Friday, May 30, 2014

தொலைந்துபோன மகிழ்ச்சிகள்...?

வணக்கம்..!
                   இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.

தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவிட்டால் போதும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேறு. நேரில் பத்திரிகை வைத்துவிட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் செய்து அழைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பரின் விஷேசத்திற்கு செல்ல வேண்டும் எனில் பத்திரிகை கையில் கிடைத்ததும் ஒருமுறை போன் செய்து எப்படி வரவேண்டும் என விசாரித்துவிட்டு, பிறகு விஷேச தினத்தில் "நான் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் இங்கிருந்து எப்படி வருவது?", "விவேகானந்தர் நான்காவது தெருவுக்கு வந்துட்டேன்.. ஏழாவது தெருவுக்கு எப்படி வருவது?" என நிகழ்ச்சி நடத்தும் நண்பரின் மொபைல் போனுக்கு ஓயாமல் அலைபேசும் நபர்களும் இருக்கிறார்கள். ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என நினைக்கும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.
முன்பெல்லாம் கடிதங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என நண்பருக்கு ஒரு கடிதம் போட்டால் போதும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

இன்றைய தேதியில் பிரசவ வார்டில் மனைவி இருக்கும் போது கூட, " Awaiting for my sweet little baby " என டுவிட்டரில் தகவல் பரிமாறி, பிரசவமான குழந்தையை உடனே புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில்

பதிவேற்றுகிறார்கள். குழந்தை பிறந்ததை விட, அந்த செய்தியை பதிவேற்றம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்களோ என்று தோன்றுமளவுக்கு தொழில்நுட்ப அடிமைகளாகிவிட்டனர்.

ஆனால் அன்று, குழந்தை பிறப்புக்காக அம்மா வீடு வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கடிதம் மூலம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிய வரும். அதன்பிறகு விடுமுறை எடுத்துக் கொண்டு தனக்கு பிறந்த மகனை / மகளைப் பார்க்க ஊருக்கு சென்றவர்கள் ஏராளம். தனது மகன் எப்படி இருப்பான் என நினைத்துக் கொண்டே பயணித்து, மனம் நிறைய  மகனை அள்ளி முத்தமிடும் தருணத்தின் மகத்துவத்தை அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும்.

ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் ஊருக்கு ஒருவர் தகவல் சொல்ல கிளம்பி போவார். அவர் போகும் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தகவல் சொல்ல தேவையில்லை. அந்த ஊரில் ஒருவருக்கு தகவல் சொன்னால்கூட போதும். அவர்கள் மூலம் தகவல் பரவி அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். ஆனால் இப்போது அப்படி இல்லை.. சில குடும்பங்களில் மாமா, அத்தை, அத்தை மகன், அத்தை மகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து தகவல் சொல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் எனக்கு ஏன்  சொல்லவில்லை நான் முக்கியமான ஆளில்லையா என்ற சண்டைகள் ஏராளமாக நடப்பதைக் காணமுடிகிறது.

ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு போட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் வந்த அன்று  அதை பிரித்து படிப்பதற்குள் மனதிற்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நேரத்திற்கு சாப்பிடு, கவனமாக பள்ளிக்கூடத்துக்கு போ, வெயிலில் அதிகம் அலையாதே, காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வா என ஒவ்வொரு வார்த்தையிலும் தாத்தாவின் பாசமும், அக்கறையும் இருக்கும். கடிதங்களின் ஓரத்து மடுப்புகளில் கூட தாத்தா, பாட்டியின் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும்.

கடிதப் போக்குவரத்தில் 'இப்டிக்கு உங்கல் அன்புள்ள மகன்', 'இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி' என தப்பு தப்பாய் எழுதியிருந்தாலும், அதில் வார்த்தைக்கு வார்த்தை அன்பு நிறைந்திருக்கும். அவை பொக்கிஷம் போல் அவ்வப்போது எடுத்து எடுத்து படிக்கப்படுவதும் உண்டு.

ஆயிரம் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அனுப்பினாலும், அவை ஒரே ஒரு கடிதம் சொல்லிய அன்பை முழுமையாகப் பரிமாறிவிட முடியுமா?


நன்றியுடன்
சிவா..


உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர


ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை.
1.ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2. அவர்களின் உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொருபொற்றோர்களின் கடமை ஆகும்.

3. குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும்.

4. இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும்.

5. அதன்பிறகு குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல்தன்னம்பிக்கை வளரும்.

6. பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும், வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும்.

7. அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.

8. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், ''டியூசன்'', அதன்பிறகு வீட்டு பாடம், சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது, ''டியூசன்'' முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும்.

9. பின்னர் தூக்கம் வந்த பிறகும் ''படி படி'' என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை 6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும்.10. காலை 6 மணிக்கே குழந்தை எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும். குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.
11. குழந்தை தவறு செய்து விட்டு வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி ''டேக் இட் ஈஸி'' என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற உணர்வு பறந்துவிடும்.

12. நாம் தவறு செய்யும் போது ''சாரிடா கண்ணா'' என்று கூறினால் அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம் குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு ''நன்றி'' தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

13. பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம் வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம் என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள்.

14. பல போட்டிகளில் பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே அதுதான். அங்கு கிடைக்கும் ''ரிசலட்''டை வைத்து குழந்தை செல்ல வேண்டிய பாதையை வகுக்க முடியும்.

15. இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார்.

ஒரு குழந்தை பெரிய அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது.
நன்றியுடன் 
சிவா..

Thursday, May 29, 2014

MS Word –இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி


வணக்கம் நண்பர்களே MS Word- இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடும் முறையை அறிந்து கொள்வோம் வாருங்கள் . நான் ஏற்கனவே MS Word – இல் கணித சமன்பாடுகளை உள்ளிடுவது எப்படி எனும் பதிவிட்டு இருந்தேன் அதையும் ஒரு முறை படித்துவிட்டு தொடருங்களேன் .
படித்துவிட்டீர்களா மேற்கண்ட  பதிவு MS Word  2003 க்கானது MS Word  2007 மற்றும் அதற்கு பின் வரும் MS Word  பதிப்புகளில் Insert மெனுவில் Equation மற்றும் Symbolஎனும் இரு தேர்வுகளின் மூலம் கணித குறியீடுகளை உள்ளீடு செய்யலாம்  சரி வாருங்கள் MS Word –இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி என்றும் அறிந்து கொள்வோம்.  
undefined
 
முதலில் MS Word  ஐ திறந்து கொள்ளுங்கள் , பின்பு உங்களது கணினியில்  Accessories  மெனுவின் கீழே  Math Input Panel      என்பதை தேர்வு செய்தால் கணிதகுறியீடுகளை உள்ளீடு செய்ய புதிய செயலி ஒன்று திறக்கும் அதில் உங்களது Mouse ஆல் கணித குறியீடுகளை வரைந்தால் போதும் அந்த குறியீடு தோன்றும் அந்த செயலியின் கீழே Insertஎனும் வசதி இருக்கும் அதை கிளிக் செய்தால் MS Word –இல் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் . பயன்படுத்தி பாருங்கள்  சந்தேகம் வந்தால் பின்னூட்டமிடுங்கள்நன்றியுடன் 
சிவா..

Thursday, May 22, 2014

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு

- ஒரு பார்வை


குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே (சி.இ.ஓ.) விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடு குறித்து பெற்றோர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கல்வித் துறை அதிகாரிகள் அளித்த சில விளக்கங்கள்:

* சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் தவிர, பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளையும் சேர்க்க முடியும்.

* இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கிடையாது.

* பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அரவாணிகள், பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் போன்ற வாப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியும்.

* பள்ளியில் எந்த வகுப்பிலிருந்து மாணவர் சேர்க்கை தொடங்குகிறதோ அந்த வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களை, ஏழைக் குழந்தைகளுக்காக ஒதுக்கீடு செயவேண்டும். உதாரணமாக, ஒரு பள்ளியில் எல்.கே.ஜி.யிலிருந்து மாணவர் சேர்க்கை தொடங்குவதாக இருந்தால், அந்த வகுப்பில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். அதே நேரம், ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மாணவர் சேர்க்கை தொடங்குவதாக இருந்தால், அந்த வகுப்பில் 25 சதவீதஇடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும். ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பிலிருந்துதான் மாணவர் சேர்க்கை தொடங்குவதாக இருந்தால், 6-ஆம் வகுப்பில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும்.

* உங்கள் மகள் படிக்கும் பள்ளியில் எந்த வகுப்பிலிருந்து மாணவர் சேர்க்கை தொடங்குகிறதோ அந்த வகுப்பிலிருந்துதான் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்வார்கள். ஏற்கெனவே உங்கள் மகள் அந்தப் பள்ளியில் கட்டணம் செலுத்தி படித்து வந்தாலும்கூட, 4-ஆம் வகுப்பு படிக்கும் உங்கள் மகளுக்காக 25 சதவீத இடஒதுக்கீட்டைக் கோர முடியாது.

*ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள், தனியார் பள்ளி அமைந்திருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அவர்களை அந்தத் தனியார் பள்ளியில் சேர்க்க அனுமதிப்பார்கள். 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள், தனியார் பள்ளி அமைந்திருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவராக இருந்தால், அவர்களை அந்தத் தனியார் பள்ளியில் சேர்க்க அனுமதிப்பார்கள். ஆனால், அந்தப் பகுதிகளில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏதும் அமைந்திருக்கக்கூடாது என்பது விதிமுறை. அரசுப் பள்ளிகள் அருகில் இருந்தும் தனியார் பள்ளிகளில் சேர்த்தால், அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு ஏற்காது.

* 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் வரும் போது ரேண்டம் முறைப்படி, அதாவது அங்கொன்றும் இங்கொன்றும் என்ற முறைப்படி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்காக பள்ளிகள் தனியே பேரேடுகளைப் பராமரிக்க வேண்டும். மாணவர்களிடம் தேர்வு நடத்தியோ, பெற்றோர்களின் கல்வித் தகுதியைக் கருத்தில்கொண்டோ மாணவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது.

* இத்திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் (சி.இ.ஓ.) விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு வகுப்புகளில் 58,619 இடங்கள் உள்ளன.
அரசு செய்ய வேண்டியது:

தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டினைத் தவறாக பயன்படுத்தும் சாத்தியங்கள் நிரம்ப உள்ளன. மாணவர்கள் சேர்க்கையில் ஏழை மாணவர்கள் என்ற பட்டியலில் பள்ளி நடத்தும் தாளாளர் குழந்தைகள், அவர்களது நண்பர்களின் குழந்தைகள் படிக்கும் சூழலுல் இன்று உள்ளது. உண்மையான ஏழை மாணவர்களுக்கு இச்சலுகை பயன்பட வேண்டுமானால் இத்திட்டத்திற்கு பணம் வழங்கும் அரசு அப்பணத்தை கல்வி நிறுவனங்களின் பெயரில் போடாமல் முறையாக ஆய்வு செய்து குழந்தைகளின் பெற்றோர்களின் கணக்கில் போட வேண்டும்.

அப்போது பல முறைகேடுகள் தவிர்க்கப்படும். மேலும் எத்தனை காலம் தான் அரசின் பணத்தைத் தனியார்க்கு வாரி வழங்கி வருவது குறிப்பிட்ட ஆண்டுக்குள் அரசு பள்ளிகள் இல்லாத ஊர்களில் பள்ளிக்கூடங்கள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்புகள் அரசு பள்ளிகளில் வர வேண்டும் (இப்போது நிறைய அரசு பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகிறது. தரமான கல்வி அரசு பள்ளிகளில் கிடைக்குமானால் நடுத்தர பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.
அதுவரை:

எது எப்படி ஆகினும் அரசு பள்ளிகள் இல்லாத சூழலில் வசிப்பவர்களுக்கு  25 சதவிகித ஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படும் வகையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது அவர்களுக்கு எதிர்கால வாழ்வாதார பிரச்சனை. இதில் தனியார் பள்ளி நிறுவனங்கள கட்டணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படாமல் இருக்க அரசு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எல்லா ஊர்களிலும் அரசு கல்வி நிறுவனங்கள் தலை காட்டும் வரை மாணவர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். நன்றி


அன்புடன் 
சிவா...
 

அரும்புகள் மலரட்டும்: துன்பத்திற்கு காரணம் ஆசையா?

Wednesday, May 21, 2014

பொய்கள்...கதவடைக்கப்பட்ட அறையில் 
 
எல்லா நாற்காலிகளிலும் 
 
பொய்கள் அமர்ந்திருந்தன 
 
நின்றிருக்க விரும்பாமல் 
 
சாவி துவாரத்தின் வழியே 
 
உண்மை வெளியேறியது
 
 
 
 
 
நன்றியுடன் 
 
சிவா...
 

Monday, May 19, 2014

புத்தக வாசிப்பு....


 ஏன் அவசியம் ?

ஒரு மிகச்சிறந்த புத்தககத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியது தான்.
-          டோனி மாரிஸன்

உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது.
-    கூகிவா திவாங்கோ

ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை   வைத்தே இருக்கிறது.
-           பிரடெரிக் எங்கெல்ஸ்

நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும் போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள்.
    -    கிறிஸ்டோபர் மார்லே

ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள், அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்.
-    அரேபியப் பழமொழி

போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.
-    எல்பர்ட்கிரிக்ஸ்

புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது.
-    மாவீரன் பகத்சிங்

காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம்.
-    எட்வின் பி.விப்பிள்

ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததியினர் தேடித்தேடி அடைய வேண் டிய அற்புதப் புதையல்கள் புத்த கங்களே.
    ஹென்றிதொறோ
      
-    வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்.
-    மார்டின் லூதர்கிங்

புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்.
-    சீனப் பழமொழி

ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை.
-          ஆர்.டி.கம்மிஸ்

ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை.
-    சார்லஸ் இலியட்

விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம்.
-    அறிஞர் அண்ணா

ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
-    ஆர்.டி.கம்மிங்

ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காத வன், அந்த புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத் திலும் உயர்ந்தவன் அல்லன்.
-    மார்க் ட்வைன். - ஜேம்ஸ்ரஸல்

உன் மூளைக்குள் இருக்கும் சிந் தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள்.
-     ஜேம்ஸ்ரஸல்

நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.

-     கரோலின் கோர்டன்

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்படுகிறது.
-     ஜார்ஜ் பெர்னாட்ஷா

நூலைப் படித்து தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால் தான் மூளை, இன்றேல் அது வெறும் ஈளை..எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.


நன்றி  கதிர் 

அன்புடன் சிவா..


 

கயிற்றில் நகரும் வாழ்கைப் பயணம்....பயணங்களில் நாம் அன்றாடம் செல்லும் சாலைகளில் சில நேரங்களில் வாழ்க்கைப் பிழைபிற்காக சிலர்படும் துயரங்களைப் பார்த்திருப்போம். அவர்களில் சிலர் காலப்போக்கில் மாறியதையும், அல்லது வேறு சில வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதையும்ப் பார்த்திருப்போம்.

ஆனால் நமக்கு விபரம் தெரிந்த நாட்களில் இருந்து இன்று வரை மாறாத சிலரின் செயல்கள்... நம்மை மிகவும் மனம் வலிக்கச் செய்யும்... செய்ய வேண்டும். செய்கிறது. அவர்களின் இந்த நிலை மாறாததிற்க்கு காரணம் அவர்களா...? இல்லை இந்த சமூகமா...? அல்லது வேறு என்ன காரணங்களாக இருக்கமுடியும்....? யூகிக்க முடியவில்லை என்னவென்று??? கூறவும் முடியவில்லை... எவரையும் குறை. ஆனால்! மாற வேண்டும் இந்நிலை என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் என நம்புகிறேன். இந்த சூல்நிலையைப் பற்றி ஸ்ந்த்யா ஸ்வரூபன் எழுதியஎனது சிகரெட்டின் விலை ஐந்தரை ரூபாய்என்ற சிறு கவிதை ஒன்றை விகடனில் படித்தேன். நிசமாகவே வலித்தது... எத்தனை முறை கடந்து சென்றிருப்போம் இவர்களை!!!


எனது சிகரெட்டின் விலை ஐந்தரை ரூபாய்

பெட்டிக்கடையோரம்
சிகரெட்டைப் பற்றவைக்கிறீர்கள்...
நீங்கள் சுவராஸ்யமாய்
பார்க்கும் இடைவெளிக்குள்
தன் வயிற்றைவிடச் சிறிய
வளையத்துக்குள் புகுந்து
வெளிவந்துவிடுகிறாள் சிறுமி
பாதி சிகரெட் கரையும் முன்
பிஞ்சுக் கால்களால்
கயிற்றில் நடந்து
ஒரு வேளை சோற்றுக்கும்
அடுத்த வேளை சோற்றுக்குமான
தூரத்தைக்
கடந்துவிடுகிறாள்
அவள் தட்டு ஏந்தி வரும்முன்
அவசரமாக சிகரெட்டை
எறிந்துவிட்டு நகர்கிறீர்கள்
எதையோ அங்கே
தவறவிட்டுவிட்டோமோ
என்று யோசிக்கும் உங்கள் மனதுக்கு
புகையும் சிகரெட் துண்டைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று
சமாதானம் சொல்லிக்கொண்டீர்களானால்
உங்கள் பெயர்
நானாகக்கூட இருக்கலாம்!

உண்மைதான். சாலைகளில் அவர்கள் செய்யும் வித்தைகளை முடியும் வரை நின்று பார்த்துவிட்டு, அவர்கள் பணம் கேட்டு வரும் பொழுது கூட்டத்திலிருந்து எத்தனை முறை நாம் நழுவிச் சென்றிருப்போம். ஒரு 1 ரூபாயைக் கூட அவர்களுக்கு தட்டில் போட்டிருக்க மாட்டோம். அப்படியே போடும் பொழுது, நம் மனம் போடும் கணக்குகள் இருக்கிறதே, அதை என்ன சொல்லுவது. எத்தனை முறை பேருந்தில் சில்லறை பாக்கி கிடைக்காமல் கூட்டத்தில் இருந்து இறங்கி இருபோம், சிகரெட் வாங்கிவிட்டு மீதி சில்லறையை மிட்டாயாகவோ, பாக்காகவோம் வாங்கியிருப்போம். இதில் ஒரு சிறு அளவை அவர்களுக்கு தர மனம் முன் வருவதில்லை. அவர்கள் ஒன்றும் நம்மிடம் தட்டை ஏந்திக் கொண்டு பிச்சை கேட்டு வரவில்லையே. தங்களின் திறமைகளை வெளிக்காட்டி அதற்கு ஒரு சண்மானத்தைத் தானே எதிர்பார்த்து பணம் கேட்கிறார்கள்

இனியாவது இவர்களைக் கடந்து செல்லும் பொழுது, முதலில் மனதை எடுக்க வேண்டும் உள்ளத்திலிருந்து அவர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு.

நன்றியுடன் 
சிவா...