Thursday, October 28, 2021

மன உளைச்சல்..நமக்கு வேண்டாமே...

உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து *ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. 

சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.* ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.* ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது...._

_அதைப் போல் உறுதியான *சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி*....அதே *மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...*_

_,*மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து* முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம்,#மனஉளைச்சல் தான்!

Tuesday, October 19, 2021

ஆன்ற குடிப்பிறத்தல் வலையொலி ஒசை( Audio Lesson)

வகுப்பு.8. பாடம்.தமிழ்.  இயல்.4. விரிவானம்.
ஆன்ற குடிப்பிறத்தல். வலையொலி ( Audio Lesson).கேட்டு மகிழ்ந்து பயன் பெற அன்போடு அழைக்கிறேன்.
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/22------8-e191q31


Saturday, October 16, 2021

 கூகுள் மீட்டில் ( இணையத்தில் )  எனது மாணவர்கள் எவ்வாறு கற்றபில்தலை  கற்றுக்கொண்டார்கள் என்பதை   எம் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் கருத்து .Tuesday, October 12, 2021

சேலத்தின் அடையாளம் ....

Dedicated to Salem Citizens by சுஜாதா

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்.
பேலஸ் தியேட்டர் சேலம்
ஒரு சமயத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான திரையரங்குகளைக் கொண்ட நகரம் என்ற சிறப்பினை பெற்ற நகரம் சேலம். அந்த திரையரங்களில் பேலஸ் ஒரு முக்கியமான திரையரங்கமாக  விளங்கியது.

பேலஸ் தியேட்டர் மதுரை தங்கம் போல ஆசியாவிலேயே அதிகம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவு வசதி கொண்டது அல்ல. சென்னையில் அமைந்திருந்த சபையர், ப்ளூ டைமண்ட், எமரால்ட் போன்ற பிரமாண்டமான நவீன கொட்டகையும் அல்ல. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த திரையரங்கு.

சென்னையில் இருந்து குடி பெயர்ந்து (1960 ) சேலம் வந்தவுடன் அப்பா சேலம்-ஈரோடு மின்சார வினியோக கம்பெனியில் சேர்ந்ததும் சேலம் சுப்பராயன் தெருவில் ஒரு லைன் வீட்டில் குடியேறியதும் என் சேலம் வாசத்தின் ஆரம்பம். அதுதான் சினிமா என்னும் ஆசையை எனக்குள் அறிமுகப்படுத்தியதும் , அதை வளர்த்ததும் , அது ஆழமாய் வேரூன்றி இன்றுவரை நிலை பெறச்செய்ததும் அங்குதான்.

நாங்கள் குடி போன வீட்டுக்கு இடது புறத்தில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். அது சுப்பராயன் தெருவை ஆரம்பித்து வைப்பது போல அமைந்திருக்கும். அந்த ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அந்த சாலையின் முடிவில் பேலஸ் தியேட்டர் கம்பீரமாக இருக்கும்.
இடைப்பட்ட தெருதான் டாக்டர் சுப்பராயன் தெரு. அதன் மத்தியில்தான் எங்கள் வீடு அமைந்து இருந்தது. நான் படித்த பள்ளி 
(G. H. M. H. S) கொஞ்ச தூரம். 
(அது சென்ட்ரல் தியேட்டர் பக்கத்தில். இப்படித்தான் நான் அறிந்த சேலத்தை கொட்டகைகளோடு சேர்த்துத்தான் என்னால் சொல்ல முடியும்) அது எனக்கு வருத்தத்தினை தரவில்லை. ஏனென்றால் பேலஸ் தியேட்டர் பக்கத்திலே என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்ததுதான் காரணம்.

பேலஸ் திரையரங்கின் கம்பீரத்தை இரட்டித்துக் காட்டியது அதற்கு முன் அமைந்திருந்த திறந்த வெளியும் அதில் அமையப்பெற்றிருந்த புல்வெளி மேடையும்தான். எனக்குத் தெரிய அங்கு அமர்ந்து காற்று வாங்கியவாறு சினிமா பார்க்க வருபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருபது முப்பது பேர் இருக்கும். இவர்களைத் தவிர டிக்கெட் வாங்கிவிட்டு மனைவிக்காக காத்திருப்பவர்கள் கொஞ்சம். ஐந்து ரூபா டிக்கெட் எட்டு ரூபாய் என்று விற்கும் ஆண் பெண் கறுப்பு மார்க்கெட் வியாபாரிகள் இப்படி ஐம்பது பேர் தாராளமாக நடமாடும் அளவுக்கு பெரிய முகப்பை உடையதாக இருந்தது பேலஸ் தியேட்டர்.

பெண்களுகென்று நாற்பது பைசா , தொண்ணூறு பைசா கவுண்டர் கூண்டுகளும், அதே வகுப்புக்கு ஆண்களுக்கு கொட்டகைக்கு வெளியே கூண்டுகளும் இருக்கும். அதற்கு அடுத்த வகுப்பு  ₹1.30 இரு பாலாருக்கும் பொது வரிசை. அதற்கு மேல் 1.70 பாக்ஸ் ₹3 இவை கொட்டகையின் உள்ளே மாடிக்கு போகும் படியின் கீழ் ஒரு கவுன்ட்டர். இங்கு டிக்கெட் வாங்கிவிட்டு அமர இருக்கைகள் இருக்கும். இவர்கள் கொட்டகையில் நுழையும் வாயிலில் பார்வையாக பன்றி மலை சுவாமிகள் படமும் அதன், அருகே இருந்த கடிகாரமும் இன்னும் நினைவில் இருக்கின்றது. கொட்டகையின் பின் புறம் ஒரு தோட்டம். அதில் கத்திரி , வெண்டை கீரை போன்றவை பயிரிடப்படும். பெரிய கிணறு, அதில் நீர் இரைக்க ஒரு பம்ப் செட்.
மிகவும் பசுமையாக இருக்கும் அந்த நிலத்தை கவுண்டர் என்பவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். அவர் எங்களுக்குத் தெரிந்தவர். அதனால் முதல் நாள் டிக்கெட் வாங்க அவர் செல்வாக்கு எங்களுக்கு பயன் பட்டது.

கடைசி வகுப்புக்கே அமர சேர் வசதி இருந்த முதல் கொட்டகை பேலஸ். மேல் வகுப்புகளுக்கு குஷன் சேர். பாக்ஸ் வகுப்புக்கு தனித்தனியான குஷன் சீட். 
நல்ல காற்று வசதி. மாலைக்காட்சிகளின் போது கதவுகளைத் திறந்து வைப்பார்கள். இயற்கை காற்றும் வரும். இந்த அருமையான சூழலில் எவ்வளவு பாடாவதி படமும் நன்றாகவே இருக்கும். பேலசுக்கு அருகே வேறு கொட்டக்கைகள் கிடையாது. அதனால் இங்கு படம் பார்க்க வருபவர்கள் வேறு படத்துக்குப் போய் டிக்கெட் கிடைக்காமல் வருபவர்களாக இருக்க மாட்டார்கள். கமிட்டட் ஆடியன்ஸ் வகையைச் சேர்ந்தவர்கள். கொட்டகைக்கு வெளியே சைக்கிள் ஸ்டாண்டு. குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் சைக்கிள் ஸ்டாண்டினை பயன் படுத்துபவர்களுக்கு உண்டு. அதனால் க்யூவில் நிற்காமல் டிக்கெட் வாங்க சைக்கிளில் வருபவர்களும் உண்டு.

கொட்டகையின் அருகே கோயம்பத்தூர் லாட்ஜ் , சிவ சக்தி வினாயகா, போன்ற ஹோட்டல்களும் சற்று காலாற நடந்தால் கிருஷ்ணா பவனும் உண்டு. சினிமா பார்த்துவிட்டு டிபன் சாப்பிடுவது சுகமான அனுபவம். ஹோட்டலில் டேபிள் கிடைக்காது என்பதால் சிலர் சினிமாவில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளைத்  தவிர்த்துவிட்டு ஹோட்டல்களுக்கு விரைபவர்கள் உண்டு.

மற்றொரு திரையரங்கமான.  நியூ சினிமாவும் பேலஸ் தியேட்டரின் உரிமையாளரான பொம்மண்ண செட்டியாருடையதே. சில படங்கள் ஒரே சமயத்தில் இவ்விரண்டு தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு   படச்சுருள் இரண்டு கொட்டகைகளுக்கும் ஆட்டோவில் பயணித்தது ஆச்சரியாமான விஷயமாக  இருந்தது. பி.ஆர்.சேகர் என்னும் ரஞ்சி கிரிக்கெட் பிளேயர் இவர் பேலஸ் செட்டியாரின் மகன். அவர் ரஞ்சி விளையாடியதை விட பேலஸ் கொட்டகை இவருடையது என்பது எங்களுக்கு அவர் மீது பொறாமை கொள்ளவைத்த விஷயம்.
செட்டியாரை நாங்கள் பார்த்தது இல்லை. ஆனால் பேலஸ் தியேட்டர் மேனேஜரை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. 1980 வரை வெள்ளை ஜிப்பா அணிந்து, அம்மைத் தழும்போடு கூடிய முகத்தோடு எப்போதுமே ஒரு சிடுசிடுத்த முகத்தோடு தியேட்டர் வாசலில் கூட்டத்தை பார்வையிடும் மனிதராக அவர் காணப்பட்டார்.

பாசமலர் இக்கொட்டகையில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி விழா எடுத்த போது சிவாஜியும் சாவித்திரியும் தேரில் ஊர்வலமாக (மலர்களைப் போல் தங்கை பாடலில் வருமே அதே போன்ற தேர்) அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பார் மகளே பார் படமும் இங்கு வெற்றிகரமாக ஓடியது. அன்னை இல்லம், தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை, இருவர் உள்ளம், நிறை குடம் போன்ற பல சிவாஜியின் வெற்றிப் படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றி கரமாக ஓடினாலும் இங்கு திரையிடப்பட்ட கர்ணன் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தினர் மிக அதிகமான முறை பார்த்த படம் இது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று முறை பார்த்திருப்பார்கள். என் அப்பாவும் பெரியப்பாவும் விடாமல் ஒரு வாரம் இரவுக்காட்சி பார்த்தார்கள். அதில் மூன்று முறை நானும் உடன் சென்றிருந்தேன்.

ஒரு விசித்திரமான விஷயம். பொதுவாக எம்ஜிஆர் படங்கள் மோசமான தோல்வியை சந்திக்காது. ஆனால் தலைவன், தாலி பாக்கியம், அன்னமிட்ட கை, ஒரு தாய் மக்கள் என பல எம்ஜிஆர் படங்கள் தோல்வியடைந்தது என்றாலும் பின்னாட்களில் எங்கள் தங்கம், குமரிக்கோட்டம் போன்ற படங்கள் அந்த அவப் பெயரைப் போக்கின.

பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த், புன்னகை இதில்தான் திரையிடப்பட்டது. ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் இதில்தான் திரையிடப்பட்டது. எங்க வீட்டு பிள்ளைக்கு பிறகு அவர்களது தயாரிப்பில் எங்க வீட்டு பெண் திரையிடப்பட்டதும் பெரிய எதிர்பார்ப்புடன் போய் ஏமாந்ததும் இங்குதான். கமலின் வறுமையின் நிறம் சிகப்பு, ரஜினியின் காளி, பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், பாக்கியராஜின் மௌனகீதங்கள், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களும், அதே கண்கள் போன்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றியடைந்தது. 

முதன் முதலில் காலை காட்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பழைய ஆங்கில தமிழ் படங்களை சனி, ஞாயிறுகளில் திரையிட்டது. Mad Mad world, முதல் தேதி, எதிர்பாராதது ஆகிய படங்களைப் பார்க்க வைத்தது பேலஸ் தியேட்டர்.

பல வருடங்கள் அதிகமாக வெற்றிப் படங்கள் திரையிடப்படாத காலத்தில் கரகாட்டக்காரன் திரையிடப்பட்டது. பக்கத்து ஊர்களை இருந்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து படம் பார்த்த அதிசயத்தை ஒரு நாள் , இரு நாட்கள் அல்ல. பல மாதங்கள் தொடர்ந்து பார்த்தேன்.
தினமும் ஐந்து காட்சிகள், டிராபிக் ஜாம் ஏற்பட்டு திருப்பிவிடப்பட்ட அதிசயம் இங்குதான் நடந்தது.

எல்லா வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அப்படித்தான் பேலஸ் கொட்டகைக்கும் ஏற்பட்டது.
பல திரையரங்குகள் மூடப்பட்ட பொழுது பேலஸ் கொட்டகையும் கிடங்காக மாறி இப்பொழுது பெரிய அபார்ட்மெண்ட் இருப்பதாக அறிகின்றேன்.

1990 ல் சேலத்தை விட்டு போன நான் 
பேலஸ் தியேட்டர் மூடப்பட்டதை கேள்விப்பட்டேன்.
என் நினைவுகளில் இருக்கும் பேலஸ் தியேட்டர் என்றும் அப்படியேதான் இருக்கும். அப்படியேதான் பலரின் நினைவுகளில் ஏதாவது ஒரு திரையரங்கம் இருக்கும். இப்பதிவைப் படிக்கும் பொழுது அத்திரையரங்குகள் ஞாபகம் வரும்.


நன்றி
சுஜாதா

மன அழுத்தமின்றி பணிசெய்ய...வழிகள்...40

*பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில இதோ உங்களுக்காக, பொறுமையாக படித்துவிட்டு ஆசிரியர்-நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்*

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 40-வழிமுறைகள்:-

1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.

2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும்.

3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.

4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.

சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.

5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.

8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.

 

9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும்.கோபப்பட்டு பேசக்கூடாது.

10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.

11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,

குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும்போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.

 

13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேச பழக வேண்டும்.

14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.

15.பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர்,

மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்துவிட்டு அவர்களை வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.

17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.

18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.

19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.

20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல்,கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.

21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.

22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.

23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்.

24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்துவிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.

25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.

26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு,எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தரவேண்டும்.

27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லமுடியும்.

29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர் காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.

32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.

33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று  சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.

34.உறங்கும்போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.

35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் *அமைதி ஆனந்தம்* நம்பிக்கை* பெருக வேண்டும்   என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,

எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.

40.நீள் ஆயுள்,நிறை செல்வம்,மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்.

நன்றி 

என்றும் அன்புடன் 

கல்வி ஆசிரியர்கள்.

பகிர்வு பதிவு

Monday, October 11, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

மணம்
பரப்பும்
பூக்களுக்கு 
பசுமையான
மரங்களுக்கு
பெயர் போன 
பெங்களூரில் 

ஒரு 
புகழ்பெற்ற 
கல்வி நிறுவனம் 

அதில்
கௌரவ
பேராசிரியர்
பணிக்கு சேர 
ஆசைப்பட்டார்
அப்துல் கலாம்

அதற்கான 
விண்ணப்பம் 
அனுப்பினார் 

நேர்முக
தேர்வில் 
கலந்து 
கொண்டார்

  அவர் 
  முறையாக 
  பி எச் டி 
  படிக்காதவர் 

என்ற 
காரணத்தை 
காட்டி

கலாமை
வேலைக்கு 
சேர்க்க 
மறுத்தனர் 
நிர்வாகத்தினர்

இந்த சம்பவம் 
நடந்த போது 

கலாமிற்கு 
வயது 70

  அக்னி
  ஏவுகணை
  ஏவியவர்

  பொக்ரான்
  அணு குண்டு
  சோதனையை
  வெற்றிகரமாக
  முடித்தவர்

  பிரதம
  மந்திரியின்
  தலைமை
  அறிவியல்
  ஆலோசகராக
  இருந்தவர்

  அந்த 
  பணியில்
  சேர்க்க
  மறுத்தது

  அவர்
  மனதை 
  பாதித்தது 
  என்றால் 
  நிச்சயம் 
  இல்லை 

  அவரின் 
  பங்களிப்பை
  பயன்படுத்தி 
  கொள்ள 

  அந்த 
  நிறுவனம்
  கொடுத்து 
  வைக்கவில்லை 

என்பதே
நிஜம்

  மாபெரும் 
  லட்சியத்தில் 
  பயணம்
  செய்பவர்களை

  இந்த
  மாதிரியான 
  சின்ன சின்ன 
  மறுப்புகள் 

  அவர்கள் 
  மனதை 
  எள்ளளவும்
  பாதிப்பதில்லை

என்பதே
உண்மை

  வாங்க ::

  எந்த
  நிகழ்வையும்

  அது
  நன்மையோ
  தீமையோ

  அது
  வெற்றியோ
  தோல்வியோ

  அது
  இன்பமோ
  துன்பமோ

  இதுவும்
  கடந்து
  போகும்
  என்று

  சுலபமாக
  எடுத்து
  கொள்ள
  பழகுவோம்

  நம்
  வாழ்வில்
  அதிர்வுகளுக்கு
  இடமில்லை

  என்பதை
  உணரவும்
  செய்வோம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

அன்புடன்
காலை
வணக்கம்

💫💫💫💫💫💫💫

நன்றி
முனை. சுந்தர மூர்த்தி

பெண் ( குழந்தை) கள்..வீட்டின் கண்கள்...

பெண் பிள்ளை பெற்ற மற்றும் கொடுத்து வைக்காத அனைவருக்கும் இனிய உலக பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்....

மிக்க பேரன்போடு..
ஆ.சிவா..
ஆண்டாள்.
சேலம்.

பெண்( குழந்தை) களை போற்றுவோம்...

*இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். | இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.* 
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
*இது ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை. 
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
 மனமுவந்து வாழ்கிறாள். 
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். 
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
  தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*. 

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. 
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
 தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - 
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
 அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, 
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
 அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். 
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். 
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

 மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று. 
யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், 
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. 
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, 
சுற்றுகிறாள்.
 முதல் சுற்று, 
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். 
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள். 

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
*அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு* என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். 

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது. 

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். 

*சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. 
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. 

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது. 

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்.

படித்ததில் பிடித்தது...

நன்றி
பகிர்வு பதிவு

Saturday, October 09, 2021

முதுகெழும்பாய் தந்தை...

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி
யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 

4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..

5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை. 
இருந்தாலும்  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?

அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. 
இருந்தாலும் அப்பா 
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை...,...

தந்தையைப் போற்றுங்கள்.

படித்ததில் வலித்தது.

நன்றி..
பகிர்வு பதிவு...

Friday, October 08, 2021

வாழ்வில் வெற்றிப்பெற....

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட
ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம்
செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த
ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று
சந்தித்து தனது நிலைமையை சொல்லி
புலம்பினான்.
"நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று
முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம்
செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில்
தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம்
தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க
தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம்
செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். நான்
வடக்கே யாத்திரை செல்கிறேன்.
இரண்டொரு மாதங்களில் திரும்ப
வருவேன். அப்போது வந்து என்னை
மீண்டும் பார்" என்று ஆசி கூறிவிட்டு
சென்றார்.

*༺♦༻*
இவனுக்கு அப்போது தான் உண்மை
புரிந்தது. மக்களின் தேவையை
அறிந்துகொள்ளாமல் நமக்கு சுலபமாக
இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து
இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி
ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான்.
தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம்
விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில்
ஒரு காய்கறி கடையை திறந்தான். பக்கத்து
ஊர்களுக்கு சென்று காய், கனி வகைகளை
வாங்கி வந்து தனது கடையில் நியாயமான
விலைக்கு விற்றான்.

*༺♦༻*
இதைத் தொடர்ந்து
வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர்.
துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி
அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக
நன்றி சொன்னான்.
இந்நிலையில், இவனது வியாபாரத்தை
பற்றி கேள்விப்பட்ட பக்கத்து ஊர்
செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு
எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி
அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம்
ஒன்றை கட்ட ஆரம்பித்தார். தனது கடைக்கு
எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதை
பார்த்த இவன் என்ன ஏது என்று
விசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்கு
கடை ஒன்று அங்கு வரப்போவதாகவும்,
அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள்,
வீட்டு உபயோக வரை அனைத்தும்
கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு
கலக்கியது. இத்தனை ஆண்டுகள்
நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம்.
இப்போது தான் ஓரளவு வியாபாரம்
ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு
போட்டியா? இந்த கடை கட்டி
முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள்... என் கடையை
யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது
என்ன சோதனை என்று கலங்கித்
தவித்தான்.

*༺♦༻*
இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது
யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம்
சென்று நடந்ததை விளக்கி, "நான்
இப்போது என்ன செய்யவேண்டும்?"
என்றான்.
"ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப்
போல செய். தினமும் காலை உன் கடையை
திறக்கும்போது, *'இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்'* என்று கடவுளை
பிரார்த்தனை செய். அப்படியே எதிர்புறமும்
திரும்பி *அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்'* என்று
பிரார்த்தனை செய். ஒப்புக்காக
பிரார்த்திக்காமல் மானசீகமாக அதை
விரும்பு. நல்லதே நடக்கும்" என்றார்.
"என்னது எனது போட்டியாளரும் நன்றாக
இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு
வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று
பிரார்த்திப்பதா?"

*༺♦༻*
"ஆமாம்... நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு
வாழ்த்தும் நல்லெண்ணமும் உனக்கே
பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அதே
போல அவருக்கு தீமை நினைத்தால்
அதுவும் உனக்கே திரும்ப வரும்" என்றார்.
"அதே போல அவரை எங்கேனும் சந்திக்க
நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பது
போல பார்க்காது, ஒரு நண்பரை நலம்-
விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு
புன்னகை செய்." என்றார்.
அந்த சந்நியாசி மீதும் அவரது
வார்த்தைகள் மீதும் இவனுக்கு பெரு மதிப்பு
உண்டு என்பதால் அவர் கூறியதைப்
போலவே தினமும் முழு மனதுடன்
தனக்காகவும் அந்த எதிர்
கடைக்காரருக்காகவும் பிரார்த்தனை
செய்து வந்தான். அந்த எதிர்கடைக்காரரை
பார்க்கும்போதெல்லாம் புன்னகை செய்தும்
வந்தான்.

இதன் பயனாக நாளடைவில் இருவரிடமும்
ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு
காய்கறிகளை கொள்முதல் செய்யும்
பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர்.
விளைவு இவனுக்கு பன்மடங்கு பிஸ்னஸ்
கிடைத்தது.
நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு
மிகப் பெரிய காய்கறி சந்தையாக
மாறிவிட்டது. மெல்ல மெல்ல அந்த பகுதி
முழுக்க வளர்ந்து அந்த பகுதியே ஒரு மிகப்
பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது.
ஒரு நேர்மறையான அணுகுமுறை,
மனோபாவம் எந்தளவு அவரது
வாழ்க்கையை மாற்றியிருக்கிறது
பார்த்தீர்களா?

*༺♦༻*
*நாம் இந்த உலகத்தில் தனியாக இல்லை .*
*ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.* நமது
எண்ணங்கள் தான் நமது எதிர்காலத்தை
தீர்மானிப்பதில் மிகப் பெரிய பணியை
செய்கின்றன. *ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை நம்மையே தீர்மானிக்கின்றன.* எனவே
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்
என்றும் எப்போது நல்ல நேர்மறையான
சிந்தனையையே
வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இனிய முகநூல் நண்பர்களே வணக்கம்.

நன்றி..
பகிர்வு பதிவு...

Wednesday, October 06, 2021

ஆசிரியர் என்றும் ஆசிரியரே...

ஆசிரியர் சமுதாயத்திற்கு மனநிம்மதியை தரக்கூடிய ஒரு தீர்ப்பு.

Supreme Court says reprimanding students for indiscipline not tantamount to provocation for suicide

ஒரு மாணவர் தனது ஒழுக்கமின்மைக்காக கண்டிக்கப்படுவது என்பது  மாணவரை தற்கொலைக்கு தூண்டப்படுவதற்கு ஒப்பானதல்ல, என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது ஆசிரியரின் தலையாய கடமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மற்றும் ஒரு மாணவர் கவனத்துடன் இருக்காததற்காக அல்லது படிப்பில் மதிப்பெண் பெறாததற்காக அல்லது வகுப்புகளில் கவனமில்லாமல் இருப்பதற்காகவோ  அல்லது பள்ளிக்கு வராததற்கோ கண்டிப்பது அசாதாரணமானது அல்ல.

ஒரு மாணவரை சமுதாயத்தில் நல்ல மனிதராக்க, நல்ல குணங்களைப் புகட்டுவது ஒரு ஆசிரியரின் தார்மீகக் கடமை. ஒழுக்கமின்மைக்காக ஒரு மாணவரை கண்டிக்கும் ஒரு எளிய செயல்  தற்கொலைக்கு தூண்டுதலுக்காகவோ  இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.  

மாணவரின்  வருகை பதிவு, கற்றல் திறன், கற்றலில் முன்னேற்றம் மற்றும் மாணவரை பற்றிய வேறு எந்த செயலும் அல்லது தொடர்புடைய தகவல்களும். பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் குறிப்பிட்ட காலங்களில்  கூட்டங்களை நடத்தி அவர்களுக்குத் தெரிவிப்பது. 
"ஒரு ஆசிரியரின் தார்மீகக் கடமை மட்டுமல்ல, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பிரிவு 24 (இ) இன் கீழ் சட்டரீதியாக ஒதுக்கப்பட்ட கடமைகளில் ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது 

 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 ஆம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யும் போது உச்சநீதிமன்றத்தால் இந்த அவதானிப்புகள் செய்யப்பட்டன.

The top court said it is a solemn duty of a teacher to instill discipline in the students and reprimanding a student for not being attentive or not being up to the mark in studies or for bunking classes or not attending the school is not uncommon.

“It is not only a moral duty of a teacher but one of the legally assigned duties under Section 24 (e) of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 to hold regular meetings with the parents and guardians and apprise them about the regularity in attendance, ability to learn, progress made in learning and any other act or relevant information about the child,” the bench said.

பகிர்வு பதிவு

Saturday, October 02, 2021

கொரோனாவுக்கு பின் கற்பித்தல்...

நவம்பரில் நடக்க வேண்டியது... 2

முறையான கற்பித்தலுக்குப் போகும்போது நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படைக் கருத்துகள். 

1. குழந்தைகள் ஒன்றரை வருடம் சற்று சுதந்திரத்துடன் இருந்திருக்கிறார்கள். 
2. விரும்பியதை மட்டும் செய்திருக்கிறார்கள். 
3. தாங்களே முடிவெடுத்து அதற்கேற்ப நாட்களைக் கழித்திருக்கிறார்கள். 
4. குழந்தைகளோடு செலவிட நேரம் உள்ள, படித்த பெற்றோர்கள் அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் குழந்தைளுக்குக் கற்பித்திருப்பார்கள்.  
5. இணைய வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் அதற்கு வாய்ப்பில்லாத குழந்தைகளைவிட சற்று மேம்பட்டு இருக்கலாம். 
6. இது குழந்தைகளுக்கு இடையே இருக்கும் கற்றல் இடைவெளியை அதிகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. 
7. தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்திருப்பவர்கள் கொஞ்சம் சந்தேகத்தோடு நம் வகுப்பறைகளைக் கவனிக்க முதிர்வார்கள். 
8. முதல் வகுப்பு கற்றல் இலக்குகளை முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டியிருக்கும். 
9. இரண்டு, மூன்று வகுப்புக் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தும்போது, அவர்களுக்குத் தாழ்வுணர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
10. அந்தத் தாழ்வுணர்வுகொண்டவர்களிடம் “நான் சொல்லித்தருகிறேன். நீ தெரிந்துகொள்” என்ற நம் முந்தைய முறை பொருந்தாமல் போகலாம். 
11. நடத்தி முடிப்பது என் வேலை என்று எல்லா பாடப்பொருளையும் சிவனே என்று நாம் கற்பிக்கத் தலைப்படுவோமா இல்லை தேர்ந்தெடுத்த பாடப்பொருள்களை அவசரமின்றி பொறுமையாகக் கற்பிப்போமா? 

குழப்பம்தான்.  நிச்சயமான, தெளிவான, உறுதியான முடிவுகள் எடுக்க முடியாது. பல கருத்துகளின் அடிப்படையில் சில செயல்பாடுகள் வடிவமைத்து, நடைமுறைப்படுத்திப் பார்த்து, குழந்தைகளின் ஈடுபாட்டைக் கவனித்து அதிலிருந்து பாடம் கற்பதுதான் ஒருவழி. 

எடுத்துக்காட்டாக ஒரு செயல்பாட்டை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.  (வயது முதிர்ந்த குழந்தைகளுக்கு அடிப்படைக் கருத்துகளை அவர்கள் மனம் கோணாமல் கற்பிப்பதற்கான உத்தியாக இச்செயல்பாட்டை நான் காண்கிறேன்.) 

1. வகுப்புக் குழந்தைகளின் பெயர்களை சார்ட்டுத் துண்டுகளில் எழுதுக்கொள்ளுங்கள். இனிஷ்யல் உட்பட எழுதுவது நல்லது. (பெயரட்டைகள்) கூடவே குண்டூசிகளையும் வைத்துக்கொள்ளுங்கள். 
2. ஒவ்வொருவரின் பெயரை வாசித்து அவருடைய சட்டையில் பெயரட்டையைக் குத்தி விடுங்கள். ஒருவாரம் இது தொடருங்கள். 
3. அடுத்த வாரம் பெயரட்டைகளை மேசைமேல் பரப்பி வையுஙகள். குழந்தைகளிடம் அவரவர் பெயரட்டைகளை எடுக்கச் சொல்லுங்கள். 
4. அடுத்த வாரம் சார்ட்டில் குழந்தைகளின் பெயர்களை எழுதுங்கள். அதை வாசித்து வருகையைப் பதிவு செய்யுங்கள். 
5. சார்ட்டில் குழந்தைகள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடித்துக் காட்டட்டும். 
6. மேசைமேல் பரப்பி வைத்த பெயரட்டைகளிலிருந்து தன் பெயரட்டையையும் தங்கள் நண்பர்களுள் சிலரின் பெயரட்டையையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளியுங்கள். 
7. அதற்கும் அடுத்த வாரம் நீங்கள் குறிப்பிடும் பெயரைச் சார்ட்டிலிருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கேளுங்கள். 
8. பெயரட்டைகளைக் குழந்தையிடம் கொடுத்து எத்தனை பேருக்கு பெயரட்டைகளைக் கொடுக்க முடியும் என்று கேளுங்கள். 
9. இதற்கிடையே ஐந்தோ ஆறோ குழந்தைகளின் பெயர்களைக் கரும்பலகையில் எழுதுங்கள். (அதில் இரண்டு பெயர்கள் இருப்பது நல்லது) எடுத்துக்காட்டு விஜயகுமார், சந்திரசேகர்  போன்றவை
10. விஜயகுமார் என்ற பெயரை வாசித்துக் காட்டிவிட்டு அதன் கீழே குமார் என்பதற்குக்கீழே குமார் என்று எழுதி இது என்ன என்று கேளுங்கள். 
11. பிறகு புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டை நடத்துங்கள். அதாவது விஜயகுமார், சந்திரசேகர்  என்றிருப்பதிலிருந்து விஜயசேகர், சந்திரகுமார் போன்ற புதுப்பெயர்களை உருவாக்க வேண்டும். 
சில சொற்களை வாசிக்கக் குழந்தைகள் சிரமப்படும்போது இந்தச்சொல்லில் வரும் எழுத்துகள் .................................... இந்தப் பெயரில் வந்துள்ளன. அதை வாசித்தால் இந்தச் சொல்லையும் வாசிக்கலாம் என்று சொல்லுங்கள். அதுபோல் சில எழுத்துகளை வாசிக்கத் தெரியாமல் இருக்கும்போது ..................... இவருடைய பெயரின் இனிஷ்யல் இந்த எழுத்துதான் என்று சொல்லுங்கள். 

புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டில் குழந்தைகள் விருப்பம் காட்டினால் புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும் செயல்பாட்டை நடத்தலாம். குழந்தைகளுக்குத் தெரிந்த ஊர்ப்பெயர்களை எழுதுதல், வாசித்துக் காட்டுதல், வாசிக்க வாய்ப்பளித்தல், பிறகு புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும்படி சொல்லுதல், அவற்றை எழுதுதல், வாசிக்க வாய்ப்பளித்தல் என்னும் படிகளைப் பின்பற்றலாம். 

காட்டாயப்படுத்தாமல், அவர்களுக்குத் தெரியாமலே அவர்களின் கவனத்தை எழுத்துகளின் மேல் பதிய வைக்க இச்செயல்பாடு உதவும் என்று நினைக்கிறேன். மட்டுமல்ல விரைந்து கற்கும் மாணவர்களுக்கு கடினத்தன்மை கூடிய அடுத்த செயல்பாட்டைக் கொடுக்கவும் அவர்களைச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடச் செய்யவும் இச்செயல்பாடு உதவும். 

மேலும் சில செயல்பாடுகளுக்காக காத்திருங்கள். 

மீள்பதிவு

நன்றி
PC; Puthiathalaimurai

ஜி. ராஜேந்திரன் 
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore 
Blog:qriuslearning.wordpress.com