Sunday, May 14, 2017

ஆல மரம்....கதை. சொல்லுது...

"ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.

ரொம்ப தூரத்தில இருந்து பறந்து வந்த குருவி ஒண்ணு, முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து, 'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சி கிடட்டுமா?' ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.

ஆனா அந்த மரம், 'அதெல்லாம் முடியாது'னு கண்டிஷனா சொல்லிருச்சு.

சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி. 'இடம்தானே.... தாராளமா இருந்துக்கோ!'னு
பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.

ஒரே மாசம்தான்...... ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த
தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு
போக ஆரம்பிச்சது. ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.

முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி,'அடுத்தவங்களுக்கு
உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.

ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா.....

'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு
எனக்குத்தெரியும்..... நீயும் என்னோட சேர்ந்து சாக
வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்... ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட
சந்தோஷமா நல்லா இருக்கணும்!'

இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி
உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"

நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும்
   உறவுகளும் உண்டு!

மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும்
பெற்றோர்களும்;
மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!

சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!!!

No comments: