சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்தேன். கட்டுரை ஆசிரியர் ஜெர்மனி
அவரது தோழியின் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியின்மேல் ஒட்டியிருந்த காந்த வில்லையில் ‘இன்று உங்கள் குழந்தையை புகழ்ந்தீர்களா?’ என்ற வாசகம் பார்த்தாராம். என்ன வேடிக்கை இது என்று தோன்றியதாம். நம் குழந்தையை நாமே புகழுவதா? அல்பம் என்று கூடத் தோன்றியதாம் அவருக்கு. தோழியின் வீட்டில் இதைபோல தினசரி செய்ய வேண்டிய வேலைகள் கூட அங்கங்கே சின்னச்சின்ன துண்டுக் காகிதத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்ததாம். அந்தந்த வேலைகள் முடிந்தவுடன் அவைகளை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவாராம் அந்த தோழி. ஆனால் இந்த காந்தவில்லை? யோசித்தபோது இதை அப்படி எறிவார் என்று தோன்றவில்லையாம். அப்படியானால் இது நிச்சயம் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாராம்.
இப்போது அந்தக் கட்டுரை ஆசிரியருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை. அன்றைக்குப் பார்த்த வாசகங்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இன்று புரிகிறது என்று எழுதியிருக்கிறார். தனது குழந்தையைப் புகழும்போது அவளது முகத்தில் வரும் புன்னகைக்கு தன் சொத்தையே எழுதி வைத்துவிடலாம் போலிருக்கிறது என்கிறார் இந்த கட்டுரை ஆசிரியர். (புன்னகை இல்லாது போனாலும் அவளுக்குத் தானே இவரது சொத்துக்கள்?!)
நம்மில் கூடப் பலபேர் இப்படி தினமும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடுகிறோம். முடிந்தவுடன் கணவர்/மனைவி பாராட்டினால் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது? தினமும் செய்யும் வேலைகள் என்றாலும் கூட, யாராவது பார்த்து, ‘அட! முடிச்சுட்டயா எல்லாத்தையும்?’ என்று சபாஷ் போட்டால் நமது ஈகோவிற்கு நல்ல தீனி கிடைக்கிறது, இல்லையா? ஆனால் நம் குழந்தைகளை நாம் இப்படிப் பாராட்டுகிறோமா?
அந்தக்காலம் போல இல்லை இந்தக் காலம். அப்போதெல்லாம், வீட்டுப்பாடம் என்பது எப்போதோ ஒருமுறை. எஸ்எஸ்எல்சி வரும்போதுதான் தினமும் படிக்க வேண்டும்; நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்ற கட்டாயம் தோன்றும். இப்போது? எல்கேஜி, யூகேஜி யிலேயே ஆரம்பித்துவிடுகிறது, போட்டி. எடுத்தவுடனே இரண்டு அல்லது மூன்று மொழிகள். (எங்கள் ஊரில் மூன்று மொழிகள்!) ஐந்து வயதில்தான் எழுத தொடங்கினோம். அதுவும் சிலேட்டு, பலப்பத்துடன். கொஞ்சம் பெரிய வகுப்பு போனவுடன்தான் நோட்டு புத்தகம், பென்சில். கலர் பென்சில்கள், க்ரேயான் இதெல்லாம் நாங்கள் பார்க்காத விஷயங்கள்.
மாற்றங்கள் வரவேற்கத்தக்கது என்றாலும், எத்தனை குழந்தைகளால் எடுத்தவுடனே பென்சிலைப் பிடித்துக்கொண்டு சரியாக எழுத வருகிறது? நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டது ஐந்தாம் வகுப்பிற்குப் போனவுடன் தான். முதல் நாள் ஆங்கில வகுப்பில் எங்கள் தலைமை ஆசிரியர் திருமதி சுசீலா கேட்டார்: ‘யாருக்கெல்லாம் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுத வரும்?’ என்று. நான் கையைத் தூக்கவில்லை – தெரிந்தால் தானே தூக்க? ஆசிரியை என்னை கூப்பிட்டு ‘மக்கு, மக்கு…பேரு கூட எழுத கத்துக்கலையா?’ என்று சொல்லி கற்றுக்கொடுத்தார். பள்ளிக்கூடம் என்பது மன அழுத்தம் உண்டு பண்ணும் இடமாக இருக்கவில்லை.
இந்த நிலையில் குழந்தைகளுக்கு வீட்டிலாவது உற்சாகம் அளித்து பாராட்டவேண்டும். புகழ்வதால் இன்னொரு நன்மையையும் உண்டு. புகழ்ந்தபடியே நமக்கு தேவையான வேலைகளையும் செய்யச் சொல்லலாம். புகழ்ச்சியில் மயங்கி குழந்தைகளும் செய்துவிடுவார்கள். (இது எப்பிடி?)
சின்னச்சின்ன புகழுரைகள் குழந்தைகளை மகிழ்விக்கின்றன. ஏன் நம்மையும் தான்! (இந்தப் பதிவிற்கு பாண்டியன் கருத்துரை போடுவாரா என்று என் மனம் அவரது புகழுரைக்கு ஏங்குகிறதே!!!) முகநூலில் நாம் போடும் ஸ்டேடஸ்-களை, நமது புகைப்படங்களை, நாம் எடுத்த (சரியாக போகஸ் ஆகாத) படத்தைக் கூட போட்டு எத்தனை பேர் லைக் பண்ணுகிறார்கள் என்று பார்க்காத ஆள் உண்டோ? இப்போது பலரின் தினசரி வாழ்வு தொடங்குவதும், முடிவதும் முகநூல் என்றாகிவிட்டது. அவர்களையெல்லாம் விடுங்கள்.
உங்கள் கணவர் உங்களை இந்த வருடத் திருமண நாளன்று போன வருடம் போன அதே உணவகத்திற்கு அழைத்துப் போவாரா? மாட்டவே மாட்டார். புதிதாக நகரில் வந்திருக்கும் உணவகத்திற்கு அழைத்துப் போய் உங்களை அசத்த மாட்டாரா? ஏன்? அன்று ஒருநாளாவது நீங்கள் அவரைப் புகழ மாட்டீர்களா என்ற எதிர்பார்ப்புதானே? (புகழ்ந்துவிடுங்கள், பாவம்!)
புகழுக்கு மயங்காத மனிதருண்டோ, இந்தப் புவியில்? இன்னொன்று நம் குழந்தைகளை நாம் புகழாமல் வேறு யார் புகழுவார்கள், சொல்லுங்கள். புகழுரைகள் வெறுமனே மகிழ்விப்பது மட்டுமல்ல; இன்னும் உற்சாகத்துடன் அடுத்த வேலையில் கவனம் செலுத்த வைக்கிறதே. அதுவும் ஒரு நன்மைதானே. புகழுரை என்பது வெறும் புகழ்ச்சி இல்லை. ஒரு அங்கீகாரம். நம்மைப் பற்றிய ஒரு உயர்வான எண்ணம் கூட, இல்லையா?
நான் கேட்ட கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. அரசவையில் ஒரு புலவர்
வெளியூரிலிருந்து வந்தவர். அரசனை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறார். என்னவென்று? இந்திரன் சந்திரன் என்று அல்ல. தலையில் கூந்தலே இல்லாத மன்னனைப் பார்த்து, ‘கருங்குழல் கார்மேகம் போலிருக்கிறதே! என்ன ஒரு சுருள் சுருள் ஆன குழல்….’ என்கிறார். அரசனுக்கு அளவில்லாத சந்தோஷம் பொன்னையும், பொருளையும் அள்ளிக் கொடுக்கிறான். வாங்கிக் கொண்டு பிழைத்தது உயிர் என்று புலவர் ஊரை விட்டு ஓடுகிறார். அவர் அந்தப் பக்கம் போனதும் மற்ற புலவர்கள், ‘அரசே! அந்தப் புலவர் சொன்னதெல்லாம் பொய். உங்களுக்கு புரியவில்லையா?’ என்கிறார்கள். அரசனுக்கு தன் தவறு புரிகிறது. பிடி அந்தப் புலவனை என்று காவலாளிகளுடன் தானும் ஓடுகிறான். புலவருக்கு கிலி. என்ன செய்வார்? ஓடி வரும் மன்னனைப் பார்த்து, ‘மன்னா, நீங்கள் இப்படி உங்கள் குழல் காற்றில் அரக்கப் பறக்க ஓடிவர வேண்டுமா? சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே?’ என்கிறார். அரசனின் கோவம் போன இடம் தெரியவில்லை. இன்னும் இத்தனை பொன்னையும், பொருளையும் கொடுத்து அனுப்புகிறான்
மிக அன்புடன் சிவராமகிருஷ்ணன்
No comments:
Post a Comment