Thursday, June 29, 2017

மாமனாரின் மனசு....

*வரதட்சனை*
♥அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது,.

♥எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன். ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.

♥இப்பொழுது நேரம் இரவு பத்து மணி.அதிகாலையிலேயே நானும் உங்கள் மாமியாரும் இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவோம்.ஏனெனில் இனி இது எங்கள் வீடல்ல. உங்கள் வீடு. பரம்பரையாக வாழ்ந்த வீட்டை பாதியில் விட்டுப் போக நேர்ந்ததில் பெட்டி படுக்கைகளைக் கட்டும் கயிறெல்லாம் உங்கள் மாமியாரின் கண்ணீராலேயே கழுவப்படுகிறது.

♥நானும் உங்கள் மாமியாரும் இன்னும் எட்டு மணி நேரங்கள்தான் இந்த வீட்டில் இருப்போம். உள்ளம் அமைதியில்லாமல் உலாவிக்கொண்டிருக்கிறது. இனம் தெரியாத ஏதோ ஒன்று இதயத்தைப் பிசைந்து எடுக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் நான் எழுத ஆரம்பிக்கின்றேன்.

♥வேகா வெயிலில் வியர்வை சிந்தி நான் கட்டிய இந்த இரண்டு அடுக்கு மாடியின் பிரமாண்டமான படுக்கையறையின் பஞ்சு மெத்தையில் நீங்கள் உல்லாசமாய் உறங்கிக் கொண்டிருக்க அதே வீட்டில் யாருமில்லாத ஒரு மூலையில் பழைய பாயில் கிழிந்த தலையணையில் என்னைத் தூங்க வைத்திருக்கும் இந்த சமூக நீதியைப் பார்த்து நான் சிரித்துக் கொள்கிறேன்.

♥வீட்டின் சொந்தக்காரனே விருந்தாளியாய்ப் போன நிலையை எண்ணி வெட்கப்படுகிறேன். தான் கட்டிய சொர்க்கத்தில் தானே வாழமுடியாத திருசங்குவை விட என்னைக் கேவலமாக்கிவிட்ட இந்த சமூகத்தை எண்ணி நான் சிரித்துக் கொள்கிறேன்.

♥அன்பின் மருமகனே,
இந்த வீட்டின் ஒவ்வொரு கல்லுக்குப் பின்னாலும் ஒரு கதையும். ஒரு வேதனையும்,ஒரு வியர்வையும் இருப்பது உங்களுக்கு விளங்காது. உங்களுக்கு வெயில் படாது செய்த இந்த கூரைக்குப் பின்னால் நான் வெயிலில் நின்று வெட்டிய வேளாண்மை இருக்கிறது. நீங்கள் காலாற நடக்கும் இந்த “டைல்” தரைக்குப் பின்னால் எனது மனைவிக்கு நான் செய்த நகைகள் இருக்கிறது.

♥நீங்கள் தூங்கி விழும் அந்தத் தேக்குமரக்கட்டிலுக்குப் பின்னால் நான் எனது மகனுக்கென்று மிச்சம் வைத்த வளவொன்று விற்றகதை இருக்கிறது.நீங்கள் சுகமாகக் கழிக்கும் கழிப்பறைக்குப் பின்னால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் கரைந்து கிடக்கிறது. நீங்கள் உண்டு பருக குளிர் சாதனப் பெட்டி,கண்டு களிக்க கலர் டீவி,கழுவித் துடைக்க வோஷின் மெஷின். இவற்றிற்குப் பின்னால் இந்த ஏழையின் கடன் இருக்கிறது. மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லாத சமூகமா இது மருமகனே?

♥முதுமையின் பலவீனமும், தனிமையின் மறதியும் என்னை முடியாதவனாய் ஆக்குகின்றன. மூலையில் இருந்து முழங்கால் வலியால் முனகிக்கொண்டிருக்கும் உங்கள் மாமியாரோடும், இருந்தால் எழும்பமுடியாத இடுப்பு வலியோடும் எனது காலங்கள் மெதுவாய்க் கழிகின்றன. எனக்கு அதிகமான நாட்கள் எதிரில் இல்லை என்பதை எனது உடம்பு எனக்கு அடிக்கடி ஞ்சாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறதுநாளை ஒரு வருத்தம் வாதம் வந்தாலும் கடன் பட்டுக் காலம் கழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன்.

♥நான் செய்த தவறு என்ன என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஒரு பெண்ணைப் பெற்றதா? எனது மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கனவு கண்டதா? படித்தவர் கையில் பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும் என நினைத்ததா? சந்தோஷமாய் வாழ்வதற்கு அடுக்கு மாடி எதற்கு மருமகனே? ஒரு ஓலைக் குடிசை போதுமே?

♥நாளை மாமாவுக்கு ஏதாவது கடன் இருக்கிறதா என்று அன்புருகக் கேட்பீர்கள்? மச்சான் எத்தனை கருணையுள்ளவர் என்று எனது மகளும் உங்களில் மயங்கி விடுவாள். அறைந்துவிட்டு வலிக்கிறதா? தடவிவிடவா? எனக் கேட்பது போல்தான் இது இருக்கிறது . இதற்கு நீங்கள் அறையாமலே இருந்திருக்கலாமே. இந்த வேதனையில் நான் விழுவேன் என்று தெரிந்த பின்னும் நீங்கள் என்னைத் தள்ளிவிட்டுவிட்டு கைகொடுத்து காப்பாற்ற நினைப்பது எத்தனை கபடத்தனம்.

♥இத்தனை அதிருப்தி இருந்தும் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா? அந்த ஏலத்தில் இலகுவாகக் கிடைத்தது நீங்கள் மாத்திரம்தான். ஒருவர் மகன்  மாடி வீடும் 10 இலட்சம் கேட்டார். கூரைக்கும் டைல் போடச் சொன்னார் இன்னொருவர் மகன். கௌரவமான குடும்பமாம் கார் ஒன்று வேண்டும் என்றார் . மற்றவர்  வெளிநாட்டு டிகிரியாம் வேனொன்று இருந்தால் நல்லம் என்றார் இன்னொரு தம்பி.கட்டாரில் எஞ்சினியராம் கை நிறைய சம்பளமாம் காணி நாலு ஏக்கர் தந்தா குறைஞ்சா போகும் என்றார் சொழுக்கரின் சின்ன மகன். கொம்பியூட்டர் ஸ்பெசலிஸ்டாம், கொழுத்த சம்பளமாம் ஒரு வீடு தாருங்கள் என்றார் தம்பராஜன் மூத்த மகன்.

♥நல்ல பொடியனாம் வீடு மட்டும் போதுமாம் என்று நீங்கள் வந்தீர்கள். லாபமாக வருகிறது உடனடியாக வாங்கிப் போட்டுவிடுங்கள் என்றார் உங்கள் மாமியார்.உங்கள் வீட்டாரிடம் விலை பேசினேன்.உங்களை வாங்கிவிட்டேன்.

♥என்றாலும் மருமகனே, இதைப் போன்ற வியாபாரத்தில் எனக்கு இஷ்டம் இல்லை. வந்த இடத்தில் வாழ்ந்தவனை விரட்டி ஓரத்தில் வைத்து ஒய்யாரமாக உறங்குகிறீர்கள் . அடிமை உள்வீட்டுக்குள், எஜமான் அரச மரத்தடியில். இந்த சகவாசம் எனக்குச் சரிவராது.

♥உங்களை யார் விரட்டியது? நீங்களாகப் போக விரும்பிவிட்டு என்னை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள். எனது நியாயம் என்னோடு.

♥வெளியில் இருந்து வியர்வையோடு வருவேன். எனது சாய்மணையில் நீங்கள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள். என்னைக் கண்டதும் அரைவாசி எழும்பி “இருக்கப்போகிறீர்களா” என்று கேட்பீர்கள். நான் “இல்லை நீங்கள் இருங்கள்” என்று சொல்லப் போவது உங்களுக்குத் தெரியும்.அந்த நிலை எனக்கு வேண்டாம்.

♥உங்களைத் தேடி யாரும் வரும்போது உள்ளே இருக்கும் என்னைத் தேடிவந்தவர்களை எழுப்பிக்கொண்டு நான் வாங்கிய ‘குஷன் செட்டை’ உங்கள் நண்பருக்குக் கொடுத்துவிட்டு வெளிவிராந்தையில் ரப்பர் கதிரை போட்டு பேசிக்கொள்ளும் கேவலம் எனக்கு வேண்டாம்.

♥சொந்த வீட்டில் சற்று சத்தமாகப் பேசினாலும் மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள் என்ற உங்கள் மாமியாரின் அதட்டலின் அசிங்கம் எனக்கு வேண்டாம்.

♥நான் வாங்கிய டீவியில் செய்தி பார்த்துக்கொண்டிருப்பேன்.”அவர் மெச் பார்க்கவேண்டுமாம்” என்று எனது மகளை தூது அனுப்புவீர்கள். எழும்பிச்செல்லும் ஏமாற்றம் எனக்கு வேண்டாம்.
வீட்டுவாசலில் உங்கள் சைக்கில் சத்தத்தைக் கேட்டு எனது சாரனைச் சரிசெய்யும் சுதந்திரம் இல்லாத கோழைத்தனம் எனக்கு வேண்டாம்.

♥25 வயது உங்களோடு தோற்றுப் போவதற்கு 65 வயது சுதர்மம் இடம் தரவில்லை.ஒரு மகளைப் பெற்ற பாவத்திற்காக இந்த வீட்டில் நான் அடிமையாய் இருப்பதை விட ஒரு வாடகை குடிசையில் ராஜாவாய் இருந்து விட்டுப் போகிறேன்.

♥வாழ்க்கையில் சொந்தக் காலில் வாழப் பழகிக்கொள்ளுங்கள். சொந்தக்காரர்களிடமே சுரண்டி வாழாதீர்கள். ஒற்றைப் பெண்ணைப் பெற்ற ஓரளவு வசதியுள்ள நானே ஓட்டாண்டியாகிவிட்டேன் என்றால் நாலு பெண்ணைப் பெற்ற ஏழையின் நிலையை என்னவென்று சொல்வது.

♥ஒரு தந்தையின் பாசத்தை துரும்பாகப் பயன்படுத்தி எங்களைத் துவைத்து துருவி எடுக்கிறீர்கள். பெண்ணைப் பெறுவது பரகத் என்பதைப் பொய்யாக்கிய பாவம் உங்களோடுதான்.

♥கடையில் இருந்ததையெல்லாம் உங்களுக்கு இறைத்துவிட்டு கடனாளியாய் கைவிரித்தபடி செல்கிறேன்.இது ஆயுள் கடனல்ல, பரம்பரைக் கடன். எப்போது கழிக்கப்போகிறேனோ தெரியாது.

♥ஆனால் பயப்படாதீர்கள் மருமகனே,இதை யாரிடமும் சொல்லமாட்டேன். எனது உள்ளத்தில் உறுமும் எதையும் உங்களுக்கு காட்டமாட்டேன். உங்களைப் பார்க்கும் போதெல்லாம் பரவசமாவதுபோல் பல்லிழித்துக்கொள்வேன். சொந்தக்காலில் நிற்கத்தெரியாத சோம்பேறி என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். உங்கள் வீட்டார் வந்தால் விழுந்து விழுந்து கவனிப்பேன். என்னை வங்குறோத்தாக்கியவர்கள் வெட்கமில்லாமல் வருகிறார்கள் என்று உள்ளே நினைத்துக்கொள்வேன்.

♥எனது மருமகன் போல் உலகில் யாருமில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்வேன். ஒரு பெண்ணை வைத்து வாழ வழியில்லாதவன் என்று வாய்க்குள் முனகிக்கொள்வேன். வெள்ளாமை நெல் அனுப்பிவைத்தால் என்ன கவனிப்பு எனது மருமகன் என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிடுவேன். எனது விளைச்சலில் எனக்கே நெல் அனுப்புகிறான் என்று எனக்குள் நானே எண்ணிக்கொள்வேன்.

♥எனது மகளோடு மருமகனுக்குத்தான் எத்தனை இரக்கம் என்று அயல் வீட்டுக்காரர்களிடம் கூறி வைப்பேன். வீடு கொடுக்காவிட்டால் வந்திருப்பானா என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன்.. நான் உங்களோடே இருப்பேன். உங்களோடே சிரிப்பேன். கடைசிவரைக்கும் எனது வெறுப்பை நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் இவ்வாறுதானே ஒவ்வொரு மாமனாரும் உலகத்தில் வாழ்கிறார்கள்.

♥இக்கடிதத்தை உங்களிடம் நான் காட்டவும்மாட்டேன். கிழித்துப்போட்டும் விடுவேன். வாசித்த கையோடு எனது மகளை விட்டுவிட்டு ஓடிவிடுவீர்களே. எனது மகள்தானே எனது பலவீன்மும் உங்கள் பலமும்.

♥சரி மருமகனே நேரமாகிவிட்டது. செல்லவேண்டும். நான் கட்டிய வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

♥நாளை முதல் அழுத உள்ளத்தோடும் சிரித்த முகத்தோடும் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். வாழ்கையே ஒரு தற்காலிக நாடகம்தானே.

♥இப்படிக்கு,
உங்கள் மாமனார்.

,,,,,,,,படித்ததில் பிடித்தது!✓

நன்றி....

Sunday, June 25, 2017

ஆசிரியரின் அன்பு.....சீன... கதை..

எதிர்பாராத எதிர்பாராத அளவு ஒரு கை கை சந்தோஷம் கிடைக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! இதுபோலவே எதிர்பாராத சந்தோஷத்தை நாம் யாருக்காவது உருவாக்கி தருகிறோமா என்ன?

சீனாவின் பழங்கதை ஒன்று இதைப் பற்றிப் பேசுகிறது. அந்தக் காலங்களில் உறைவிடப் பள்ளி ஆசிரியர்கள் வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் குறிப்பாக புத்தாண்டு தொடங்கும்போது 10 நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அப்போது சிறப்பு சம்பளமும் பெறுவார்கள்.

வாங் என்ற ஆசிரியர் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்குப் புறப்பட்டார். தனக்காக மனைவி காத்திருப்பாளே என நினைத்து வேகவேகமாக தன் கிராமத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அவரது நண்பரான ஷாங் உடன் பயணம் செய்தார். மூன்று நாட்கள் பயணம் செய்தால்தான் வாங் தன்னுடைய கிராமத்தை அடைய முடியும்.

பயண வழியில் ஷாங் தன் கையில் இருந்த பணத்தில் குடித்தார். சூதாடினார். கடனாளியாகியாகவே வீட்டுக்குத் திரும்பி போனால் மனைவியும் பிள்ளைகளும் திட்டுவார்களே என நினைத்து பள்ளிக்கே திரும்பி போய்விட்டார்.

ஆனால், வாங் மனைவிக்கான புத்தாடை மற்றும் இனிப்புகளுடன் வீடு நோக்கிப் பயணித்தார். வாங் தனது கிராமத்துக்குப் போகிற வழியில்தான் ஷாங்கின் ஊர் இருந்தது. அதைக் கடக்கும்போது ஷாங்கின் மனைவியும் பிள்ளைகளும் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார். ஷாங்கின் மனைவி வாங்கிடம் தன் கணவரைப் பற்றி விசாரித்தாள். ‘‘புத்தாண்டு கொண்டாட எங்களிடம் பணமில்லை. அவர் வந்தால்தான் பிள்ளைகளின் பசி தீரும். அவர் எப்போது வருவார்?’’ எனக் கேட்டாள். அதைக் கேட்ட வாங்கிற்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை.

தன் கையில் இருந்த புத்தாடை, இனிப்பு மற்றும் தனது சம்பளப் பணம் அத்தனையையும் அவர்களிடம் கொடுத்து ‘‘ஷாங்கிற்கு விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் இவற்றைக் கொடுத்து அனுப்பினார். அவர் வசந்த காலத்தில் ஊருக்கு வருவதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார்’’ என்றார்.

புத்தாடை, இனிப்பு, பணம் இவற்றை கண்ட ஷாங்கின் குடும்பம் சந்தோஷத்தில் மூழ்கியது. வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் வாங்கிற்கு நன்றி சொன்னார்கள்.

வெறும்கையோடு வாங் வீடு திரும்பினார். நடந்த விஷயத்தை அவர் மனைவியிடம் சொன்னதும் அவள் கோபித்துக் கொண்டாள். ‘‘வெறும்கையை வைத்துக் கொண்டு எப்படி புத்தாண்டு கொண்டாடுவது? யாரோ ஒருவருக்கு பணத்தைத் தூக்கி கொடுத்தது உங்கள் தவறு!’’ என்று சண்டையிட்டாள்.

வாங் அவளை சமாதானம் செய்ய முயற்சித்துத் தோற்றுப் போனார்.

விடிந்தால் புத்தாண்டு. வாங்கின் வீடு இருண்டு கிடந்தது.

இரவில் மனைவி ஓர் ஆலோசனை சொன்னாள்: ‘‘இந்த ஊரில் உங்களிடம் படித்த மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களிடம் போய் கடன் கேளுங்கள். கடனாக பணம் வாங்கி வந்தால் மட்டுமே நாளை நம் வீட்டில் உணவு. இல்லாவிட்டால் புத்தாண்டில் நாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான்!’’

‘‘மாணவர்களிடம் கடன் கேட்பது தவறானது. அதுவும் புத்தாண்டு அன்று ஒருவன் கடன் கேட்கக் கூடாது’’ என வாங் மறுத்துவிட்டார். வாங்கின் மனைவி அவரை மோசமாகத் திட்டினாள்.

புத்தாண்டு பிறந்தது. வாங் வீட்டில் எந்த விசேஷமும் இல்லை. கதவைக்கூட அவர்கள் திறக்கவில்லை.

திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, வாங்கின் மனைவி கதவைத் திறந்தாள்.

வாசலில் பத்து மாணவர்கள், ஆளுக்கு ஒரு தட்டில் பரிசு, புத்தாடை, உணவு, இனிப்புகளுடன் நின்றிருந்தார்கள். தங்கள் ஆசிரியருக்கு புத்தாண்டுப் பரிசாக இவற்றை அளிக்க விரும்புவதாகச் சொன்னார்கள்.

வாங்கின் மனைவியால் நம்பவேமுடியவில்லை. உள்ளே அழைத்தாள். வாங் தனது மாணவர்களின் அன்பை கண்டு சந்தோஷம் அடைந்தார்.

மீண்டும் வாசல் கதவு தட்டப்பட்டது.

வாசலில் ஷாங்கின் மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள். அவர்கள் கையிலும் பரிசுப் பொருட்கள் இருந்தன.

ஷாங்கின் மனைவி சொன்னாள்: ‘‘நேற்றிரவு எனது கணவர் வீடு திரும்பிவிட்டார். அவர் குடித்தும் சூதாடியும் சம்பளப் பணத்தை இழந்த கதையைச் சொன்னார். உங்கள் பணத்தை எங்கள் சந்தோஷத்துக்காக நீங்கள் தந்தது உங்களின் பெருந்தன்மை. இந்த மனசு யாருக்குமே வராது. பெரிய மனசோடு நீங்கள் கொடுத்தப் பணத்தை செலவு செய்ய மனமில்லை. ஆகவே, திரும்பி தந்துவிட்டுப் போக வந்திருக்கிறோம்!’’

‘‘ஏழு குழந்தைகள், வயதான தந்தை- தாய்… என உங்கள் குடும்பம் பெரிசு. நீங்கள் புத்தாண்டு கொண்டாடுவதுதான் பொருத்தமானது. இங்கே நான் என் மனைவி இருவர்தானே. ஆகவேதான் எனது சம்பளப் பணத்தை உங்களுக்காகக் கொடுத்தேன். உங்கள் சகோதரன் கொடுத்த பணமாக நினைத்து புத்தாண்டு கொண்டாடுங்கள்!’’ என்றார்.

‘‘வாங் உங்களின் அன்பு மகத்தானது. ‘ஆசிரியரே அதிகமானவர்களை சந்தோஷப்படுத்துகிறவர்’ என்பதற்கு அடையாளமாக இருக்கிறீர்கள், நன்றி நன்றி!’’ என அந்தக் குடும்பமே நன்றி சொல்லிப் போனது;

இந்த விஷயம் ஊருக்குள் பரவியது. உடனே ஊரில் இருந்த அத்தனை பேரும் தனது மனைவி பிள்ளைகளுடன் புத்தாண்டில் வாங்கிடம் ஆசி பெற வேண்டும் என விரும்பி பரிசுப் பொருட்கள், இனிப்புகளுடன் திரண்டு வந்தார்கள். வாங்கின் வீடு நிறைய பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் நிரம்பின என முடிகிறது அந்தக் கதை.

எளிய மனிதர்கள் தங்களால் முடிந்த அளவு சந்தோஷத்தை உருவாக்கவே முனைகிறார்கள். பணம் படைத்தவர்களோ, சந்தோஷத்தை இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். சந்தோஷப்படுத்துவதில்தான் வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது என்பதை அறியாமல்.

- கதைகள் பேசும்…

நன்றி.....ஆசிரியர்க்கு....

☘☘☘☘☘☘☘☘

Friday, June 23, 2017

எகிப்தியர்களும் கணிதமும்*

*எகிப்தியர்களும் கணிதமும்*

கணிதத்தில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பாபிலோனியர்களும் இந்தியர்களும் தான். அவர்களுக்கு சமமாக கணிதத்தில் இருந்தவர்கள் எகிப்தியர்களும் அவர்களிடம் இருந்து பின் தொடர்ந்த கிரேக்கர்களும் தான். எகிப்தியர்களின் கணித வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நைல் நதி தான். நைல் நதிக்கரையோரம் மக்கள் வாழ ஆரம்பிக்கின்றார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு பெரும் சிக்கல் ஏற்படுகின்றது, எப்போது வெள்ளம் வரும் எப்போது நீரின் அளவு குறைவாக இருக்கும் என்பதே. அப்போது நாட்காட்டிகள் எல்லாம் இல்லை, இவர்களே மெல்ல மெல்ல நாட்காட்டிகளை உருவாக்குகின்றார்கள். இவர்களின் பெரும்பாலான கோட்பாட்டு அடிப்படையில் இல்லாமல் நடைமுறை தேவைகளுக்கு ஏற்பவே அமைந்தனர்.  அளவியலில் (Surveying) எகிப்தியர்கள் பெரும் முன்னேற்றம் கண்டனர். கால்விரல்கள் கொண்டு தசம எண் முறைகளில் முன்னேறி இருந்தார்கள். ரைன் பாப்பிரஸ் (Rhind papyrus) இவர்கள் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளுக்கான வழிகாட்டி/பெட்டகம்.

இவர்களின் பெரும் பிரச்சனை முழுமை பெறாத கண்டுபிடிப்புகள். அவர்கள் முறைகள் எல்லாம் பிறை திருத்தச் சுழற்சி முறையிலேயே அமைந்தன. எதையும் நிரூபித்து கணக்கிடவில்லை. அந்நாட்களிலேயே விட்டத்தின் பரப்பளவினை ஓரளவு சரியாக கணக்கிட்டார்கள். விட்டத்தினை உள்ளடக்கும் சதுரம் கொண்டு அதன் பரப்பளவினை கணக்கிட்டனர்.

எகிப்தியர்கள் உருவாக்கிய மாபெரும் பிரமிடுகளில் ஏகப்பட்ட கணித கருத்துக்களை உள்வாக்கி இருந்தன. மிக முக்கியமானவை செங்கோணங்கள் (Right Angled Triangle). பிரமிட்டும் கணிதமும் பற்றி படிக்கவே மூச்சு முட்டும். அவர்கள் பிரமிட்டின் கொள்ளளவினைக்கூட ஓரளவு சரியாகவே கணக்கிட்டு இருந்தார்கள்.

எல்லா வரலாற்றையும் புரட்டும்போது தேவையே பல ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாய் அமைந்திருக்கின்றன. கணித வளர்ச்சியும் அப்படியே.

-விழியன்
#நான்_ஒரு_கணிதப்_பைத்தியம்

நன்றி திரு.விழியன்...

கணிதம் இனிக்க....

அன்புள்ள கணித ஆசிரியருக்கு...

நீங்கள் ஒரு மாணவரின் கல்வியில் மிக முக்கியமான பங்கு வகிப்பவர். கணிதமே வாழ்கைக்கு ஆதாரம். உயர் அறிவியல், கண்டுபிடிப்பு, பொருளாதாரம் என எந்த துறைக்கு சென்றாலும் அங்கே கணக்கு பிணைந்திருக்கும்.

சரி, கடிதத்தின் சாரத்திற்கு வருகிறேன். “நான் ஒரு கணக்கு பைத்தியம்” என்ற சின்ன கணிதத்தொடரினை எழுத ஆரம்பித்தபோது ”ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கின்றது? ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கவில்லை?” என்ற கேள்வியை எழுப்பினேன். இரண்டிலும் முதன்மையானதாக வந்த பதில் “ஆசிரியர்” என்பதே. பிற பதில்களும் வருத்தங்களும் இருந்தாலும் தற்சமயம் அதனை விட்டுவிடுவோம்.

ஏன் சிரமமாகின்றது?
1. *காட்சிப்படுத்துதல்*
படிக்கும் கணிதங்களையும் சூத்திரங்களையும் காட்சி படுத்த முடிவதில்லை. அறிவியலை அவன் எப்படியேனும் காட்சிப்படுத்திவிடுகின்றான், நிஜத்தில் பார்க்கின்றான், உணர்கின்றான் ஆனால் கணிதத்தை அவன்/அவள் காட்சிபடுத்துவதில்லை. பாடங்களில் உதாரணங்களைக் கொண்டு விளக்கினாலும் அவனால் அதனை காட்சிப்படுத்த முடியாமல் திணறுகின்றான்.

2. *தொடர்புபடுத்த முடிவதில்லை*
படிப்பவற்றை அவனால் தொடர்புபடுத்த முடிவதில்லை. ஏன் பயன்படுத்துகின்றோம் எங்கே பயன்படுத்தபடுகின்றது என்ற எந்த ஒரு தெளிவோ குறைந்த அறிவோ கிடைப்பதில்லை.

இவை இரண்டுமே மிக முக்கியமான காரணங்களாக தங்களை தூர விலக வைக்கின்றன.

வகுப்பறைகளில் என்ன செய்யலாம்?
1. *காட்சிப்படுத்தல் முயற்சி*
இது ஆசிரியரின் கற்பனைக்கு உட்பட்டது. அதனை தொழில்நுட்பம் கொண்டு எளிமையாக காட்சிப்படுத்தலாம் அல்லது வகுப்பறைகளில் அந்த மாயத்தினை நிகழ்த்திக்காட்டலாம்.

2. *பயன்பாட்டு விளக்கம்*
கணிதம் எப்படி தொடர்ச்சியாக பயன்பட்டு வருகின்றது என விளக்கிக்கொண்டே இருக்க வேண்டும். தினசரி வாழ்வில் என்ன கணிதம் இருக்கு என கூற வேண்டும். தினசரிகளில் காணப்படும் கணிதம் என்ன என்று விளக்கலாம். ஒரு பாலத்தினைப்பார்த்தால் ஏன் அது அந்த வடிவில் இருக்கு அதில் இருக்கும் கணிதம் என்ன என்று விளக்கலாம். அளவீடுகளில் அவர்களை நேரடியாக களம் காணச்செய்யலாம். ஒரு லிட்டர் என்றால் எவ்வளவும், ஒரு கி.மீட்டர் என்றால் எவ்வளவு தூரம், ஒரு கிலோ என்றால் எவ்வளவு எடையுள்ளது என தங்கள் உணர்வுகள் மூலம் புரிந்துகொள்ளவேண்டும். இது ஒரு நெருக்கத்தினை எண்கள் மீதும் கணிதம் மீது ஏற்படுத்தும்.

3. *கணக்குகளை உருவாக்கச்சொல்லுங்கள்*
ஒரு கணித வகுப்பில் கணக்கிற்கு தீர்வு மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றோம். ஏன் அவர்களை கணக்குகளை உருவாக்க வைக்கக்கூடாது? தினசரி வாழ்வில் இருக்கும் கணக்குகளை அவர்கள் உருவக்க வேண்டும்.
இது கல்வியை அசைத்துப்பார்க்கும் முயற்சியும் கூட. நம் கல்வி யாரோ ஒருவர் சொல்ல அதற்கு ஏற்ப வேலை செய்யவே திட்டமிடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட Consumer Education நம் பிரச்சனைகளை நாம் பார்த்து அதற்கான தீர்வுகளை தொழில்நுட்பம் + அறிவியல் அனுபவங்களை பயன்படுத்துவதே இல்லை. ஆகவே பிரச்சனைகளையும் கணக்குகளையும் அவர்களே உருவாக்கட்டும்.

4. வகுப்பறை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு ஐந்து-பத்து நிமிடம் புத்தகத்தில் இல்லாத கணிதம் பற்றிய உரையாடலை முயற்சி செய்யலாம். புதிர்கள். கணித ஆளுமைகளைப் பற்றிய நிகழ்வுகள். கணித வரலாறு. எண்களின் வரலாறு. உலக அளவில் எப்படி கணிதம் வளர்ச்சி கண்டுள்ளது என பேச ஏராள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அட ஆறாவது வகுப்பு சதவிகிதம் பற்றி எடுக்க வேண்டும் அவ்வளவு தானே என்ற தொனியில் வகுப்பறைக்குள் சென்றால் அதே எனர்ஜியே வெளிப்படும். ஒவ்வொரு ஆசிரியருக்கு தனக்கான சவாலை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இன்று எப்படி புதிதாக கற்றுத்தரப்போகின்றேன், எதனை புதிதாக கற்கப்போகின்றோம் என்ற ஆவலுடனும் உற்சாகத்துடனும் வகுப்பிற்குள் நுழைய வேண்டும். சொன்னதையே திருப்பித்திருப்பி சொல்வதென்றால் அதற்கு ஒரு வீடியோ போதுமே. இன்னும் சிறப்பாக அது அந்த காரியத்தை செய்து முடிக்கும்.

5. *தொழில்நுட்ப பயன்பாடு*
இணையம், சமூக வலைத்தளங்கள் ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சியினை சரியாக பயன்படுத்தி தங்களுக்குள் ஒரு இணைப்பினை ஏற்படுத்தி வகுப்பறைகளில் செய்யும் முயற்சிகளை சக ஆசிரியர்களிடம் பகிர்வது, மேலும் முயற்சிகளை பெறுவது, அனுபவம் மூலம் மேலும் மாணவர்களை மகிழ்வூட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடலாம்.

இன்னும் இன்னும் நிறைய செய்யலாம்.

பேரன்புடன்,
விழியன்

நன்றி விழியன்...

Saturday, June 17, 2017

ஒரு ஆசிரியன் கனவு... ஒரு நிமிட கதை

"ஒரு சின்ன கற்பனை..

அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பெறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கலாம் என்னவா பெறக்க விரும்புவிங்க

வரிசையா சொல்லுங்க பாப்போம்"

மிஸ் ... நான் வந்து ரோஸ்...

"வாவ்... ஆனா ... ஏன்"

அப்போ தான் வாசனையா இருப்பேன்

"ஓ... குட்
அடுத்து"

மிஸ்... நான்.. மயில்...

"ஹா..  ஹா.. ஏன்..."

அதுக்கு மழை மேகம் புடிக்கும்ல
எனக்கும் புடிக்கும்... அதனால

"செம...
அடுத்து"

மிஸ்... நான்...பட்டாம்பூச்சி
ஏன்..னா? அதுக்கு றெக்க இருக்கும்...

"செம... செம...
அடுத்து"

மிஸ்... நான்.. மான்
ஏன்..னா?
அது துள்ளி துள்ளி ஓடும்

மிஸ்... நான்.. ட்ரீ
ஏன்..னா?
அதுல தான் நெறைய பறவ வந்து தங்கும்

"ஹே.. வாவ்..
அடுத்து"

மிஸ்... நா ... பாரதி
பெரிய மீச வச்சிப்பேன்

"ஹா... ஹா..
அடுத்து"

மிஸ்... நான்... முயல்
ஏன்..னா? அது உங்களுக்கு பிடிக்கும்ல

"ம்...
அடுத்து"

எங்களையே கேட்டுட்டிருக்கீங்க
இப்போ நீங்க சொல்லுங்க...

"நானா...?"

"நான் வந்து ஒரு சாக்பீஸா பெறக்கனும்"

அறைமுழுக்க   பெரு சிரிப்பு

ஏன்... மிஸ்

"ஏன்...னா?
வெறும் கரும்பலக எதும் கத்து தராதே"

"நீ  கத்துக்க தன்னையே இழக்குறது
சாக்பீஸ் தான"

"ஒரு எழுத்து கத்துக்கொடுத்தாலும் போதும்
அதுக்காக தேயிர வாழ்க்க எவ்வளவு அழகு தெரியுமா...? "

மெலிதாய் புன்னகைத்தேன்..

அறை முழுக்க பிரமிப்பின் கண்விரிப்போடு கை தட்டல்...

அவசர அவசரமா விரலோடு உயர்ந்தது ஒரு குரல்

அப்போ நா... குட்டி சாக்பீஸ்... என்று

வெடித்த சத்தத்தோடு பின் எழுந்தது பல குரல்களில்

நாங்களும் குட்டி சாக்பீஸ்...
நாங்களும் குட்டி சாக்பீஸ்...

கத்தல் தாங்காது காதடைக்க முனைகையில் எதேச்சையாய்
கையிலிருந்து  விழுந்து குட்டியானது
ஒரு முழு நீள சாக்பீஸ்...

நன்றி....ஆசிரியருக்கு....

Friday, June 09, 2017

அரசு பள்ளி ஏன் தயக்கம்...?


தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய என் மகளிடம் கேட்டேன்.  என்ன பாப்பா, ஸ்கூல் எப்படி இருக்கு?. பிடிச்சு இருக்கு என சில விஷயங்களை சொன்னாள். அரசு பள்ளிக்கு என்றாலே முத்திரை பதித்த குறையான கழிப்பறை வசதியை பற்றி சொன்னாள்.  அது எல்லா அரசு பள்ளிகளிலும் உள்ள குறை. சொல்லுவோம் என சொல்லிவிட்டு வேற எப்படி இருந்தது என கேட்டேன்.

கொஞ்சம் தயங்கியபடி, இல்லப்பா , யாராவது எந்த ஸ்கூலில் படிக்கிற என கேட்கும் பொழுது சொல்லுவதற்கு ஒரு மாதிரி இருக்குப்பா..  பேமஸ் ஸ்கூலில் படித்துவிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேன் என சொல்ல கூச்சமா இருக்குப்பா என சொன்னாள். 

நான்  சிரித்து கொண்டே கவர்மெண்ட் வேலை கிடைச்சால் சொல்ல கூச்சப்படுவியா. கவர்மெண்ட் காலேஜில் டாகடர் சீட், இன்சினியரிங் சீட் கிடைச்சால் கூச்சப்படுவியா? என கேட்டேன். அது எப்படி சொல்லுவேன்.  சந்தோஷமா சொல்லுவேன்.  என சொன்னாள்.  அதே மாதிரி யார் கேட்டாலும் தைரியமா சொல்லு. கவர்மெண்ட் ஸ்கூலா என யாராவது இழுத்தால், ஏன் கவர்மெண்ட் வேலை கிடைச்சால் இப்படி கேட்பிங்களா என நக்கலா கேளு என்றேன். கேட்டவுடன் சிரித்து விட்டு இது தெரியாமல் போச்சே.. இனி யாராவது கேட்கட்டும் என உற்சாகமாக சொன்னாள்.

நீ படிக்கிற பள்ளியை என்றுமே குறைவா நினைக்காதே. வேலைக்கு போக இண்டர்வியூவில் எந்த ஸ்கூல் என கேட்பாங்க..  அப்பொழுது கவர்மெண்ட் ஸ்கூல் என சொன்னால் ஏதும் நினைப்பாங்களோன்னு தயங்கினால், அடுத்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தயங்கி சொல்லுவ..  ஆரம்பத்துலயே தைரியமா சொல்லு.  நம்ம படிக்கிற ஸ்கூல் நல்ல ஸ்கூல் என உன் மனசுல பதியனும்.

அங்க பீஸ் கட்டலைன்னா புக் தராமல் நிக்க வைக்க கூட செய்வாங்க.  ஆனால் இங்க உனக்கு புத்தகம் கொடுத்து படிக்க சொல்லுவாங்க. அங்க என்ன எக்ஸ்ட்ரா சொல்லி தருவாங்க..  இங்க நீ கேட்டு கத்துகிடனும்.  அதிக வேலையும் கொடுக்க மாட்டாங்க. உனக்கு என்ன கத்துகிடனும் தோணுதோ அதை கத்துக்கோ.  என்ன வேணும் எங்கிட்ட சொல்லு. நான் வாங்கி தர்றேன் என சொன்னேன். உற்சாகத்துடன் கேட்டு கொண்டாள்.

அங்க எல்லா பிள்ளைகளும் வசதியான, வசதியா காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிள்ளைங்களோடு படிச்சு இருப்ப.. இங்க எல்லோரும் நடுத்தரமா, இயல்பா பழகுற பிள்ளைகளா இருக்கும் அதனால எல்லோரிடமும் நல்லா பழகு.  டீச்சரை பார்த்து பயப்படாமல் நல்லா பேசு..  மரியாதையா பேசு.  இங்க வேலை பாக்குறவங்க எல்லோரும் நல்லா படிச்சு வேலைக்கு வந்தவங்க..  அதிக விஷயம் தெரியும். அவங்ககிட்ட கத்துக்கோ என சொல்லி முடித்து இருக்கிறேன்.

அரசு பள்ளியில் படிக்கிறோம் என சொல்ல தயக்கமாகத்தான் இருக்கும். அதை களைய வேண்டியது நாம் மட்டுமல்ல.. அரசும்தான்..

அரசு பள்ளியில் படிப்பதற்கு பெருமை கொள்வோம்....
நம்மால் பள்ளி பெருமை அடைய உழைப்போம்....நாளும்......

👍👍👍