Sunday, March 29, 2015

இந்தியாவின் இதயம்

மாநிலங்களை அறிவோம்: மத்தியப் பிரதேசம்- 

பா. அசோக்   


மத்தியப் பிரதேசத்தின் இடவமைவை நர்மதை மற்றும் சோன் பள்ளத்தாக்குகள் வரையறுக்கின்றன. பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்பு காலங்கள் முதல் மத்தியப்பிரதேச வரலாறு தொடங்குகிறது. பிம்பேத்திகாவில் உள்ள 600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்கின்றன.
ஆண்ட பரம்பரைகள்
இந்தியாவின் மத்தியப் பகுதியைச் சாகர்களும் குஷானர்களும் மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப் பெரும் ராஜ்ஜியமாக மவுரியர்களும் ஆண்டனர். வடக்குப் பகுதியில் சாதவாகனர்களும், மற்றப் பகுதிகளைச் சத்திரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமிபுத்திர சதாகாரணி ஆதிக்கம் செலுத்தினர்.
அவருக்குப்பிறகு குப்தர்கள், ஹூனர்கள், யசோதர்மன், ஹர்ஷர், ராஷ்ட்டிரகூடர்கள், பராமார்கள், பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், டெல்லி, துருக்கி, குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள், மராட்டியர்கள், ஹோல்கர்கள், மஹாகோசர்கள், சிந்திக்கள், போபாலை ஆண்ட ஆப்கானிஸ்தான் அரசர் தோஸ் மொமது கான் என ஆண்ட பரம்பரையின் பட்டியல் நீளமானது.
பிரிட்டிஸாரின் சி.ஐ.ஏ.
இந்தச் சூழலில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். வங்கம் முதல் பாம்பே, மெட்ராஸ் வரை தங்கள் எல்லையை விரிவாக்கினர். இதற்காக மராட்டியர்களை விரட்டியடித்துப் பெரும்பாலான மத்தியப்பிரதேசப் பகுதிகளைக் கைப்பற்றினர். அவற்றில் சில பகுதிகளைச் சென்ட்ரல் இந்தியா ஏஜென்சி (சி.ஐ.ஏ.) என்ற அமைப்பை ஏற்படுத்திக் கண்காணித்து வந்தனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களில் ம.பி.யின் பங்கு மகத்தானது. முதல் சுதந்திரப் போரில் வீரமரணம் அடைந்த ராணி லட்சுமி பாய் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்ட விடுதலை வீரர்களைத் தந்த மாநிலம். ஜபல்பூர் கொடி சத்தியாகிரகம், பழங்குடியினர் நடத்திய உப்பு சத்தியாகிரகம் ஆங்கிலேயரை மிரளச்செய்தன.
பிரம்மாண்ட உதயம்
1947-ல் நாட்டின் விடுதலைக்குப்பிறகு மத்தியப் பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1956-ல் மாநிலங்கள் மறு சீரமைப்பு சட்டத்தின் கீழ் இவற்றை ஒன்றிணைத்து இந்தியாவின் முதல் பெரிய மாநிலமாக உருவெடுத்தது மத்தியப்பிரதேசம். போபால் தலைநகரானது.
கடந்த 2000 நவம்பர் 1-ல் சில பகுதிகளைப் பிரித்துப் புதிதாகச் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் முதல் பெரிய மாநிலம் என்ற பெருமையில் இருந்து ஒருபடி இறங்கி, ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்துக்கு வந்தது.
எல்லைகள்
மேற்கே குஜராத், வடமேற்கே ராஜஸ்தான், வடகிழக்கே உத்தரப்பிரதேசம், கிழக்கே சத்தீஸ்கர், தெற்கே மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நடுவே ம.பி. அமைந்துள்ளது. வட மற்றும் தென்னிந்தியாவின் எல்லையாக நர்மதை ஆறு விளங்குகிறது.
மாநில மக்கள் தொகை 7.26 கோடி. 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். 20 சதவீதம்பேர் மலைவாழ் மக்கள். டிராவிட், சஹாரியா, பாரியா, படால்கோட் பாரியா, பீல், சாண்டியா, கோலர்கள், பாணிக்கா, தானுக், சவுர் கோண்ட் முக்கியப் பழங்குடிகளாகும்.
மாநிலத்தின் முதல் மொழி ஹிந்தி. ஆங்கிலம் இரண்டாவது மொழி. மராத்தி, உருது, மால்வி, பண்டேலி, பாஹேலி, நிமாடி, தெலுகு, பிலோடி, கோதி, கொர்கு, கால்டோ, நிகாலி ஆகிய மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.
முதன்மை தொழில்
விவசாயமே முதன்மை தொழில். 23,233 ஹெக்டேரில் சாகுபடி நடக்கிறது. கோதுமை, சோயா, சோளம், பூண்டு முக்கிய விளைபொருள்கள். இவை தவிர, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, எண்ணை வித்துகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகளின் சாகுபடியும் நடக்கிறது. ஓபியம் உற்பத்தியில் ம.பி.யே முதலிடம்.
நர்மதா, சம்பல், தபதி, பேட்வா, சோன், ஷிப்ரா, காளிசிந் மற்றும் தாவா நதிகளும் கென், சோனார், பார்னா மற்றும் டான் ஆறுகளும் வளம் சேர்க்கின்றன.
கனிம வளத்தில் 2-வது பணக்கார மாநிலம். வைரம், சுண்ணாம்புக்கல், இரும்பு, மாங்கனீசு, பாக்சைட், செப்பு, பாஸ்பேட், டோலமைட் மற்றும் நிலக்கரி தாதுகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் வனம். சிமெண்ட் தயாரிப்பில் 3-வது இடம்.
படிப்பறிவு 70.6 சதவீதம். பாலின விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள். இந்துக்கள் 91.15 சதவீதம். இஸ்லாமியர்கள் 6.37 சதவீதம். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமண மதத்தினர் 2 சதவீதம் வசிக்கின்றனர்.
உலகப்புகழ் பெற்ற திருவிழா
பெரும்பாலான பண்டிகைகள் விவசாயிகளின் வேலை நாட்களைப் பொருத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. சிம்ஹாஸ்தா, சிவராத்திரி, ராமநவமி, ஹிரா பூமியா, பிர்புதான், நாகாஜி, டேடாஜி, மகாமிருத்துயன்ஜெய் பண்டிகைகளும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பாபா ஷகாபுதீன் அவுலியா மற்றும் 3 நாள் திருவிழாவான ஆலாமி தாபிலீகி இஸ்திமா பண்டிகை பிரசித்திபெற்றது. இதில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து இஸ்லாமியர்கள் வருகின்றனர்.
கஜூராஹோ
ஆதி முதலே கலை இலக்கியத்தில் கோலோச்சி வந்துள்ளது மத்தியப் பிரதேசம். பராமரா மன்னன் போஜ் பல்துறைகளில் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர். சாண்டெலா வம்சத்தினர் உலகப் புகழ்பெற்ற கஜூராகோ கோயில் நகரத்தை இங்குதான் உருவாக்கினர்.
மேலும் இசை மற்றும் நாட்டிய விழாக்களும் அரங்கேறி வருகின்றன. இதன்படி லோக்ரங் மற்றும் லோக்ரன்ஜன், தான்சேன் இசைவிழா, கான்கவுர், பாதை, பாரெடி, நவுராதா, அகிராய், பகோரியா உஸ்தா அலாவுதீன்கான் இசைவிழா, காளிதாஸ் சமரோ, உஜ்ஜியினி மற்றும் கஜூராஹோவில் நடைபெறும் நாட்டிய விழாக்கள் முக்கியமானவை.
இவைத் தவிர தியாகம், வீரம், காதல், கடமை மற்றும் தீரச்செயல்களைக் கதைகளாகக் கூறும் வகையிலான நாட்டுப்புறப் பாடல்கள் பிரபலமானவை. ஓவியங்கள் தீட்டுவதில் இம்மாநில மக்கள் வல்லவர்கள். பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையை வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்கு இந்த மாநிலத்துக்குண்டு.
மகுடங்கள்
சான்ச்சியில் அசோகர் கட்டிய சான்சி ஸ்தூபிகள், போஜ்பூரில் கட்டிமுடிக்கப்படாத அழகிய சிவன் கோயில், பச்மாரியின் சாந்தமான அழகு, ஒளிரும் பளிங்குப் பாறைகள், பென்ச், பண்ணா, சாத்புரா, கண்ஹா மற்றும் பந்தவ்கார்ஹ் புலிகள் சரணாலயங்கள், மாதவ், பாசில், வான் விஹார் தேசியப் பூங்காக்கள், ஆதி மனிதர்களின் குகை வாழ்விடங்கள், தனித்த புகழுடைய கஜுராஹோ கோயில் ஆகியவை மத்தியப் பிரதேசத்தின் மகுடங்கள்.
நாட்டின் நடுவே அமைந்ததால் மட்டுமல்ல, செறிவான கலை கலாச்சாரங்களின் குறியீடாகத் திகழும் மத்தியப்பிரதேசம், இந்தியாவின் இதயம் என அழைக்கப்படுவது பொருத்தமானதுதான். 

நன்றி தமிழ் இந்து
 

Thursday, March 26, 2015

மனசு போல வாழ்க்கை-1 :

 முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

9
ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்!
படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?
மன அமைப்பு
நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது.
உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி. திருமணத் தடையா இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். இடுப்பு வலியா எங்கள் ஆஸ்ரமம் நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.
மன அசதியா? இந்தப் புத்தகம் படியுங்கள். எங்கள் பயிற்சிக்கு வாருங்கள். அதிர்ஷ்டம் வேண்டுமா? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப் போகிறவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை.
என்ன காரணம்? தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.
சுடுதண்ணீர் சிகிச்சை
ஒரு உளவியல் சிகிச்சையாளனாய் இதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒரே சிகிச்சை முறையை மேற்கொள்ளும் இருவருக்கு மிகுந்த மாறுபட்ட பலன்கள் கிடைப்பது உண்டு. ஒருவர் முழு பலனையும் ஒருவர் மிகக்குறைவான பலனையும் அடைவர்.
அது போலப் பல சமயங்களில் என் வார்த்தைகளும் வழிமுறைகளும் எனக்குப் பயன்படுவதை விட என்னிடம் வருபவர்களுக்கு அதிகம் பயன்படும். ஒரு முறை தீராத தலைவலிக்குச் சிகிச்சைக்கு என்னிடம் வருபவர் ஒருவருக்கு லூயிஸ் ஹேயின் அஃபர்மேஷன் முறை கொண்டு ஒரு சிகிச்சை அளித்தேன்.
நம்ப முடியாத அளவுக்கு வேகமாக முழுமையாகக் குணமானார். என் தலைவலிக்கு நான் முதல் முறையாக அந்த வழிமுறையைப் பயன்படுத்திய போது கூட ஏற்படாத மகத்தான மாறுதல் அது.
ஒரு வேளை இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமா? வீரிய மருந்து என்று சொல்லிச் சுடுதண்ணீரைச் ஊசி மூலம் செலுத்தினால் கூடச் சிலருக்குப் பலன் ஏற்படும். இதை Placebo Effect ஆங்கிலத்தில் சொல்வார்கள். ராசியான டாக்டர் என்று சொல்வது கூட நம்பிக்கை சிகிச்சையின் ஒரு பகுதி தான். கிறிஸ்துவ மதத்தில் Faith Healing மிகப்பிரபலம்.
பெரும் கண்டுபிடிப்பு
நம் கிராமங்களில் அம்மனுக்காகத் தீமிதி சென்று காயம் படாமல் வருவது எப்படி முடிகிறது? தீக்குச்சி நுனி பட்டால் விரல் தீய்ந்து போகுமே! இது பக்தி அல்ல ஆழ்மனச் சக்தி என்று சொல்லும் ஆண்டனி ராப்பின்ஸ் போன்றோர் அமெரிக்காவில் நடத்தும் என். எல்.பி (Neuro Linguistic Programming) பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும் நெருப்பில் நடக்கிறார்கள்.
கடவுள் சக்தியோ மனித ஆற்றலோ நம்பிக்கையால் பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்றால் ஏன் இதை இளைஞர்களுக்குப் பள்ளியிலிருந்தே சொல்லித்தரக்கூடாது? உண்மை என்னவென்றால் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை விட நம்பிக்கை குலைந்து கிடக்கிறார்கள் இங்கு.
மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.
இரண்டும் நிஜங்கள்
பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான்.
இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.
“எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி.” “நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”
இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும்.
“என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.
எண்ணமே வாழ்வு
நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.
“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!
எல்லாருக்கும் வெற்றி வேண்டும். ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?
உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.
கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:
“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”

வடிவங்களின் அரசி:

 கணிதம் அறிவோம்

எஸ். ஸ்ரீதர்


அறிவியலின் அரசி கணிதம். கணிதத்தின் அரசி எண்கள். அது போல் வடிவங்களின் அரசி வட்டம்.
ஏன் வட்டம் முக்கியம்?
பூமி, சூரியன், நிலா, பழங்கள், காய்கள், மலர்கள், பாத்திரங்கள், எந்திரங்கள் என இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் வட்டம் அல்லது கோள வடிவத்தில் அல்லது கோள வடிவத்தை நோக்கித் தான் அமைந்துள்ளன.
ஏன் உலகின் அனைத்து வடிவங்களும் வட்டத்தை நோக்கியோ அல்லது வட்டத்தின் முப்பரிமாண வடிவமான கோள வடிவத்தை நோக்கியோ அமைந்துள்ளது?
இதனை ஒரு எளிய சோதனை மூலம் அறியலாம்.
ஒரு குறிப்பிட்ட அளவு நீளமுள்ள நூலை எடுத்துக்கொள்ளுங்கள். அதனைக் கொண்டு முக்கோணம், சதுரம், செவ்வகம், வட்டம் ஆகிய வடிவங்களை உருவாக்கவும். இவை அனைத்தின் சுற்றளவும் சமம். ஆனால் இவற்றின் பரப்பளவு சமமாக அமையுமா? அமையாது. வட்டத்தின் பரப்பளவு மற்ற வடிவங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
பிரபஞ்ச அரசி
இது தான் இந்தப் பிரபஞ்சம் வட்டத்தால் ஆளப்படக் காரணமாகும். அதாவது வட்ட வடிவமானது குறைந்த இடத்தை அடைத்துக்கொண்டு அதிகப் பரப்பளவை உருவாக்குபவை. முப்பரிமாணத்தில் கூறினால் அதிகக் கொள்ளவை கொடுக்கக் கூடியது.
இதன் அடிப்படை தத்துவம் வடிவத்தின் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அதன் பரப்பளவு (முப்பரிமாண வடிவத்தில் அதன் கொள்ளளவு) அதிகமாக அமையும்.
சரி. வட்டத்துக்குத் தான் பக்கங்கள் இல்லையே பின்பு எப்படி மேற்சொன்ன விளக்கம் இதற்குப் பொருந்தும் என்ற சந்தேகம் வரும் அல்லவா? ஒரு ஒழுங்கு பல கோண வடிவத்தில் (Regular Polygon) பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அதன் வடிவமானது வட்டத்தை நோக்கிச் செல்லும்.
அதாவது வட்டமானது, அதன் மையத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் வட்டப் பாதையில் அமைந்துள்ள எண்ணற்ற புள்ளிகளால் ஆனது. கணித ரீதியாக இந்த எண்ணற்ற புள்ளிகளில் ஒவ்வொரு இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவும் ஒரு பக்கத்தைக் குறிக்கும்.
எனவே வட்டமானது எண்ணற்ற பக்கங்களால் ஆனது என்பது புலனாகும். இப்படிக் கூறும் போது மற்றொரு ஐயப்பாடும் எழ வேண்டும், ஒரு மூடிய வடிவத்தின் சுற்றளவு என்பது அந்த வடிவத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளத்தின் கூடுதலாகும். வட்டத்துக்குப் பக்கங்கள் எண்ணற்றவை எனில் அதன் சுற்றளவை எப்படி நிர்ணயிப்பது?
எனவேதான், வட்டத்தின் சுற்றளவைக் காணும் போது அதன் பக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் வளைவரையின் மொத்த நீளத்தை அளந்து கணக்கிடப்படுகிறது.
- கட்டுரையாளர் ஒரு ஆசிரியர் பயிற்றுநர்.

நன்றி தமிழ் இந்து நாளிதழ்
மாணவர்களின் நலன் கருதி
ஆ.சிவா.....

Thursday, March 19, 2015

எஸ்.எஸ்.எல்.சி.- சமூக அறிவியலில் சாதனை மதிப்பெண் பெற

வெற்றிப்பாதை: 

தொகுப்பு: நீதி
COMMENT   ·   PRINT   ·   T+  
சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். அதேநேரம், அலட்சியத்தால் பலரும் தேர்ச்சி பெறத் தவறுவதும் சமூக அறிவியலில்தான். இரண்டு மூடநம்பிக்கைகளையும் களைந்துவிட்டுப் படித்தால் 100 மதிப்பெண் பெறுவதும், எளிதில் தேர்ச்சி பெறுவதும் சாத்தியம். அது எப்படி?
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி பெறவும் வழிகாட்டுகிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் பே. சீனிவாசன்:
ஒரு மதிப்பெண்
முதல் 14 வினாக்களில் வரலாறு 4, குடிமையியல் - 3, புவியியல் - 4, பொருளியல் - 3 பகுதியில் இருந்து கேட்கப்படும் அனைத்து வினாக்களும் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்து மட்டுமே இதுவரை கேட்கப்பட்டுள்ளன.
பொருத்துக பகுதியிலும் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்து மட்டுமே இதுவரை நடந்துள்ள தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளன. அது மட்டுமே படித்தால் போதுமானது.
2 மதிப்பெண்கள்
புவியியலில் 3, 4, 5, 6 பாடங்களும், பொருளியலில் இரண்டாம் பாடமும், குடிமையியலில் முதல் பாடத்திலும் உள்ள பகுதிகளில் எளிமையான வினாக்கள் அமைந்திருப்பதால் அவற்றை மட்டும் படித்தாலே முழு மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வேறுபடுத்துக
புவியியல் பாடப் பகுதியில் 1, 3, 4, 5, 6 ஆகியவற்றிலிருந்து வரும் வினாக்கள் எளிமையாக அமைந்திருப்பதால், அவற்றிலுள்ள அனைத்துத் தலைப்பு வினாக்களையும் படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம்.
தலைப்பு வினா: வரலாறுப் பாடப் பகுதியில் 1, 2, 9, 10 பாடங்களிலிருந்து வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
5 மதிப்பெண்கள்
ஐந்து மதிப்பெண்கள் பகுதியில் வரலாறுப் பாடத்தில் காரணங்கள், சாதனைகள், விளைவுகள், முக்கியத்துவம் போன்ற குறிப்புகளைக் கொண்டு கேட்கப்படும் வினாக்களைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. குடிமையியல் பகுதியில் முதல் பாடத்தில் உள்ள இரு வினாக்களும், பொருளியல் பாடத்தில் இரண்டாம் பாடமும், புவியியல் பாடத்தில் காடுகள், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு, வேளாண்மை பிரச்சினை, இமய மலை, அமில மழை போன்ற பகுதிகளிலிருந்து இருந்து அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.
காலக்கோடு
வரலாறுப் பாடப் பகுதியில் ஐந்து நிகழ்வுகளை ஆண்டுகளுடன் நிகழ்ந்த குறிப்புகளைக் காலக்கோட்டில் குறித்து ஐந்து மதிப்பெண்கள் பெறலாம். 1885-1919, 1900-1920, 1920-1940, 1930-1950, 1910-1930 போன்ற பகுதியில் ஐந்து குறிப்புகளை ஆண்டுகளோடு மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்க வேண்டும். இவற்றுக்கு எளிமையான ஏழு குறிப்புகளை நினைவில் கொண்டால் எந்தப் பகுதிக்கும் ஐந்து நிகழ்வுகளை எழுதிவிடலாம். அவை வருமாறு:
1.1905 - வங்கப் பிரிவினை , 1911 வங்கப் பிரிவினை நீக்கம்
2.1914 முதல் உலகப் போர் துவக்கம், 1918 முதல் உலகப் போர் முடிவு
3.1920 ஒத்துழையாமை இயக்கம் தொடக்கம், 1922 ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
4.1927 சைமன் குழு அமைத்தல், 1928 சைமன் குழு இந்தியா வருகை
5.1930 முதல் வட்ட மேசை மாநாடு, 1931 - இரண்டாம் வட்ட மேசை மாநாடு, 1932 - மூன்றாம் வட்ட மேசை மாநாடு
6.1939 - இரண்டாம் உலகப் போர் தொடக்கம், 1945 - இரண்டாம் உலகப் போர் முடிவு
7.1947 - இந்தியா விடுதலை, 1950 - இந்தியா குடியரசாதல்
வரலாறு வரைபடம்
ஆசியா மற்றும் இந்தியாவின் வரைபடத்தில் ஏதேனும் ஒரு வினாவைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து இடங்களை உரிய வரைபடத்தில் குறித்தால் ஐந்து மதிப்பெண்களைப் பெறலாம்.
ஆசியா வரைபடத்தில் அரேபியா, பர்மா, ஜப்பான், ஹாங்காங், பசிபிக் பெருங்கடல், பார்மோசா, கொரியா, பெய்ஜிங், மங்கோலியா, செங்கடல், சீனா, காண்டன், சாகலின் தீவுகள், நான்கிங், மஞ்சூரியா, சிங்கப்பூர் பகுதிகளை மட்டும் நன்கு பயிற்சி செய்தால் முழு மதிப்பெண்கள் அள்ளலாம்.
இந்தியா வரைபடத்தில் 1857 புரட்சி நடைபெற்ற இடங்களும், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களையும் பயிற்சி செய்ய வேண்டும்.
புவியியல் வரைபடம்
இந்தியா வரைபடத்தில் மலைகள், ஆறுகள், பீடபூமிகள், கடற்கரை சமவெளி, வளைகுடா, நீர்ச்சந்தி, காடுகள், மண், வேளாண் பயிர்கள், பணப் பயிர், மென்பொருள் தொழிலகம், இரும்புத் தொழிலகம், துறைமுகம், தீவுகள், காற்று வீசும் திசை, மழை பெறும் பகுதி, பாலைவனம், சிகரம் போன்ற பகுதிகளை நன்கு பயிற்சி செய்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்கும்.
போக்குவரத்து வினாக்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், உதாரணமாக சென்னை-கொல்கத்தா ரயில் பாதை வினாவில் சென்னை, கொல்கத்தா, ரயில் பாதை ஆகிய மூன்றையும் சரியாகக் குறித்தால்தான் ஒரு மதிப்பெண் பெற முடியும். ஏதேனும் ஒரு இடம் தவறானால்கூட மதிப்பெண்ணை இழக்க நேரிடும். எளிமையான பகுதிகளை மட்டும் பென்சிலில் குறித்தும், அம்பு குறியிட்டும், நிழலிட்டும், பேனாவில் எழுதவும். நன்கு தெரிந்தால் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளை அதிகமாகக்கூட எழுதினால் மொத்தம் 10 மதிப்பெண் கிடைக்கும்.
100க்கு 100 பெற
சரியான விடை பகுதியில் ஏதேனும் ஒரு விடை பகுதியை மட்டும் எழுதவும்.
பொருத்துக பகுதியில் வினாவும் விடையையும் நேராக எழுதவும்.
இரண்டு மதிப்பெண்கள் வினாவுக்குக் கண்டிப்பாக இரண்டு குறிப்புகளை எழுதவும்.வேறுபாடு பகுதியில் இரண்டு அல்லது மூன்று குறிப்புகளை வேறுபடுத்திக் காட்டவும்.
தலைப்பு வினா பகுதியில் தலைப்பு எழுதி விடை மட்டும் எழுதவும்.
5 மதிப்பெண் பகுதியில் குறைந்தது 5 தலைப்புகளில் பத்தியிடவும்.
விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதுவது மதிப்பெண் தராது. தெளிவான விடைதான் மதிப்பெண்ணைத் தரும். அரசு வெளியிட்டிருக்கும் பொதுத் தேர்வு விடைக் குறிப்புகள் போதுமானவை. பொதுத் தேர்வுக்காக அரசு தேர்வு இயக்ககம் வெளியிடும் அரசு விடைத்தாள் குறிப்பேட்டின்படிதான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, 100 மதிப்பெண்கள் பெற எளிய வழி புத்தகத்தைப் பின்பற்றுவதுதான். எளிய வடிவில், தெளிவாக, குறித்த அளவில் எழுதப்படும் விடைக்கே, முழு மதிப்பெண்கள் கிடைக்கும். நன்கு பயிற்சி செய்தால் 100 மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.
தேர்ச்சி அடைய
காலக்கோடு 5 மதிப்பெண்கள், புவியியல் வரைபடம் 10 மதிப்பெண்கள், ஆசியா வரைபடம் 5 மதிப்பெண்கள், குடிமையியல் 7(5+2) மதிப்பெண்கள். பொருளியல் 7 (5+2) மதிப்பெண்கள், வேறுபாடு 8 மதிப்பெண்கள், புவியியல் இரு மதிப்பெண் வினாவில் 8 மதிப்பெண் கேள்விகளுக்குத் தயார் செய்தால் ஏறத்தாழ 50 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.
முந்தைய பொதுத்தேர்வு வினாத் தாள்களை சேகரித்து எழுதிப் பயிற்சி எடுத்துப் பாருங்கள். மாணவர்கள் நினைத்து முடியாதது ஒன்று உண்டோ?

நன்றி  தமிழ் இந்து நாளிதல்

மாணவர் நலன் கருதி

அன்புடன் சிவா.......

Wednesday, March 11, 2015

வெற்றிப் பாதை-

எஸ்.எஸ்.எல்.சி: அறிவியல் கண்ணோட்டம் இருந்தால் அள்ளலாம் மதிப்பெண்

தொகுப்பு: நீதி

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதுதான். கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் தேர்வில்தான் அதிகமான மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்களையும், அதிகமானோர் தேர்ச்சியும் பெற்றுவருவதே இதற்கு சான்று.
அறிவியல் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு (25 மதிப்பெண்கள்) கருத்தியல் தேர்வு (75 மதிப்பெண்கள்) என நடத்தப்படுகிறது.
இதில் செய்முறைத் தேர்வில் குறைந்தது 15 மதிப்பெண்களும் கருத்தியல் தேர்வில் 20 மதிப்பெண்களும் மொத்தம் 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அடைந்துவிடலாம்.
சென்னையில் உள்ள பல்லாவரம் கண்டோன்மெண்ட் கழக உயர்நிலைப் பள்ளி ஆசிரியை பி.சித்ராவும் வேலூர் மாவட்டம் சோழவரம் அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் ஆர்.அமுதனும் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்:
செய்முறைத் தேர்வு
10-ஆம் வகுப்புக்கான அறிவியல் தேர்வின் முதல் கட்டமாக செய்முறைத் தேர்வு உள்ளது. பாடப்புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள எளிமையாக பயிற்சிகளே, இந்தத் தேர்வில் கேட்கப்படுகின்றன. கரைசலை அமிலமா,காரமா என அறிதல், உடல் எடை குறியீட்டெண் அறிதல், கனிகளை வகைப்படுத்துதல் உள்ளிட்ட 16 பயிற்சிகள் இதில் உள்ளன. புத்தகத்தில் உள்ள இந்தப் பயிற்சிகளை நன்கு பயின்று தேர்வை எழுத வேண்டும். இதில் 25 மதிப்பெண்கள் பெறுவது எளிது.
ஒரு மதிப்பெண்: கருத்தியல் தேர்வு
ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பாடப் பகுதிகள் 15,16,17. இந்த மூன்று பாடங்களிலிருந்து கட்டாயம் 5 கேள்விகள் கேட்கப்படும்.
புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் படித்தால் 15-க்கு 10 முதல் 12 மதிப்பெண்களை சுலபமாகப் பெறலாம். 15க்கு 15 மதிப்பெண் பெற புத்தகத்தை முழுமையாக உள்ளார்ந்து படிப்பது சால சிறந்தது.
சுமாராக படிக்கும் மாணவர்கள் செய்முறை தேர்வையும் ஒரு மதிப்பெண்கள் பகுதியையும் சிறப்பான முறையில் எழுதினாலே, தேர்ச்சி மதிப்பெண்களான 35 மதிப்பெண்களை நோக்கி முன்னேறிவிடுவார்கள்.
2 மதிப்பெண்
இரண்டு மதிப்பெண்கள் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பாடப் பகுதிகள் 3, 5, 8,16,17 ஆகிய ஐந்தும் ஆகும். இந்தப் பாடங்களிலிருந்து மட்டும் மொத்தக் கேள்விகள் 30-ல் 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன.
5 மதிப்பெண்
இந்தப் பகுதியின் கேள்விகள் விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் என நான்கு பிரிவுகளில் இருந்து வரக்கூடியவையாக இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு கேள்விகள் வீதம் மொத்தம் எட்டு கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று வீதம் மொத்தம் நான்கு கேள்விகளுக்கு விடையளித்தால் போதும்.
விலங்கியல் பிரிவிலிருந்து வரக்கூடிய கேள்விகளுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள 1, 2-வது பாடங்களைப் படிக்க வேண்டும். அதைப் போலவே, தாவரவியல் பிரிவிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பாடங்கள் 4, 7-யையும், வேதியியல் பிரிவிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பாடங்கள் 10, 13-யையும் இயற்பியல் கேள்விகளுக்கு பாடங்கள் 15, 17-யையும் நன்றாகப் பயில வேண்டும்.
புத்தகத்தில் இந்தப் பாடப் பகுதிகளில் உள்ள கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கவேண்டும். அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பாடப்பகுதிகள் 2, 7,10,17 ஆகும்.
கேள்விகளின் பட்டியல்
முக்கியமாக 1, 10, 15, ஆகிய பாடங்களில் உள்ள பயிற்சிகளில் உள்ள கேள்விகளை நன்கு பயிலவும். இந்தப் பாடங்களில் இருந்து என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம் என யோசித்து, நீங்களே ஒரு கேள்விப் பட்டியலையும் தயார் செய்யலாம். மற்ற பாடங்களான 2, 4, 13, 17 ஆகிய பாடங்களில் உள்ள பயிற்சி வினாக்களையும் தயார் செய்தால், மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற உதவியாக இருக்கும்.
படிப்பும் பயிற்சியும்
அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்து எல்லாவற்றையும் படித்துவிட முடியாது. அறிவியல் என்பதே பரிசோதனை, ஆய்வு செய்து பார்ப்பது. அதன் முடிவுகளை விதிகளாகத் தொகுப்பது. மீண்டும் பரிசோதித்து பார்ப்பது. விதிகளை மேலும் மேம்படுத்துவது என்று மேலும் மேலும் அறிவியலுக்குள் மூழ்குவது தானே? எனவே, படிப்பதும் பயிற்சி எடுப்பதுமாக தேர்வுவரை ஒரே கவனமாக இருங்கள்.
அறிவியல் தேர்வில் படம் வரைவதற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. படம் வரைவதற்கும் அவற்றின் பாகங்களைக் குறிப்பதற்கும் நன்கு பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். படம் வரைவதற்கான சரியான கருவிகளை தேர்வின்போது மறக்காமல் வைத்திருங்கள்.
100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க விரும்பும் மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் நன்கு பயிற்சி பெற வேண்டிய அவசியம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இயல்பாகவே அறிவியல் ஆர்வம் இருந்தால், தேர்வில் அள்ளலாம் 100க்கு 100. 


நன்றி தமிழ் இந்து

மாணவர் நலன் கருதி....
அன்புடன்  சிவா....

Sunday, March 08, 2015

எஸ்.எஸ்.எல்.சி.- புத்தகத்தைக் கரைத்துக் குடித்தால் 100க்கு 100தான்.....

 

வெற்றிப்பாதை

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியைகள் கே.கல்பனாவும் சொர்ணவல்லியும்.
பொதுவானவை
தேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.
வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.
கேள்விக்கான விடையை செய்து பார்ப்பதற்கு விடைத்தாளில் ஒரு பகுதியை ஒதுக்குவார்கள். செய்து பார்க்கிற பகுதியில் சரியான விடையை உருவாக்குகிற மாணவர்கள் கூட அந்த விடையை எடுத்து எழுதும்போது தப்பாக எழுதும் விசித்திரமும் நடக்கிறது. கவனம் தேவை. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் சரியான விடையை மாணவர் உருவாக்கி உள்ளார். ஆனால் எடுத்து எழுதும்போதுதான் தவறு செய்துள்ளார் என உணர்ந்தாலும் அவரால் மார்க் போட முடியாது.
ஒரு கணிதக்கேள்விக்கான விடையை நிறுவும்போது படிநிலைகளில் வரிசைக்கிரமமாக,நிறுவுதல் முக்கியமானது. அதற்கு ஸ்டெப் மார்க் உண்டு. நிறுவலை தவறாக எழுதிவிட்டு விடையை சரியாக எழுதினாலும் மதிப்பெண்கள் கிடைக்காது.
பத்து மதிப்பெண்கள் கேள்விகளான செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகியவற்றுக்கும் இத்தகைய ஸ்டெப் மார்க் உண்டு. வடிவியல் கேள்விகளுக்கான விடை எழுதும்போது உதவிப்படம், வரைபடம், வரைபடமுறை,நிரூபித்தல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் உண்டு.கவனம் தேவை.
விடைத்தாள்களை திருத்துவதற்கான வழிகாட்டலாக அரசாங்கம் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும்.அதில் ஸ்டெப் மதிப்பெண்கள் வழங்கவும் வழி உள்ளது.
தெளிவான கையெழுத்தில், விடைகளை அடித்தல் ,திருத்தல் இல்லாமல் எழுதுவது அதிக மதிப்பெண்களை பெற உதவும். விடைத்தாளின் கடைசி இரண்டு வரிகளில் புதிய கேள்வியை ஆரம்பிக்க வேண்டாம்.
கடைசி நிமிடம் வரைக்கும் தேர்வு எழுத வேண்டாம். பத்து நிமிடம் முன்னதாகவே முடிக்கவும். எழுதி முடித்ததை முழுமையாக பரிசீலிக்கவும். அப்படி செய்தால் அதில் கவனக்குறைவான விடுதல் இருந்தால் சரி செய்ய முடியும்.
10 மதிப்பெண்கள் பகுதியில் உள்ள செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகிய இரண்டு வினாக்களுக்கான விடைகளை முதலில் எழுதினால், கடைசி நேர பதற்றம் இல்லாமல் அழகாக அவற்றை வரைய முடியும். அப்படி செய்தால், 20 மதிப்பெண்களை பெற்றுவிட்ட தன்னம்பிக்கையில் அடுத்த பகுதிகளை பார்க்கலாம்.
கணித தேர்வு என்றால்…
பொதுவாக, தேர்வில் கேட்கக்கூடிய மிகப் பெரும்பாலான கேள்விகளும் பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டே கேட்கப்படும்.
பாடப்புத்தகங்களில் உள்ள ஒரே மாதிரியான கேள்விகள்தான் தேர்வுக்கு தேர்வு மாறி மாறி உங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. கேள்விகளுக்கு சாய்ஸாக புத்தகத்தில் வருகிற கேள்விகள்கூட மாறுவதில்லை. எனவே, பாடப்புத்தகத்தை முழுமையாக பயிற்சி செய்வதுதான் மாணவர்களுக்கு உதவும்.
பாடப்புத்தகத்தில் உள்ள அத்தியாயம் 10:1 மற்றும் 10:2-ல் பயிற்சிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக,10:2 பயிற்சியில் உள்ள பயிற்சிகளை முழுமையாக படித்தால் எளிதாக 10 மதிப்பெண்கள் பெறலாம்.
செய்முறை வடிவியலில் மூன்று பயிற்சிகள் உள்ளன. அதில் ஏதாவது இரண்டு பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே,கண்டிப்பாக 10 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.
மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள இயற்கணிதம்,வர்க்கமூலம், காரணிப்படுத்து,ஆகிய பயிற்சிகளை படித்தால் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்விக்கு விடையளித்துவிடலாம்.
புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் கணங்களும், சார்புகளும் பற்றிய பயிற்சிகளில் நான்கு கணித விதிகள் உள்ளன. அவற்றிலிருந்து இரண்டு ஐந்து மதிப்பெண் கேள்விகள் வரும்.
நான்காம் அத்தியாயத்தில் அணிகள் பற்றிய பயிற்சிகளில் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி வரும். 12 வது அத்தியாயத்தில் உள்ள நிகழ்தகவு பற்றிய பயிற்சிகளில் பகடை உருட்டல்,நாணயங்கள் சுண்டுதல், சீட்டுக்கட்டுகள் தொடர்பான பயிற்சிகள் வரும். அவை எல்லாவற்றும் ஒரே பார்முலாதான். அந்த பார்முலாவை நன்கு பயிற்சி எடுக்கக்கூடியவர் ஒரு ஐந்து மதிப்பெண்ணை அள்ளிவிடலாம்.
சுமாராக படிக்கிற மாணவர்களுக்காக
ஐந்து மதிப்பெண்களுக்கான கேள்விகள் வரக்கூடிய புத்தகத்தின் அத்தியாயங்கள் 1,4,12 ஆகியவற்றை நன்றாக பயிற்சி எடுத்தாலே இரண்டு மதிப்பெண்கள் பகுதியில் உள்ள 2,3 கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்வகையில் திறமை பெற்றுவிடுவீர்கள்.
புத்தகத்தின் ஒன்று, நான்கு, 12வது அத்தியாயங்களில் உள்ள பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே, 30 மதிப்பெண்களை எளிதாக எடுக்கலாம். 10 மதிப்பெண்கள் கேள்விகளான செயல்முறை வடிவியல்,வரைபடம் தொடர்பான இரண்டு கேள்விகளையும் சரியாக போட்டுவிட்டாலே 50 மதிப்பெண்களை நீங்கள் எட்டிவிடலாம்.
புத்தகத்தின் இந்தப்பகுதிகளை இன்னமும் பயிற்சி எடுக்காதவர்கள் கூட இன்று ஆரம்பித்தால் கூட 10 நாள்களில் படித்து தேர்வை எழுதிவிடலாம்.
புத்தகத்தில் உள்ள நான்காம் அத்தியாயத்தில் உள்ள அணிகள் தொடர்பான பயிற்சிகளில் எண் 4:3 ல் உள்ள பயிற்சிகளைச் செய்து பார்த்தாலே 5 மதிப்பெண்கள் எடுக்கலாம்.
சென்டம் மாணவர்களுக்கு
100க்கு 100 வாங்க வேண்டும் என நினைக்கிற மாணவர்களைப்பொறுத்தவரையில் கணித அறிவை அவர்கள் புத்தகத்துக்கு வெளியிலும் தேடும் அளவுக்கு தங்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்த வேண்டும்.
இன்று கணித அறிவை தேட இணையத்தில் பலவிதமான புதுமையான நவீன வசதிகள் உள்ளன. ஆனாலும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும்போது பாடப்புத்தகத்தை முழுமையாக புரிந்து பயிற்சி எடுப்பதும் மனப்பாடம் செய்வதும்தான் அவர்களுக்கு உதவும்.
புத்தகத்தில் இருந்துதான் அனைத்து வினாக்களும் தேர்வுக்கு வரும். புத்தகத்தில் உள்ள எல்லா பயிற்சிகளையும் முழுமையாக பயில்பவரே 100க்கு 100 எடுக்க முடியும்.
கணிதத்தையும் ஒரு ஜாலியான விளையாட்டாக ரசித்து பயிலும் மனநிலைக்கு வந்து விட்டால் கணிதத்திலும் அள்ளலாம் நூற்றுக்கு நூறு. நன்றி தமிழ் இந்து நாழிதல்
மாணவர் நலன் கருதி ......

அன்புடன்  சிவா.....

தேர்வில் வெற்றி வெகு தொலைவில் இல்லை.....

வெற்றிப்பாதை: தேர்வை எதிர்கொள்ள ‘டானிக்’ குறிப்புகள்

எஸ்.எஸ்.லெனின்

வருடம் முழுமைக்குமான முழு உழைப்பை தேர்வறையில் நிரூபித்து, தங்கள் வெற்றியை மாணவர்கள் பதிவு செய்வதற்கான தருணம் வந்துவிட்டது. தேர்வுக்கு முந்தைய தினங்கள், தேர்வு நாள், தேர்வறை எதிர்கொள்ளல்கள், தேர்வுகளுக்கு இடையிலான விடுமுறை, உணவு, தூக்கம், இறுதி திருப்புதல் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் தேவை.
இந்த உதவிக் குறிப்புகள் நிச்சயம் மாணவர்கள் மத்தியிலான தேர்வு காலத்தில் எழும் வீண் அச்சம், சந்தேகம், பதட்டம் போன்றவற்றை நீக்கி தன்னம்பிக்கையையும் தெளிவையும் தரும்.
மாணவர்களுக்கு கைகொடுக்கும் ’டானிக்’ குறிப்புகளை வழங்குகிறார்கள் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளான திருச்சி ஆர்.முத்துக்கிருஷ்ணன் (முதன்மைக்கல்வி அலுவலர்), பெரம்பலூர் கே.காமராஜ் (முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்).
தேர்வு என்பது வாய்ப்பு
தேர்வு என்பதை ஏதோ சினிமா கிளைமாக்ஸ் போல நகம் கடித்து காத்திருக்கும் கவலைக்குரிய அம்சமாக பலர் பாவித்திருக்கிறார்கள். உண்மையில் தேர்வு என்பது அருமையான வாய்ப்பு. உங்களை உங்களுக்கும் உலகத்துக்கும் நிரூபிப்பதற்காக இதுவரை நீங்கள் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு.
உற்சாகமான சவால். தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். இந்த தன்னம்பிக்கையும் நேர்மறை சிந்தனையும் மதிப்பெண்களை சிதறாது சேகரிக்க உதவும்.
தேர்வுக்கு முந்தைய தினம்
தேர்வுக்கு முந்தைய தினத்தில் புதிதாக எதையும் படிக்க வேண்டாம். இதுவரை படித்ததை திட்டமிட்டு திருப்பிப் பார்க்கலாம். குறிப்பாக முக்கிய பாடங்களை, படங்களை, சூத்திரங்களை திருப்புதல் மேற்கொள்ளலாம். அனைத்து பாடப் பகுதிக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் பரவலான திருப்புதல் அவசியம்.
பாடப்பகுதி திருப்புதல் தவிர தயாராக வேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. தேர்வறை, அதில் உங்களது இருக்கை ஆகியவற்றை முன் தினமே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தேர்வு முகாம் பிறிதொரு பள்ளி எனில், சில தினங்கள் முன்பாக நேரடியாக ஒரு நடை சென்று பார்த்துவிட்டு வருவதும், தேர்வு முகாமுக்கான எளிதான பயண தூரம், மாற்று வழிகள், பயண நேரம் குறித்த திட்டமிடல்களையும் பெரியவர்கள் உதவியுடன் தெரிந்துகொள்வது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.
இந்த கல்வியாண்டில் புதிய முறையாக, சில குறிப்பிட்ட பாடங்கள் தவிர்த்து பெரும்பாலான தேர்வுகளில் கோடிட்ட விடைத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதை எதிர்ப்பார்த்து மாணவர்கள் செல்வது நல்லது. கோடிட்ட தாளில் வேகமாக எழுத முடியுமா என்ற சந்தேகமுள்ள மாணவர்கள், திருப்புதலின் போதே அவ்வப்பது கோடிட்ட தாளில் எழுதி தயாரித்துக் கொள்ளலாம்.
தேர்வறை உபகரணங்கள் எல்லாவற்றிலும் 2 செட் வைத்துக்கொள்வது சிறப்பானதுதான். அதற்காக தேர்வுக்கு என்று புதிய பேனாக்களை வாங்கி, அதை தேர்வறையில் பரிசோதிப்பது தடுமாற்றம் தரலாம். நுழைவுச்சீட்டு மற்றும் வழக்கமான எழுது பொருட்களை ஒரு முறை சரிபார்த்து முன்தினமே எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
தேர்வு நாள்
தேர்வு நாளை மற்றுமொரு வழக்கமான நாளாகவே, சற்றே கூடுதல் சுதாரிப்போடு எதிர்கொண்டால் போதும். விளையாட்டு மைதானத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க செல்வது போல் துடிப்போடு கிளம்புங்கள். கடைசி நேரத்தில் குழப்பமோ, தயக்கமோ வருவதைத் தவிர்க்கவும். தேர்வறைக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே, அதிலும் முதல் நாள் ஒரு மணி நேரம் முன்பாக செல்லலாம்.
தானே இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது, வேகமாக செல்வது, கோவில்களில் புதிய பிரார்த்தனைகளை காத்திருந்து மேற்கொள்வது, மூடநம்பிக்கை சகுனங்களை மனதில் ஏற்றிக்கொள்வது ஆகியவற்றை தவிர்க்கலாம். கூட்டமான பேருந்துகளில் பயணிப்பது, படிக்கட்டுகளில் தொங்குவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
தேர்வறைக்கு செல்லும் முன்னர் பிற மாணவர்களிடம் படித்தது, படிக்காதது குறித்து விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். தேர்வறை எதிர்கொள்ளல் தொடர்பாக பள்ளியில் உங்களுக்கு முன்னரே வழங்கப்பட்ட உடை, உடன் எடுத்துச்செல்லும் பொருட்கள் குறித்த அறிவுறுத்தல்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
மறதியாக ஒட்டிக்கொள்ளும் சிறு காகித துணுக்கும் தேர்வறை சோதனையில் உங்களுக்கு பெரும் நேரவிரயத்தையும் மன அழுத்தத்தையும் தந்துவிடும். தன்னை சரிபார்த்துக்கொள்வது மட்டுமல்ல, அமருமிடத்திலும், எழுதும் பலகையிலும் இண்டு இடுக்குகளை பார்த்துவிடுவது உசிதமானது.
தேர்வு நேரம்
ஒரு மைதானத்தில் முழு மூச்சாக உங்கள் திறமையை வெளிக்காட்டும் போக்கையே தேர்வறையில் பிரயோகிக்கலாம். மற்றபடி புதிதாக மாணவர்கள் எதையும் செய்யப்போவதில்லை. வழக்கமாக படித்தது, பல்வேறு திருப்புதல் தேர்வுகளில் எழுதியது ஆகியவற்றை சற்றே கூடுதல் சிரத்தையுடன் எழுதப் போகிறார்கள். அவ்வளவுதான். இயல்பான சுவாசத்துடன், முழு கவனத்துடன், நேர மேலாண்மையை பின்பற்றி தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எழுத வேண்டும்.
தேர்வறையில் சுற்றி நடப்பவை குறித்து திசைதிருப்பம் வேண்டாம். சக மாணவர் விரைவாக கூடுதல் விடைத்தாள் கோருவது, மற்றொரு மாணவர் தடுமாறுவது குறித்தெல்லாம் கவனம் சிதறக்கூடாது. அதேபோல தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படையினர் தேர்வு சரியாக நடைபெறுவதற்காக தங்கள் கடமையை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக அதிருப்தியோ, அலட்சியமோ வேண்டாம்.
காலி இடங்களை அடிப்பது, எழுதியதை அடித்துவிட்டு வேறு பதில் எழுதுவது உள்ளிட்ட தேர்வறை எதிர்கொள்ளல்களில் ஏற்கனவே ஆசிரியர் வழங்கிய குறிப்புகளை முறையாக பின்பற்றவும். எழுதிக்கொண்டிருக்கும் தாளின் கடைசி பக்கத்தை தொடங்கும்போதே, கூடுதல் விடைத்தாள்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
திருப்புதலுக்குப் போதுமான நேரம் ஒதுக்கித் தேர்வை எழுதுவது நல்லது. திருப்புதல் என்பது விடைகளை சரிபார்ப்பது மட்டுமல்ல, அவற்றின் சரியான எண்ணிக்கை, வரிசை எண்கள், பக்கங்களைத் தொகுத்து சரியாக முடிச்சிடுவது உள்ளவற்றையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இடை விடுமுறைகள்
தேர்வுகளுக்கு இடையே வரும் விடுமுறைகளை வரப்பிரசாதமாய் எடுத்துக்கொள்ளலாம். நேர்மாறாக நன்றாக படிப்பவர்கள்கூட இந்த விடுமுறையில் கவனம் சிதறி மதிப்பெண் இழப்பதுண்டு. அதற்கு வாய்ப்பு தராமல், தேர்வு கால அட்டவணை மற்றும் ஆசிரியரிடம் ஆலோசனை பெற்று, திட்டமிட்ட திருப்புதலை இந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டும்.
எழுதி முடித்த தேர்வுகள், அவற்றில் கிடைக்கும்/ இழக்கும் வாய்ப்பிலான மதிப்பெண்கள் குறித்து அசைபோட்டு நேர விரயம் செய்யக்கூடாது. சில பாடங்கள் திருப்புதலின்போது குழுவாக அமர்ந்து படிப்பது ஏற்புடையதாகவும், பழக்கமுடையதாகவும் இருக்கலாம். ஆனால், குழுவினரில் யாராவது கவனச்சிதறலோ, அதைரியமோ தருவார்கள் எனில் தனித்து படிப்பதே உத்தமம்.
தேர்வுக்கு இடையிலான விடுமுறை என்பது ஓய்வுக்கானது அல்ல. ரிலாக்ஸ் செய்கிறேன் பேர்வழி என்று செல்போன், கம்ப்யூட்டர் கேம்ஸ், சமூக ஊடகங்கள் என்று கவனம் சிதறக்கூடாது. முக்கியமாக டிவி, சினிமா உள்ளிட்ட காட்சிப் பதிவுகளை பார்க்கும்போது அவை மூளையில் எளிதாக பதியும் என்பதால், படித்தவற்றை மறந்து போவது மற்றும் நினைவுகூர்வதில் தடுமாற்றம் நேரிடும்.
புதிய இடங்களுக்கு செல்வது, நீர் நிலைகளில் குளிப்பது, வாகனங்கள் ஓட்டுவது, மரம் ஏறுவது, அடிபடக்கூடிய விளையாட்டுகளை தவிர்த்தாக வேண்டும். பாடத் தயாரிப்புக்கு இடையே மாற்றுத் தேவையெனில் சிறு நடை, மூச்சுப்பயிற்சி, பசுமையான வெளியை கவனிப்பது, எதிர்கால இலக்கு, அதற்கான வெற்றிப்படிகள் குறித்த உற்சாகம் தரும் பழகிய கற்பனையை சில நிமிடம் மட்டுமே அசைபோடுவது போன்றவை போதும். மீண்டும் தேர்வுக்கான தயாரிப்புகளுக்கு திரும்பி, அதில் மூழ்கிவிடலாம்.
உணவு, உறக்கம், ஓய்வு
டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொற்றுகள் தீவிரமாக பரவும் காலம் இது. தேர்வு தருணத்தில் உடல் நலத்தில் காட்டும் சிறு அலட்சியமும் உடல் எதிர்ப்பு சக்தியை குறைத்து இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக்கிவிடும். எனவே, தேர்வு காலத்தில் முறையான உணவு உறக்கத்தில் குறை வைக்கக்கூடாது. எண்ணெய் பலகாரங்கள், துரித உணவு உள்ளிட்டவற்றை தவிர்த்துவிட்டு, செரிமான மண்டலத்துக்கு சிரமம் தராத ஆவியில் வெந்த உணவுகள், காய்ச்சி ஆறி வடிகட்டிய குடிநீர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
தொடர் படிப்பால் சோர்வுறும் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை குடிநீர் வழங்கும் என்பதால், படிக்கும் இடத்தில் எப்போதும் உடன் ஒரு குடிநீர் குவளையை தயாராக வைத்திருப்பது நலம். அதேபோல விளம்பர மோகத்திலோ, சக மாணவர் பரிந்துரையின் பேரிலோ புதிய ஊட்டச்சத்து பானங்கள், ஞாபகசக்தி மருந்துகள், மாத்திரைகள் உட்கொள்வது தேர்வு காலத்தில் அறவே கூடாது. குடும்பத்தில் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சத்துபானம் இதில் விதிவிலக்கு.
தேர்வு காலத்தில் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். தூக்கம் வரும் என்று சில மாணவர்கள் சரியாக சாப்பிட மறுப்பார்கள். சேர்ந்தார்போல சாப்பிடும்போது, உண்ட களைப்பு வரலாம். ஆனால், அவற்றை சிறு பகுதிகளாக குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுத்துக்கொள்ளும்போது தூக்கம் தட்டாது. தேர்வு காலத்துக்கு முன்புவரை விழித்திருந்து படிப்பதெல்லாம் சரி. தேர்வு நாட்களில் குறைந்தபட்ச உறக்கம் அவசியம். சிறு உடல்நலக் கோளாறு என்றாலும் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, பெரும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்.
பெற்றோர் ஆசிரியர்களுக்கு
தேர்வு காலம் என்பது, மாணவர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர்வதற்கான தங்கத் தருணங்கள். மாணவர் ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். அவரது தனித்தன்மைக்கான ஆதரவும், ஊக்குவிப்பும், கவனமும் தந்தால் தங்கள் திறமையை நிச்சயம் நிரூபிப்பார்கள். குடும்பத்தினரும் பரீட்சைக்கு தயாராகும் மாணவருக்காக ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே டிவி, இரைச்சல் இல்லாத அமைதியான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். குடும்பத்தினரின் சிறு தியாகங்கள் மாணவரின் எதிர்காலத்துக்குப் பெரும் உதவியாக அமையும்.
அதேநேரம் தேர்வு கால நெருக்கடியில் இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தங்களை அட்வைஸ் என்ற பெயரில் தருவதைத் தவிர்க்கலாம். ஆசிரியர்கள் தங்கள் அலைபேசி எண்களை மாணவர்களிடம் அளித்து, அவர்களின் கடைசி நேர சந்தேகங்களுக்கும் செவிமடுக்கலாம். மாணவர்களின் கடைசி நேர பதற்றங்களை நீக்குவதோடு, கடமையையும் பரிபூரணமாக செய்த திருப்தி கிடைக்கும். 


நன்றி  தமிழ் இந்து நாளிதழ்

மாணவர் நலம் கருதி.....
அன்புடன்  சிவா......