Thursday, January 15, 2015

இந்தியா கொண்டாடும் விவசாயிகள் திருவிழா!

ஆர்.ஷபிமுன்னா
1
கோப்புப் படம்: ஜி.என்.ராவ்
ஜனவரி 15 எனக் குறிப்பிட்ட தேதியில் வரும் ஒரே தமிழர் பண்டிகை - பொங்கல் திருநாள். இது, தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து அமைந்தது. இதனால், வருடந்தோறும் வரும் இந்துப் பண்டிகைகளின் தேதிகளில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். ஆனால், சூரியன் பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் தேதியில் மட்டும் பெரும்பாலும் மாற்றம் இன்றி, அது சரியாக ஜனவரி 15 அன்றே வருகிறது. இதற்கு, இது, இந்தியாவில் அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.
இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பொங்கலை, வட மற்றும் மத்திய இந்தியாவில் 'மகர சங்ராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். ஆனால், இந்தப் பண்டிகையில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை கிடையாது. இதை வைத்தே மகர சங்ராந்தி அம் மாநிலங்களில் கொண்டாடப்படும் விதத்தை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.
இது, தென் மாநிலங்களில் ஓரளவுக்கு தமிழகத்தை போல் இருப்பினும், மற்ற மாநிலங்களில் சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விளைச்சல்களைப் பொறுத்து அங்கு கொண்டாடப்படும் முறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. இதற்காகக் கூறப்படும் பெயர்களும் வேறாக இருக்கும் இந்தப் பண்டிகை நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எப்படி எப்படி கொண்டாடப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
உபி, பீகார் மற்றும் ராஜஸ்தான்
உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தம் பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். இங்கு ஊஞ்சல்களை அமைத்தும் ஆடி மகிழ்கிறார்கள். குளித்த பின் தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இனிப்புகளை செய்து சாப்பிடுகிறார்கள். இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம்.
இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். ஒரே நாளில் முடிந்துவிடும் இவர்களுடைய இந்தப் பண்டிகையில் புத்தாடைகள் அணியப்படுவது இல்லை. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அதில், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பூஜையில் படைக்கிறார்கள். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இது. எனவே, பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்), கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்). பீகாரில் மட்டும் அவலுடன் தயிர் மற்றும் வெல்லம் கலந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
மகராஷ்டிரா
மகராஷ்டிராவில் இந்தப் பண்டிகையின் போது கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். கருப்பு எள்ளை மராத்தியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள் கருப்புநிற உடைகளை அணிவதையும் ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாதாரண புத்தாடை உடுத்துவார்கள். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள். இதற்கு அருகிலுள்ள பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து, அவர்களுக்கும் சிறுசிறு பானைகளில் வெல்லம், கரும்பு மற்றும் எள் ஆகியவற்றைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நாள் முதல் நல்ல காற்று இங்கு வீசத் தொடங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.
குஜராத்
இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு. இந்த நாளில் விதவிதமான டிசைன்களில், பலவர்ண நிறங்களில் பறக்க விடப்படும் பட்டங்களைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும், புத்தாடைகள் அணிவது கிடையாது. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை செய்து விற்பதற்கென்றே சாலையோர, தெருவோர திடீர் கடைகள் உருவாகி விடும்.
பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா
பஞ்சாப்பில் 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால், இது பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். இந்த லொஹரி 13ஆம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். குறிப்பாக 13.ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். தெருவாசிகள், இப்படி பொது இடங்களில் தீமூட்டி அமர்ந்துகொண்டு கொண்டாடுவது உண்டு. இதற்கேற்றபடி இந்தக் காலங்களில் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். இங்கும் எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும். அந்த வருடம் ஆண் பிள்ளைகள் பிறந்த பஞ்சாபிகளின் வீடுகளில் லொஹரி சிறப்புத் திருவிழாவாக இருக்கும். இந்த நாளில் வேண்டுதல் செய்துகொள்வதும் உண்டு. எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.
அசாம்
இம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகிறார்கள். இதன் முதல் நாள் விசேஷம் மாலையில் உருக்கா என்ற பெயரில் தொடங்குகிறது. அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை அசைவ உணவுடன் உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். ஆனால், இதில் அவர்கள் பழைய சாமான்கள் எதையும் போடுவதில்லை. பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். சிம்பிளாக சாப்பிடுவார்கள். இந்தப் பண்டிகையில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஒருவொருக்கொருவர் அழைத்துக்கொள்வார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. இங்கு இப்பண்டிகைக்குப் புத்தாடைகள் அணிவது உண்டு.
ஆந்திரா
இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அது நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று காலையில் குளித்து பூஜை செய்து, பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் உண்டு. மகர சங்ராந்தி வரை இதற்கு முன்பாக வரும் மாதம் முழுவதும் விடியற்காலை பூம்பூம் மாட்டுடன் வருபவர்களுக்கு தானியங்களை பிச்சையாக அளிப்பார்கள்.
கர்நாடகா
மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் கிடைக்கும் இது விவசாயிகள் இடையே மிகவும் பிரபலம். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை எடுத்துச்சென்று அருகிலுள்ள மலைகள் மீதுஏறிநின்று வேகமாக கீழே தூக்கி வீசுவார்கள். அது விழும் தூரத்திற்கு தங்கள் கிராம எல்லைகள் விரிந்து வளரும் என்பது நம்பிக்கை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும் மாட்டு ரேஸ் நடக்கிறது. இதுபோல், வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான சடங்குகள் உண்டு. இதை நகரங்களில் பிராமணர்கள் மட்டும் புத்தாடை அணிந்து சற்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். மற்றபடி பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை. கோயில்களில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாகப் போட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.
கேரளா
கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். மற்றபடி புத்தாடை, புது உற்சாகம் மற்றும் அரசு விடுமுறை என எதுவும் கிடையாது. ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு அனுசரிக்கப்படும் தினம் மட்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விசேஷம். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடி பொங்கல் வைக்கிறார்கள். பெருமளவில் தமிழர்களும் கலந்துகொள்ளும் அது மற்றொரு தினத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தவிர வேறு ஒன்றல்ல.

 மிக்க நன்றியுடன்
சிவா....

மேலே உள்ள இடுக்கை  இந்து  தமிழ் நாளிதழில்  பதிவிரக்கம் செய்யப்பட்டது.

No comments: