Thursday, January 30, 2020

புதிய பார்வை..புதிய கோணம்....

மாலி நாட்டை சார்ந்த
22 வயதான
மொஹமத் கசாமா
என்னும் இளைஞன்
வேலை தேடி பிரான்ஸ்
நாட்டிற்கு
வந்தான்...

அவன் வீதியில்
நடந்து கொண்டு
சென்றபோது
ஒரு அடுக்குமாடி
குடியிருப்பில்
நான்காவது மாடி
பால்கனியில்
4 வயது குழந்தை
வெளிப்புற
ஜன்னலை பிடித்து
தொங்கி கொண்டிருந்தது...

உயிருக்கு போராடி
கொண்டிருந்த
அவனை பார்த்து,
கூச்சல் போட்டு கொண்டும்,
செல்போனில் படம்பிடித்து
கொண்டும், அதிர்ச்சியில்
மக்கள் இருந்தனர்...

இதை கண்ட இளைஞன்
மொஹம்மத் கசாமா
தன் உயிரை
துச்சமாக எண்ணி,
ஸ்பைடர்மேன் போல,
கிடுகிடுவென
முதல் மாடியில் இருந்து,
நான்காவது பால்கனிக்கு
ஏறிச்சென்று, குழந்தையை
பத்திரமாக மீட்டான்...

அவனது வீரதீர செயலை
பாராட்டி நாட்டின்அதிபர்
மொஹமத் கசாமாவிற்கு
நாட்டின் நிரந்தர
குடியுரிமையை வழங்கி,
தீயணைப்பு துறையில்
உயர்பதவி அளித்தும்
அவனை கௌரவித்தார்...

சமீபகாலத்தில்,
ஊடகத்தில்,
மிகவும் 'வைரல்' ஆன
நிகழ்வு இது...

இந்த நூற்றாண்டின்
ஆகச்சிறந்த சொல்...

'செயல்'...
ஆம்
நாமும்
செயலை
முன்னெடுப்போம்
அமைதியாக
சாதிக்க
முயல்வோமா?...

அன்புடன்
இனிய
மாலை
வணக்கம்.

Tuesday, January 28, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

ஒரு மாணவர் தன்னுடைய பலத்தை காண, ஆதரவாய் இருக்கும் ஆசிரியர்களை
தன் வாழ்நாள் முழுக்க
மறக்க மாட்டார்கள்...

தான் எண்ணுவதை விட இன்றைய மாணவ சமுதாயம் பிரம்மாண்டமாய் உள்ளதை இன்றைய ஆசிரியர்கள் மறுக்க முடியாது...

எந்திரங்களை கையாளுவதற்கு ஒருவித பொறுப்பு தேவை என்றால்...

மாணவர்களையும்,
அவர்கள் உணர்வுகளையும்
கையாளுவதற்கு...

வேறுவிதமான பொறுப்பு தேவையாய் இருக்கிறது...

பரந்த அறிவை விட,
விரிந்த இதயம்
இதற்கு தேவை...

தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு
நடப்பதை போல...

தங்களிடம் பயிலும் மாணவர்களை புரிந்து கொள்ளும் பக்குவமும், பொறுமையும் ஆசிரியர்களுக்கு அவசியமாகிறது...

விளைநிலம்
பண்படுத்தப்பட்டு
விதைக்கிற பருவம் வரை
காத்திருக்கும்
விவசாயி போல...

மாணவர்களின்
பிஞ்சு மனங்களில்
நம்பிக்கையை,
நல்லுணர்வை,
நல் எண்ணங்களை
விதைக்க...

உரிய தருணங்களை
ஆசிரியர்
எதிர்நோக்க வேண்டும்...

அன்பில் கலந்த
ஆசிரியர்-மாணவர் உறவு
காலம் கடந்தும்
உறுதியாய் நிற்கும்...

பண்பாடும் கலாச்சாரமும் 'பாடத்திட்டத்தில்' இல்லாமல் இருக்கலாம்...

ஆனால்...

ஆசிரியரின்
'பாசத்திட்டத்தில்' இவை இடம்பெறின்...

ஒப்பற்ற
மானுட சமுதாயம்
மலர்ந்தே தீரும்...

- முத்தையா -

அன்புடன்
காலை
வணக்கம்.

Saturday, January 25, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

"மனசு போல வாழ்க்கை"
"நீ என்ன நினைக்கிறாயோ
அதுவேஉன்கிட்டவந்துசேரும்"
"நல்லது நினைச்சா நல்லது நடக்கும், கெட்டது நினைச்சா
கெட்டதுதான் நடக்கும்"...

பள்ளி ஆசிரியர்கள் முதல்
ஆன்மிக பெரியவர்கள் வரை
நமக்கு சொல்லிகொடுத்த
பாடங்கள் இவை...

இக்கருத்துக்கள் குறித்து 
ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தின் பேராசிரியர் டாக்டர். கரோல் ட்வெக் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து 'Mindset: The New Psychology of Success' என்னும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

"எல்லாம் என் தலைவிதி,
இதை யாரால் மாற்ற முடியும்?" என்று தனக்குதானே
சொல்லிக்கொள்ளும் மனோநிலையில் இருக்கும் நபர்கள் 'நிலையான
மனநிலையில் உள்ள மனிதர்கள்'என்றும்...

'விதி கால் பங்கு,
மதி முக்கால் பங்கு'
"என்னோட உழைப்பும், முயற்சியும் சரியாய்
அமைத்தால்
வெற்றி நிச்சயம்"
என்னும் மன நிலையில் உள்ள மனிதர்களை 'வளர்ச்சி மனநிலையில் உள்ள மனிதர்கள்' என்றும்...

மனிதர்களை
இருவகையாக பிரிக்கிறார்...

"தொழில் செய்யலாம் என்று நினைத்தேன். கிரகம் சரியில்லை, கட்டம் சரியில்லை, இரண்டு வருடம் கழித்து ஆரம்பித்தால் ஓஹோவென்று வருவீர்கள்"
என்று கூறியதை நம்பி...

எல்லா தகுதிகள், திறமைகள், வளங்கள் இருந்தும்  வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர்...

"இன்னும் இரண்டு பந்துகள் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பேன்" என்றும்...

"இன்னும் கொஞ்சம் உயரமா, நல்ல கலரா, பொறந்திருந்தா என் லெவல் வேற" என்றும்...

"பணக்கார வீட்ல பொறந்திருந்தா என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்" என்றும்...

புலம்பிபுலம்பியே, காலம் தள்ளுபவர்கள் பலர்.

இவர்கள் எல்லாம்
'நிலையான மனநிலை கொண்ட மனிதர்களே'...

ஆனால்
இதற்கு மாறாக...

'வளர்ச்சி மனநிலையில் உள்ளோர்'...

அறிவு, ஆற்றல், திறமை ஆகியவை பிறப்பில் மட்டும் வருவதல்ல, நாம் எந்த அளவிற்கு சிந்திக்கிறோமோ,
வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கிறோமோ,அந்த
அளவிற்கு வெற்றிகளை குவிக்க முடியும்' என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

அதன்படியே
செயல்படுகிறார்கள்.

இறுதியில்
ஜெயிக்கிறார்கள்...

இந்த
இரண்டு மனநிலைகளை
புரிந்து கொண்டாலே...

நாம் யார்?
நம்மால் என்ன
செய்ய முடியும்?
நாம் வெற்றி அடைய
எப்படி நம்மை மாற்றி
கொள்ளவேண்டும்?என்பது நமக்கு தெரியவரும்...

'எண்ணம் போல் வாழ்வு'
'உள்ளத்தனையது உயர்வு'
'நம் வாழ்க்கை நம் கையில்'
இவையெல்லாம்
உண்மையே.

நம் எண்ணங்கள்,
நம் செயல்கள்,
சிறப்பானவையாக
அமைத்து...

நம்மால் எதுவும் முடியும்
என்னும் நம்பிக்கையுடன்
நாம் செயல்படும் சூழ்நிலையில்...

நம்  வெற்றிகளுக்கு
வானமே எல்லையாக அமையும் என்பதில் ஐயமில்லை...

- சிவகுமார் பழனியப்பன் -

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Thursday, January 23, 2020

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு..... கட்டுரை (8 ஆம் நிலை பருவம்3 )

முன்னுரை

இந்த சமுதாயத்திற்காக இளைஞர்கள்  ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உதவும் மனபான்மை.

ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. 

சமுதாய தொண்டு

அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுதல்.

மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். 

கல்விப்பணி

எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். 


மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை வழங்கலாம். 

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவவேண்டும். 

நெறிப்படுத்துதல்

ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

முடிவுரை

நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.அதனை உணர்ந்து இளைஞர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்...

Sunday, January 19, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

S   hut
U   p and
M  ove
O   n...

நம்மை சுற்றி உள்ள
மக்களில் பெரும்பாலோர்,
எப்போது பார்த்தாலும்,
யாரை பற்றியாவது,
எதை பற்றியாவது
குறை சொல்லி கொண்டே,
புலம்பி கொண்டே இருப்பர்...

இவர்கள் தங்களின் மகிழ்ச்சியை
தொலைப்பதோடு,
சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தையும்,
காலி செய்து விடுவார்கள்...

இவர்கள் மத்தியில் நாம் இருப்பின், நாமும் அவர்களை போலவே ஆகிவிடுவோம்.

மாறாக...

இம்மாதிரி மக்கள் நம்மிடம் வந்து புலம்பும்போது, நாம் அவர்களுக்கு சொல்வதுதான்...

'புலம்புவதை நிறுத்து.
அடுத்த நிலைக்கு செல்'

மேலை நாடுகளில் இதனை,
'Shut Up and Move On'
அதாவது S U M O Theory
என்று அழைக்கின்றனர்.

மேலும், நம்மை யாராவது அவமானப்படுத்தி விட்டாலும், நம்மை பற்றி பிறரிடம் புறம் பேசும் நேரங்களிலும்,
நம் மனதை பார்த்து, நாம் சொல்ல வேண்டிய வார்த்தை,  'S U M O'

இவைகளை கடைபிடிக்கும் நேரத்தில், நாமும் நம்
கவலைகளை மறந்து,
நம்மை நாமே உற்சாகபடுத்தி, அடுத்த நிலைக்கு நாம்
உயர முடியும்.

வாங்க...

முயற்சிகள்
செய்து
பார்ப்போம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Friday, January 17, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

*ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம்* *சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !*
.
நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !
.
*"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''*
.
*"இல்லை*' என்று தலையாட்டினார் இயக்குனர்.
.
நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.
.
இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.
.
"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள்.
.
அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன். என்றார் நீதிபதி.
.
இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.
.
பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.
.
"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?
.
சாப்பிடுங்கள்.''
.
என்றார் நீதிபதி.
.
"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''
.
என்றார் இயக்குநர்.
.
"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.
.
அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.
.
இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?
.
மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.
.
*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.
.
அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*
.
*உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...
.
நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*
.
இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.
.
அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,
நமக்கும் தான்*
.
கொலை, கொள்ளை; லஞ்ச ஊழல் தான் பாவம் என்றில்லை.
.
வரிசையில் நம்பிக்கையுடன் உணவுக்காகவோ,உத்யோகத்திற்கோ
நிற்பவர்களை புறம் தள்ளி குறுக்கு வழியில் சென்றடைவது,
.
வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு, உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் சொந்தம் கொண்டாடுவது... அல்லது ஒரு உறவின் பேச்சை கேட்டு, மற்றொரு உறவை நேசிக்க மறுப்பது...,
.
பசி மற்றும் பணகஷ்டத்தோடு, இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் ஆசை காட்டி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கி நிற்பது, மனைவியின் பேச்சை கேட்டு, உடன் பிறந்த சொந்தங்களை மதிக்காமல் இருப்பது, அல்லது பேசாமல் இருப்பது...,
.
இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்துவிட்டு,
.
புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.
.
அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி,
.
சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,
.
நம்மருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ள சுற்றத்தாரை,
.
சந்தோஷப்படுத்தி பாருங்கள்.
.
உதவி பெற்றவர்கள் ஆண்டவரிடம்,
.
ஆண்டவா.....
.
எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து,
.
எங்களுக்கு உதவிபுரிந்தவருக்கு நீண்ட ஆயுளைக்கொடு,
.
ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அவர் நெடுங்காலம் உதவவேண்டும் என வேண்டுவார்கள்.
.
பிறகு பாருங்கள்.
.
ஆரோக்கியம் கூடும், ஆனந்தம் பெருகும்,
.
ஏன், ஆண்டவனே,
.
" யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது " என்று
உங்களை ஆண்டவனே,
.
ரசிப்பான்.
.
ரட்சிப்பான்.
.
நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை. யாரும் அடுத்தமுறை உங்களுக்கு, இந்த தலைமுறை சொந்தமாக பிறக்க போவதில்லை, இந்த தலைமுறையில் சகோதர, சோகதரியாக, மாமன், மச்சான், சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்ற எந்த உறவும், அடுத்த ஜென்மத்தில் தொடருமா இல்லையா என்பது நமக்கு தேரியாது... ஆகையால், முடிந்த வரை பகைமை பாராட்டாமல்,  நட்புடன் பழகி, நம்மால் முடிந்ததை செய்வோம்..
.
உங்கள் தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை இல்லாதவர் களுக்கு உதவி செய்யுங்கள்.
.
உங்கள் இல்லம் ஆலயமாகும்.
.
நீங்களே இறைவனாவீர்கள்.
.
சதா சர்வகாலமும் ஆண்டவரிடமும் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற்று கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்.
.
ஒரு நாளாவது நம்மிடம் மீதமுள்ள உணவையோ, உடையோ இல்லாதவர்களை தேடிசென்று கொடுத்து பாருங்கள்!
.
கர்ணனாக ஆவீர்கள்
.
அகம் அழகு பெறும்,
முகம் பொலிவு பெறும் தர்ம சிந்தனை மேலோங்கும்

முயன்றுதான்
பார்ப்போமே!..

அன்புடன்
இனிய
காலை
வணக்கம் 🙏

💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

Wednesday, January 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🌞🌞புதிய பார்வை....புதிய கோணம்..🌞🌞

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..!

இலைக்கு வெளியே இரண்டு சோற்றுப்
பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம்
அழுதுகொண்டிருந் தன."எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?.

அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.

"ஒரு ஏழை விவசாயி...
கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து,
நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்..

நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில்
சிலரை எலிகள் நாசம் செய்தன..

பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப்
பிழைத்த நாங்கள் அறுவடைக்குத்
தயாரானோம்.

அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து,
தூற்றி அதிலும் வீணாகிப்போன
சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய
பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.

அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள்
நிறைய பேர்.

விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும்
போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும்,
எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள்
வாங்கி வந்த போது,

அரிசி களைந்து சமைக்கும்
போது என்று எல்லாவற்றிலும் தப்பிப்
பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள்
தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

இத்தனை பேர் உழைப்பில் விளைந்த
என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை..
இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன
செய்ய?" என்றது.

உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்..

நன்றி நட்பே...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம் 🙏

Monday, January 13, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

'பழையன போக்கி,
புதியன புகுத்து'

வீட்டிலுள்ள
தேவையற்ற
குப்பைகளை
'போக்க' வேண்டும்..

வீட்டை
சுத்தப்படுத்தி,
புது வாழ்வை
'தொடங்க'
வேண்டும்.

போ(க்)கி
பண்டிகையின்
'தாத்பர்யம்'
இதுவே.

வாங்க...

பழைய
மற்றும்
தேவையில்லாத...

கோபம்,
பொறாமை,
பழிவாங்கும்
எண்ணம்...

இவைகளை
'போக்கி'...

அன்பு,
அரவணைப்பு,
மனித நேயம்,
சகோதரத்துவம்...

போன்ற
நற்குணங்களை...

நம் மனதில்
புதிதாய்
'புகுத்தி'...

புதிய
வாழ்வை
வாழ
தொடங்குவோம்.

புதிய
சமுதாயம்
படைக்கவும்
தொடங்குவோம்...

பொங்கும்
பொங்கல்
பொங்கட்டும்...

கரும்பாய்
நம் வாழ்வு
இனிக்கட்டும்...

இனிய
போகி பண்டிகை
வாழ்த்துக்கள்...

அன்புடன்
காலை
வணக்கம்.

🎋🌾🎋🌾🎋🌾🎋

Sunday, January 05, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

"மனம் விட்டு சிரிச்சு
ரொம்ப நாளாச்சு'

இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை டென்ஷன்தான்.

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கவலை.

கவலையின் அளவு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம்.

ஆனால், எல்லாருமே பிரச்னைகளை பற்றியே நினைத்து கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.

சென்னை போன்ற நகரங்களில் மின்சார ரயிலில் தினந்தோறும் 30 கிலோமீட்டர் பயணிக்கும் ஒரு பயணி, அருகில் அமர்ந்திருப்போரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் சிந்தனையிலேயே அமர்ந்திருப்பார்.

தான் தினமும் கடந்து செல்லும் பாதையில் பிரபல உணவகம் ஒன்று அமைந்திருக்கும். ஆனால், அதை பற்றி அவருக்கு சுத்தமாக தெரிந்தே இருக்காது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவ மாணவர்கள் கபடி, கிட்டிப்புள்ளு, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் என பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும், விளையாடச் செல்லலாம் என்ற முனைப்பில் இருப்பர்.

இன்று அப்படியல்ல. விடியோ விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து அவர்களாகவே சிரித்துக் கொள்வதைத்தான் காண முடிகிறது.

குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே அரிதான விஷயமாக உள்ளது.

"மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு' என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

அந்தளவுக்கு வாழ்க்கை வெறுமையாகி விட்டது என நாம் நினைக்கிறோம்.

வேறு சிலருக்கோ,
"சே, என்னடா வாழ்க்கை இது' என்ற சலிப்பு. வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறு கூறலாம்.

ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரே இவ்வாறு கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.

பிரச்னையையே வாழ்க்கையாக எதிர்கொள்ளும் இளைஞன், நாளடைவில் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். அது அவனது எதிர்காலத்தையே பாழாக்குகிறது.

சிரிப்பை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஏதாவது ஒரு விஷயத்தை மனதில்போட்டு குழப்பி கொள்கிறோம்.

சிரிப்பை துரத்தியடிக்கும் ஓர் ஆயுதமாக கவலை நம்முன் நிற்கிறது.

கவலைகளை மறப்பதற்கு இன்று பலரும் பல்வேறு வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

அதில் ஒன்று யோகக் கலை. யோகக் கலையில் பல்வேறு ஆசனங்களை செய்வதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

யோகா வகுப்புகளில் சிரிப்பை ஒரு பாடமாகவும் கற்று தரப்படுகிறது.

தொடர்ந்து சில நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் மனசு லேசாகிறது.

கவலைகளை மறப்பதற்காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, சிரிப்பு மூட்டும் செய்திகளைக் கூறி மகிழ்கின்றனர்.

ஒரு குழந்தை பேச தொடங்குவதற்கு முன்
சிரிக்க தொடங்குகிறது.

சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது.

ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான்.

"நைட்ரஸ் ஆக்சைடு' என்ற ஒரு வேதிப்பொருளுக்கு "லாஃபிங் கேஸ்' (சிரிப்பு வாயு) என்று பெயர்.

இது ஒரு நிறமற்ற வாயு.

மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மருந்துகள் கைகொடுக்காத நிலையில், இந்த வாயு ஓர் அருமருந்தாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதாவது, மன அழுத்தத்துக்கு உள்ளானோருக்கு சிறந்த மருந்தாக விளங்குவது சிரிப்பு என்று தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள் வெவ்வேறு மொழிகளை பேசுகின்றனர்.
ஆனால், சிரிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.

சிரிப்பு, ஒருவரின் மனத்தையும் உடலையும் வலிமைப்படுத்தி, அவரை
புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

"ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்பது உண்மைதான்.

ஆனால், அதற்கு முன்பு நமது சிரிப்பில் நாம் நம்மை காண்போமே!

- லாரன்ஸ் -

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.