Thursday, January 12, 2017

நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம் ....

நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்

மனிதனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று சக்கரம். இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மனிதன் கால்நடையிலிருந்து வாகனத்திற்கு தாவினான். இன்றைக்கு இருக்கும் சாதாரண பைக்குகள்,கார்கள் முதல் ரோடு ரெயில்கள் என்று சொல்லப்படும் 30 க்கும் மேற்பட்ட சக்கரங்களை கொண்ட பிரமாண்டமான சுமை இழுக்கும் லாரிகள் வரை ரப்பர் கொண்டு உருவாக்கப்பட்ட டயர்கள் தான் வாகனத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட வைக்கின்றன. இந்த டயர்களின் உள்புறத்தில் காற்று அடைக்கப்பட்ட டியூப்கள் இருக்கின்றன. என்ன தான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்து விட்டாலும் கூட இன்றும் சொகுசான பயணத்திற்கு ட்யூப் பொருத்தப்பட்ட டயர்கள் தான் பொருத்தமானதாக கருதப்படுகின்றன.

இந்த ட்யூப்களில் வழக்கமாக சாதாரண காற்று தான் அடைக்கப்படுகிறது. கம்ப்ரசர்களின் மூலம் சுற்றுப்புற காற்று பிடிக்கப்பட்டு டயர்களில் நிரப்பப்படுகிறது. பல லட்சங்கள் கொடுத்து கார்கள் வாங்கினாலும் பத்து ரூபாய்க்கு காற்று நிரப்பாவிட்டால் கார் இம்மியளவு கூட நகராது. ஆனால் இப்படி நிரப்பப்படும் சாதாரண காற்றை வாகனங்களுக்கு பயன்படுத்துவது பொருத்தமானது தானா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. காரணம், இந்த சாதாரண காற்று (ஆக்சிஜன்) வாகனங்கள் இயங்கும் போது, ஓடும் போது கடுமையாக சூடாகி விடுகின்றன. இப்படி வெப்பமடையும் போது இந்த காற்று டயர்களில் உள்ள நுண்துளைகளில் வழியே மிகமிக மெதுவாக வெளியேறிக் கொண்டே இருக்கிறது.
வாகனத்தை நாம் புதிதாக வாங்கும் போதே டயர்களின் ஏர் பிரஷர் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நாம் என்ன தான் அவர்கள் சொல்லிய அளவில் காற்றை நிரப்பி வைத்தாலும், மேலே சொன்ன காரணப்படி டயரிலிருந்து காற்று வெளியேறி விடுவதால் வாகனத்தின் தயாரிப்பாளர்கள் சொன்ன 'ஏர் பிரஷர்' எப்போதும் டயர்களில் இருப்பதில்லை. வாகனத்தயரிப்பாளர் கூறிய படி போதிய காற்று டயர்களில் இருக்கும் பட்சத்தில் தான் வாகனம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பனிச்சறுக்கில் சறுக்குவது போல் எளிதாக ஓடும். பஞ்சர் ஆன வாகனத்தை சிறிது தூரம் கூட நகர்த்த முடியாது. அதாவது ட்யூப்பில் முழுமையாக காற்று இல்லாத பட்சத்தில் வாகனம் இம்மி கூட நகருவதில்லை.

அது போல் வாகனத்தயாரிப்பாளர் சொல்லியபடி காற்று இல்லாமல் குறைவாக இருக்கும் நிலையில் வாகனத்தின் இயங்கு நிலை எங்கோ ஒரு இடத்தில் குறைந்து போகின்றது என்று தானே அர்த்தம்.
ட்யூபில் மிகமிக குறைந்த அளவு காற்று குறைபாடு ஏற்படும் போது இந்த இயங்கு குறைபாடு நமக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆனால் ஆணித்தரமாக சொல்லப் போனால் இந்த காற்று குறைபாடு வாகனத்தின் ஏதோ ஒரு உந்துசக்தியை எங்கிருந்தோ குறைக்கிறது என்று தான் பொருள். இப்படி கூடுதலாக தேவைப்படும் உந்து சக்தியை பெற, வாகனத்தின் எரிபொருள் அதிகமாக செலவழிக்கப்படுகிறது. இதனால் எரிபொருள் நமக்கே தெரியாமல் வீணாக செலவழிக்கப்படுகிறது. இப்படி காற்று குறைவான டயரால் இது மட்டுமா பாதிப்பு?

டயரின் பட்டன் வேகமாக தேய்கிறது. காற்று குறைவான டயர்களால் வாகனம் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதிகமான இழுவைத்திறன் என்ஜினுக்கு போகும் போது என்ஜினின் ஆயுள்காலமும் குறைகிறது. மேலும் இதனுடன் தொடர்புடைய பல்வேறு உதிரிபாகங்களும் தேய்வடைந்து விரைவில் பழுதாகிவிடுகின்றன.

பொதுவாக வண்டி ஓடும் போது டயர்கள் படுபயங்கர வெப்பமடையும். இந்த வெப்பம் ட்யூப்களில் நிரப்பப்பட்டிருக்கும் காற்றில் உள்ள காற்று அணுக்களில் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். டயரின் வெப்பம் டயரை தாண்டி ட்யூயை நெருங்கும் போது ட்யூப்பில் இருக்கும் காற்று அணுக்கள் வெப்பத்தால் விரிவடைகின்றன.இதனால் மேலும் அந்த அணுக்கள் சூடாகிவிடுகின்றன. நீண்ட தூரம் ஓட்டி வந்து நிறுத்தப்பட்ட காரின் டயர்களை தொட்டு பார்க்கவே முடியாது. அந்த அளவு சூடாக இருக்கும்.இதற்கு காரணம் காற்று அணுக்கள் சூடாகி இருப்பது தான்.

இப்படி அணுக்கள் சூடாகி விரிவடையும் போது ஒரு கட்டத்திற்கு மேல் இவை விரிவடைய முடியாமல் வெடித்து சிதறுகின்றன. அதாவது ட்யூப் காற்றின் அழுத்தத்தை தாங்க முடியாமல் வெடித்து விடுகிறது. ஆளில்லாத இடங்களில் இப்படி நடந்தால் நமது பயணம் குலைந்து எரிச்சலை ஏற்படுத்தி விடும். டயர் பஞ்சர் பார்க்கும் நபர்களை அழைத்து வந்து சரி செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.

ஆக...இந்த பிரச்சனைகள் எல்லாம் நமது வாகனத்திற்கு வராமல் இருக்க வேண்டும் என்றால், வாகனத்தின் டயர்களில் நிரப்பப்படும் காற்று எளிதாக வெப்பத்தினால் ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகாத ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி நிரப்பப்படும் காற்றின் அணுக்கள் டயரில் ஏற்படும் வெப்பத்தை ஈர்த்து சூடடையக் கூடாது. எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் தீர்வு.

இப்படி ஒரு காற்று தான் தற்போது வாகனங்களுக்கு நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை,பெங்களுரு உள்ளிட்ட நகரங்களில் இந்த காற்று பரவலாக நிரப்பப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற நகரங்களில் இது பற்றி அவ்வளவாக தெரியவில்லை. 'நைட்ரஜன் ஏர்' என்று கூறப்படும் இந்த காற்றின் அனுகூலங்களை பார்க்கலாம். நைட்ரஜனின் இயல்பு குளிர்ச்சியாக இருப்பது. இது எங்கு இருக்கிறதோ அந்த இடத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதை வைத்து கீழே உள்ள பயன்களை படியுங்கள்.

1.சாதாரணமாக ட்யூப்பில் அடைக்கப்படும் பிராணவாயுவான காற்று ட்யூப்பிலிருந்து நுண்துளை வழியாக கசிந்து கணக்கிட இயலாத வகையில் மிகமிக நுண்ணிய அளவில் வெளியேறிக் கொண்டே இருக்கும். காரணம் இந்த பிராணவாயுவான ஆக்சிஜன் அணுவானது மிக மிக சிறிய அணுவால் ஆனது. அதனால் ட்யூபின் நுண்ணிய துளை வழியே வெளியேறும் தன்மை கொண்டது. ஆனால் நைட்ரஜன் அணுக்களுக்கு இந்த தன்மை கிடையாது. காரணம், நைட்ரஜன் அணு அளவில் பெரியது. அதனால் நைட்ரஜன் ட்யூப்பிலிருந்து கசிந்து வெளியேறுவதில்லை. இதனால் ட்யூபில் ஒரு முறை நிரப்பப்பட்ட காற்று பல மாதங்களுக்கு அப்படியே சீரான அளவில் ட்யூபில் இருந்து கொண்டே இருக்கும்.
2.நைட்ரஜன் அணுவானது சுற்றுப்புற வெப்பத்தை ஈர்த்துக் கொள்வதில்லை. இந்த தன்மையால், ட்யூப்பில் நிரப்பப்படும் நைட்ரஜன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் டயர்கள் வெப்பமடையாது. வெப்பமடையாத காரணத்தால் டயர்கள் தேய்வதில்லை. இதனால் தேவையில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே டயர்,ட்யூப்களை மாற்ற வேண்டிய அவசியம் வராது. டயர்,ட்யூப் மற்றும் என்ஜனின் ஆயுள்காலம் அதிகரிக்கும்.
3.சாதாரண காற்றில் எப்போதும் கண்ணுக்கு தெரியாத அளவிலும் உணரமுடியாத வகையிலும் சற்று ஈரப்பதம் இருக்கும். இந்த ஈரப்பதமானது டயரின் ஓரத்தில், அதாவது டயரின் ஓரங்களை இணைத்திருக்கும் ஒரு வட்ட வடிவமான இரும்புக்கம்பியை மெல்ல மெல்ல அரித்து விடும். ஆனால் நைட்ரஜன் காற்றில் ஈரப்பதம் கிடையாது. இதனால் டயரின் இணைப்பான கம்பி வளையம் எந்த சேதமும் அடையாமல் டயரை பாதுகாக்கும்.
4.நைட்ரஜன் ட்யூப்பை விட்டு வெளியேறாத காரணத்தால் வாகனம் எப்போதும் துல்லியமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் மைலேஜீம் நன்றாக கிடைக்கும். என்ஜின் சுமை இல்லாமல் இயல்பான திறனுடன் இயங்கும்.
5.நல்ல வேகத்தில் சாதாரண காற்று நிரப்பப்பட்ட டயர் வெடிக்கும் போது, வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தறி கெட்டு ஓடி எங்காவது முட்டிக் கொண்டு நிற்கும். அதாவது சாதாரண பிராணவாயுவின் அணுக்கள் மிகுந்த சூட்டை அடைந்திருக்கும் நிலையில் அது வெடிக்கும் போது பலத்த வீரியத்துடன் நாலாபக்கத்திலும் சிதறும். ஆனால் நைட்ரஜன் வாயுவுக்கு அந்த அளவு அழுத்தம் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் ட்யூப் வெடித்தால் கூட வாகனம் தறிகெட்டு ஓடாது. அங்கேயே நின்று விடும்.
6.சாதாரண காற்று நிரப்பட்ட வாகனத்தை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட்டும் போது வண்டியின் டயர்கள் படுபயங்கரமான சூட்டை அடையும்.சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்பி செல்லும் போது எங்காவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்துவார்கள். நீங்கள் அந்த பஸ்ஸின் டயரை தொட்டுப்பாருங்கள். இரும்பு உலையில் கைவத்தது போல் இருக்கும்.
7.ஆனால் நைட்ரஜன் நிரப்பப்பட்ட வாகனத்தில் டயர்கள் எவ்வளவு தூரம் ஓடினாலும் பெரிய அளவு சூடு இருக்காது.
நைட்ரஜன் வாயுவால் என்ன வகையான சேமிப்பு கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு செய்துள்ளார்கள். இதோ....
•நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட வாகனம் சாதாரண ஆக்சிஜன் வாயு நிரப்பபட்ட டயர் உடைய வாகனத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு எளிதாக பஞ்சர் ஆவதில்லை. அதாவது நைட்ரஜன் வாயு நிரப்பப்படும் போது வாகனம் பஞ்சர் ஆவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைந்து விடுகிறது.
•நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட வாகனத்தில் 5 முதல் 6 சதவீதம் எரிபொருள் சேமிப்பு கிடைக்கிறது.
•ஆக....இந்தியாவில் ஓடும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அனைத்திலும் நைட்ரஜன் காற்றை நிரப்பி தான் ஓட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் டயர்,ட்யூப் மற்றும் இயந்திர உதிரிபாகங்களின் அனாவசியமான தேய்மானம் குறைந்து இயற்கையை பாதுகாக்கலாம். டயர்கள், ட்யூப்களுக்காக அதிக அளவு ரப்பர் இறக்குமதி செய்யப்படுவது குறைக்கப்படும். எரிபொருள் வீணாக செலவாகாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
•இதில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

இந்தியா முழுவதும் ஓடும் வாகனங்களில் சரியான அளவில் டயர்களில் காற்று நிரப்பப்படாமல் ஓட்டப்படுவதால், நாளொன்றுக்கு நாட்டில் ஓடும் வாகனங்களால் 2 லட்சம் லிட்டர் அளவுக்கு எரிபொருள்களான டீசல், பெட்ரோல் வீணாகிறதாம். 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை வைத்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த அளவு இழப்பு சாதாரண காற்றை வாகனத்தில் சரியான அளவில் வைக்காததால் ஏற்படுகிறது. இது எவ்வளவு பெரிய இழப்பு?

இன்றே உங்கள் வாகனத்திற்கு நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்.இயற்கையை காப்பாற்றுவோம். கூடவே நமது வாகனத்தையும் நம்மையும்!

மக்கள் நலன் கருதி...

2 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பயனுள்ளப் பகிர்விற்கு நன்றி. நைட்ரஜன் வாயுவைக் காரில் பயன்படுத்தினாலும் அதைப்பற்றி எழுதவேண்டும் என்று தென்றலில்.
பாராட்டுகள் சகோ

ஊ.ஒ.ந.பள்ளி காவிரிப்பூம்பட்டினம் மீனவர் said...

Good article