Tuesday, October 12, 2021

சேலத்தின் அடையாளம் ....

Dedicated to Salem Citizens by சுஜாதா

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்.
பேலஸ் தியேட்டர் சேலம்
ஒரு சமயத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான திரையரங்குகளைக் கொண்ட நகரம் என்ற சிறப்பினை பெற்ற நகரம் சேலம். அந்த திரையரங்களில் பேலஸ் ஒரு முக்கியமான திரையரங்கமாக  விளங்கியது.

பேலஸ் தியேட்டர் மதுரை தங்கம் போல ஆசியாவிலேயே அதிகம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவு வசதி கொண்டது அல்ல. சென்னையில் அமைந்திருந்த சபையர், ப்ளூ டைமண்ட், எமரால்ட் போன்ற பிரமாண்டமான நவீன கொட்டகையும் அல்ல. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த திரையரங்கு.

சென்னையில் இருந்து குடி பெயர்ந்து (1960 ) சேலம் வந்தவுடன் அப்பா சேலம்-ஈரோடு மின்சார வினியோக கம்பெனியில் சேர்ந்ததும் சேலம் சுப்பராயன் தெருவில் ஒரு லைன் வீட்டில் குடியேறியதும் என் சேலம் வாசத்தின் ஆரம்பம். அதுதான் சினிமா என்னும் ஆசையை எனக்குள் அறிமுகப்படுத்தியதும் , அதை வளர்த்ததும் , அது ஆழமாய் வேரூன்றி இன்றுவரை நிலை பெறச்செய்ததும் அங்குதான்.

நாங்கள் குடி போன வீட்டுக்கு இடது புறத்தில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். அது சுப்பராயன் தெருவை ஆரம்பித்து வைப்பது போல அமைந்திருக்கும். அந்த ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அந்த சாலையின் முடிவில் பேலஸ் தியேட்டர் கம்பீரமாக இருக்கும்.
இடைப்பட்ட தெருதான் டாக்டர் சுப்பராயன் தெரு. அதன் மத்தியில்தான் எங்கள் வீடு அமைந்து இருந்தது. நான் படித்த பள்ளி 
(G. H. M. H. S) கொஞ்ச தூரம். 
(அது சென்ட்ரல் தியேட்டர் பக்கத்தில். இப்படித்தான் நான் அறிந்த சேலத்தை கொட்டகைகளோடு சேர்த்துத்தான் என்னால் சொல்ல முடியும்) அது எனக்கு வருத்தத்தினை தரவில்லை. ஏனென்றால் பேலஸ் தியேட்டர் பக்கத்திலே என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்ததுதான் காரணம்.

பேலஸ் திரையரங்கின் கம்பீரத்தை இரட்டித்துக் காட்டியது அதற்கு முன் அமைந்திருந்த திறந்த வெளியும் அதில் அமையப்பெற்றிருந்த புல்வெளி மேடையும்தான். எனக்குத் தெரிய அங்கு அமர்ந்து காற்று வாங்கியவாறு சினிமா பார்க்க வருபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருபது முப்பது பேர் இருக்கும். இவர்களைத் தவிர டிக்கெட் வாங்கிவிட்டு மனைவிக்காக காத்திருப்பவர்கள் கொஞ்சம். ஐந்து ரூபா டிக்கெட் எட்டு ரூபாய் என்று விற்கும் ஆண் பெண் கறுப்பு மார்க்கெட் வியாபாரிகள் இப்படி ஐம்பது பேர் தாராளமாக நடமாடும் அளவுக்கு பெரிய முகப்பை உடையதாக இருந்தது பேலஸ் தியேட்டர்.

பெண்களுகென்று நாற்பது பைசா , தொண்ணூறு பைசா கவுண்டர் கூண்டுகளும், அதே வகுப்புக்கு ஆண்களுக்கு கொட்டகைக்கு வெளியே கூண்டுகளும் இருக்கும். அதற்கு அடுத்த வகுப்பு  ₹1.30 இரு பாலாருக்கும் பொது வரிசை. அதற்கு மேல் 1.70 பாக்ஸ் ₹3 இவை கொட்டகையின் உள்ளே மாடிக்கு போகும் படியின் கீழ் ஒரு கவுன்ட்டர். இங்கு டிக்கெட் வாங்கிவிட்டு அமர இருக்கைகள் இருக்கும். இவர்கள் கொட்டகையில் நுழையும் வாயிலில் பார்வையாக பன்றி மலை சுவாமிகள் படமும் அதன், அருகே இருந்த கடிகாரமும் இன்னும் நினைவில் இருக்கின்றது. கொட்டகையின் பின் புறம் ஒரு தோட்டம். அதில் கத்திரி , வெண்டை கீரை போன்றவை பயிரிடப்படும். பெரிய கிணறு, அதில் நீர் இரைக்க ஒரு பம்ப் செட்.
மிகவும் பசுமையாக இருக்கும் அந்த நிலத்தை கவுண்டர் என்பவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். அவர் எங்களுக்குத் தெரிந்தவர். அதனால் முதல் நாள் டிக்கெட் வாங்க அவர் செல்வாக்கு எங்களுக்கு பயன் பட்டது.

கடைசி வகுப்புக்கே அமர சேர் வசதி இருந்த முதல் கொட்டகை பேலஸ். மேல் வகுப்புகளுக்கு குஷன் சேர். பாக்ஸ் வகுப்புக்கு தனித்தனியான குஷன் சீட். 
நல்ல காற்று வசதி. மாலைக்காட்சிகளின் போது கதவுகளைத் திறந்து வைப்பார்கள். இயற்கை காற்றும் வரும். இந்த அருமையான சூழலில் எவ்வளவு பாடாவதி படமும் நன்றாகவே இருக்கும். பேலசுக்கு அருகே வேறு கொட்டக்கைகள் கிடையாது. அதனால் இங்கு படம் பார்க்க வருபவர்கள் வேறு படத்துக்குப் போய் டிக்கெட் கிடைக்காமல் வருபவர்களாக இருக்க மாட்டார்கள். கமிட்டட் ஆடியன்ஸ் வகையைச் சேர்ந்தவர்கள். கொட்டகைக்கு வெளியே சைக்கிள் ஸ்டாண்டு. குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் சைக்கிள் ஸ்டாண்டினை பயன் படுத்துபவர்களுக்கு உண்டு. அதனால் க்யூவில் நிற்காமல் டிக்கெட் வாங்க சைக்கிளில் வருபவர்களும் உண்டு.

கொட்டகையின் அருகே கோயம்பத்தூர் லாட்ஜ் , சிவ சக்தி வினாயகா, போன்ற ஹோட்டல்களும் சற்று காலாற நடந்தால் கிருஷ்ணா பவனும் உண்டு. சினிமா பார்த்துவிட்டு டிபன் சாப்பிடுவது சுகமான அனுபவம். ஹோட்டலில் டேபிள் கிடைக்காது என்பதால் சிலர் சினிமாவில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளைத்  தவிர்த்துவிட்டு ஹோட்டல்களுக்கு விரைபவர்கள் உண்டு.

மற்றொரு திரையரங்கமான.  நியூ சினிமாவும் பேலஸ் தியேட்டரின் உரிமையாளரான பொம்மண்ண செட்டியாருடையதே. சில படங்கள் ஒரே சமயத்தில் இவ்விரண்டு தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு   படச்சுருள் இரண்டு கொட்டகைகளுக்கும் ஆட்டோவில் பயணித்தது ஆச்சரியாமான விஷயமாக  இருந்தது. பி.ஆர்.சேகர் என்னும் ரஞ்சி கிரிக்கெட் பிளேயர் இவர் பேலஸ் செட்டியாரின் மகன். அவர் ரஞ்சி விளையாடியதை விட பேலஸ் கொட்டகை இவருடையது என்பது எங்களுக்கு அவர் மீது பொறாமை கொள்ளவைத்த விஷயம்.
செட்டியாரை நாங்கள் பார்த்தது இல்லை. ஆனால் பேலஸ் தியேட்டர் மேனேஜரை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. 1980 வரை வெள்ளை ஜிப்பா அணிந்து, அம்மைத் தழும்போடு கூடிய முகத்தோடு எப்போதுமே ஒரு சிடுசிடுத்த முகத்தோடு தியேட்டர் வாசலில் கூட்டத்தை பார்வையிடும் மனிதராக அவர் காணப்பட்டார்.

பாசமலர் இக்கொட்டகையில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி விழா எடுத்த போது சிவாஜியும் சாவித்திரியும் தேரில் ஊர்வலமாக (மலர்களைப் போல் தங்கை பாடலில் வருமே அதே போன்ற தேர்) அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பார் மகளே பார் படமும் இங்கு வெற்றிகரமாக ஓடியது. அன்னை இல்லம், தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை, இருவர் உள்ளம், நிறை குடம் போன்ற பல சிவாஜியின் வெற்றிப் படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றி கரமாக ஓடினாலும் இங்கு திரையிடப்பட்ட கர்ணன் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தினர் மிக அதிகமான முறை பார்த்த படம் இது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று முறை பார்த்திருப்பார்கள். என் அப்பாவும் பெரியப்பாவும் விடாமல் ஒரு வாரம் இரவுக்காட்சி பார்த்தார்கள். அதில் மூன்று முறை நானும் உடன் சென்றிருந்தேன்.

ஒரு விசித்திரமான விஷயம். பொதுவாக எம்ஜிஆர் படங்கள் மோசமான தோல்வியை சந்திக்காது. ஆனால் தலைவன், தாலி பாக்கியம், அன்னமிட்ட கை, ஒரு தாய் மக்கள் என பல எம்ஜிஆர் படங்கள் தோல்வியடைந்தது என்றாலும் பின்னாட்களில் எங்கள் தங்கம், குமரிக்கோட்டம் போன்ற படங்கள் அந்த அவப் பெயரைப் போக்கின.

பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த், புன்னகை இதில்தான் திரையிடப்பட்டது. ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் இதில்தான் திரையிடப்பட்டது. எங்க வீட்டு பிள்ளைக்கு பிறகு அவர்களது தயாரிப்பில் எங்க வீட்டு பெண் திரையிடப்பட்டதும் பெரிய எதிர்பார்ப்புடன் போய் ஏமாந்ததும் இங்குதான். கமலின் வறுமையின் நிறம் சிகப்பு, ரஜினியின் காளி, பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், பாக்கியராஜின் மௌனகீதங்கள், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களும், அதே கண்கள் போன்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றியடைந்தது. 

முதன் முதலில் காலை காட்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பழைய ஆங்கில தமிழ் படங்களை சனி, ஞாயிறுகளில் திரையிட்டது. Mad Mad world, முதல் தேதி, எதிர்பாராதது ஆகிய படங்களைப் பார்க்க வைத்தது பேலஸ் தியேட்டர்.

பல வருடங்கள் அதிகமாக வெற்றிப் படங்கள் திரையிடப்படாத காலத்தில் கரகாட்டக்காரன் திரையிடப்பட்டது. பக்கத்து ஊர்களை இருந்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து படம் பார்த்த அதிசயத்தை ஒரு நாள் , இரு நாட்கள் அல்ல. பல மாதங்கள் தொடர்ந்து பார்த்தேன்.
தினமும் ஐந்து காட்சிகள், டிராபிக் ஜாம் ஏற்பட்டு திருப்பிவிடப்பட்ட அதிசயம் இங்குதான் நடந்தது.

எல்லா வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அப்படித்தான் பேலஸ் கொட்டகைக்கும் ஏற்பட்டது.
பல திரையரங்குகள் மூடப்பட்ட பொழுது பேலஸ் கொட்டகையும் கிடங்காக மாறி இப்பொழுது பெரிய அபார்ட்மெண்ட் இருப்பதாக அறிகின்றேன்.

1990 ல் சேலத்தை விட்டு போன நான் 
பேலஸ் தியேட்டர் மூடப்பட்டதை கேள்விப்பட்டேன்.
என் நினைவுகளில் இருக்கும் பேலஸ் தியேட்டர் என்றும் அப்படியேதான் இருக்கும். அப்படியேதான் பலரின் நினைவுகளில் ஏதாவது ஒரு திரையரங்கம் இருக்கும். இப்பதிவைப் படிக்கும் பொழுது அத்திரையரங்குகள் ஞாபகம் வரும்.


நன்றி
சுஜாதா

No comments: