பயணங்களில் நாம் அன்றாடம் செல்லும் சாலைகளில் சில நேரங்களில் வாழ்க்கைப் பிழைபிற்காக சிலர்படும் துயரங்களைப் பார்த்திருப்போம். அவர்களில் சிலர் காலப்போக்கில் மாறியதையும், அல்லது வேறு சில வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதையும்ப் பார்த்திருப்போம்.
ஆனால் நமக்கு விபரம் தெரிந்த நாட்களில் இருந்து இன்று வரை மாறாத சிலரின் செயல்கள்... நம்மை மிகவும் மனம் வலிக்கச் செய்யும்... செய்ய வேண்டும். செய்கிறது. அவர்களின் இந்த நிலை மாறாததிற்க்கு காரணம் அவர்களா...? இல்லை இந்த சமூகமா...? அல்லது வேறு என்ன காரணங்களாக இருக்கமுடியும்....? யூகிக்க முடியவில்லை என்னவென்று??? கூறவும் முடியவில்லை... எவரையும் குறை. ஆனால்! மாற வேண்டும் இந்நிலை என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் என நம்புகிறேன். இந்த சூல்நிலையைப் பற்றி ஸ்ந்த்யா ஸ்வரூபன் எழுதிய ’எனது சிகரெட்டின் விலை ஐந்தரை ரூபாய்’ என்ற சிறு கவிதை ஒன்றை விகடனில் படித்தேன். நிசமாகவே வலித்தது... எத்தனை முறை கடந்து சென்றிருப்போம் இவர்களை!!!
எனது சிகரெட்டின் விலை ஐந்தரை ரூபாய்
பெட்டிக்கடையோரம்
சிகரெட்டைப் பற்றவைக்கிறீர்கள்...
நீங்கள் சுவராஸ்யமாய்
பார்க்கும் இடைவெளிக்குள்
தன் வயிற்றைவிடச் சிறிய
வளையத்துக்குள் புகுந்து
வெளிவந்துவிடுகிறாள் சிறுமி
பாதி சிகரெட் கரையும் முன்
பிஞ்சுக் கால்களால்
கயிற்றில் நடந்து
ஒரு வேளை சோற்றுக்கும்
அடுத்த வேளை சோற்றுக்குமான
தூரத்தைக்
கடந்துவிடுகிறாள்
அவள் தட்டு ஏந்தி வரும்முன்
அவசரமாக சிகரெட்டை
எறிந்துவிட்டு நகர்கிறீர்கள்
எதையோ அங்கே
தவறவிட்டுவிட்டோமோ
என்று யோசிக்கும் உங்கள் மனதுக்கு
புகையும் சிகரெட் துண்டைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று
சமாதானம் சொல்லிக்கொண்டீர்களானால்
உங்கள் பெயர்
நானாகக்கூட இருக்கலாம்!
உண்மைதான். சாலைகளில் அவர்கள் செய்யும் வித்தைகளை முடியும் வரை நின்று பார்த்துவிட்டு, அவர்கள் பணம் கேட்டு வரும் பொழுது கூட்டத்திலிருந்து எத்தனை முறை நாம் நழுவிச் சென்றிருப்போம். ஒரு 1 ரூபாயைக் கூட அவர்களுக்கு தட்டில் போட்டிருக்க மாட்டோம். அப்படியே போடும் பொழுது, நம் மனம் போடும் கணக்குகள் இருக்கிறதே, அதை என்ன சொல்லுவது. எத்தனை முறை பேருந்தில் சில்லறை பாக்கி கிடைக்காமல் கூட்டத்தில் இருந்து இறங்கி இருபோம், சிகரெட் வாங்கிவிட்டு மீதி சில்லறையை மிட்டாயாகவோ, பாக்காகவோம் வாங்கியிருப்போம். இதில் ஒரு சிறு அளவை அவர்களுக்கு தர மனம் முன் வருவதில்லை. அவர்கள் ஒன்றும் நம்மிடம் தட்டை ஏந்திக் கொண்டு பிச்சை கேட்டு வரவில்லையே. தங்களின் திறமைகளை வெளிக்காட்டி அதற்கு ஒரு சண்மானத்தைத் தானே எதிர்பார்த்து பணம் கேட்கிறார்கள்.
இனியாவது இவர்களைக் கடந்து செல்லும் பொழுது, முதலில் மனதை எடுக்க வேண்டும் உள்ளத்திலிருந்து அவர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு.
நன்றியுடன்
சிவா...
No comments:
Post a Comment