Wednesday, March 26, 2014

திறந்து பார்க்க மறந்த உலகம்

திறந்து பார்க்க மறந்த உலகம்

எழுதியது ஈரோடு கதிர் 

தொலைக்காட்சிக்குள்ளே ஆழ மூழ்கிக் கிடக்கும் என் மகளை பல நேரங்களில் பிரித்தெடுப்பதே மிகச் சிரமமானதாக இருக்கிறது. தொலைக்காட்சியை அணைக்கச் சொல்லும் பொழுதெல்லாம், அதற்கு ஈடாக விளையாடுவதற்காக என் கைபேசியையோ, மடிக்கனிணியையோ கையகப்படுத்த முயற்சிப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு என் மடிக்கணினியில் அப்படி விளையாட என்னதான் இருக்கிறது என்ற கேள்வியிருந்தாலும், உட்கார்ந்து உற்று நோக்கும் பொறுமை உதிர்ந்து போய்விட்டது.


ஒரு வழியாய் மடிக்கணினியை கையகப்படுத்தி “அப்பா, படம் வரைய போட்டுக்குடுங்க” என்று குறுகுறுப்பாய் வேடிக்கை பார்த்து, அதற்கான மென்பொருளை நான் இயக்கும் வரை காத்திருந்த நாட்கள் மலையேறிவிட்டது. மடிக்கணினியை, பையிலிருந்து எடுத்து, திறக்கும் போதே “தள்ளுங்கப்பா” என்று மிக இயல்பாய் ஒதுக்கி, தனக்கென கையகப்படுத்தி, சடசடவென ஒவ்வொன்றாய் சொடுக்கி ஏதாவது ஒரு விளையாட்டுக்குள் மூழ்கிப் போய், அந்த விளையாட்டுக்கேற்ப விதவிதமாக குரல் எழுப்புவதை நினைக்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. 

குழந்தைகளின் உலகத்தில் மூழ்குவதை விட பிற அலுவல்களே முக்கியமாய் தோன்றும் சாபம் என்னையும் விட்டு வைத்ததில்லை. பல நேரங்களில் அவள் பேச வருவதை கேட்கும் மனநிலையை, ஏதோ ஒரு கைபேசி அழைப்பு களவாடிவிடுகிறது. நான் பேச நினைக்கும் நேரத்தில் வீட்டுப் பாடமோ, சுட்டி தொலைக்காட்சியின் செட்ரிக் அல்லது ஹம்பி டம்பியோ அவளை என்னிடமிருந்து களவாடிவிடுகிறது.

வழக்கமான வார விடுமுறை, வழக்கம் போல் வீட்டில் வார நாட்களின் களைப்பைக் கரைக்க கிடந்தேன். ஊரில் இருந்து தாத்தா வந்திருந்தார். எண்பதுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு, எழுதப் படிக்கத் தெரியாது. கையெழுத்து மட்டும் கிறுக்கலாய்ப் போடத் தெரியும். தொலைக்காட்சியும், அப்பா அம்மா இல்லாத நேரங்களும் என் மகளின் விளையாட்டுத் தோழனாக இருப்பவர் என்னுடைய தாத்தா. மதிய உணவுக்குப் பின் கொஞ்சம் தூக்க கலக்கத்தோடு படுக்கையில் கிடக்க, வழக்கம் போல் மடிக்கனிணியை கையகப் படுத்தியவள் அதை படுக்கையில் என்னருகில் கடை விரித்து, வெளியில் இருந்த என் தாத்தாவை தன் அருகில் அமர வைத்துக் கொண்டு எதோ ஒரு விளையாட்டை துவங்கினாள். 

ஒரு மாதிரி அரைத்தூக்கத்தில் இருந்த எனக்கு, என்னவோ சலசலப்புக் கேட்டது, நேரம் நகர பேச்சு அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

“குட்டிம்மா, என்ன சாமி பண்றே, கொஞ்சம் தூங்க வுடேன்” 

“அப்பா, இந்த கேம்-மை தாத்தாக்கு சொல்லிக் குடுத்ட்ருக்கேன்” 

தூக்கம் பிடிபடவில்லை, என்ன நடக்கிறது என்று கவனிக்கத் துவங்கினேன். ஏதோ ஒரு விளையாட்டின் மையத்தில் இருந்தாள். கை பரபரவென விளையாடிக் கொண்டிருக்க, விளையாட்டு குறித்த விளக்கம் கோர்வையாக வந்து கொண்டிருந்தது. சரியாய் சில விளக்கம், தனக்குத் தோன்றிய விதத்தில் கற்பனையாய் சில விளக்கம் என வெகு சுவாரசியாமாய் போய்க் கொண்டிருந்தது.

குழந்தை விவரிப்பதை வெகு சிரத்தையாய்

“ம்…”

“அப்படியா….”

“ஓ” என தாத்தா கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த விளையாட்டு ஒரு மாதிரி பிடிபடாமல் போக, வேறொரு விளையாட்டில் அடுத்த பாடம் ஆரம்பித்தது.

என்னால் ஒன்றை நிச்சயமாக உணர முடிந்தது, என்னுடைய தாத்தாவிற்கு அதில் ஒன்றுமே புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் வெகு சிரத்தையாய் அதை “ம்” கொட்டி பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். தனக்கு ஒன்றும் புரியவில்லை, இது தனக்கான விசயம் இல்லை என்ற போதும், ஏழு வயது குழந்தை சொல்வதை தன்னை மறந்து குழந்தையோடு குழந்தையாக தன்னுடைய எண்பது வயதில் ஏதோ ஒரு ஈடுபாட்டோடு கேட்டுக் கொண்டிருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

குழந்தைகளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்ய நினைக்கும் நமக்கு, ஒரு போதும் குழந்தைகளின் உலகத்தில் மூழ்க மனதிருப்பதில்லை. அதே போல் ஒன்றை உண்மையாகவோ, கற்பனையாகவோ சுவாரசியமாய் குழந்தைகள் விவரிப்பது போல் சொல்லும் திறனும் அற்றுப் போய் விட்டது. ஒவ்வொரு இடத்திலும் எல்லைகள் வரைந்து வைத்து, எல்லைகளுக்குள்ளாக, ஏனென்றே தெரியாமல் குறுகிப்போய் கிடக்கின்றோம்.

கொம்பு முளைத்த புத்தி, எதையெடுத்தாலும் குத்திக் கிளறி அதை ஆய்ந்து ஆய்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது. நம்மூலம் வந்த குழந்தைகளுக்கு, சரியாகவோ தவறாகவோ ஒரு உலகத்தை வடிவமைக்க நினைக்கும் வேகத்திற்குள், குழந்தைகள் மிக அழகாக தங்களுக்கென கட்டமைத்திருக்கும் உலகத்திற்குள் சென்று, இதுதான் குழந்தைகளின் உலகம் என்பதைப் பார்த்து, உள்வாங்கி அனுபவிக்க மறந்து விட்டோம்.

ஏழு வயதுக்குழந்தை எண்பது வயதிற்கு தாத்தாவிற்கு பாடம் எடுப்பதையும், எண்பது வயது தாத்தா குழந்தையாக மாறி ஏழு வயது குழந்தையிடம் எல்லாம் புரிந்ததுபோல் கேட்பதையும் பார்க்கும் போது குழந்தைத் தனத்தை தொலைத்த மனதிற்கு கொஞ்சம் குறுகுறுப்பாகவும், பொறாமையாகவும், வெட்கமாகவும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பதிவு  செயும்மாறு கேட்டுக் கொள்ளகிறேன் . 

என்றும் அன்புடன் 

No comments: