Saturday, January 17, 2015

பெஞ்சமின் பிராங்க்ளின் 10

 பெஞ்சமின் பிராங்க்ளின்
பெஞ்சமின் பிராங்க்ளின்
ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1706-ல் பிறந்தவர். தந்தை சோப்பு, மெழுகுவர்த்தி தயாரித்து விற்பவர். 17 குழந்தை கள் இருந்ததால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஒரு ஆண்டுகூட முழுமையாக இவர் பள்ளி சென்றதில்லை. ஆனால் தானாக முயன்று கல்வி கற்றார். 7 வயதிலேயே கவிதைகள் எழுதுவார்.
 தொழிலில் அப்பாவுக்கு உதவியவாறே ஓய்வு நேரத்தில் 4 மொழிகளைக் கற்றார். நூல்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துவிடுவார்.
 அண்ணனுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் ஊரைவிட்டு வெளியேறி, பிலடெல்பியா சென்றார். அங்கு கஷ்டப்பட்டு ஒரு அச்சகத்தை நிறுவினார். பத்திரிகைகளில் எழுதினார். சீக்கிரமே பிரபலமானார். பென்சில்வேனியா கெஸட் இதழை 1720-ல் வாங்கி நடத்தினார்.
 அச்சுத் தொழில், பத்திரிகை மூலம் 40 வயதுக்குள் செல்வந்தரானவர். ‘Poor Richard’s Almanack’ என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்கு அளித்தவர். இது இவருக்கு பெரும் செல்வம், புகழ், கவுரவத்தைப் பெற்றுத் தந்தது.
 குறைந்த எரிபொருளில் நிறைய வெப்பம் தரும் அடுப்பைத் தயாரித்து விற்றார். செயற்கை உரங்களைக் கண்டறிந்தார். மின்னலில் மின் சக்தி இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தார். மின்னல், இடியில் இருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஆகிய இரண்டு பாதிப்புகளுக்கும் உள்ளான முதியவர்களுக்கான பைஃபோகல் லென்ஸை கண்டுபிடித்தார். அவற்றுக்கு இவர் காப்புரிமை பெறவில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் பலன்பெறும் நான், பிறருக்கும் எனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்பார்.
 காகிதத்தில் கரன்சி நோட்டு அச்சடிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார். சந்தா முறையில் நூல்களை வாங்கிப் படிக்கும் முறை, நடமாடும் நூலக முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே.
 தீ விபத்துக்கான காப்பீட்டு நிறுவனத்தை முதன்முதலாக உருவாக்கினார். உலகப் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார். அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தவரும் இவர்தான்.
 1783-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தார். இதுதான் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை இவரது வழிகாட்டுதலில் செயல்படும் குழுவிடம் ஒப்படைத்தார். இவரது மேற்பார்வையில் அரசியலமைப்புச் சட்டம் உருவானது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் படத்துடன் 2 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
 அறிவியல், அரசியல், படைப்பாற்றல், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்த பெஞ்சமின் பிராங்க்ளின் 84 வயதில் மறைந்தார்.

நன்றியுடன்   சிவா..

No comments: