Sunday, May 27, 2018

வாழ்வின் மொழி...கணிதம்

+1 படிக்கும் போது

Matrix Algebra என்றொரு பாடத்தை மாணவர்கள் முதன்முதலாக படிப்பார்கள்.

அது என்ன? எதற்கு? என்ற அடிப்படை பலருக்கு தெரியாது. அதை விளக்க இந்த முயற்சி.

சிறுவயதில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்.

மனதுக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்.

அதோடு 5 எண்ணைக் கூட்டு. விடையென்ன?

விடை = 8.

அப்படியானால் நீ நினைத்த எண் 3 என்போம்.

எப்படி இந்த விடையைச் சொன்னாய் என்று கேட்டால் அதை முறையாக சொல்ல நமக்குத் தெரியாது.

அதை முறையாக சொல்வதற்கான ஒரு வழிதான் இயற்கணிதம் (Algebra) ஆகும்.

இதன் படி மனதில் நினைத்த எண்ணை x என்று எடுத்து
x + 5 = 8 என்று ஒரு சமன்பாட்டை உருவாக்கி,

அதிலிருந்து விடையை கண்டுபிடிப்போம்.

ஆக ஒரு விஷயத்தை தாளில் சமன்பாடாக எழுதும் போது அதன் விடையை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.

அப்படி எழுத அல்ஜிப்ரா என்ற முறையைக் கையாள்கிறோம்.

இது மாதிரி ஒருவகையான கணித வெளிப்பாடு முறைதான் அணி இயற்கணிதம் (Matrix Algebra) ஆகும்.

ஒரு Presentation முறைதான்.

ஒரு கூடை நிறைய ஆரஞ்சு இருக்கிறது. அதை பத்து பத்தாக கூறு வைக்கும் போது எவ்வளவு விற்றிருக்கிறது, எவ்வளவு மிச்சமிருக்கிறது என்று எளிதில் கண்டுபிடிக்கலாம். அது ஒரு Presentation முறை.

ஒரு கூடை ஆரஞ்சு இருக்கிறது. அதில் உள்ள மொத்த ஆரஞ்சையும் எண்ணிவிட்டு, அன்றிரவு வியாபாரம் முடிந்ததும் ஒவ்வொன்றாக எண்ணினால் அப்படியும் மிச்சமிருக்கும் ஆரஞ்சு பழங்களைக் கண்டுபிடிக்கலாம். அது ஒரு Presentation முறை.

ஆக Algebra மாதிரி Matrix ஒரு Presentation முறைதான்.

என்னடா இவனுங்க இரண்டு கோடு போட்டு நடுவுல நம்பர்கள வரிசையா நிக்க வைச்சிருக்கானுங்கன்னு பயந்துரக் கூடாது.

உதாரணத்துக்கு இப்படி ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டு நண்பர்கள் கடைக்கு போகிறார்கள்.

முதலாமவன் 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 3 கிலோ சர்க்கரை வாங்குகிறான்.

இரண்டாமவன் 10 கிலோ அரிசி, 4 கிலோ பருப்பு, 6 கிலோ சர்க்கரை வாங்குகிறான்.

சித்திரை மாதம் அரிசி 50 ருபாய், பருப்பு 150 ரூபாய், சர்க்கரை 40 ரூபாய் விற்கிறது,

வைகாசி மாதமோ அரிசி 60 ரூபாய், பருப்பு 130 ரூபாய், சர்க்கரை 50 ரூபாய் விற்கிறது.

சித்திரை, வைகாசி  மாதம் முதலாமவன் மற்றும் இரண்டாமவன் மளிகை சாமானுக்கு செலவழித்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தக் கணக்கை அணி இயற்கணிதம் (Matrix Algebra)  வடிவில் எளிதாய் எழுதலாம்.

இதன் படி இந்த இரண்டு அணியையும் பெருக்கினால் முதலாமவன் மற்றும் இரண்டாமவன் சித்திரை மற்றும் வைகாசி மாதம் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை அறியலாம்.

ஆக அணி இயற்கணிதத்தில் வரும் அனைத்து எண்களுக்குமே ஒரு நடைமுறை பயன்பாடு இருக்கிறது என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்வோம்.

நடைமுறை வாழ்க்கையை வெளிபடுத்தும் ஒரு மொழிதான் கணிதம் என்பதை புரிந்து கொள்வோம்.

நன்றி நட்பூகளே...

Friday, May 18, 2018

குழந்தைகளை திட்டுங்கள்...அது..நல்லது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

திட்டுவாங்கும் குழந்தைகள்...  தோல்விகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வார்கள்!

🌼குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள் அடங்கிய மிக நீண்ட... வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று, வைரலாகி வருகிறது. இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

🌼ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள். தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம்.

🌼பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக்கொள்வார்கள்;

🌼அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள். அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை... இப்படிச் செல்கிறது அந்த வாட்ஸ்அப் மெசேஜ்
'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்? பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதுபோல...

🌼 இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

🌼 அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா? 

🌼சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா? சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள். 

  மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல்,  

🌼பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.

தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள். 

🌼குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.

🌼ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது,

🌼அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது,

🌼தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது,

🌼 மற்றவர்களை மன்னிப்பது,

🌼தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம்.

🌼 இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை.

🌼அதனால், 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.

கல்வி, உளவியல், ஆற்றுப்படுத்துதல், தொழில் முனைதல் மற்றும் வழிகாட்டுதல் பணியில்

நன்றி....

பாலமோகன் ராமசாமி
கல்வியாளர், இயக்குனர்
ஆக்டிவிட்டி எஜீகேட்டர்
தேசிய கல்வி வள நிறுவனம்
பெங்களூர்
🙏🏽🙏🏽🙏🏽

Monday, May 14, 2018

பணத்தின் அருமை...சிந்திக்க

*பணத்தின் அருமையை உணர்வது ,  உணர்த்துவது எப்படி?*

*ஒவவொரு தாய், தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று*

*ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம்.  சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்*.

*ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய்* *சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.*

*மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்*

*மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.*

*அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.*

*நீ உழைத்து* *சம்பாதிக்காத பணம்* *என்பதால் அது கரியானபோது நீ* *கவலைப் படவில்லை* *அதுவே உன் உழைப்பு* *என்கிறபோது நீ* *துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின்* *அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.*

*இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.*

*விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.*

*ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.*

*ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.*

*போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.*

*குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.*

*படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா* ?

*இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :*

*100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து* *நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.*

*கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்*.

*பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.*

*உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்*.

*காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.*

*உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள்* *செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.*

*மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.*

*தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே* *தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது*.

*தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.*

*எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.*

*எப்படித்தான் பணத்தின் அருமையை* *ஏற்படுத்துவது? 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.*
*அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).*

*இதனால் என்ன என்ன பயன்? தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.*

நன்றி...
கோ.வை.பரமசிவம்
                         

Wednesday, May 02, 2018

வாசித்தல்...ஒரு மகிழ்வு

மகிழ்சியாகப் படிக்கப் பழகுவது எப்படி?

படிக்கும் வழிமுறைகள்:-

1. மகிழ்ச்சியாக படிப்பதென மனதில் உறுதியாக முடிவு செய்தல்
2. உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வழிமுறைகளை வரையறுத்தல்
3. ஆடியோ  முறைகள் வழியாகக் கற்றல்
4. வீடியோ காட்சிகள் வழியாகக் கற்றல்
5. தொடர்புப் படுத்துதல் என்ற நினைவாற்றல் முறையை பயன்படுத்துதல்
6. கற்பனைத் திறனைப் பயன்படுத்திக் கற்றல்
7. அதிக ஆர்வத்தை ஏற்படுத்திக் கற்றல்
8. விளையாட்டு வழியாகக் கற்றல்
9. உன்னிப்பாக கவனித்துக் கற்றல்
10. பிறருக்கு சொல்லிக் கொடுப்பதன் வழியாகக் கற்றல்
11. படிக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுதல்
12. கடினமான பாடங்களை முதலில் படித்தல்

இப்படி மகிழ்ச்சியாகப் படிப்பதற்கு ஆயிரம் வழிகளுண்டு. உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை நிர்ணயம் செய்துகொள்வதன் வழியாக மகிழ்ச்சியாகப் படிப்பதற்கு அடித்தளம் அமைக்கலாம். ஒரு முறை இப்படி செய்யப் பழகிவிட்டால் பிறகு என்ன? எல்லாம் இன்ப மயம்தான்!  பிறகு உங்களால் மகிழ்ச்சியாகப் படிக்காமல் இருக்க முடியாது.  நினைவாற்றால் முறைகள்தான் மகிழ்ச்சியாகப் படிப்பதன் அடித்தளம். மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் உள்ளடக்கிய விந்தையான கலைதான் நினைவாற்றால் கலை. வெற்றியாளனாக உங்களை அது மாற்றிவிடும்.