Saturday, August 19, 2023

புத்துயிர் தரும்...ப(பா)டம்....

தெலுங்கில் நானி நடித்த ஜெர்சி படத்தில் ஒரு காட்சி. ரயில் நிலையம் சென்று ரயிலுக்காக காத்திருந்து அது கடந்து போகும் நேரத்தில் ஓவென்று கத்துவார் நானி. கத்தும் சத்தம் கூட ரயில் சத்தத்தோடு கரைந்து போகவேண்டும் என்று நினைக்கும் சராசரி மனது. அவர் வாழ்வில் அதுவரை அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், நிராகரிப்புகள், ஏமாற்றங்கள் அனைத்திற்கும் மருந்தாக ஒரே ஒரு வெற்றி வந்து சேரும் போது நம் அனைவருக்கும் அந்த உணர்வு வரும். ஏமாற்றங்கள், அவமானங்கள், தோல்விகள் ஏற்படும் போதெல்லாம் வலியை மறைத்து சிரித்து பழகியவர்கள் நாம். கண்ணீரைக் கூட அடக்கி வைத்து தனியாக அழுது தீர்ப்பவர்கள். 

ஆங்கிலத்தில் Venting Out என்றொரு பதம் உண்டு. நமது உணர்வுகளை, கோபதாபங்களை, ஏமாற்றத்தை வெளிப்படுத்துவது.  கடைசியாக எப்போது வாய் விட்டு சிரித்தீர்கள் என்று கேட்டால், நம்மில் பலரும் யோசித்துத் தான் பதில் சொல்ல வேண்டும். அந்த அளவு நம் உணர்வுகளை வெளிக்காட்டாமல், உள்ளுக்குள்ளேயே அடக்கி வைக்க கற்றுக் கொண்டுள்ளோம். அப்படி அடக்கி வைத்த உணர்வுகளே ஸ்ட்ரெஸாக உருமாறி இன்று பல நோய்களுக்கு காரணமாகிறது. தற்கொலைகளுக்கு காரணமாகிறது. பல்வேறு உறவுச் சிக்கல்களுக்கு காரணமாகிறது. 

வெள்ளைக்காரன் காலத்தில் ஒவ்வொரு அலுவலகத்திலும் Recreation Club என்றொரு  பிரிவு உண்டு. தமிழில் சொன்னால் மனமகிழ் மன்றம். (எவ்வளவு அற்புதமான வார்த்தை). வேலை நேரம் முடித்தவுடன் அனைவரும் இணைந்து விளையாடி சிரித்து மகிழ்ந்து பின் வீடு செல்வார்கள். ஆனால் காலப்போக்கில் இயந்திரத்தனமான வாழ்க்கையில் 10-12 மணி நேரம் உழைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும் சூழலில் விளையாட்டை, சிரித்து பேசி மகிழ்வதைக் கூட மறந்து விட்டோம். இன்று பல கார்ப்ரேட்டுகளில் விளையாடுவதற்கான இடங்கள் இருக்கின்றன. 

ஆனால் பொதுச் சமூகத்தில் இன்று நமக்கிருக்கும் மனமகிழ் வாய்ப்புகள் இரண்டு தான். ஒன்று டாஸ்மாக். தமிழ்ச் சமூகம் குடிக்கு அடிமையானதற்கான காரணம் மேற்ச்சொன்ன ரிகிரியேஷன் என்ற ஒன்றே நம் சமூகத்தில் இல்லாமல் போனதால் தான். இன்று பலருக்கும் vent out என்றாலே குடி மட்டும் தான். குடிக்கும் போது தான் அனைத்தையும் மறந்து, மனம் விட்டு சத்தம் போட்டு பேசி, சிரிக்கின்றனர். அந்த போதை இறங்கியவுடன் மீண்டும் இறுக்கமானவராக மாறிவிடுகிறார்கள். இரண்டாவது சினிமா. போதையைப் போல 2-3 மணி நேரம் நமது கவலைகளை, பிரச்சினைகளை மறந்து சிரித்து, விசிலடித்து, கொண்டாடி மகிழ்கிறோம்.

சிறிய வயதில் இதைச் செய்திருக்கலாம். ஆனால் தோளுயர பிள்ளைகள் என்று ஆன பிறகு, சினிமா பார்ப்பதற்கே கணக்கு போடவேண்டிய சூழலில் அதற்கும் ஆப்பு வந்து விட்டது. பாப்கார்னுக்கு எவ்வளவு செலவாகுமே என்ற நினைப்பிக் படமே முழுதாக பார்க்க முடிவதில்லை என்பது இன்னொரு சோகம். 

ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயிலர் படம் பார்த்த போது என்னை மறந்து ஓவென்று கத்தி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன் எப்போது என்று நினைவில்லை. அனேகமாக 40-45 வயது கடந்த பெரும்பாலானவர்களுக்கு இந்த உணர்வு இருந்திருக்கும். சமீபத்தில் படத்தைப் பற்றி பேசிய பெண் ஒருவர் "இன்னும் 10 மாசத்துக்கு முழு சார்ஜோட வேலை பார்ப்பேன் சார்" என்று சொன்னார். நண்பர் ஒருவரின் விமர்சனத்தில் ரஜினி படம் பார்ப்பது ஒரு தெரபி செஷனுக்கு ஒப்பானது என்று சொல்லியிருந்தார். இரண்டுமே உண்மை தான். 

ஜெயிலர் படம் இவ்வளவு கொண்டாடப்படுவதற்கு காரணம் நடுத்தர வயதினரின் உற்சாகம் தான். அவர்களால் விஜய், அஜீத் படங்களில் இப்படியான உணர்ச்சியை வெளிப்படுத்தமுடியாது. அது அடுத்த தலைமுறைக்கானது. ஆனால் 10-20 வருடங்களுக்கு முன் திரையில் எப்படி ரஜினியை கொண்டாடினோமோ அதே போலான ஒரு கொண்டாட்டத்திற்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. கவலைகளை, பிரச்சினைகளை மறந்து முக்கியமாக வயதை மறந்து ஓவென்று கத்திக் குதித்து, விசிலடித்து, கை தட்டி படத்தை பார்த்த பிறகு, அந்தப் பெண் சொன்னது போல் ரீசார்ஜ் செய்தது போல் இருப்பது உண்மை தான். அந்த வாய்ப்பை ஏன் நழுவ விட வேண்டும். இதற்காகவே இன்னொரு முறை நண்பர்களுடன் ஜெயிலர் படம் பார்க்க ஆசையாக இருக்கிறது. 

நடுத்தர வயதினரின் vent out தான் ஜெயிலர். 2-3 மணி நேர போதை தான் ஜெயிலர். 

பண்டிகையை கொண்டாடுங்கலேன்...
வாய் விட்டு சிரிச்சு...கை தட்டி....உடல் மனம். புத்துயிர் பெறட்டும்...
நன்றி
பகிர்வு பதிவு....

பத்து கட்டளைகள்...

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்; கீழ்கண்ட  பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும்  இனிமையாகவும்  இருக்கும்.. 🌹.*

*01) எந்த நிலையிலும் வாழ்வின் கடைசி பகுதியில்  பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)*

*02) பேரக் குழந்தைகளின் மேல்  எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்*

*03) விலகியே இருங்கள்.  உறவுகள் இனிமையாகத் தான் இருக்கும். என் பிள்ளை என் பிள்ளை என பதறாதீர்கள்.*

*சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியாக இருங்கள்*

*04) பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.  கையில் பணம் இல்லாவிட்டால்,  பிள்ளைகளிடம் மதிப்பும், மரியாதையும், உரிமையும்  நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் சுய சம்பாத்திய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம். முழுவதும் பகிர்ந்தால்,  நிற்க வேண்டியது நடுத்தெருவில் தான்.*

*05) காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். அவற்றை திரும்பத் திரும்ப சொல்லி காட்ட வேண்டாம். கடமையை செய்தீர்கள். அவ்வளவே!*

*06) கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள். தேவைப்பட்டால், வருடம் ஒருமுறை பரிசுப் பொருட்களுடன் சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக இருந்து வாருங்கள். அங்கே அதிகம் தங்க வேண்டாம்.*

*07) எந்த நேரத்திலும் மருமகள் முன்  மனைவியை /கணவனை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள். இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுக்கத் தவறாதீர்கள். பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே  தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர்,சீப்பு,சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.*

*08) அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானப்பட வேண்டாம். அவர்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை. நவீன கார்பரேட் வாழ்க்கை.  1000 ரூபாயை பெரிதாக நினைத்தவர்கள். அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள்.*

*09) அதிக பாசம், ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.  அறிவுரைகளை தவிருங்கள்!*

*10) உங்களை விட அறிவிலும், திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது,  முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுது தான் பிழைப்பீர்கள்!*

*அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது.* 

*நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குறிகளே.!*

*தலையாட்டும் பொம்மைகளே!!*

நன்றி..!
இது ஒரு பகிர்வு பதிவு...