*ஒன்றாம் எண்ணிற்கு சலாம்- விழியன்*
_மழலைக் கதை வரிசை - 189_
எண்களில் உலகத்தில் இரும எண்களின் நாட்டிற்குள் ஒன்பதாம் எண் சிக்கிக்கொண்டது. எண்களில் உலகில் 0-9 ஆகிய பத்து வகையான எண்கள் உலாவும். சின்ன பூஜ்ஜியமாக இருந்து மெல்ல மெல்ல பெரிய பூஜ்ஜியமாக வளரும். அதே போலவே ஒன்று, இரண்டு, மூன்று.. ஒன்பது வரையான எண்களும் வளரும். பிறக்கும் குழந்தைகள் எந்த எண்ணாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அங்கே எல்லோருக்கும் ஒரே மதிப்பு தான். அந்த உலகில் ஆங்காங்கே சில சின்ன நாடுகளும் இருந்தன. இரும எண் நாடு ஒன்று இருந்தது. அங்கே இரண்டு எண்கள் மட்டுமே பிறக்கும், நடக்கும், உயிர் வாழும். அவை பூஜ்ஜியமும் ஒன்றும் மட்டும் தான். மற்றவர்களுக்கு அங்கே இடமே இல்லை. வேறு எண்கள் அங்கே நுழைந்தார்கள் என்றால் காவலாளி பூஜ்ஜியங்கள் அவர்களை சிறை பிடித்து கை கால்களை உடைத்து நாட்டிற்கு வெளியே வீசிவிடுவார்கள்.
அந்த இரும எண்களின் நாட்டிற்குள் (Binary Numbers World) தான் ஒன்பதாம் எண் சிக்கிக்கொண்டது. தனக்கு நோவே என பெயர் சூட்டிக்கொண்டு இருந்தது. (போர்ச்சுகீஸ் மொழியில் நோவே என்றால் ஒன்பது). நோவே நிறைய உடற்பயிற்சி செய்து உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது. நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் காடுகளில் நடந்தும் ஓடியும் சென்றது. ஒரு ஆற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்த போது தவறி ஆற்றில் விழுந்துவிட்டது. நீந்தி மறு கரையில் ஏறிய போது அங்கே நறுமணம் கமழ்ந்தது. எங்கே அந்த மணம் வருகின்றது என வாசனையை பிடித்துச் சென்றால் ஓர் அழகிய பிருந்தாவனத்தினை அடைந்தது. அங்கிருந்து பார்த்த போது தான் இரும எண்களின் உலகத்திற்கு வந்துவிட்டது புரிந்தது.
இரும எண்களின் நாட்டினைப் பற்றி நிறைய கதைகளை நோவே கேட்டுள்ளது. வேறு எண்கள் சிக்கினால் அதோகதி தான் என்று சொல்லி இருக்கின்றார்கள். அந்த நாட்டுடன் என்னதான் சமாதானம் பேசினாலும் அவர்கள் அங்கிருந்து வர மறுக்கின்றார்கள். அவர்களுக்கும் ஒரு வித பயம் தான். எல்லோருமே எண்கள் தானே என்றாலும் கேட்கவில்லை. இதனை எல்லாம் நினைத்ததுமே நோவேயின் உடல் சூடானது. சுரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. மறைவான ஒரு மரத்தில் இருந்து எப்படி அங்கிருந்து தப்பிப்பது என யோசித்துக்கொண்டு இருந்தது.
நான்கு ஒன்றுகள் தூரத்தில் வருவதினை பார்த்துவிட்டது நோவே. ஒரு மரத்தின் கீழே நின்றுகொண்டு இருந்தது. மரத்திற்கு மேலே ஏறுவது என்பது முடியாத காரியம். ஓடினால் அவ்வளவு தான். திடீரென ஒரு யோசனை பிறந்தது. சடாரென படுத்துக்கொண்டது. ஒன்பதில் இருக்கும் அந்த நீண்ட ஒன்றினை இலைகளில் மறைத்துக்கொண்டு வெறும் பூஜ்ஜியத்தினை மட்டுமே வெளியே காட்டியது. அருகில் சென்றால் தான் அது எண் ஒன்பது என்று தெரியும், கொஞ்சம் தள்ளி இருந்தால் பூஜ்ஜியம் போலத்தான் இருக்கும். சூச்சூ போவது போல பாவனை செய்தது. ஒரு பாட்டினை பாடிக்கொண்டு இருந்தது. நடந்து வந்த நான்கு ஒன்றுகளும் சிரித்தபடியே தங்களுக்குள் பேசியபடியே கடந்துவிட்டது. நோவேவிற்கு இப்போது தான் மூச்சே வந்தது.
எப்படியாவது தப்பிக்க வேண்டும். தூரத்தில் வானத்திலிருந்து புகை வந்துகொண்டு இருந்தது. அது எண்களில் ஆராய்ச்சிகூடம் என்பது நோவேவிற்கு புரிந்தது. ஆமாம் அவர்களின் உலகத்திலும் எண்களின் ஆராய்ச்சிகூடம் இருக்கின்றது, அங்கேயும் இதே போன்ற புகை வரும். அங்கே இருப்பவர்கள் தான் நாட்டிலேயே மிகவும் முதுமையானவர்கள் மற்றும் அறிவாளிகள். எண்களுக்கு வரும் பிரச்சனைகளை தீர்வுகளையும் அங்கே தான் ஆராய்ச்சி செய்து தீர்வுகளைக் கொடுப்பார்கள். சிலர் மேலும் புதிய எண்களைக் கண்டுபிடிக்கும் பணியிலும் இருந்தார்கள். அங்கே சென்றுவிட்டால் எப்படியும் காப்பாற்றப்படலாம் என்று நோவேவிற்கு தோன்றியது.
ஆராய்ச்சிக்கூடத்தினை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. சரியாக அப்போது எட்டு பூஜ்ஜியங்கள் சத்தமாக சிரித்தபடி கையில் கூரிய ஆயுதங்களுடன் நடந்து வந்தன. நோவே டகால் என அந்தர் பல்டி அடித்து தலைகீழாக நின்றுகொண்டு இருந்தது. ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் தலைகீழாக நின்றதால் ஒன்பதின் முன்பகுதியான பூஜ்ஜிய பகுதியை மறைத்து நின்றது. ஆயுதங்களுடன் இருந்த பூஜ்ஜியங்கள் அதனை ஒன்று என நினைத்துக்கொண்டது. அருகே வரும்போது லொக் லொக் என இருமியதால் ஏதோ வயதான ஒன்றாம் எண் என நினைத்து கவனிக்காமல் சென்றன.
ஒருவழியாக அந்த ஆராய்ச்சி கூடத்தினை அடைந்தது. மெல்ல கதவினை திறந்து உள்ளே சென்றது. சென்றது நிறைய வயதான பூஜ்ஜியங்களும் ஒன்றாம் எண்களும் அங்கே இருந்ததன. “கனிவான எண்களே, நான் ஒன்பதாம் எண். என் பெயர் நோவே. இரும எண்களுக்கு தவறி வந்துவிட்டேன். என்னை காப்பாற்றுங்கள். நான் தவறி ஒரு ஆற்றில் விழுந்து இங்கே வந்துவிட்டேன். என்னை பத்திரமாக எங்கள் நாட்டிற்கு அனுப்புங்கள்” என்று மன்றாடியது. ஒரு வயதான பூஜ்ஜியம் நோவேயின் அருகே வந்து “எழுந்து இந்த படுக்கையில் படுத்துக்கொள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்” என்றது. “நாங்கள் ஆலோசனை செய்கின்றோம்” என்றது.
நல்ல உணவிற்கு பிறகு சில மணி நேரம் உறங்கியது நோவே. எழுந்த போது அது தப்பிக்கு ஒரு திட்டம் காத்திருந்தது. தாடி வைத்திருந்த ஒன்றாம் எண் ஒன்று ஒரு கருப்பு போர்வையினை கொடுத்தது.” இதனை போர்த்திக்கொள், ஒன்றாம் எண் பூஜ்ஜியத்தை ஏந்திச் செல்வது போல இருக்கும். யாரும் ஒரு குழந்தையை பெரியவர் எடுத்துச் சென்றால் சீண்ட மாட்டார்கள். இங்கிருந்து கிழக்குப்பக்கம் நான்கு கி.மீட்டர் நடந்து சென்றால் ஒரு மலை வரும். நான்காம் மரத்தின் அருகே ஒரு பொந்து இருக்கும். அது ஒரு சுரங்கப்பாதையின் ஆரம்பம். சுரங்கப்பாதையில் 10 கி.மீட்டர் நடந்தால் உங்கள் உலகிற்கு சென்றுவிடலாம். ஆனால் வெளியே சென்றதும் இந்த பாதையை மறந்துவிடவும். ஆராய்ச்சியாளர்களுக்கான பிரத்யேக பாதை இது” என்று சொல்லி வழி அனுப்பியது.
அந்த ஒன்றாம் எண் சொன்னபடியே மலைக்கு அருகே அந்த பொந்து இருந்தது, அரை நாள் நடந்து தன் உலகினை அடைந்தது. தான் இரும எண்களின் உலகத்திற்கு சென்று வந்த கதையை எல்லா எண்களுக்கு கூறியது, எங்கே ஒன்றாம் எண்ணினை பார்த்தாலும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க ஆரம்பித்தது.
நன்றி...
-விழியன்...
No comments:
Post a Comment