Thursday, April 16, 2015

குரு நானக் தேவ் 10

ராஜலட்சுமி சிவலிங்கம் 

 

குரு நானக் தேவ்
குரு நானக் தேவ்
 
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் (Guru Nanak Dev) அவதரித்த தினம் இன்று (ஏப்ரல் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ராய் போய் கீ தல்வண்டி (தற்போது நான்கானா சாஹிப்) என்ற கிராமத்தில் ஒரு இந்து குடும்பத்தில் (1469) பிறந்தவர். தந்தை அந்த ஊர் பண்ணையாரிடம் கணக்கராக வேலை பார்த்தார்.

l குழந்தையாக இருந்த போதே இவருக்கு ஆன்மிக நாட்டம் இருந்தது. படிப்பில் நாட்டம் இல்லை. சிறு வயதில் தந்தை இவரை மாடு மேய்க்க அனுப்புவார். அவற்றை மேய விட்டுவிட்டு இவர் தியானத்தில் அமர்ந்துவிடுவார். அந்த வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

l ஒருமுறை, தியானம் செய்துகொண்டிருந்த இவர் மீது வெயில் படாமல் இருக்க கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து குடைபோல நின்றிருந்ததை மக்கள் பார்த்து அதிசயித்தனர். இவர் சாதாரண பிள்ளை இல்லை என்று உணர்ந்தனர். பெற்றோரோ, ‘இவர் சாதாரண பிள்ளைகள்போல இல்லையே’ என்று வருந்தினர்.

l அக்கா கணவரின் சிபாரிசால் இவருக்கு அரசு வேலை கிடைத்தது. சிறிது காலம் பணியாற்றினார். ஆனால், தன் வாழ்வின் நோக்கம் இறையருளை மக்களுக்கு வழங்குவதுதான் என்பதை அறிந்தார். அந்த வேலையை விட்டும் குடும்பத்தை விட்டும் விலகினார். தொடர்ந்து தியானம் செய்தார். இவரது மகத்துவம் அறிந்து ஏராளமானோர் நாடி வந்தனர்.

l ஊர் ஊராகச் சென்றார். 1499-ல் திடீரென்று காணாமல் போனார். நதியில் மூழ்கிவிட்டதாக எண்ணினர். ஊரே கூடி நதியில் தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளில், எதுவுமே நடக்காததுபோல திரும்பி வந்தார். அன்று முதல் ஆன்மிக செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.

l ‘புரிந்துகொள்ள முடியாத, உருவமற்ற, அழிவில்லாத, அனைத்து மதங்களிலும் குறிப்பிடப்படும் இறைவன் ஒருவரே. அவர் நம் எல்லோரிடமும் வாசம் செய்கிறார்’ என்ற செய்தியைப் பரப்பினார்.

l சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மிக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கினார். நேர்மையாக வாழவேண்டும் என்றார். ‘குரு நானக்’ என அழைக்கப்பட்டார். சீக்கிய மதம் பிறந்தது.

l கிழக்கே வங்காளம், அசாம் வரை, தெற்கே இலங்கை வரை, வடக்கே காஷ்மீர், லடாக், திபெத் வரை, மேற்கே பாக்தாத், மெக்கா, மெதினா, அரேபிய தீபகற்பம் வரை என நான்கு நீண்ட நெடிய பயணங்களை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

l பெரும்பாலும் நடந்தே சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் இறைச் செய்தியைப் பரப்பினார். இவரது போதனைகள் அடங்கிய ‘குரு கிரந்த் சாஹிப்’, சீக்கியர்களின் புனித நூலாகத் திகழ்கிறது. இவை குர்முகி என்ற மொழியில் பதிவு செய்யப்பட்டன.

l இந்து - முஸ்லிம் பேதம் பாராட்டாதவர். இரண்டு பிரிவினரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற ஒப்புயர்வற்ற ஞானியாகத் திகழ்ந்த குரு நானக் 70 வயதில் (1539) இறைவனடி சேர்ந்தார்.


நன்றி தி இந்து தமிழ் நாளிதழ்
அன்புடன் சிவா...

No comments: