Saturday, June 14, 2025

கை பேசி(சு)யின் ஆசை...




அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. 
அன்றைக்கு இரவுச் சாப்பாடு
 முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார். அவருடைய கணவர் 
அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தார். 
சிறிது நேரம் போனது. 

அவர் யதேச்சையாகத் திரும்பி 
தன் மனைவியைப் பார்த்தார். 
கண்களில் நீர் திரள, தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே போனார்.

"ஏய்... என்னாச்சு?’’

"நேத்து நாலாம் வகுப்பு
படிக்கிற பசங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தேன். `என்னோட ஆசை’னு 
ஒரு தலைப்புக் கொடுத்து, 'என்ன தோணுதோ எழுதிட்டு வாங்க’ னு சொல்லியிருந்தேன்...’’

"சரி... அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?’’

"படிக்கிறேன்... கேட்குறீங்களா?’’

தலையசைத்தார் கணவர்,  ஆசிரியை படிக்க ஆரம்பித்தார். 

அதில் ஒரு மாணவன்  இப்படி எழுதியிருந்தான்...
 "நான் ஒரு கைபேசியாகணும்கிறதுதான் என்னோட ஆசை.  ஏன்னா, என்னோட அம்மா, அப்பாவுக்கு கைபேசி ரொம்பப் பிடிச்சிருக்கு.  சில நேரங்கள்ல 
என்னை கவனிச்சுக்கிறதைக்கூட மறந்துட்டு, போனை அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க. அப்பா 
அலுவலகத்திலிருந்து களைச்சுப் போய் வருவாரு;  என்கூடப் பேசுறதுக்கு நேரமில்லைன்னாக்கூட, கைபேசியில்
பேசுறதுக்கு அவருக்கு நேரமிருக்கு. 

அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சுறுசுறுப்பான வேலையில இருந்தாலும், 
கைபேசி மணி அடிச்சாப் போதும், ஓடிப்போய் எடுத்துடுறாங்க; 

பல நேரங்கள்ல நான் சத்தமாக் கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. கைபேசியில் ஏதாவது
ஒரு விளையாட்டை விளையாடுறாங்களே தவிர, என்கூட அதிகமா விளையாடுறதில்லை. அவங்க யாரோடயாவது  கைபேசியில் பேசிக்கிட்டிருக்கும்போது, எவ்வளவு
 முக்கியமான விஷயமா இருந்தாலும் 
நான் சொல்றது அவங்க காதுல விழுறது இல்லை. 

அதனால, அம்மாவும் அப்பாவும் 
என்னையும் கவனிக்கணும்கிறதுக்காக 
நான் ஒரு கைபேசி ஆகணும்னு ஆசைப்படுறேன்...’’

இதைக் கேட்ட கணவரும் 
நெகிழ்ந்துதான் போனார்.

 "சரி... இதை யார் எழுதியிருக்குறது?’’

"நம்ம வீட்டு பையன்தான்.’’

#நீதி

பிள்ளைகளுக்கு  விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமே பாசம்ன்னு 
நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்களே...!

பிள்ளைகளுக்கு தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்..

உங்கள் கைபேசியை 
சற்றே ஒதுக்கி வையுங்கள். 

பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் அவர்கள் எதிர்காலத்தில் 
எந்த தவறும் செய்யாமல் சிறந்து விளங்க உதவும்.  வயதான காலத்தில் 
உங்களுக்கான முக்கியத்துவம் உங்களுக்கு கிடைக்கும்...

நன்றி
பகிர்வு பதிவு

No comments: