Thursday, March 08, 2018

தோசையிலும் கணக்கு....

சம்ருதா ஒரு எட்டாங்கிளாஸ் படிக்கிற பொண்ணு.

அன்னைக்கு ஞாயித்துக் கிழமை லீவு.

அம்மாவும் அப்பாவும் தூக்கம்.

ஆனா சம்ருதா காலையில எந்திரிச்சி டீ தயார் செய்றா. அப்புறம் தக்காளி தொக்கும் செய்றா.அதுக்கப்புறம் தோசைக்கல்லு எடுத்து வைச்சி ஒரே மாதிரியான தோசைகள் சுடுறா.

அம்மாவுக்கு மூணு, அப்பாவுக்கு மூணு , அவளுக்கு மூணு.

சம்ருதா தோசை சுட்டு முடிக்கவும் அப்பா அம்மா ரெண்டு பேரும் எந்திரிக்கிறாங்க.

பல் விளக்கி ரெபிரஷ் ஆகிட்டு வராங்க.

அப்பா டீ போடப் போறாரு.

“அப்பா நா டீ போட்டு, தக்காளி தொக்கு வெச்சி, தோசையும் சுட்டு வெச்சிட்டேன்”

“சூப்பர். கொடு கொடு டீயக் கொடு”

“அதான் ஒன்பது மணி ஆச்சே காலைல தோசை சாப்பிட்டுக்கிட்டே டீ குடிக்கலாம்”

“முதல்ல டீ கொடு”

‘அதான் சொல்றால்ல நம்ம பொண்ணு” என்றொரு குரலாக சம்ருதாவின் அம்மா குரல் கூட்டது.

மூவரும் வரிசையாக தரையில் அமர்ந்து கொண்டார்கள்.

தோசையை தக்காளி தொக்கில் தேய்த்து ஒரு வாய், டீயில் ஒரு சிப் என்று மாற்றி மாற்றி குடித்தார்கள்.

“ரொம்ப சுவையா இருந்திச்சி சம்ருதா” இது அப்பா.

“ காலைல இப்படி டிபன் ரெடியா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கு. நா சின்ன வயசுல இப்படி எங்க அம்மா கையால வாங்கி சாப்பிட்டது”

“அப்புறம்”

“அப்புறம் நான் தான் சமைச்சிகிட்டே இருக்கேன். நம்ம சமைச்சத நாமே சாப்பிடுறது எரிச்சலா இருக்கும் சம்ருதா”

“ஆமாம்மா நானும் இன்னைக்கு அத ஃபீல் செய்தேன்”

“ம்ம்ம்...நைஸ் ஆஃப் யூ செல்லம். சரி ரொம்ப செண்டிமெண்ட்டா போகுதே.” இது அம்மா.

“செண்டிமெண்ட் நல்லது” இது அப்பா.

“சரி நான் இப்போ ஒரு வேலை சொல்றேன். சம்ருதா எல்லா தோசையும் ஒரே வட்டமாத்தான் சுட்டா. அப்போ அந்த தோசையோட தடிமன் Thickness என்னது. நாம எல்லோரும் கண்டுபிடிப்போம். நேரம் இப்போ தொடங்குது”

”அடிப்படை ஐடியா என்ன. எப்படி கண்டுபிடிக்கிறது”

“அப்பா தோசைக் கரண்டிலதான மாவு இருக்கு. தோசைக்கரண்டில இருக்கிற மாவுதான தோசையா வட்டமா விரியுது. அப்போ தோசைக்கரண்டி மாவு Volume வந்து விரிஞ்ச தோசையோட Volume. இதுதான் அடிப்படை ஐடியா”

“ஆமா புரியுது”

“நாம் தோசை ஊத்தின கரண்டி மாவோட Volume
முதல்ல கண்டுபிடிக்கனும்.”

“ஐயோ தோசை ஊத்தின கரண்டி என்ன வடிமன்னே தெரியலையே. நான் போய் கழுவி பாக்குறேன்” இது அப்பா

“சரி”

“யம்மா இது Hemisphere வடிவம்மா.. ஒரு பந்த ரெண்டா வெட்டினா வர்ற வடிவம்”

“இருங்கப்பா நான் இதோட Diameter அளக்குறேன். அப்பா இது 6 செ.மீ வருது. அப்போ Radius என்னது 3 செ.மீ”

”Volume of Hemisphere என்னதுமா”

" அது 2/3 Π r^3 " இது அம்மா.

” அப்போ நான் கரண்டியோட Volume Calculate பண்றேன்”

“அப்பா வேணாம் அது 2/3 Π 3^3 அப்படியே இருக்கட்டும்.  Radius க்கு பதிலா கரண்டியோட ரேடியஸ்ல் மூணப்போட்டு அப்படியே இருக்கட்டும் பா”

“ஏன்மா”

“இருக்கட்டும் நா சொல்றேன்”

“அடுத்து என்ன பண்ணனும்”

”தோசைக்கரண்டில உள்ள தோசை மாவு வால்யூம் கண்டுபிடிச்சாச்சி. அடுத்தது விரிச்ச வட்ட வடிவ தோசை வால்யூம் கண்டுபிடிக்கனும். தோசையோட விட்டத்த அளக்கனும்”

”அது எப்படி”

“தோசைக் கல்லுல நான் தோசை விட்ட தடம் இருக்கும்”

”சரி.. ஆங்க் 16 செ.மீ வருதும்மா”

“அப்ப Radius 8 செ.மீ “

“அப்ப தோசையோட Volume ஃபார்முலா”

“ அது உருளை, சிலிண்டர் வடிவம். Π r^2 h” இது அம்மா.

“அது எப்படி சரியா சொல்ற” இது அப்பா.

”உருளைங்கிறது என்னது. நிறைய வட்ட்அ பிளேட்ட அடுக்கி வெச்சா அதுதான் உருளை. ஒரு வட்ட பிளேட்டோட ஏரியா என்னது Π r^2. அப்போ வட்ட பிளேட்களான Π r^2 வ h உயரத்துக்கு அடுக்கி வெச்சா அதுதான் உருளையோட வால்யூம். அதான் Π r^2 h”

“ஆமா அப்போ தோசையோட தடிமன் கண்டுபிடிக்கனுமா நாம Π r^2 h ல உள்ள h கண்டுபிடிக்கனும்” இது அப்பா.

“தோசையோட ஃபார்முலாவுல தோசை ரெடியஸ் 8 செமீய போடலாம் “ இது சம்ருதா.

“அப்ப அது Π 8^2 h இன்னு வருது”

“ தோசைக் கரண்டியோட Volume = தோசையோட Volume" இதுஅப்பா
“அப்போ 2/3 Π 3^3  = Π 8^2 h . ஒஹோ அப்ப பைக்கும் பைக்கும் வெட்டு கொடுத்திரலாம். ஒஹோ இதுக்குதான் நீ 2/3 Π 3^3 அப்படியே வெச்சிருக்க சொன்னியா”

“ஆமாப்பா அப்படி வெச்சா பைக்கும் பைக்கும் வெட்டு கொடுத்திருலாம்”

“இப்ப என்ன மிச்சமிருக்கு”

“இப்ப இது 2  x 3^2  = 8^2 h" ஆகிரும்.

“என்னம்மா 2/3 x 3^3 எப்படி  2  x 3^2  ஆகிச்சி”

“யப்பா 2/3 இருக்கிற 3 ம்... 3^3 ஒரு 3 ம் போய் அது 2  x 3^2 ஆகிரும்தானே”

“ஒஹ் புரியுது புரியுது அப்ப h = 18 /64"

"அது வந்து 0.28 செ.மீ அதாவது 0.30 செ.மீ”

“தோசையோட திக்னஸ் 0.3 செ.மீ” இது அம்மா

“அதாவது 3 மில்லி மீட்டர்தான் நான் சுட்ட தோசையோட தடிமன். ஹேய் கண்டுபிடிச்சிட்டோம்.”

”நாம குடும்பத்தோட காலைல ஒரு கணித இன்பத்த அனுபவிச்சோம்.” இது அப்பா.

”அப்பா அரைமணி நேரம் பிறகு ஒரு சார்ட் வாங்கிட்டு வந்து இத எழுதி ஒரு பிரசெண்டேசன் ரெடி பண்ணப் போறேன். நாளைக்கு மேத்ஸ் மிஸ்கிட்ட கேட்டுட்டு 5 நிமிசம் செமினார் கொடுக்கப் போறேன்” இது சம்ருதா.

“தோசை சுடுறதுல கூட சம்ருதா கணக்கு கத்துக்கிறான்னு உனக்கு தம்பட்டம் அடிக்கனும் அப்படித்தான” அப்பா கண்ணடித்தார்.

“அமா எனக்கு தெரிஞ்சத ஊரெல்லாம் சொல்லி பெருமைப்படுறதுக்காதன் வாழ்க்கையே” சம்ருதா சொல்லிட்டு அப்பாவ பாத்து கண்ணடிக்கிறா.“

நன்றி விஜய் சார்...

1 comment:

முத்துசாமி இரா said...

தோசைக் கணக்கு அருமை