Friday, September 29, 2017

அறநீர்...சிறுகதை

*அறநீர் - சிறுகதை*

அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளர்ப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.

“தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு. ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான Emotional Balanceஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும். மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும். இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு. வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம்.

ஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது. ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான். தாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும். சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும். மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும். சின்னச்சின்ன ஆசிஅகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன். ஆனால் சாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. சாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார். பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம்.

அவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும். ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை. “அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்” என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும். சாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம். மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை.

அப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன். காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான். “ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம். நிம்மதியா காசு பார்க்கலாம்” என்பதுதான்.

வாழ்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது, ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள் எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது. அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன்.

மருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில் நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள். இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை. அலுவலகத்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள். ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான். அவர்களை இணைக்கும் இரண்டு புள்ளிகள். ஒன்று முதுமை மற்றொன்று நான். ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.

சரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை.

மாலையில் தான் சாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் சாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து “ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க” என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது. அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார்.
“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”
“நான் கேட்டேனா?” என்றார் புன்னகைத்தபடியே.

அந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன். எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது? இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது சாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன்.

அவர் என் கைகளைப் பற்றி
“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”

வழிந்தோடியது அறநீர்..

- விழியன்

நன்றி திரு. விழியன் ஜி...

Wednesday, September 27, 2017

திரையிசையில் இலக்கணம்...

திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.

🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...

*🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

*🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

*🖌சினைப்பெயர்:
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

*🖌பொருட்பெயர்:
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

*🖌இடப்பெயர்:
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

*🖌காலப்பெயர்:
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

*🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

*🖌தொழில் பெயர்:
  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

*🖌இறந்த காலப் பெயரெச்சம்:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

*🖌எதிர்காலப் பெயரெச்சம்:
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

*🖌இடவாகுபெயர்:
  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

*🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

*🖌குறிப்புப் பெயரெச்சம்:
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

*🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: 
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

*🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

*🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
  நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

*🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
  ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

*🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
  நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

*🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
  உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

*🖌பெயர்ப் பயனிலை:
  காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

(பகிருங்கள். ஆசிரியர்களுக்குப் பயன்படும்)

நன்றி...

விருதாளர்களின் புகைபட தொகுப்பு


நிலா முற்றம் முக நூல் குழுவின் இரண்டாம் ஆண்டு விழா கும்பகோணம் அருகில் உள்ள சுவாமி மலையில் நடக்க உள்ளது. அதில் கவிதை போட்டியில் வெற்றி பெற்று விருதாளர்களின் புகைபடத்தொகுப்பு.
யூ டியூப் லிங் கீழே
கண்டு  மகிழுங்கள்.
https://youtu.be/aqjVHsrGcfo

Friday, September 22, 2017

சமூக மாற்றத்தில் மாணவர்கள்...காணோளி

எம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து செயல் வழி கற்றல் மூலம் சமூக மாற்றத்தையும் நன்நடத்தையையும் உருவாக்கும் முயற்சி. இந்த சிறிய காணோளி.
our  school  DFC project (2017-18)  please  watch  and give your  valuble  views.

https://youtu.be/hGU8DM0V-GM

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.
நன்றி
நட்புடன்
ஆ.சிவா....சேலம்.

Saturday, September 16, 2017

குறை ஒன்றும் இல்லை...ஒரு நிமிட கதை...

இன்றைய சிந்தனை..( 17.09.2017..
....................................

''மற்றவர்களை குறை சொல்லாதீர்கள்''
....................................

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.

இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது.

எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

” நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒரு நாள் சன்னல் நோயாளி இறந்துவிட்டார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை…

ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க….

அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

“நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்து இருக்காது..புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

ஆம்,நண்பர்களே.,

தன் துன்பங்களை மறைத்துக் கொண்டு மற்றவர்களை
உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்..

அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை..
குறை கூறாதீர்கள்..!     🌺🙏🌹

நாணயம் ....சிறுகதை...

தினம் ஒரு குட்டிக்கதை.

மனதை நெகிழ வைக்கும் சிறுகதை
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.”
ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான்.

அருக்காணி வருத்தத்தோடு காலண்டரை பார்த்தாள். இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல், அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில், அட்வான்சாக, இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது. மூன்றாவது வீட்டு எசமான், வேலைக்கு சேரும் போதே, அட் வான்ஸ் எல்லாம் கேட்கக் கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார்.

அவள் கணவன் குடி காரன். ஜேப்படித் திருட னும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாத மாகும். ஆனால், வந்தும் அவளுக்குப் பெரிய உபகார மாக இருக்க போவ தில்லை. அவனுக்கும் சேர்த்து, அவள் தான் செலவு செய்ய வேண்டும்.

ஒரே மகன் தங்கராசு, படிப்பில் கொஞ்சம் மக்கு. டியூஷன் போனால் நல்ல மார்க் வாங்குகிறான். போகா விட்டால், எல்லா பாடங்களிலும் நாற்பதைத் தாண்டுவதே கஷ்டம் தான். அவனாவது நன்றாகப் படித்து உருப்பட வேண்டும் என்று, அவளும் படாதபாடு படுகிறாள்.

ஆனால், மாத வருமானத்தில் பாதி, வீட்டு வாடகைக்கே போய் விடுகிறது. மீதியில் வீட்டு செலவை சமாளிக்க, இன்றைய விலைவாசி ஒத்துழைக்க மறுக்கிறது.

ஒன்றாம் தேதி தர வேண்டிய டியூஷன் பீஸ் நூறு ரூபாயை, இருபத்தைந்தாம் தேதி வரை தராவிட்டால், அந்த டியூஷன் வாத்தியாரும்தான் என்ன செய்வார் பாவம். அவருக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதே…’ என்று அருக் காணிக்குத் தோன்றியது. அவர் மேல் தப்பு சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை.

இந்தப் பாழாப்போன மனுஷன் மட்டும் ஒழுங்கா இருந்தா, இப்படி ஒவ்வொண்ணுக்கும் நான் கஷ்டப்பட வேண்டியதில்லை…’ என்று விரக்தியுடன் வாய் விட்டுச் சொன்னாள்.

தங்கராசு இந்தக் காலக் குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனத்துடன் அவளைக் கேட்டான்… “”நான் நாளைக்கு டியூஷன் போகலாமா, வேண்டாமா அதை சொல்லு முதல்ல.”

அருக்காணி பெருமூச்சு விட்டாள்… வேறு வழியில்லை. அட்வான்ஸ் தர முடியாது என்று சொன்ன, அந்த மூன்றாவது வீட்டுக்கார எசமானைத் தான், ஏதாவது மன்றாடி அட்வான்ஸ் பணம் வாங்கி, இவனை நாளைக்கு டியூஷனுக்கு அனுப்ப வேண்டும்…’ என்று நினைத்துக் கொண்டாள்.

இரண்டு வருஷமாய், அவர் வீட்டில் வேலை பார்க்கிறாள். இந்த ஒரு தடவையாவது அவர் உபகாரம் செய்தால் நன்றாக இருக்கும். அவருடைய மனைவி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், அந்த அம்மாள் ஊருக்குப் போயிருக் கிறாள். இப்போது போய் அந்த வீட்டில் பாத்திரம் கழுவி விட்டு வர வேண்டும். எதற்கும் பையனையும் அழைத்துக் கொண்டு போய் கேட்டுப் பார்க்கலாம் என்று அருக்காணி முடிவு செய்து, அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

போகும் போதே தங்கராசு கேட்டான். அந்த ஆள் தர மாட்டேன்னு சொன்னா என்ன செய்யறது?”
வாயை மூடிட்டு வாடா. போறப்பவே அபசகுனமாய் பேசாதடா.

அந்த வீட்டு சொந்தக்காரர், வராந்தாவில் உட்கார்ந்து, அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அவள் தங்கராசுவை கூட்டி வந்ததைப் பார்த்தவுடனேயே, அவர் முகம் சுளித்தார். “”உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது, பையனை எல்லாம் கூட்டிக்கிட்டு வரக் கூடாதுன்னு.”

இல்லை எசமான். ஒரு ஓரமா சும்மா உக்காந்துக்குவான். குறும்பு செய்ய மாட்டான். வேண்டா வெறுப்பாய் அவர் தலையசைத்தார். மகனை வேகமாக இழுத்துக் கொண்டு, வீட்டுக்குள்ளே சென்று, அவனை ஒரு இடத்தில் தரையில் உட்கார வைத்தாள். சமையலறையில் இருந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில், இரண்டு காபி தம்ளர்ளை கழுவப் போட, அந்த வீட்டுக்காரர் உள்ளே வந்தார். தனியாகப் பேசக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் மெல்ல கேட்டாள் அருக்காணி…
எசமான் ஒரு சின்ன உதவி.

என்ன?”

அட்வான்சா, ஒரு நூறு ரூவா குடுத்தீங்கன்னா உதவியா இருக்கும். பையனுக்கு டியூஷன் பீஸ் தரணும்.”

ஆமா, உன் பையன் படிச்சு கலெக்டர் ஆகப் போறான். டியூஷன் பீஸ் கேட்கறா. நான் முதல்லயே உன்கிட்ட சொல்லி இருக்கேன். அட்வான்சு, கடன்னு எல்லாம் என் கிட்ட கேட்கக் கூடாதுன்னு,” அவர் நிற்காமல் சப்தமாகச் சொல்லிக் கொண்டே போய் விட்டார்.

அருக்காணிக்கு அவர் பேசியது வேதனையாக இருந்தது. பெரிய பங்களாவில் வசிக்கிற அந்த மனிதருக்கு, மனம் சிறுத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், அவரிடம் ஒன்றும் சொல்லாமல் பாத்திரம் கழுவி முடித்தாள்.
மகனை அழைத்துக் கொண்டு, அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள். போகிற வழியில், அவள் கண்களைத் துடைத்துக் கொண்ட போது,

தங்கராசு கேட்டான். அழறியாம்மா?
இல்லடா… கண்ணுல தூசி.

நீ எதுக்கும்மா கவலைப்படறே… இதை பாத்தியா?” என்ற தங்கராசு, நூறு ரூபாய் தாள் ஒன்றை அவளிடம் காண்பித்தான்.
அருக்காணி திகைப்புடன், அந்த பணத்தை வாங்கிக் கொண்டே கேட்டாள். “”இது எங்கடா கிடைச்சுது?”
அந்த வீட்டுல கீழே கிடந்தது. அந்த ஆளுக்கு தெரியாம, அதை எடுத்து ஜோபுல போட்டுகிட்டேன்.

அருக்காணி, அந்த இடத்திலேயே மகன் முதுகில் மாறி மாறி அடித்தாள். “”இது என்ன திருட்டுப் பழக்கம், எப்ப இருந்து ஆரம்பிச்சுது. அப்பன் புத்தி அப்படியே வந்திருச்சா உனக்கு, ஏழையா இருந்தாலும், கவுரவமா பொழைக்கணும்ன்னுதானடா, இவ்வளவு கஷ்டப் படறேன். என்ன காரியம் செய்திருக்கே.”

அப்படியே திரும்பி, மகனை தர தரவென்று இழுத்து, அந்த வீட்டுக்குச் சென்றாள். இன்னமும் அந்த வீட்டுக்காரர், அந்த நண்பரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தார். அவளைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் கேட்டார்… என்ன?
என் மகன் தெரியாத்தனமா தப்பு செய்திட்டான் எசமான். கீழே விழுந்து கிடந்ததாம், இந்த நூறு ரூபா. அதை எடுத்து வச்சுகிட்டான்.

அவள் அந்த நூறு ரூபாயை, அவரிடம் நீட்டினாள். அவர், தங்கராசுவை சுட்டெரிக்கிற மாதிரி பார்த்துக் கொண்டே, நூறு ரூபாய்த் தாளை வாங்கினார்.

உன் புருஷன் பிக்பாக்கெட்டு, அதனால, வேலையில சேர்த்துக்க வேண்டாம்ன்னு, அன்னைக்கே பல பேரு சொன்னாங்க… இன்னைக்கு, உன் பையனும் அதையே செய்திருக்கிறான்.”
வார்த்தைகள் சுட்டெரிக்க, துடித்துப் போனாள் அருக்காணி. அதுவும், முன்பின் தெரியாத ஒரு மனிதர் முன், இப்படி அவமானப்படுத்துகிறாரே என்று அழுகை அழுகையாக வந்தது.

என்ன எசமான், குழந்தை ஏதோ தெரியாத்தனமா செய்ததை இப்படி சொல்றீங்க, அதான் அவனுக்குப் புத்தி சொல்லி, நான் திருப்பிக் குடுத்துட்டேனில்ல.
அவர், தன் நண்பர் முன்னிலையில், அவள் அப்படிக் கேட்டதைக் கவுரவக் குறைவாக நினைத்தார்.

கோபத்துடன் சொன்னார். “”நீயா கொண்டு வந்து தந்திருக்கலைன்னா, உன் வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கும். திருட்டுத்தனம் செய்யலாமாம்; நான் அதை சொல்லக் கூடாதாம். இப்படிப்பட்ட ஆள் வேலைக்கு வேண்டாம். நாளையில் இருந்து நீ வேலைக்கு வராதே.”

அருக்காணி கூனிக் குறுகிப் போனாள், “என்ன மனிதர் இவர்? ஆனால், ஒரு வீடு இல்லையென்றால், வேலைக்கு ஆயிரம் வீடு’ என்று எண்ணியவளாக சொன்னாள். “”சரி எசமான்… நாளையில் இருந்து நான் வேலைக்கு வரலை. இந்த, 25 நாள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுத்திடுங்க, போயிடறேன்.”

வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னதைக் கேட்டு, அவள் அதிர்ந்து போய், கெஞ்சிக் கூத்தாடுவாள் என்று நினைத்த அவருக்கு, அவள் அதை ஏற்று, செய்த வேலைக்கு சம்பளம் கேட்டது, அவர் கோபத்தை அதிகப்படுத்தியது.

முதலில் என் வீட்டுல என்ன எல்லாம் காணாமல் போய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, கணக்கு போடாமல், உனக்கு நயா பைசா தர மாட்டேன்,” என்றார்.
மனசாட்சி இல்லாமல் பேசும் அந்த மனிதரை, கண்கலங்கப் பார்த்தாள் அருக்காணி. அவர், அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார்.

பக்கத்தில் இதை எல்லாம் பார்த்தபடி உட்கார்ந்திருந்த அவரது நண்பரை, நியாயம் கேட்கும் பாவனையில் பார்த்தாள் அருக்காணி. ஆனால், அவரோ, ஆழ்ந்த யோசனையுடன், வேறெங்கோ பார்த்தபடி இருந்தார். ஏழைக்கு யாரும் துணை இல்லை என்ற எண்ணம், அவள் மனதில் மேலோங்கி நின்றது.

ஓரிரு நிமிடங்கள் நின்றவள், அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
திரும்பி வருகிற போது, அவள் மனமெல்லாம் ரணமாக இருந்தது. தங்கராசு அழவில்லை. அவன் முகத்தை உர்ர்…ரென்று வைத்திருந்தான். அவன், அவளை பார்த்த பார்வை, “நீ ஒரு முட்டாள்…’ என்று குற்றம் சாட்டுவது போல தெரிந்தது. அவளால் அதைத் தாங்க முடியவில்லை. அவள் நேர்மைக்கு கிடைத்த மரியாதையைக் கண்டு, மகன் எள்ளி நகைப்பது போல் இருந்தது; மனம் வலித்தது.

சிறிது தூரம் அவர்கள் போயிருப்பர், அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நின்றது. பயத்துடன் அருக்காணி பார்த்தாள். அந்த வீட்டுக்காரரின் நண்பர் காரில் இருந்து இறங்கினார். அவரை பார்க்கவே, அவளுக்கு அவமானமாக இருந்தது. தலை குனிந்து நின்றாள்.
அவர் ஒன்றும் சொல்லாமல், தன், விசிட்டிங் கார்டை’ நீட்டினார்.

பக்கத்து ரோட்டில், புதிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒண்ணு வந்திருக்கில்லையா? அது என்னோடது தான். அங்கே இந்த கார்டை கொண்டு போய், நாளைக்கு காலைல காண்பி. உனக்கு, நல்ல சம்பளத்துல, தகுந்த வேலை போட்டுக் கொடுப்பாங்க. நான் சொல்லி வைக்கிறேன்.”

அவளால், தன் காதுகளை நம்ப முடியவில்லை. அந்தக் கார்டை வாங்கியபடியே அவரைத் திகைப்புடன் பார்த்தாள். அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர், மூன்று மாடிக் கட்டடம். அந்த வழியாகப் போகும் போதெல்லாம் அண்ணாந்து பார்த்திருக்கிறாள். அதிலெல்லாம் ஒரு வேலை கிடைக்கும் என்று, அவள் கனவிலும் நினைத்ததில்லை.
அவர், அவளைப் பார்த்துக் கனிவாகச் சொன்னார்…

நாணயமான ஆட்கள் வேலைக்கு கிடைக்கிறது, இந்த காலத்துல ரொம்ப கஷ்டம்மா… ஒரு நல்ல ஆளைக் கண்டுபிடிக்கறதுக்கு, பத்து பேரை வேலைக்கு சேர்க்க வேண்டியிருக்கு . பல ஊர்கள்ல தொழில் செய்ற என்னோட அனுபவம் இது. பணத்தேவை இருக்கிறப்பவும், எடுத்தது மகன்னும் பார்க்காமல், அந்தப் பணத்தோட திரும்பி வந்தே பாரு… உன்னை மாதிரி ஒரு வேலையாள் கிடைக்கணும்ன்னா, ஆயிரத்துல ஒருத்தர் தேர்றது கூட கஷ்டம். நாளைக்கு கண்டிப்பா வா,” சொன்னவர், சட்டைப் பையில் இருந்து, ஒரு சில நூறு ரூபாய்களை எடுத்து, அவள் கையில் திணித்தார்.

ஏதோ அவசரத் தேவைன்னு சொன்னியே… அதுக்கு வச்சுக்கோ.”
எதிர்பார்க்காமலே, நல்ல வேலை கிடைத்த சந்தோஷத்தை விட, நேர்மைக்கு மதிப்பில்லை என்று, தன் மகன் நினைக்க இருந்த தருணத்தில், அவர், நாணயத்திற்கு உண்டான மதிப்பை உணர்த்தி விட்டுப் போனது, அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது....

நாணயம்......

நன்றி ரமேஷ....