*கதை பேசுதல் - விழியன்*
குழந்தைகளுக்கு கதை சொல்லு கதை சொல்லு என்கின்றோம். நாம் குழந்தைகளுக்கு கதை சொல்கிறோம். அது என்ன கதையாகவும் இருக்கலாம், ஆனால் அந்தக் கதை குழந்தைகளிடம் என்ன செய்துவிடும், என்ன கொடுத்துவிடும்? கதையின் முடிவில் நாம் கூறும் நீதி போதனை அல்லது கருத்து தான் குழந்தைகளின் மனதில் தங்கும், அதற்கு நேரடியாகவே கருத்தினை மட்டும் கூறிவிட்டு போய்விடலாமே, நேர விரையம் தானே எனலாம். குழந்தைகளுக்கு அந்த கருத்து மட்டும் செல்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.
காகம் வடை திருடிய கதையினைக் கேட்டு வளராத குழந்தைகளே இருக்க முடியாது. எத்தனை தலைமுறையினர் இந்தக் கதையினை கேட்டு வளர்ந்தனர் என்ற வரலாறு நம்மிடையே இல்லை. பல்வேறு விதமாக இந்த கதை கூறப்படுகின்றது, ஆனால் சாரம் ஒன்று தான்.
“ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாங்க. ஒரு நாள் அவங்க வடை சுட்டாங்க. அங்க வந்த காக்கா, பாட்டியை ஏமாற்றி ஒரு வடையை எடுத்துகிட்டு போயிடுச்சு. வாயில வடையோட ஒரு மரத்துமேல உட்காந்துச்சு. அந்த பக்கமா வந்த நரி காக்காவை பாடச்சொல்லி கேட்டுச்சாம். இந்த தந்திரம் தெரியாத காக்கா ‘கா..கா..கா’ன்னு கரைய, வாயில இருந்த வடை கீழே விழுந்துச்சாம். அந்த வடையை லபக்குன்னு பிடிச்சிகிட்டு நரி ஓடிபோயிடுச்சாம்”
இது வேறு வேறு சின்ன சின்ன மாற்றங்களுடன் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப தன் மொழியில் வட்டார வழக்குகளுக்கு ஏற்ப சொல்லப்படுவதுண்டு. காக்கா வடையை வாயில் வைத்து பாடியதாகவும், கீழே விழுந்த வடையை பாட்டி பிடிப்பதாகவும், நரியை விரட்டி வடையை பாட்டி கைபற்றுவதாகவும், மேலும் சிலபல பிற்சேர்க்கையுடன் கதை சொல்லப்படுகின்றது. பொரியவர்களாகிய நாம் என்ன நினைக்கிறோம்? கதையின் நீதி “ஏமாற்றினால் ஏமாறுவாய்”. ஆனால் கதை அதனை மட்டும் கடத்தவில்லை.
பாட்டியானவள் குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானவள். காகமும் குழந்தையை சந்திக்கும் முதல் பறவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அனேகமாக சந்திக்கும் முதல் உயிரினம் காகமே. காகம் காட்டி சோறு ஊட்டாத தாயே இருக்க முடியாது. இப்ப மாறி இருக்கலாம். இரண்டு கதாபாத்திரங்களும் மிக எளிதாக மனதினில் கொண்டுவந்துவிடுவார்கள். பிரியமான பாட்டி எப்போதும் பேரன் பேத்திகளுக்கு பலகாரம் செய்வாள். பாட்டியும் வடை சுடுகின்றாள். ஆக, காட்சிகளை மிக எளிதினில் விரிந்துவிடும்.
எந்த விஷயமும் குழந்தைகளிடம் படங்களாகவே நினைவில் பதிவாகும். நம் விவரிப்புகளை அவர்கள் மனதில் காட்சிகளாக
மாற்றிவிடுவார்கள். இது தான் கதையின் முக்கிய சிறப்பம்சம். ‘பாட்டி வடை சுட்டாள்” என்ற வாக்கியத்தை பாட்டி என்ற இடத்தில் மிகவும் பிடித்த பாட்டியின் முகத்தை பொருத்திக்கொள்வார்கள். தான் பார்த்த சமையலறையில் ஒன்றினில் பாட்டி வடை சுடுவதாகவோ, தாழ்வாரத்தில் அமர்ந்து சுடுவதாகவோ, வாசலில் அடுப்பு வைத்து சுடுவதாகவோ அவரவர் வயதிற்கு ஏற்றார் போல, அனுபவங்களுக்கு ஏற்றார் போல கற்பனை செய்வார்கள். வயதிற்கு ஏற்ப அந்த காட்சியின் விவரங்கள் அதிகரிக்கும். வடை சுடும் பாத்திரத்தின் அளவு, எவ்வளவு பெரிய வடை, பாட்டியின் ஆடை, பாட்டியின் வயது, கேஸிலா, அடுப்பிலா, ஸ்டவ்விலா என்ற விவரங்கள் மாறுபடும்.
இப்படியாக காட்சிக்கு காட்சி அவர்களின் கற்பனையை செழிக்க வைக்கும். காகம் வடையை எடுக்கும் காட்சி, வடையை காகம் வைத்திருக்கும் காட்சி, மரத்தில் அமர்ந்திருக்கும் காட்சி, வடை கீழே விழ நரி பிடிக்கும் காட்சி என பல காட்சிகள் இந்த சின்ன கதையின் மூலமே கிடைக்கும். முக்கியமாக ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே நடப்பவைகளை தன் கற்பனைக்கு ஏற்றவாறு குழந்தைகள் நிரப்பிக்கொள்வார்கள். இதுவும் அவர்களின் கற்பனைவளத்தினை அதிகரிக்கும்.
இந்த கற்பனைவளமும் திறனும் தான் உலகின் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம். அடிநாதம். இந்தியாவில் நடைபெறும் ஒரு ஆப்பரேஷனை அமெரிக்காவில் இருந்து கண்கானித்து ஆலோசனை வழங்க இன்று முடியும். நேரடி காட்சிகள் நேரடி ஆலோசனைகள் சாத்தியம். இதனை என்றோ யாரோ கற்பனை செய்துபார்த்திருக்க வேண்டும், தன் சிறுமுயற்சிகளுடன் கற்பனையை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இருக்க வேண்டும். இன்று இது சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது. கற்பனைத்திறம் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் இருந்து நேக்கும் திறனையும் வளர்ப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திறன்கள் வளர கதைகள் உதவுகின்றது.
இவை மட்மல்ல, பொறுமையாக காதுகொடுத்து கேட்க, பேச, உரையாடல்கள் நிகழ்த்த, வரலாறுகளை தெரிந்துகொள்ள, இன்னும் ஏராளமான உலக ஞானம் பெற...இன்னும் இன்னும் என்னென்னவோ..
- விழியன்
நன்றி விழியன் ஜி...
1 comment:
ஒவ்வொரு குழந்தையுமே அதனதன் சூழ்நிலைக்கேற்ப விளங்கிக் கொள்கிறது. என்றாலும் Thematic Perception இன்றியமையாதது. நல்ல கருத்து. நன்றி
Post a Comment