Saturday, October 02, 2021

கொரோனாவுக்கு பின் கற்பித்தல்...

நவம்பரில் நடக்க வேண்டியது... 2

முறையான கற்பித்தலுக்குப் போகும்போது நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படைக் கருத்துகள். 

1. குழந்தைகள் ஒன்றரை வருடம் சற்று சுதந்திரத்துடன் இருந்திருக்கிறார்கள். 
2. விரும்பியதை மட்டும் செய்திருக்கிறார்கள். 
3. தாங்களே முடிவெடுத்து அதற்கேற்ப நாட்களைக் கழித்திருக்கிறார்கள். 
4. குழந்தைகளோடு செலவிட நேரம் உள்ள, படித்த பெற்றோர்கள் அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் குழந்தைளுக்குக் கற்பித்திருப்பார்கள்.  
5. இணைய வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் அதற்கு வாய்ப்பில்லாத குழந்தைகளைவிட சற்று மேம்பட்டு இருக்கலாம். 
6. இது குழந்தைகளுக்கு இடையே இருக்கும் கற்றல் இடைவெளியை அதிகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. 
7. தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்திருப்பவர்கள் கொஞ்சம் சந்தேகத்தோடு நம் வகுப்பறைகளைக் கவனிக்க முதிர்வார்கள். 
8. முதல் வகுப்பு கற்றல் இலக்குகளை முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டியிருக்கும். 
9. இரண்டு, மூன்று வகுப்புக் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தும்போது, அவர்களுக்குத் தாழ்வுணர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
10. அந்தத் தாழ்வுணர்வுகொண்டவர்களிடம் “நான் சொல்லித்தருகிறேன். நீ தெரிந்துகொள்” என்ற நம் முந்தைய முறை பொருந்தாமல் போகலாம். 
11. நடத்தி முடிப்பது என் வேலை என்று எல்லா பாடப்பொருளையும் சிவனே என்று நாம் கற்பிக்கத் தலைப்படுவோமா இல்லை தேர்ந்தெடுத்த பாடப்பொருள்களை அவசரமின்றி பொறுமையாகக் கற்பிப்போமா? 

குழப்பம்தான்.  நிச்சயமான, தெளிவான, உறுதியான முடிவுகள் எடுக்க முடியாது. பல கருத்துகளின் அடிப்படையில் சில செயல்பாடுகள் வடிவமைத்து, நடைமுறைப்படுத்திப் பார்த்து, குழந்தைகளின் ஈடுபாட்டைக் கவனித்து அதிலிருந்து பாடம் கற்பதுதான் ஒருவழி. 

எடுத்துக்காட்டாக ஒரு செயல்பாட்டை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.  (வயது முதிர்ந்த குழந்தைகளுக்கு அடிப்படைக் கருத்துகளை அவர்கள் மனம் கோணாமல் கற்பிப்பதற்கான உத்தியாக இச்செயல்பாட்டை நான் காண்கிறேன்.) 

1. வகுப்புக் குழந்தைகளின் பெயர்களை சார்ட்டுத் துண்டுகளில் எழுதுக்கொள்ளுங்கள். இனிஷ்யல் உட்பட எழுதுவது நல்லது. (பெயரட்டைகள்) கூடவே குண்டூசிகளையும் வைத்துக்கொள்ளுங்கள். 
2. ஒவ்வொருவரின் பெயரை வாசித்து அவருடைய சட்டையில் பெயரட்டையைக் குத்தி விடுங்கள். ஒருவாரம் இது தொடருங்கள். 
3. அடுத்த வாரம் பெயரட்டைகளை மேசைமேல் பரப்பி வையுஙகள். குழந்தைகளிடம் அவரவர் பெயரட்டைகளை எடுக்கச் சொல்லுங்கள். 
4. அடுத்த வாரம் சார்ட்டில் குழந்தைகளின் பெயர்களை எழுதுங்கள். அதை வாசித்து வருகையைப் பதிவு செய்யுங்கள். 
5. சார்ட்டில் குழந்தைகள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடித்துக் காட்டட்டும். 
6. மேசைமேல் பரப்பி வைத்த பெயரட்டைகளிலிருந்து தன் பெயரட்டையையும் தங்கள் நண்பர்களுள் சிலரின் பெயரட்டையையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளியுங்கள். 
7. அதற்கும் அடுத்த வாரம் நீங்கள் குறிப்பிடும் பெயரைச் சார்ட்டிலிருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கேளுங்கள். 
8. பெயரட்டைகளைக் குழந்தையிடம் கொடுத்து எத்தனை பேருக்கு பெயரட்டைகளைக் கொடுக்க முடியும் என்று கேளுங்கள். 
9. இதற்கிடையே ஐந்தோ ஆறோ குழந்தைகளின் பெயர்களைக் கரும்பலகையில் எழுதுங்கள். (அதில் இரண்டு பெயர்கள் இருப்பது நல்லது) எடுத்துக்காட்டு விஜயகுமார், சந்திரசேகர்  போன்றவை
10. விஜயகுமார் என்ற பெயரை வாசித்துக் காட்டிவிட்டு அதன் கீழே குமார் என்பதற்குக்கீழே குமார் என்று எழுதி இது என்ன என்று கேளுங்கள். 
11. பிறகு புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டை நடத்துங்கள். அதாவது விஜயகுமார், சந்திரசேகர்  என்றிருப்பதிலிருந்து விஜயசேகர், சந்திரகுமார் போன்ற புதுப்பெயர்களை உருவாக்க வேண்டும். 
சில சொற்களை வாசிக்கக் குழந்தைகள் சிரமப்படும்போது இந்தச்சொல்லில் வரும் எழுத்துகள் .................................... இந்தப் பெயரில் வந்துள்ளன. அதை வாசித்தால் இந்தச் சொல்லையும் வாசிக்கலாம் என்று சொல்லுங்கள். அதுபோல் சில எழுத்துகளை வாசிக்கத் தெரியாமல் இருக்கும்போது ..................... இவருடைய பெயரின் இனிஷ்யல் இந்த எழுத்துதான் என்று சொல்லுங்கள். 

புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டில் குழந்தைகள் விருப்பம் காட்டினால் புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும் செயல்பாட்டை நடத்தலாம். குழந்தைகளுக்குத் தெரிந்த ஊர்ப்பெயர்களை எழுதுதல், வாசித்துக் காட்டுதல், வாசிக்க வாய்ப்பளித்தல், பிறகு புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும்படி சொல்லுதல், அவற்றை எழுதுதல், வாசிக்க வாய்ப்பளித்தல் என்னும் படிகளைப் பின்பற்றலாம். 

காட்டாயப்படுத்தாமல், அவர்களுக்குத் தெரியாமலே அவர்களின் கவனத்தை எழுத்துகளின் மேல் பதிய வைக்க இச்செயல்பாடு உதவும் என்று நினைக்கிறேன். மட்டுமல்ல விரைந்து கற்கும் மாணவர்களுக்கு கடினத்தன்மை கூடிய அடுத்த செயல்பாட்டைக் கொடுக்கவும் அவர்களைச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடச் செய்யவும் இச்செயல்பாடு உதவும். 

மேலும் சில செயல்பாடுகளுக்காக காத்திருங்கள். 

மீள்பதிவு

நன்றி
PC; Puthiathalaimurai

ஜி. ராஜேந்திரன் 
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore 
Blog:qriuslearning.wordpress.com

No comments: