Saturday, March 04, 2017

ஆணவம்- ஒரு நிமிட கதை...

தங்க மீனின் ஆணவம்

🐠 ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்து வந்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன. தங்க மீன் தான்தான் அழகு என்று தலைக்கணம் கொண்டிருந்தது. அதனால் தன் நண்பனான கெளுத்தி மீனின் தோற்றத்தைக் கண்டு அடிக்கடி கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஒருநாள் தங்க மீன் மிகவும் மகிழ்ச்சியாக நீரில் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.

🐠 அப்போது அந்தப் பக்கம் கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு சந்தோஷம் அதிகமாகிவிட்டது. அந்த கெளுத்தி மீனிடம், தங்கமீன் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார். என் வசீகரத்தைப் பார் என்றது. உலகில் என்னைப் போன்ற அழகிய மீன் எங்கு இருக்க முடியும்? என்று பெருமை பேசியது. அதற்கு தங்க மீன், கெளுத்தி மீனே! இறைவன், உன்னை எவ்வளவு அவலட்சணமாக, கறுமை நிறத்தில் சொரசொரப்பாகப் படைத்திருக்கிறான் பார் என்று கெளுத்தி மீன் வேதனைப் படும்படி கேலி பேசியது.

🐠 அதற்கு கெளுத்தி மீன், தங்க மீனே! உன்னை அழகாகப் படைத்ததற்கும், என்னை அவலட்சணமாகப் படைத்ததற்கும் ஏதேனும் ஒரு வலுவான காரணம் நிச்சயம் இருக்கும் என்றது. மேலும் நான் ஒரு நாளும் என்னுடையத் தோற்றம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி கவலைப்பட்டதில்லை. எனக்கு இந்த உடலமைப்பே போதும் என்று கூறியது. அதற்கு தங்கமீன், சரி..சரி.. உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதால் என் மகிழ்ச்சி கெடுகிறது.

🐠 நான் வருகிறேன்! என்று சொல்லிவிட்டு மீண்டும் துள்ளிக் குதித்துக்கொண்டே நீரின் மேற்பரப்புக்குச் சென்றது. திடீரென்று, தங்க மீன் ஒரு கொக்கின் அலகில் சிக்கிக் கொண்டது. ஐயோ! கொக்கு! என்று அலறியது தங்க மீன். தங்க மீன் கொக்கிடம், என்னை விட்டுவிடு! என்று கேட்டது. அதற்கு கொக்கு, என் வாழ்நாளில் உன்னைப் போன்ற அழகிய மினுமினுப்பான மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின் ஆழத்திலேயே எவ்வளவு அழகாக ஜொலிக்கிறாய் என்றது.

🐠 அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கெளுத்தி மீன், தங்க மீனைப் பார்த்து, தங்க நிற மினுமினுப்பால் தலைக்கணம் பிடித்துத் திரிந்தாயே! உன்னுடைய மினுமினுப்பே இப்போது உன் உயிருக்கு ஆபத்தாகி விட்டது பார்த்தாயா?. ஆனால் என்னுடைய அவலட்சணமான கருமை நிறம், கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க வைத்துவிட்டது என்று சொல்லிவிட்டு, குளத்தின் ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.

🐠 மீண்டும் தங்க மீன் கொக்கிடம், என்னை விட்டுவிடு! என்னை விட்டுவிடு! என்று சொல்லிக் கதறித் துடித்தது. ஆனால் கொக்கு, உன்னை விடமாட்டேன். இன்று நீ எனக்கு அற்புதமான விருந்து என்று கூறிக்கொண்டே கொத்தித் தின்றது.

நீதி : ஆணவம் ஆபத்தைக் கொடுக்கும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நீதிக் கதை