Thursday, August 21, 2014

வெற்றி என்பது உணர்வது...

குழந்தைக்கு
செமிக்காது போய்விடுமோ எனக் கருதி
மிகத் தெளிவாய் உணர்ந்தே
பாலில் கூடுதலாய் நீரதைச் சேர்க்கிறேன்
கஞ்சப் பிசினாறி எனத்
தூற்றிப்போகிறது உலகு
கண்டுகொள்ளாது தொடர்கிறேன்

வெட்டுப்படுபவனின் பக்கமும்
நியாயம் இருக்கக் கூடுமெனக் கருதி
வெட்டருவாளை
அதிகக் கூர்ப்படுத்தாதே விடுகிறேன்
தொழிலில் தேர்ச்சியில்லை என
விட்டுவிலகுகிறது ஒரு பெருங்கூட்டம்
கலங்காது தொடர்கிறேன்

நியாயத்தின் பக்கமே
இருந்துவிட உறுதியுடனிருக்கையில்
நியாயங்கள் அணிமாற
நானும் மாறித்தொலைக்கிறேன்
பச்சோந்தியென பரிகசித்துப் போகிறது
பண்டிதர் பெருங்கூட்டம்
குழம்பாது தொடர்கிறேன்

எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...
 
நன்றியுடன் 
சிவா. ..

No comments: