கணித வரலாறு கற்பிக்கப்படுவது - அவசியமா? - விழியன்
வரலாறு அவசியமான ஒன்றா? எதற்கு ஆண்டுகளை நினைவு வைத்திருக்க வேண்டும்? அதனை வாழ்கையில் எங்கேனும் பயன்படுத்துகின்றோமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே. ஆனால் யோசித்துப்பாருங்கள் சென்னை 2017 என்றதும் ஒரு மனச்சித்திரம் உருவாகும், சென்னை 1966 என்றதும் ஒரு மனச்சித்திரம் உருவாகும், சென்னை 1947 என்றதும் சுதந்திர நாட்களை நினைவுபடுத்தும். இடமும் வருடமும் உடனே அந்த காலகட்டத்தில் இருந்த சமூகம், மனிதர்கள், கட்டமைப்பு, சிக்கல்கள் என எவ்வளவு வாசித்திருக்கின்றோம், அறிந்திருக்கின்றோம் என்பதைப் பொருத்து விரியும்.
சரி கணித வரலாற்றின் அவசியம் என்ன? ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒவ்வொரு அடுத்தகட்ட முயற்சிக்கும் காரணம் தேவைகள் மட்டுமே. நைல் நதிக்கரையோரம் மனிதர்கள் வந்து வாழ்கையை அமைத்துக்கொள்கின்றார்கள். நதி வரமாக இருக்கும் போது அது சாபமாகவும் விளைகின்றது. எப்போது வெள்ளம் வரும் ஊரை அடித்துச்செல்லும் என்று தெரியவில்லை. மெல்ல மெல்ல நாட்காட்டியை உருவாக்குகின்றான். சீர் செய்கின்றான். நிலத்தினை பங்கு போட விழைகின்றான், வரி வசூலிக்க நினைக்கின்றான் அப்போது கணிதம் மேலும் வலு பெறுகின்றது. இது எந்த நாகரீகம் புரிகின்றதா?
எண்களின் வரலாற்றினை வாசிக்கும் போதே நாகரீகத்தின் வரலாறும் கூடவே வாசிப்போம். ஆடு மேய்பவர்கள் Number theoryக்கு எப்படி அடித்தளம் இட்டார்கள். கணித முன்னேற்றம் என தனியே பிரித்துவிட முடியாது அதன் கூடவே அறிவியல் முன்னேற்றமும் ஒட்டிக்கொண்டே வருகின்றது ஒவ்வொரு காலகட்டத்திலும்.
பிரமிட்டுகளை எகிப்த்தியர்கள் உருவாக்குகின்றார்கள் என்று வாசித்தால் மட்டும் போதுமா? ஏன் கட்டிட நினைத்தார்கள்? கட்ட நினைத்த போது அவர்கள் முன்னர் இருந்த சவால்கள் என்ன? இந்த கேள்விகள் முக்கியமாகின்றது. இது கணித முன்னேற்றங்களுக்கு மட்டுமல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளை வாசிக்கும் போதும் எழ வேண்டும்.
பையின் மதிப்பினை மதிப்பிட என்ன முறைகளை எல்லாம் கையாண்டார்கள்? அந்த அந்த காலகட்டத்தில் இருந்த வளர்ச்சிகள் என்ன என்று கதை வடிவில் அவர்கள் கேட்கும் போது பை பற்றிய விஷயமும் ஆழமாக பதியும். (இன்று 22/7 - ஆரம்பத்தில் இதுவும் பையின் தோராயமான மதிப்பு என்று கருதப்பட்டது).
வரலாற்றினை படிக்கும் போது நிறைய கேள்விகள் எழும், எழனும். இந்தியா கணிதத்தில் சளைத்தவர்கள் அல்ல, பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார்கள் ஆனாலும் வழி நெடுகிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே கணிதவியளாலர்கள் அறியப்படுகின்றார்கள்? ஏன்? சமகாலத்தில் நாம் என்ன பங்களிக்கின்றோம்? என்ன முன்னேற்றங்கள் கண்டுள்ளோம்? எதை நோக்கிச் செல்கின்றது? அவர்கள் தற்காலத்தில் சந்திக்கும் சவால்கள் என்ன? என்ற கேள்விகள் எழுந்தால் அதுவே கணித வரலாறு சரியாக கற்பிக்கப்படுகின்றது என்பதற்கான அர்த்தம்.
நமக்கான சவால் என்பது கணித வரலாற்றினை ஒரு சோர்வான பாடமாக்காமல் எப்படி சுவாரஸ்யமாக இத்தனை விஷயங்களையும் உள்ளடக்கி கணிதம் ஒரு சுவையான பாடமாக மாற்றப்போகின்றோம் என்பதில் இருக்கின்றது.
பாடதிட்டம் முழுதையும் சொல்லிக்கொடுத்துவிட முடியாது ஆனால் ஒரு வெளியை, ஒரு சன்னலை திறந்துவிட வேண்டும். அங்கிருந்து மாணவன் தனக்கான வெளியை தேர்வு செய்துகொள்வான்.
- விழியன்
நன்றி விழியன்...
1 comment:
தேவையான அறிவுரை
Post a Comment