
மனிதர்களைப் பார்த்து அவை
முடங்கிக் கிடப்பதில்லை...!
வீதிகளில் நின்று கையேந்தி
பாதி வயிறு நிரப்புவதில்லை...!
உணவினை சுமந்து வரும் சக எறும்பை
உதைத்துத்தள்ளி, திருடி உண்பதில்லை..!
வாரிசுகளை நம்பி இருப்பதை
வாரிக்கொடுத்து தள்ளாடும் வயதில்
கண்ணீர் சிந்துவதில்லை...!
மெல்ல எழுந்து பெருமூச்செறிந்தார் முதியவர்...!
ஐந்தறிவு ஜீவனுக்குள்ள முன்னேற்பாடு அறிவு
ஆறறிவு உள்ள எனக்கு இல்லாமல் போனதோ?
சிந்தித்து முன்னேற்பாடாய் எனது உழைப்பினை
சிறுகச்சேமித்து வைக்காமல் பெற்ற மக்களை நம்பி
முட்டாளாய் போய் விட்டேன்..!
முன்னேற்பாடு இல்லாமல்
முதுமையில் நான்
முடங்கிப் போனேன்..!
முணு முணுத்த படி மெல்ல எழுந்தார்
முந்நூறு ரூபாய்களை இறுகப்பற்றியவாறே...
No comments:
Post a Comment