செல்வ களஞ்சியமே 66
எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது அவனும் யோகாசனம் கற்க வருகிறான் என்று. துறுதுறுவென்று இருக்கும் அந்தக் குழந்தைக்கு எதற்கு யோகாசனம் இப்போது? ஓடிவிளையாடும் குழந்தையை இப்படி ஒரு இடத்தில் உட்காரச் சொல்வது பெரிய கொடுமை, இல்லையோ?
கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. குழந்தைகள் வீட்டில் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் என்று குழந்தைகளை வதைக்கும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒன்று மட்டும் நான் பார்த்துவிட்டேன். குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன கற்கிறார்கள்? யாருக்குக் கவலை? பள்ளி மூடியிருக்கும் சமயங்களிலும் பெற்றோர்களிடமிருந்து பணம் கறக்க பள்ளிகள் கண்டுபிடித்திருக்கும் புதுவழி இந்த சம்மர் கேப்ம்ஸ். முன்பெல்லாம் தனியார்கள் நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாமே செய்யலாமே என்று பள்ளிகளும் களத்தில் இறங்கிவிட்டன
அன்புடன்
சிவா.....
No comments:
Post a Comment