அளவிடுதல் அறிமுகம்
------------------- ----------------
| |
|| ||
||| |||
|| ||
| |
ஆசிரியர் மதி புன்னகைத்தபடியே வகுப்பறைக்குள் நுழைந்தார். குழந்தைகளும் அவரைப் பார்த்து அதே புன்னகை பூத்தனர்.
“வகுப்பை ஆரம்பிக்கலாமா பசங்களா?”
“ஓ....” என்று தலையாட்டினார்கள்.
மணிகண்டனையும் கீதாவையும் வகுப்பின் மேடைக்கு வரவழைத்தார்.
“இவங்க ரெண்டு பேரில் யார் உயரம் சொல்லுங்க”
“மணி...மணி...மணி...” என்று கத்தினார்கள்
”எப்படி சொல்றீங்க்?” என்று கேட்டதற்கு பல விடைகள் கொடுத்தாங்க மாணவர்கள்.
“சரி, மணி உயரமா இல்லை எங்க வீட்ல இருக்க ராஜா உயரமா?”
ராஜா யார் என்றே மாணவர்களுக்கு தெரியாது. அப்புறம் எப்படி அவர் உயரம் தெரியும்.
“ராஜா எவ்வளவு உயரம் ?” என்று கேட்டார்கள் அனைவரும்.
“அவன் நல்ல உயரம்” என்று கூறினார் மதி.
அமைதி நிலவியது.
“இப்ப நான் ராஜாவை பார்த்திருக்கேன் அதனால் அவன் மணியைவிட உயரம்னு சொல்றேன் ஆனால் மணியையும் ராஜாவையும் பார்க்காதவங்களுக்கு அவங்க உயரத்தை எப்படி சொல்றது??”
...
“அதுக்கு தான் அளக்கனும். இப்படி நாம அளந்து அதனை செண்டி மீட்டரில் சொல்வோம். சரி ஒவ்வொருவரா வந்து நீங்க என்ன உயரத்தில் இருக்கீங்கன்னு அளவெடுப்போமா?”
“மிஸ், டெய்லர் சட்டைக்கு அளவெடுப்பாங்களே அந்த மாதிரியா?”
“அதே தான்”
ஒவ்வொருவராக வந்து அளவெடுத்துக்கொண்டார்கள். பலகையில் எல்லோருடைய உயரத்தையும் கீதா எழுதினாள். “இப்ப நம்ம வகுப்பிலேயே யார் உயரம் சொல்லுங்க?. எல்லாரும் ஒருவர் பின்னாடி ஒருவரா நிக்கனுமா?”
“இல்லை, நாங்க பலகையை பார்த்தே சொல்றோம்” என்று கரும்பலகையில் இருந்த அதிகமான எண்ணை கூறினார்கள். யார் குறைவான உயரம் என்பதற்கு இருவர் அதே உயரத்தில் இருக்கின்றார்கள் என்றும் மாணவர்கள் கூறினார்கள்.
“சரி, நம்ம வகுப்பில சாராசரி உயரம் என்ன சொல்லுங்க?”
“அப்படின்னா என்ன மிஸ்?” என்றான் மணி
“ஓ, அப்படின்னா அதை தனியா கவனிப்போம். இப்ப நாம அளவிடுவதில் கவனம் செலுத்துவோம்”
ஒரு கை வகுப்பில் உயர்ந்தது. “மிஸ், நான் ஸ்கேல் வாங்க போனப்ப கடைக்காரர், உனக்கு ஒரு அடி ஸ்கேல் வேணுமா அரை அடி ஸ்கேல் வேணும்னான்னு கேட்டார், அப்படின்னா என்ன மிஸ்”
“எல்லோரும் இவனுக்கு கைத்தட்டுங்க” கைத்தட்டப்பட்டது.
“நான் கூட கேக்கனும்னு இருந்தேன் மிஸ்” என்று எழுந்தான் சங்கர்.
“கேள்வி இருந்தா கேட்டுடனும். உள்ளே வெச்சிருந்தா ஒழுங்கா கத்துக்கமுடியாது. சரி அரை அடின்னா என்னா ஒரு அடின்னா என்ன? இந்த அளவிடுதல் எல்லாம் ஒரு மொழி போல. உங்களுக்கும் எனக்கும் தமிழ் புரியிற மாதிரி எல்லாத்துக்கும் புரியிற மொழி. எங்க போய் 10 செண்டிமீட்டர்ன்னு சொன்னாலும் அதே அளவில தான் இருக்கும். அதே போல அடி என்பதும் ஒரு மொழி. செண்டிமீட்டரை தமிழ்ன்னு வெச்சிகிட்டா அடியை ஆங்கிலம்னு வெச்சிப்போம். அடியையும் செண்டிமீட்டர் கணக்கில் மாத்தலாம்.
30 cm = 1 அடி.
“ஆமாம் மிஸ், இந்தப்பக்கம் 15 செண்டிமீட்டர் இருக்கு அப்ப இது அரை அடி ஸ்கேல்” என்று தன் அரை அடி ஸ்கேலை எல்லோருக்கும் காட்டினான்.
“மிகச்சரியா சொன்ன. இப்ப இன்னும் குட்டியா இருக்க பொருட்களை எல்லாம் மீல்லி மீட்டரில் அளப்பாங்க. பெருசா இருக்க அளவுகளை மீட்டரில் அளப்பாங்க. நம்ம வகுப்பறையில் நீளம் எவ்வளவுன்னு கேட்டா நீங்க எந்த அளவில் சொல்லுவீங்க?”
“மீட்டர்...”
நன்றி...
- விழியன்
#நான்_ஒரு_கணக்குப்_பைத்தியம்