Thursday, April 23, 2020

நாட்டின் வளர்ச்சி...வீழ்ச்சியில்...ஆசிரியர்கள்

ஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில்.

இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும்.

பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது.

ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும்; எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும்.

ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும்.

அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள்.

பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள்.

மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு "உயிரின் வாழ்வியலுக்கு" அவசியமானவர்.

பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான்.

இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும், போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும்" அதிகரித்துக் காணப்படுவார்கள்.

அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும்.

''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி" "சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.

பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.

எனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.

- முக நூல் பதிவு -

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: