Sunday, September 22, 2024

கத்தி மேல் நடக்கும் ஆசிரியர்கள்...

இன்றைய சூழலில் ஆசிரியர் பணி என்பது கத்தி மேல் நடப்பது போலாகிவிட்டது. ஆகிவிட்டது என்பதை விட ஆக்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

வீட்டில் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான சுதந்திரமும் செல்லமும் தான் வெளி இடங்களிலும் பள்ளியிலும் தொடர்கிறது. இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு நல்லதை விட தீயதே எளிதில் கிடைக்கின்றது.

உதாரணமாக சமூக வலைதளங்களில் பாடம் சார்ந்த வீடியோக்களை விட ரீல்ஸ் என்ற பெயரில் சில தருதலைகள் செய்யும் மோசமான செயல்தான் குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. அப்படி அதை பார்க்கும் மாணவர்கள் தாமும் அதைப்போல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இது இந்த பருவத்தின் இயல்பு தான். 

அதை நல்வழியில் மடைமாற்றும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். எது சரி எது தவறு என்று மாணவர்களுக்கு புரியவைப்பதே இன்றைய சூழலில் ஆசிரியர்களின் முதன்மை பணியாக உள்ளது. ஆனால் வகுப்பறை சூழலோ ஆன்லைன் பதிவேடுகளுடனே கடந்து போகவைக்கின்றது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் மாணவர்களால் நாளை எந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள முடியும். சிறு தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை, கண்டிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆசிரியர்களும் கேட்கமுடியவில்லை, ஏன் பெற்றோர்களாலே முடியவில்லை. அப்படி எனில் அவர்களுக்கு யார்தான் எடுத்துக்கூறுவது.

தற்போது அரசுப்பள்ளிகள் அனைத்தும் அளப்பரிய அளவில் உயர்ந்த இடத்தை நோக்கிச்சென்றுகொண்டு இருக்கின்றன. வண்ணம் பார்த்து ஆண்டுகள் பல ஆன பள்ளிகள் அனைத்தும் இன்று வண்ணமயமாக ஜொலித்துக்கொண்டு இருக்கின்றன.

செல்போன் சிக்னலே வராத ஊரில் உள்ள பள்ளிகளில் கூட 24-மணி நேர இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. வாசிப்பை ஊக்குவிக்க அட்டகாசமான நூலகங்கள் உள்ளன. வறுமையால் கல்வி தடைபடாமல் இருக்க அரசின் எண்ணற்ற நலத்திட்டங்கள் இருக்கின்றன.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியையும் பெருமையையும். இப்படியான சூழலில் தான் இப்போது தொடர்ச்சியாக இதுபோன்று அரசுப்பள்ளிகளை பற்றியும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பற்றியும் எதிர்மறையான செய்திகள் வந்துகொண்டு மக்கள் மனதில் கலக்கத்தை உண்டாக்கிக்கொண்டு இருக்கின்றன.

ஆசிரியர் மாணவர் உறவு எங்கு வலுவாக சிறப்பாக உள்ளதோ அங்கு கற்றல் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். ஆனால் இன்று அந்த உறவோ ஏதோ எதிரியை பார்ப்பது போல் ஆக்கிவிட்டது இன்றைய காலச்சூழல். ஒரு பள்ளியில் தான் எத்தனை பிரச்சனைகள், சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சனை, ஏற்றத்தாழ்வு, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனையையும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டும் மாற்ற முடியும் என்று எண்ணினால் அதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் எதுவும் இல்லை.

ஆசிரியர்களும் கற்பித்தல் என்பது வகுப்பறையோடு முடிந்துவிட்டது என்று எண்ணுகிறோம். அது தவறு. கற்பித்தல் என்பது வகுப்பறையை தாண்டி அந்த மாணவனை பற்றி முழுமையாக கற்றுக்கொள்வதில் தொடங்குகின்றது. எத்தனை ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் பெற்றோர்களுடன் உரையாடுகிறோம். மிக மிக குறைவே. 

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இந்த மூன்றும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். ஆனால் இன்று அனைத்தும் ஆசிரியர்கள் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது. 

இதுபோல பிரச்சனைகளை நாம் அனைவரும் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அரசுப்பள்ளிகளையே நம்பி இருக்கும் பெற்றோர்களின் மனநிலையில் இருந்தும், எப்படியாவது தன்னிடம் படிக்கும் மாணவன் உயர்ந்த இடத்திற்கு வந்துவிட மாட்டானா என நினைக்கும் ஆசிரியர்கள் இடத்தில் இருந்தும் பார்த்தால் தான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

தயவு செய்து அரசும் சமூகமும் மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த செயல்களையும் ஆசிரியகள் மேல்மட்டும் சுமத்தி தற்காலிக தீர்வை தருவதை விட்டு இதற்கு நிரத்தர முற்றுப்புள்ளியை வைத்து மீண்டும் இதுபோல் எங்கும் நடக்காதவாறு மிகச்சிறந்த செயல்திட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

ஞா.செல்வகுமார் இ.நி.ஆசிரியர் 
அரசுப்பள்ளி மாணவன். அரசுப்பள்ளி ஆசிரியர்.
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.

நன்றி
பகிர்வு பதிவு

No comments: