Tuesday, April 06, 2021

நம் ஜனநாயகம்...வாழும்..?

அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன.  தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது.

யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.

பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது.  அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே.  அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!

வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.

புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்.  ஷோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பையன், "ஹாய்! டாடி" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினான்.  லஞ்ச் பையை வாங்கிய மனைவியிடம் கேட்டேன்.

"யாரு"?

"யாருன்னா"?

"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".
 
மனைவி சிரிக்க மகன் சொன்னான் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு.  நம்ம வீட்டுக்குள்ளேயே வந்துக் கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னான்.

சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.

"என்னது"?

"பிரிச்சிப் பாருங்க".

உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இருந்தது.

"ஏது"?

"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".

"ஏன் வாங்கின".

"ஆன்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".

எல்லாரும்...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.

காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.

தெருவைப் பார்த்தேன்.  ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.

ஆம் செத்தது...
நம்
#ஜனநாயகம்.

நன்றி...பகிர்வு...

1 comment:

Unknown said...

உண்மை