Monday, April 20, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும்.  இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும்.
தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும். அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும். இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும். அப்போது அது ஒரு புதிதாய்ப் பிறந்த கழுகின் அளவுக்கு உருமாறியிருக்கும்.
எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும். நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில் சக்கரவா்த்தியாய் வலம் வரும்.
மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு. கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும். தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல், புதிய வழிகளை உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.

*தனித்திருப்பது*   *சாபம் அல்ல .. வரம்..*

1 comment:

KILLERGEE Devakottai said...

அருமையான ஒப்பீடு கதையை ரசிக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள்.