Saturday, December 07, 2019

பெற்றோர்களே ஒரு நிமிடம்...

ட#குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு...! நாளைக்காக மட்டும் வாழமுடியுமா? ( சற்று பெரிய பதிவுதான் இருப்பினும் படிக்க வேண்டிய ஒரு கடிதம்)

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள் இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான்.

மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்
‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.

ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான்

‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க mm நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’
அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’
‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும்.

எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’
‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’
அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன்.

அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்
‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.
All parents - do read it
✍✍✍✍

நன்றி..வாசித்த அனைவருக்கும்...

No comments: