Sunday, April 05, 2015

வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'

- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்

குள.சண்முகசுந்தரம்

தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்
தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்
“இன்னும் பத்து ஆண்டுக்குள் இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைந்தது ஐம்பது அரசு ஊழியர்களையும் உருவாக்கிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் தாமரைச்செல்வன்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது சித்தாதிக்காடு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன். 15 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளிக் குழந்தைகளைப் போல இந்தப் பள்ளிக் குழந்தைகளையும் சீருடை, டை அணிந்து மிடுக்காக நடக்கவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை தந்தவர்.
பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட பெற்றோருக்கு நேரமும் இருக்காது; ஞாபகமும் வராது. இதனால் தனது பள்ளிக் குழந்தை களின் பிறந்த நாளுக்கு தனது செலவிலேயே கேக் வாங்கி வந்து குழந்தைகள் மத்தியில் அதை வெட்டவைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார் தாமரைச்செல்வன். இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா - இதெல்லாம் இந்தக் காலத்து பள்ளிக் குழந்தைகளுக்கு கனவாகிவிட்ட நிலையில் தாமரைச்செல்வனின் செலவில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு தவறாமல் சுற்றுலா போகிறார்கள்.
“இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுல இருப்பவங்க. பெத்தவங்கள கேட்டால் ‘ஆடி மாசம் பொறந்தான்’னு தான் சொல்லுவாங்க. இந்த நிலைமையை மாத்தி, பிள்ளைகளின் பிறந்த நாளை அனைத்துப் பெற்றோருக்கும் தெரியவெச்சேன். ஒருவாரம் முன்னாடியே பிறந்த நாள் தேதியை பெத்தவங்களுக்கு தெரிவிச்சிருவோம். ஆரம்பத்துல கேக் மாத்திரமில்லாமல் புத்தாடையும் நானே எடுத்துக் குடுத்தேன். இப்ப, ஒன்றிரண்டு பேர் தவிர மத்தவங்க புத்தாடை எடுத்துடுறாங்க. கேக், சாக்லேட் மட்டும்தான் நம்ம செலவு. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல நாட்டம் வந்தாதான் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க. அதுக்காகத்தான் இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை செய்யுறோம். வீட்டில் நம்ம பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட மாட்டோமா? அப்படித்தான் நினைச்சுக்குவேன்.
வறுமையில இருந்தாலும் சில குடும்பங்களை குடி சீரழிக்குது. அதனாலேயே பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வெக்க முடியாம திண்டாடுறாங்க. இன்னும் சிலருக்கு இயல்பாகவே வறுமை காரணமா படிப்பை தொடர முடியாம போயிடுது. அப்படி பாதியில் படிப்பை நிறுத்த வேண்டாம். மேலே படிக்க நான் உதவி செய்யுறேன்னு தைரியம் கொடுத்து பல பிள்ளைகளை கல்லூரி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.
மது அருந்தும் தகப்பன்களிடம், ‘நீ குடியை விடுறதா இருந்தா உன் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி அவங்கள குடியிலிருந்தும் மீட்க முயற்சிக் கிறேன். எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைச் சிருக்கு. இப்ப இந்த ஊருல மொத்தம் 187 பட்டதாரிகள் இருக்காங்க. ஆனா அரசு ஊழியர் ஒருத்தர்கூட இல்லை.
எஞ்சி இருக்கிற எனது பத்தாண்டு பணிக் காலத்துக் குள்ள இந்த ஊருல வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைஞ்சது 50 அரசு ஊழியர்களையும் உருவாக்கிக் காட்டுவேன். அதுக்காக விரைவில் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுறதுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் தாமரைச்செல்வன். 

நன்றி இந்து தமிழ் நாளிதழ்
 ஆசிரியர்களின்  புனிதம் கருதி......
 வாழ்த்துகளுடன்....
 சிவா....



No comments: