Showing posts with label பெற்றோர்களுக்கு. Show all posts
Showing posts with label பெற்றோர்களுக்கு. Show all posts

Saturday, June 14, 2025

கை பேசி(சு)யின் ஆசை...




அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. 
அன்றைக்கு இரவுச் சாப்பாடு
 முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார். அவருடைய கணவர் 
அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தார். 
சிறிது நேரம் போனது. 

அவர் யதேச்சையாகத் திரும்பி 
தன் மனைவியைப் பார்த்தார். 
கண்களில் நீர் திரள, தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே போனார்.

"ஏய்... என்னாச்சு?’’

"நேத்து நாலாம் வகுப்பு
படிக்கிற பசங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தேன். `என்னோட ஆசை’னு 
ஒரு தலைப்புக் கொடுத்து, 'என்ன தோணுதோ எழுதிட்டு வாங்க’ னு சொல்லியிருந்தேன்...’’

"சரி... அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?’’

"படிக்கிறேன்... கேட்குறீங்களா?’’

தலையசைத்தார் கணவர்,  ஆசிரியை படிக்க ஆரம்பித்தார். 

அதில் ஒரு மாணவன்  இப்படி எழுதியிருந்தான்...
 "நான் ஒரு கைபேசியாகணும்கிறதுதான் என்னோட ஆசை.  ஏன்னா, என்னோட அம்மா, அப்பாவுக்கு கைபேசி ரொம்பப் பிடிச்சிருக்கு.  சில நேரங்கள்ல 
என்னை கவனிச்சுக்கிறதைக்கூட மறந்துட்டு, போனை அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க. அப்பா 
அலுவலகத்திலிருந்து களைச்சுப் போய் வருவாரு;  என்கூடப் பேசுறதுக்கு நேரமில்லைன்னாக்கூட, கைபேசியில்
பேசுறதுக்கு அவருக்கு நேரமிருக்கு. 

அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சுறுசுறுப்பான வேலையில இருந்தாலும், 
கைபேசி மணி அடிச்சாப் போதும், ஓடிப்போய் எடுத்துடுறாங்க; 

பல நேரங்கள்ல நான் சத்தமாக் கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. கைபேசியில் ஏதாவது
ஒரு விளையாட்டை விளையாடுறாங்களே தவிர, என்கூட அதிகமா விளையாடுறதில்லை. அவங்க யாரோடயாவது  கைபேசியில் பேசிக்கிட்டிருக்கும்போது, எவ்வளவு
 முக்கியமான விஷயமா இருந்தாலும் 
நான் சொல்றது அவங்க காதுல விழுறது இல்லை. 

அதனால, அம்மாவும் அப்பாவும் 
என்னையும் கவனிக்கணும்கிறதுக்காக 
நான் ஒரு கைபேசி ஆகணும்னு ஆசைப்படுறேன்...’’

இதைக் கேட்ட கணவரும் 
நெகிழ்ந்துதான் போனார்.

 "சரி... இதை யார் எழுதியிருக்குறது?’’

"நம்ம வீட்டு பையன்தான்.’’

#நீதி

பிள்ளைகளுக்கு  விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமே பாசம்ன்னு 
நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்களே...!

பிள்ளைகளுக்கு தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்..

உங்கள் கைபேசியை 
சற்றே ஒதுக்கி வையுங்கள். 

பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் அவர்கள் எதிர்காலத்தில் 
எந்த தவறும் செய்யாமல் சிறந்து விளங்க உதவும்.  வயதான காலத்தில் 
உங்களுக்கான முக்கியத்துவம் உங்களுக்கு கிடைக்கும்...

நன்றி
பகிர்வு பதிவு

திட்டுதல் -ஒரு மனநல மருத்துவம்

'குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..

பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்..

தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்.. அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.

'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்..

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?

பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.
இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள். அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல், பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.

தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.

•குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.

•ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது..

•அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது..

•தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது..

• மற்றவர்களை மன்னிப்பது..

•தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது..

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.

இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் புத்திசாலித்தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.

எனவே, 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்......

நன்றி
பகிர்வு பதிவு...

Thursday, March 27, 2025

கை ரேகை..வாழ்வியல் பாடம்

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன.. 

என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின.. 

இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எதுவும் சொல்லவில்லை.. 

என் அப்பா நடந்து செல்லும்போது சுவரைப் பிடிப்பதை நிறுத்தினார்.. ஒரு நாள் அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து போனார்.. இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் படுக்கையில் விழுந்து சிறிது நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து  சென்றார்..

என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன். அவருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறக்கவும், சிறிது நேரத்திலேயே அவரது மறைவை மன்னிக்கவும் முடியவில்லை.. 

சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு வண்ணம் தீட்ட விரும்பினோம்.. ஓவியர்கள் வந்தபோது, அவரது தாத்தாவை மிகவும் நேசித்த என் மகன், ஓவியர்கள் என் தந்தையின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதிகளை வரைய அனுமதிக்கவில்லை.. 

ஓவியர்கள் மிகவும் நல்லவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருந்தனர்.. அவர்கள் என் தந்தையின் கைரேகைகளை அகற்ற மாட்டோம் என்றும், இந்த அடையாளங்களைச் சுற்றி ஒரு அழகான வட்டத்தை வரைந்து ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவோம் என்றும் அவருக்கு உறுதியளித்தனர்.. அதன் பிறகு இது தொடர்ந்தது. அந்த அச்சுகள் எங்கள் வீட்டின் ஒரு பகுதியாக மாறியது.. 

எங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும், சுவரில் உள்ள தனித்துவமான வடிவமைப்பைப் பாராட்டினர்.. காலப்போக்கில், நானும் வயதாகி விட்டேன்.. இப்போது நடக்க சுவரின் ஆதரவு எனக்கும் தேவைப்பட்டது. ஒரு நாள் நடக்கும்போது, என் தந்தையிடம் நான் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டேன், ஆதரவின்றி நடக்க முயற்சித்தேன்..

என் மகன் இதைப் பார்த்தான். உடனே என் அருகில் வந்து, நடந்து செல்லும்போது சுவர்களைத் தாங்கிப் பிடிக்கச் சொன்னான். நான் ஆதரவு இல்லாமல் விழுந்திருப்பேனோ என்று கவலைப்பட்டான். என் மகன் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி வந்து அன்பாக, அவள் தோளில் என் கையை வைக்கச் சொன்னாள். நான் கிட்டத்தட்ட அமைதியாக அழ ஆரம்பித்தேன். 

நான் என் தந்தைக்கு அதையே செய்திருந்தால், அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.. என் பேத்தி என்னை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள்.. பின்னர் அவள் தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.. அவளுடைய ஆசிரியர் அவள் வரைந்ததைப் பாராட்டி, அவளுடைய சிறந்த கருத்துக்களைக் கூறினார்.. 

அந்த ஓவியம் சுவர்களில் என் தந்தையின் கைரேகையைக் கொண்டிருந்தது.

அவள் கருத்து - "ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெரியவர்களை அதே வழியில் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

நான் என் அறைக்குத் திரும்பி வந்து, என் மறைந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அதிகமாக அழுதேன்.. 

காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம்.. நம் வீட்டில் பெரியவர்கள் இன்னும் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் நம் முன்மாதிரியாக அதையே செய்யக் கற்றுக் கொடுப்போம். 

(ஒரு அழகான செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு) 

இந்தக் கதை என் இதயத்தைத் தொட்டது. மேலும், வயதாகி வரும் என் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக உணர்ந்தேன்.

மிகவும் நெகிழ்ச்சியானது.. நம்மில் பெரும்பாலோர் எப்போதாவது நம் வயதான பெற்றோருடன் இதே போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம்.

நன்றி
பகிர்வு பதிவு

Tuesday, September 03, 2024

மனிதரில் மாணிக்கம்..

ஒரு உண்மைக்கதை..!!

ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது அவர் எதிரில் உடுத்த உடை 
கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க..

சுற்றுமுற்றும் பார்க்கிறார்..
உடனே அவர் தன் இடுப்பில் கட்டி 
இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு 
வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம் 
ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்..

இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்..

அங்கே பழைய ஜரிகை வியாபாரம் 
செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்.. 

வணிகரும்.. ஆஹா.. 
இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே.. 
சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்... ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்..

அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அருகில் சென்று பார்க்கிறான்..

அவர் தன் வேட்டியை பக்கத்தில் 
கழட்டி வைத்து விட்டு தியானம் 
செய்து கொண்டிருக்க.. 

இதை வாய்ப்பாக பயன்படுத்தி 
மெல்ல அதை எடுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கிறான்.. அந்த சமயம் பார்த்து 
கீழே கிடந்த முள் ஒன்று அவன் காலில் குத்த.. ஆ.. அம்மா என்று அலறுகிறான்..

அந்நேரம் பார்த்து தியானத்தில் 
இருந்து கண் விழித்து பார்த்தவர்.. 

அங்கே நிகழ்ந்ததை நினைத்து அடடா.. 
நாம் அந்த வேட்டி மீது வைத்திருந்த ஆசை அவனை திருடனாக மாற்றிவிட்டதே என மனதிற்குள் வருந்தினாராம்.. 

ஆஹா.. இது எப்பேர்ப்பட்ட மனநிலை.?

தான் ஒரு பொருள் மீது வைத்த பற்று 
அது இன்னொருவரை திருடனாக மாற்றி விட்டதே என அவர் நினைத்து வேதனை படுகிறார். 

அப்படி நினைத்தவர் தான்
துறவி 'மகாவீரர்'..

அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பாருங்கள்...

ஆனால்.. இன்றைய உலகில் எத்தனை பேர் இத்தகைய மனநிலையில் வாழ்கிறார்கள்..?

அவரவர்..
மனநிலைக்கே...
விட்டுவிடுவோம்...

நன்றி 
பகிர்வு பதிவு..