தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய என் மகளிடம் கேட்டேன். என்ன பாப்பா, ஸ்கூல் எப்படி இருக்கு?. பிடிச்சு இருக்கு என சில விஷயங்களை சொன்னாள். அரசு பள்ளிக்கு என்றாலே முத்திரை பதித்த குறையான கழிப்பறை வசதியை பற்றி சொன்னாள். அது எல்லா அரசு பள்ளிகளிலும் உள்ள குறை. சொல்லுவோம் என சொல்லிவிட்டு வேற எப்படி இருந்தது என கேட்டேன்.
கொஞ்சம் தயங்கியபடி, இல்லப்பா , யாராவது எந்த ஸ்கூலில் படிக்கிற என கேட்கும் பொழுது சொல்லுவதற்கு ஒரு மாதிரி இருக்குப்பா.. பேமஸ் ஸ்கூலில் படித்துவிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேன் என சொல்ல கூச்சமா இருக்குப்பா என சொன்னாள்.
நான் சிரித்து கொண்டே கவர்மெண்ட் வேலை கிடைச்சால் சொல்ல கூச்சப்படுவியா. கவர்மெண்ட் காலேஜில் டாகடர் சீட், இன்சினியரிங் சீட் கிடைச்சால் கூச்சப்படுவியா? என கேட்டேன். அது எப்படி சொல்லுவேன். சந்தோஷமா சொல்லுவேன். என சொன்னாள். அதே மாதிரி யார் கேட்டாலும் தைரியமா சொல்லு. கவர்மெண்ட் ஸ்கூலா என யாராவது இழுத்தால், ஏன் கவர்மெண்ட் வேலை கிடைச்சால் இப்படி கேட்பிங்களா என நக்கலா கேளு என்றேன். கேட்டவுடன் சிரித்து விட்டு இது தெரியாமல் போச்சே.. இனி யாராவது கேட்கட்டும் என உற்சாகமாக சொன்னாள்.
நீ படிக்கிற பள்ளியை என்றுமே குறைவா நினைக்காதே. வேலைக்கு போக இண்டர்வியூவில் எந்த ஸ்கூல் என கேட்பாங்க.. அப்பொழுது கவர்மெண்ட் ஸ்கூல் என சொன்னால் ஏதும் நினைப்பாங்களோன்னு தயங்கினால், அடுத்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தயங்கி சொல்லுவ.. ஆரம்பத்துலயே தைரியமா சொல்லு. நம்ம படிக்கிற ஸ்கூல் நல்ல ஸ்கூல் என உன் மனசுல பதியனும்.
அங்க பீஸ் கட்டலைன்னா புக் தராமல் நிக்க வைக்க கூட செய்வாங்க. ஆனால் இங்க உனக்கு புத்தகம் கொடுத்து படிக்க சொல்லுவாங்க. அங்க என்ன எக்ஸ்ட்ரா சொல்லி தருவாங்க.. இங்க நீ கேட்டு கத்துகிடனும். அதிக வேலையும் கொடுக்க மாட்டாங்க. உனக்கு என்ன கத்துகிடனும் தோணுதோ அதை கத்துக்கோ. என்ன வேணும் எங்கிட்ட சொல்லு. நான் வாங்கி தர்றேன் என சொன்னேன். உற்சாகத்துடன் கேட்டு கொண்டாள்.
அங்க எல்லா பிள்ளைகளும் வசதியான, வசதியா காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிள்ளைங்களோடு படிச்சு இருப்ப.. இங்க எல்லோரும் நடுத்தரமா, இயல்பா பழகுற பிள்ளைகளா இருக்கும் அதனால எல்லோரிடமும் நல்லா பழகு. டீச்சரை பார்த்து பயப்படாமல் நல்லா பேசு.. மரியாதையா பேசு. இங்க வேலை பாக்குறவங்க எல்லோரும் நல்லா படிச்சு வேலைக்கு வந்தவங்க.. அதிக விஷயம் தெரியும். அவங்ககிட்ட கத்துக்கோ என சொல்லி முடித்து இருக்கிறேன்.
அரசு பள்ளியில் படிக்கிறோம் என சொல்ல தயக்கமாகத்தான் இருக்கும். அதை களைய வேண்டியது நாம் மட்டுமல்ல.. அரசும்தான்..
அரசு பள்ளியில் படிப்பதற்கு பெருமை கொள்வோம்....
நம்மால் பள்ளி பெருமை அடைய உழைப்போம்....நாளும்......
👍👍👍
No comments:
Post a Comment