Tuesday, July 07, 2020

அல்ஜிபிரா..ரகசியம்...

#அல்ஜிப்ராவைக்_கண்டுபிடித்த
#அல்குவாரிஸ்மி

“அல்ஜிப்ராவின் தந்தை” என்றழைக்கப்படும் அல்குவாரிஸ்மியின் இயற்பெயர் #அபூ_ஜாபர்_முஹம்மத்_இப்னு_மூசா_அல்குவாரிஸ்மி.

மாபெரும் கணிதமேதையாகத் திகழ்ந்த அல்குவாரிஸ்மி எழுதிய #அல்ஜபர்_வல்_முகாபலா என்ற நூலின் தலைப்பிலிருந்துதான் #அல்ஜிப்ரா என்ற பதம் உருவானது.

இன்றைய உஸ்பெகிஸ்தானிலுள்ள குவாரஸ்ம் என்ற இடத்தில் பிறந்ததால் அவர் அல்குவாரிஸ்மி என்றழைக்கப்பட்டார்.

ஹிஜ்ரி 210ல் (கிபி 825) அப்பாஸிய ஃகலீஃபா மாமூன் ரஷீத் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர் பக்தாத் சென்றார். அங்கிருந்த ‘பைத்துல் ஹிக்மா’ (அறிவகம்) பல்கலைக்கழகத்தின் கல்விச் சூழல் அவரைப் பெரிதும் கவர்ந்தது.

அங்கே அவர் கணிதவியலில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, தான் கண்டறிந்த நுணுக்கமான கணிதக் கோட்பாடுகளை அங்கிருந்த அறிவியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் ‘பைத்துல் ஹிக்மா’வின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அங்கே வானியலாளராகவும் (Astronomer) அங்கிருந்த நூலகத்தின் தலைமைப் பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.

கணிதத்திலும் (Mathematics) வானியலிலும் (Astronomy) புவியியலிலும் (Geography) அவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அர்ப்பணித்தார். யூத காலண்டர் பற்றியும் ஒரு நூல் எழுதினார்.

திரிகோணாவியலில் (Trigonometry) அவர் முக்கியப் பங்களிப்பு செய்தார். மிகத் துல்லியமான சைன், காஸ், டேன் அட்டவணைகளை அவரே தயாரித்தார்.

அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சில கணிதக் கோட்பாட்டு வழிமுறைகள் இன்று உலகெங்குமுள்ள கல்விக்கூடங்களில் கற்றுத் தரப்படுகின்றன.

பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது இந்தியர்களே. ஆனால் 12ம் நூற்றாண்டில் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்ட ‘எண்கணிதம்’ (Arithmetic) பற்றி அல்குவாரிஸ்மி எழுதிய நூல்களே இந்தப் பூஜ்யத்தை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தின.

பூஜ்யம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இங்கே அது உடனே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்பு அது பக்தாதிலுள்ள ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டு, பிறகு ஸ்பெயினிலுள்ள இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மூலம் ஐரோப்பாவெங்கும் பரப்பப்பட்டது. அதன்பிறகே இந்தியர்கள் பூஜ்யத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

ஐரோப்பாவெங்கும் முஸ்லிம் அறிஞர்களால் பூஜ்யம் பரப்பப்பட்டாலும் அவர்கள் அதனைக் கண்டுபிடித்தது இந்தியர்கள்தாம் என்பதைக் கூறத் தவறிடவில்லை. இதில் இஸ்லாம் கற்றுத்தந்த நேர்மையை அவர்கள் கடைப்பிடித்தார்கள்.

அல்குவாரிஸ்மி ஏழ்மைமிக்க குடும்பத்திலிருந்து வந்தாலும் அவரது அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் முஸ்லிம் உலகமே அவரைக் குறித்து பெருமைப்படும் அளவுக்கு உயர்ந்த சிகரத்தை அவர் அடையக் காரணமாயின.

மத்திய காலத்தில் எந்தவொரு கணித மேதையும் எட்ட முடியாத சிகரத்தை அல்குவாரிஸ்மி எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி... (மறு பதிவு)

MSAH_வரலாற்றுத்_துளிகள்



No comments: