பிள்ளைகளுக்கு புத்தகத்தை ஃப்ரெண்டாக்க...
‘பாடப் புத்தகங்களைப் படிக்க வைக்கவே பெரும்பாடாக இருக்கு. இதுல கதை புத்தகத்தை எப்படி படிக்க வைக்கிறது?’ என்ற கேள்வியைக் கேட்காத பெற்றோர்களே அதிகம். அவர்களில் நீங்களும் இருக்கலாம்.
பிள்ளைகள் பாடப் புத்தகம் தவித்த புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு முதலில் வாழ்த்துகள். ஏனெனில், பல பெற்றோர்கள் மற்ற புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
உங்களையும் அப்படிக் கேள்விக் கேட்டு குழப்பக்கூடும். யாரேனும் அவ்வாறு கேட்டால், “ஊருக்கு 100 பொறியாளர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், மற்ற பொறியாளர்களை விடவும் க்ரியேட்டிவாகச் சிந்திப்பவர்களுக்கும் அதைச் செயல்படுத்துபவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கிறது. இதுவே வருங்காலத்தில் எல்லாத் துறைக்குமே. பாடப்புத்தகங்கள் மொழியையும் தகவல்களையும் கற்றுத்தருகின்றன. குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும் க்ரியேட்டிவ் திறனை, மேலும் செழுமையாக வளர்த்தெடுக்கவே மற்ற புத்தகங்களைப் படிக்க சொல்கிறோம்” என்று அவர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள்.
சரி, எப்போது பார்த்தாலும் டிவி பார்த்துகொண்டே இருப்பவர்களின் கவனத்தை எப்படித் திருப்பலாம்? பிள்ளைகள் டிவி பார்க்கட்டும். ஆனால், நீங்கள் அவர்கள் பார்க்கும் இடத்தில் உட்கார்ந்து புத்தகம் படியுங்கள். அதுவும் பிள்ளைகளுக்கு ஏற்ற புத்தகங்களாகப் படியுங்கள். இதை, ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உங்கள் பக்கம் திரும்ப, நீங்கள் புத்தகம் பக்கம் திருப்பி விடுங்கள்.
ஒரு வாரம் கழித்தும் உங்கள் பக்கம் திரும்ப வில்லை என்றால்... கவலையே வேண்டாம். அதுக்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் படிக்கும் புத்தகத்தில் ஓவியங்கள் இருக்கும். பெரும்பாலும் கறுப்பு - வெள்ளையில்தான் இருக்கும். புதிதாக க்ரையான்ஸ் வாங்கி வந்து, அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுங்கள். நிச்சயம் உடனே பிள்ளைகள் ஒட்டிக்கொள்வார்கள். இரண்டு நாட்கள் இப்படியே செல்லட்டும். அடுத்த நாள், இந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்ட கதைக்குள் அல்லது பாடலுக்குள் இருக்கும் க்ளூ உதவும் என்று சொல்லுங்கள். வரையும் ஆர்வத்தோடு கண்டிப்பாகக் கதையைப் படிப்பார்கள்.
பிள்ளைகள் வரைந்த ஓவியங்களை மொபைலில் போட்டோ எடுத்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். அதைப் பார்த்து கிடைக்கும் பாராட்டுகளை உங்கள் பிள்ளைகளிடம் தெரிவியுங்கள். அது இன்னும் படிக்க வைக்கவும், வரைய வைக்கவும் உதவும்.
புத்தகம் படிக்க என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். பிள்ளைக்கு ஒரு புத்தகத்தைக் கொடுக்கும் முன், அதை நீங்கள் படித்துவிடுங்கள். அதில் உள்ள கேரக்டர் போல தோசை ஊற்றிக்கொடுங்கள் அல்லது பிரட்டை அந்த உருவத்திற்கு நறுக்கிக்கொடுங்கள். ’என்ன இது புதுசாக இருக்கிறதே’ என்று பிள்ளை கேட்டால், அந்தப் புத்தகம் பற்றியும் கதையில் கொஞ்சமும் சொல்லுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கான எந்த சர்ப்பரைஸ் கொடுப்பதாக இருந்தாலும், நிச்சயம் அதோடு ஒரு புத்தகம் கொடுங்கள். தவறியும்கூட புத்தகத்தை மட்டுமே சர்ப்பரைஸாகக் கொடுக்காதீர்கள். ஏனெனில், பிள்ளைகள் ரொம்ப ரொம்ப விரும்பும் / ஆசைப்படும் விஷயங்களே சர்ப்பரைஸாக இருக்கட்டும். இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில் ஒரு கட்டத்தில் சர்ப்பரைஸ் பொருளோடு என்ன புத்தகம் என்று பார்க்க ஆரம்பிப்பார்கள். பிடித்த புத்தகம் எனில், படிக்கவும் செய்வார்கள். உங்கள் பிள்ளை யாருக்கேனும் சர்ப்பரைஸ் கொடுக்க உங்களோடு சேர்ந்து திட்டமிட்டால், அதில் புத்தகத்தையும் இணைத்து விடுங்கள்.
பிள்ளையின் வயதும், அவள் கையாளும் மொழியளவையும் வைத்து புத்தகங்களைத் தேர்வு செய்யுங்கள். முடிந்தால், பிள்ளையையும் புத்தகம் வாங்க அழைத்துச் செல்லுங்கள். இந்தப் பழக்கம் நீடிக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட பணம் கொத்து பிள்ளைக்குப் பிடித்த புத்தகத்தை தானே தேர்வு செய்ய வைக்கலாம்.
உங்கள் வீட்டுக்கு புதிய பொருள் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு பிள்ளை படித்த கதையில் வரும் ஒரு கேரக்டரின் பெயரைச் சூட்டலாம். உதாரணத்திற்கு, பிள்ளைக்காக அழகான குட்டி சேர் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு ’குட்டி இளவரன்’ எனப் பெயர் வைக்கலாம். (சிறுவர்கள் படிக்க வேண்டிய நல்ல புத்தகம் குட்டி இளவரசன்). புதிய பெயர் வைக்கும் ஆவலில் புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள்.
படித்த புத்தகம் பற்றி பிள்ளையின் கருத்துகளை பேப்பரில் எழுத வைக்கலாம். பேச வைத்து வீடியோவாக்கி யூ டியூப் சேனல் தொடங்கி அதில் பதிவிட்டு வரலாம். புத்தகங்கள் படிக்கச் சொல்லும் பெற்றோர் இரண்டு விஷயங்களை எப்போதும் கடைபிடியுங்கள். முதலாவது, உங்கள் பிள்ளைக்குப் பிடிக்கவே பிடிக்காத புத்தகத்தைத் திணிக்காதீர்கள். மற்ற புத்தகங்களை வாசிக்க வாசிக்க பிள்ளையாகவே அந்தப் புத்தகத்தைத் தேடி வரும். இரண்டாவது, படித்த புத்தகங்கள் பற்றி கேள்விகளாகக் கேட்காமல் உரையாடுங்கள். இப்படி இந்தக் கதை முடிந்தது சரியே இல்லை. வேறு மாதிரி முடிந்திருக்க வேண்டும்... என்பதுபோல உரையாடுங்கள். ஒருபோதும் பாடப்புத்தகம் படித்த பிறகு கேள்வி எனும் தொனியை உருவாக்கி விட வேண்டாம். அப்படியான எண்ணம் வந்துவிட்டால், கதையின் சுவாரஸ்யத்திலிருந்து மனம் விலகி மனப்பாடம் என்பதாக மாறிவிடும். நாம் கதை / பாடல் புத்தகங்களைத் தருவதே ’ஒரு புத்தகத்தை மகிழ்ச்சியோடு படிக்கும் பழக்கம்’ உருவாக்குவதற்கே. அது கெட்டுவிடலாம். கவனம்.
- விஷ்ணுபுரம் சரவணன்
thanks: arumbu magazine
நன்றி
படித்ததில் பிடித்தது
பகிர்வு பதிவு
No comments:
Post a Comment