Saturday, March 31, 2018

மந்திர மோதிரம்...தன்னம்பிக்கை சிறுகதை

வாழ்த்துகள்*மனதை பக்குவ படுத்தும் மந்திரம்...!!!*

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது, "தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?" என்பதே அந்த சிந்தனை.

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்.

“வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான்.

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள்...

ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள்.

நமசிவாய என்றார் ஒருவர்.

ஓம் சக்தி என்றார் மற்றவர்.

உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.

ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை.

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான்.

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது.

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான்.

சில வருடங்களுக்குப்பின்...

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான்.

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான். தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன்...

தூரத்தில் ஒரு மலையினை கண்டான்...

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான்.

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான்.

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.

உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

“மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம்... என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான்...

ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .

அந்த வாசகம் இதுதான்...

*"இந்த நிலை மாறும்..."*

அவ்வளவுதான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான்.

தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்...

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான்...

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது...
அரண்மனையில் மக்கள் கூட்டம்.. 
அரியணையில் மன்னன்... அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள்...
ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது...

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

"மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன்.

மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.

இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள்.

அந்த மனிதன், "மன்னா! இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே “

மன்னன், “ஆமாம் அது உண்மைதான் அன்பரே...”

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன்.

உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.

அதில் அதே மந்திர வாசகம் இருந்தது.

"இந்த நிலை மாறும்..."

மன்னர் விழிக்க, அந்த மனிதன், "இதுதான் மன்னா வாழ்க்கை... இந்த நிலையும்  மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள்... நான் வருகின்றேன்..." என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன்...

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்!

ஆதனால், நாம் எந்த நிலையில் இருந்தாலும்,  எந்த முடிவெடுக்கும் முன்னரும் நமக்கும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்...

*"இந்த நிலை மாறும்...!!!*

நமது எண்ணம்,
உணர்வுகள்,
சிந்தனை,
சொல் மற்றும் செயல் அனைத்தும் சரியாக இருப்பின் சரியான நிலைக்கும்...
தவறாக இருப்பின் தவறான நிலைக்கும் மாறும்...!!!*

ஆக, மாற்றம் ஒன்றே மாறாதது...!!!*
நல்ல மாற்றம் உயர்வையும்,
தவறான மாற்றம் தாழ்வையும் தரும்...!!!*

இந்த வாழ்வியல் உண்மையை உணர்ந்து நாம்...!!!*
*நல்ல மாற்றத்தை அடைவோம்...*
*நாம் நலமுடன், வளமுடன் வாழ..
############₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

Sunday, March 18, 2018

கடவுள் ்...சிறுகதை

🔱🚩உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது

நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாராளமாக கேள்

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?

கடவுள் : சத்தியமாக!

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?

கடவுள் : என்னப்பா சொல்ற நீ?

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட் !

கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.

நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்! தெரியும்.

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.

நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம் தெரியும்.

நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல

இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

நான் : (அதிர்ச்சியுடன்) ஓ

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.

நான் : (அடக்கத்துடன்) ஓ

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு! யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?

நான் : (கண்கலங்கியபடி) ம்ம்

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

நான் : ம்ம்

கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள்ல கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!

நான் : நிச்சயமாக

கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்.

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை...🔥

நன்றி விழியன் ஜி...

Tuesday, March 13, 2018

பை தினம். மார்ச்14

உலக 'பை' தினம் - மார்ச் 14

உலக 'பை' தினம் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 குறிப்பதுதான்.

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)பை தினத்தில் பிறந்தவர். 'பை'யின் தோராயமான பின்ன மதிப்பு '22/7' என்பதால், அதனைக் குறிக்கும் ஜூலை 22ஆம் தேதியையும் கொண்டாட வேண்டும் அல்லவா? இந்த தினத்தை, 'பை அப்ராக்சிமேஷன் டே' (Pi Approximation Day) என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.

முதலில் "பை" யைப் பற்றி பார்ப்போம்!

பண்டைய மனிதன் பல வித வடிவங்களையும் பார்க்கத் துவங்கிய போது வட்ட வடிவம் மட்டும் அவனுக்கு வினோதமாகப் பட்டது.

இயற்கையில் அவன் கண்ட பல உருவங்களும் வட்ட வடிவில் இருந்தன.

சதுரம், செவ்வகம், முக்கோண்டம் முதலிய பல வடிவங்களின் அளவையும் எளிதாய் அளக்க முடிந்த அவனுக்கு, வட்டத்தை மட்டும் சரிவர அளக்க முடியவில்லை.

பெரும் முயற்சிக்குப் பின், அவன் ஒரு அதிசயத்தைக் கண்டறிந்தான்.

ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் இடையே ஒரு பொது எண் இருப்பதைக் கண்டான்.

எந்த அளவு வட்டம் என்றாலும், அந்த விகிதம் மாறாமல் இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அந்த எண் தான் கிரேக்கர்களால் "பை (Pi)" என்று அழைக்கப்படுகிறது!!

அந்த மாறிலியைக் கண்டுபிடித்தால் வட்டத்தின் பிரச்சனை தீர்ந்தது என்று எண்ணி அதனைக் கண்டறிய முனைந்தான். இன்று வரை அந்த மாறிலியின் முழு எண்ணை யாராலும் கண்டறிய முடியவில்லை!!

பை என்கிற மாறிலியின் பதிப்பைக் கண்டறிய பண்டைய காலத்தில் இருந்தே முயற்சிகள் நடக்கிறன.

ஆர்யபட்டர் கி.மு. 499 இல் பை ஒரு விகிதமுறா எண் (Irrational Number) என்பதைக் கண்டறிந்தார். அதன் மதிப்பைப் பற்றி அவரது உரை (தமிழில்):
"நூறோடு நாலைக் கூட்டு , அதை எட்டால் பெருக்கு மேலும் பிறகு 62,000 த்தை அதனுடன் கூட்டு. இந்த விதி முறையில் 20000 விட்டம் கொண்ட ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியலாம்."

அதாவது:  ((4+100)×8+62000)/20000 = 3.1416

இந்த விடை மேற்கூறிய ஐந்து இலக்கங்கள் வரை சரியாக பொருந்தும்!!

இதற்கு பல காலம் கழித்தே கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் பை இன் மதிப்பை  3.1418 என்றும், அதனைத்  அறிஞர் தாலமி 3.1416 என்று செம்மைப்படுத்தினார். 12 ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் பை ஒரு விகிதமுறா எண் என்பதைக் கண்டறிந்தனர்.

(ஆனால், நாம் பாட புத்தகங்களில் 'பை' இன் மதிப்பைக் கண்டறிந்தவர்கள் கிரேக்கர்கள் என்று படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேறு விடயம்!!)

இன்றோ பல்வேறு கணித முறைகள் மற்றும் கணிணியின் பயன்பாட்டால், "பை" யின் மதிப்பை ஒரு இலட்சம் எண்கள் வரை கணித்தாகி விட்டது!

நன்றி

Thursday, March 08, 2018

தோசையிலும் கணக்கு....

சம்ருதா ஒரு எட்டாங்கிளாஸ் படிக்கிற பொண்ணு.

அன்னைக்கு ஞாயித்துக் கிழமை லீவு.

அம்மாவும் அப்பாவும் தூக்கம்.

ஆனா சம்ருதா காலையில எந்திரிச்சி டீ தயார் செய்றா. அப்புறம் தக்காளி தொக்கும் செய்றா.அதுக்கப்புறம் தோசைக்கல்லு எடுத்து வைச்சி ஒரே மாதிரியான தோசைகள் சுடுறா.

அம்மாவுக்கு மூணு, அப்பாவுக்கு மூணு , அவளுக்கு மூணு.

சம்ருதா தோசை சுட்டு முடிக்கவும் அப்பா அம்மா ரெண்டு பேரும் எந்திரிக்கிறாங்க.

பல் விளக்கி ரெபிரஷ் ஆகிட்டு வராங்க.

அப்பா டீ போடப் போறாரு.

“அப்பா நா டீ போட்டு, தக்காளி தொக்கு வெச்சி, தோசையும் சுட்டு வெச்சிட்டேன்”

“சூப்பர். கொடு கொடு டீயக் கொடு”

“அதான் ஒன்பது மணி ஆச்சே காலைல தோசை சாப்பிட்டுக்கிட்டே டீ குடிக்கலாம்”

“முதல்ல டீ கொடு”

‘அதான் சொல்றால்ல நம்ம பொண்ணு” என்றொரு குரலாக சம்ருதாவின் அம்மா குரல் கூட்டது.

மூவரும் வரிசையாக தரையில் அமர்ந்து கொண்டார்கள்.

தோசையை தக்காளி தொக்கில் தேய்த்து ஒரு வாய், டீயில் ஒரு சிப் என்று மாற்றி மாற்றி குடித்தார்கள்.

“ரொம்ப சுவையா இருந்திச்சி சம்ருதா” இது அப்பா.

“ காலைல இப்படி டிபன் ரெடியா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கு. நா சின்ன வயசுல இப்படி எங்க அம்மா கையால வாங்கி சாப்பிட்டது”

“அப்புறம்”

“அப்புறம் நான் தான் சமைச்சிகிட்டே இருக்கேன். நம்ம சமைச்சத நாமே சாப்பிடுறது எரிச்சலா இருக்கும் சம்ருதா”

“ஆமாம்மா நானும் இன்னைக்கு அத ஃபீல் செய்தேன்”

“ம்ம்ம்...நைஸ் ஆஃப் யூ செல்லம். சரி ரொம்ப செண்டிமெண்ட்டா போகுதே.” இது அம்மா.

“செண்டிமெண்ட் நல்லது” இது அப்பா.

“சரி நான் இப்போ ஒரு வேலை சொல்றேன். சம்ருதா எல்லா தோசையும் ஒரே வட்டமாத்தான் சுட்டா. அப்போ அந்த தோசையோட தடிமன் Thickness என்னது. நாம எல்லோரும் கண்டுபிடிப்போம். நேரம் இப்போ தொடங்குது”

”அடிப்படை ஐடியா என்ன. எப்படி கண்டுபிடிக்கிறது”

“அப்பா தோசைக் கரண்டிலதான மாவு இருக்கு. தோசைக்கரண்டில இருக்கிற மாவுதான தோசையா வட்டமா விரியுது. அப்போ தோசைக்கரண்டி மாவு Volume வந்து விரிஞ்ச தோசையோட Volume. இதுதான் அடிப்படை ஐடியா”

“ஆமா புரியுது”

“நாம் தோசை ஊத்தின கரண்டி மாவோட Volume
முதல்ல கண்டுபிடிக்கனும்.”

“ஐயோ தோசை ஊத்தின கரண்டி என்ன வடிமன்னே தெரியலையே. நான் போய் கழுவி பாக்குறேன்” இது அப்பா

“சரி”

“யம்மா இது Hemisphere வடிவம்மா.. ஒரு பந்த ரெண்டா வெட்டினா வர்ற வடிவம்”

“இருங்கப்பா நான் இதோட Diameter அளக்குறேன். அப்பா இது 6 செ.மீ வருது. அப்போ Radius என்னது 3 செ.மீ”

”Volume of Hemisphere என்னதுமா”

" அது 2/3 Π r^3 " இது அம்மா.

” அப்போ நான் கரண்டியோட Volume Calculate பண்றேன்”

“அப்பா வேணாம் அது 2/3 Π 3^3 அப்படியே இருக்கட்டும்.  Radius க்கு பதிலா கரண்டியோட ரேடியஸ்ல் மூணப்போட்டு அப்படியே இருக்கட்டும் பா”

“ஏன்மா”

“இருக்கட்டும் நா சொல்றேன்”

“அடுத்து என்ன பண்ணனும்”

”தோசைக்கரண்டில உள்ள தோசை மாவு வால்யூம் கண்டுபிடிச்சாச்சி. அடுத்தது விரிச்ச வட்ட வடிவ தோசை வால்யூம் கண்டுபிடிக்கனும். தோசையோட விட்டத்த அளக்கனும்”

”அது எப்படி”

“தோசைக் கல்லுல நான் தோசை விட்ட தடம் இருக்கும்”

”சரி.. ஆங்க் 16 செ.மீ வருதும்மா”

“அப்ப Radius 8 செ.மீ “

“அப்ப தோசையோட Volume ஃபார்முலா”

“ அது உருளை, சிலிண்டர் வடிவம். Π r^2 h” இது அம்மா.

“அது எப்படி சரியா சொல்ற” இது அப்பா.

”உருளைங்கிறது என்னது. நிறைய வட்ட்அ பிளேட்ட அடுக்கி வெச்சா அதுதான் உருளை. ஒரு வட்ட பிளேட்டோட ஏரியா என்னது Π r^2. அப்போ வட்ட பிளேட்களான Π r^2 வ h உயரத்துக்கு அடுக்கி வெச்சா அதுதான் உருளையோட வால்யூம். அதான் Π r^2 h”

“ஆமா அப்போ தோசையோட தடிமன் கண்டுபிடிக்கனுமா நாம Π r^2 h ல உள்ள h கண்டுபிடிக்கனும்” இது அப்பா.

“தோசையோட ஃபார்முலாவுல தோசை ரெடியஸ் 8 செமீய போடலாம் “ இது சம்ருதா.

“அப்ப அது Π 8^2 h இன்னு வருது”

“ தோசைக் கரண்டியோட Volume = தோசையோட Volume" இதுஅப்பா
“அப்போ 2/3 Π 3^3  = Π 8^2 h . ஒஹோ அப்ப பைக்கும் பைக்கும் வெட்டு கொடுத்திரலாம். ஒஹோ இதுக்குதான் நீ 2/3 Π 3^3 அப்படியே வெச்சிருக்க சொன்னியா”

“ஆமாப்பா அப்படி வெச்சா பைக்கும் பைக்கும் வெட்டு கொடுத்திருலாம்”

“இப்ப என்ன மிச்சமிருக்கு”

“இப்ப இது 2  x 3^2  = 8^2 h" ஆகிரும்.

“என்னம்மா 2/3 x 3^3 எப்படி  2  x 3^2  ஆகிச்சி”

“யப்பா 2/3 இருக்கிற 3 ம்... 3^3 ஒரு 3 ம் போய் அது 2  x 3^2 ஆகிரும்தானே”

“ஒஹ் புரியுது புரியுது அப்ப h = 18 /64"

"அது வந்து 0.28 செ.மீ அதாவது 0.30 செ.மீ”

“தோசையோட திக்னஸ் 0.3 செ.மீ” இது அம்மா

“அதாவது 3 மில்லி மீட்டர்தான் நான் சுட்ட தோசையோட தடிமன். ஹேய் கண்டுபிடிச்சிட்டோம்.”

”நாம குடும்பத்தோட காலைல ஒரு கணித இன்பத்த அனுபவிச்சோம்.” இது அப்பா.

”அப்பா அரைமணி நேரம் பிறகு ஒரு சார்ட் வாங்கிட்டு வந்து இத எழுதி ஒரு பிரசெண்டேசன் ரெடி பண்ணப் போறேன். நாளைக்கு மேத்ஸ் மிஸ்கிட்ட கேட்டுட்டு 5 நிமிசம் செமினார் கொடுக்கப் போறேன்” இது சம்ருதா.

“தோசை சுடுறதுல கூட சம்ருதா கணக்கு கத்துக்கிறான்னு உனக்கு தம்பட்டம் அடிக்கனும் அப்படித்தான” அப்பா கண்ணடித்தார்.

“அமா எனக்கு தெரிஞ்சத ஊரெல்லாம் சொல்லி பெருமைப்படுறதுக்காதன் வாழ்க்கையே” சம்ருதா சொல்லிட்டு அப்பாவ பாத்து கண்ணடிக்கிறா.“

நன்றி விஜய் சார்...

Wednesday, March 07, 2018

கதை பேசுதல்...

*கதை பேசுதல் - விழியன்*

குழந்தைகளுக்கு கதை சொல்லு கதை சொல்லு என்கின்றோம். நாம் குழந்தைகளுக்கு கதை சொல்கிறோம். அது என்ன கதையாகவும் இருக்கலாம், ஆனால் அந்தக் கதை குழந்தைகளிடம் என்ன செய்துவிடும், என்ன கொடுத்துவிடும்? கதையின் முடிவில் நாம் கூறும் நீதி போதனை அல்லது கருத்து தான் குழந்தைகளின் மனதில் தங்கும், அதற்கு நேரடியாகவே கருத்தினை மட்டும் கூறிவிட்டு போய்விடலாமே, நேர விரையம் தானே எனலாம். குழந்தைகளுக்கு அந்த கருத்து மட்டும் செல்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.

காகம் வடை திருடிய கதையினைக் கேட்டு வளராத குழந்தைகளே இருக்க முடியாது. எத்தனை தலைமுறையினர் இந்தக் கதையினை கேட்டு வளர்ந்தனர் என்ற வரலாறு நம்மிடையே இல்லை. பல்வேறு விதமாக இந்த கதை கூறப்படுகின்றது, ஆனால் சாரம் ஒன்று தான்.

“ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாங்க. ஒரு நாள் அவங்க வடை சுட்டாங்க. அங்க வந்த காக்கா, பாட்டியை ஏமாற்றி ஒரு வடையை எடுத்துகிட்டு போயிடுச்சு. வாயில வடையோட ஒரு மரத்துமேல உட்காந்துச்சு. அந்த பக்கமா வந்த நரி காக்காவை பாடச்சொல்லி கேட்டுச்சாம். இந்த தந்திரம் தெரியாத காக்கா ‘கா..கா..கா’ன்னு கரைய, வாயில இருந்த வடை கீழே விழுந்துச்சாம். அந்த வடையை லபக்குன்னு பிடிச்சிகிட்டு நரி ஓடிபோயிடுச்சாம்”

இது வேறு வேறு சின்ன சின்ன மாற்றங்களுடன் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப‌ தன் மொழியில் வட்டார வழக்குகளுக்கு ஏற்ப சொல்லப்படுவதுண்டு. காக்கா வடையை வாயில் வைத்து பாடியதாகவும், கீழே விழுந்த வடையை பாட்டி பிடிப்பதாகவும், நரியை விரட்டி வடையை பாட்டி கைபற்றுவதாகவும், மேலும் சிலபல பிற்சேர்க்கையுடன் கதை சொல்லப்படுகின்றது. பொரியவர்களாகிய நாம் என்ன நினைக்கிறோம்? கதையின் நீதி “ஏமாற்றினால் ஏமாறுவாய்”. ஆனால் கதை அதனை மட்டும் கடத்தவில்லை.

பாட்டியானவள் குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானவள். காகமும் குழந்தையை சந்திக்கும் முதல் பறவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அனேகமாக சந்திக்கும் முதல் உயிரினம் காகமே. காகம் காட்டி சோறு ஊட்டாத தாயே இருக்க முடியாது. இப்ப மாறி இருக்கலாம். இரண்டு கதாபாத்திரங்களும் மிக எளிதாக மனதினில் கொண்டுவந்துவிடுவார்கள். பிரியமான பாட்டி எப்போதும் பேரன் பேத்திகளுக்கு பலகாரம் செய்வாள். பாட்டியும் வடை சுடுகின்றாள். ஆக, காட்சிகளை மிக எளிதினில் விரிந்துவிடும்.

எந்த விஷயமும் குழந்தைகளிடம் படங்களாகவே நினைவில் பதிவாகும். நம் விவரிப்புகளை அவர்கள் மனதில் காட்சிகளாக
மாற்றிவிடுவார்கள். இது தான் கதையின் முக்கிய சிறப்பம்சம். ‘பாட்டி வடை சுட்டாள்” என்ற வாக்கியத்தை பாட்டி என்ற இடத்தில் மிகவும் பிடித்த பாட்டியின் முகத்தை பொருத்திக்கொள்வார்கள். தான் பார்த்த சமையலறையில் ஒன்றினில் பாட்டி வடை சுடுவதாகவோ, தாழ்வாரத்தில் அமர்ந்து சுடுவதாகவோ, வாசலில் அடுப்பு வைத்து சுடுவதாகவோ அவரவர் வயதிற்கு ஏற்றார் போல, அனுபவங்களுக்கு ஏற்றார் போல கற்பனை செய்வார்கள். வயதிற்கு ஏற்ப‌ அந்த காட்சியின் விவரங்கள் அதிகரிக்கும். வடை சுடும் பாத்திரத்தின் அளவு, எவ்வளவு பெரிய வடை, பாட்டியின் ஆடை, பாட்டியின் வயது, கேஸிலா, அடுப்பிலா, ஸ்டவ்விலா என்ற விவரங்கள் மாறுபடும்.

இப்படியாக காட்சிக்கு காட்சி அவர்களின் கற்பனையை செழிக்க வைக்கும். காகம் வடையை எடுக்கும் காட்சி, வடையை காகம் வைத்திருக்கும் காட்சி, மரத்தில் அமர்ந்திருக்கும் காட்சி, வடை கீழே விழ நரி பிடிக்கும் காட்சி என பல காட்சிகள் இந்த சின்ன கதையின் மூலமே கிடைக்கும். முக்கியமாக ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே நடப்பவைகளை தன் கற்பனைக்கு ஏற்றவாறு குழந்தைகள் நிரப்பிக்கொள்வார்கள். இதுவும் அவர்களின் கற்பனைவளத்தினை அதிகரிக்கும்.

இந்த கற்பனைவளமும் திறனும் தான் உலகின் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம். அடிநாதம். இந்தியாவில் நடைபெறும் ஒரு ஆப்பரேஷனை அமெரிக்காவில் இருந்து கண்கானித்து ஆலோசனை வழங்க இன்று முடியும். நேரடி காட்சிகள் நேரடி ஆலோசனைகள் சாத்தியம். இதனை என்றோ யாரோ கற்பனை செய்துபார்த்திருக்க வேண்டும், தன் சிறுமுயற்சிகளுடன் கற்பனையை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இருக்க வேண்டும். இன்று இது சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது. கற்பனைத்திறம் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் இருந்து நேக்கும் திறனையும் வளர்ப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திறன்கள் வளர கதைகள் உதவுகின்றது.

இவை மட்மல்ல, பொறுமையாக காதுகொடுத்து கேட்க, பேச, உரையாடல்கள் நிகழ்த்த, வரலாறுகளை தெரிந்துகொள்ள, இன்னும் ஏராளமான உலக ஞானம் பெற...இன்னும் இன்னும் என்னென்னவோ..

- விழியன்

நன்றி விழியன் ஜி...