NIOS ஓர் அறிமுகம்
என்னுடைய மூத்த மகன் மதி, 2018 - ல் பத்தாம் வகுப்பு தேர்வு பெற்றான். சில காரணங்களினால் அவனால் 11 - ம் வகுப்பை பள்ளியில் தொடர முடியவில்லை. மாற்று வழி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்த சமயம். நம் வீட்டுத் தலைவர் தான் "Alternative education, Home schooling" அப்படின்னு நிறைய படிக்கிறார் இல்லையா, அதனால், "Home schooling பண்ண சொன்னால் என்ன!" என்ற ஒரு சிறு யோசனை தான் இன்று மதி யை NIOS - ல் பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்க செய்திருக்கிறது.
NIOS என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அதைப்பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். NIOS - National Institute of Open Schooling, என்பது CBSE, ISC, State Syllabus போன்றதொரு அமைப்பு. இது இந்திய மத்திய அரசால் நடத்தப் படுகிறது. இதன் பாடத்திட்டம் CBSE யோடு ஒப்பிட முடியும். இதில் படிக்கும் மாணவர்கள் பல பயன்களை பெற முடியும். உதாரணமாக, மதி க்கு அறிவியல் என்றாலே ஒத்து வராது. மேலும் அவனுக்கு சட்டம் படிக்க வேண்டுமென்பது இப்போதைய குறிக்கோள். கணக்கு மற்றும் வரலாறு ஆகியவை மிகவும் பிடித்த பாடங்கள். இவை எல்லாம் சேர்ந்த ஓர் பிரிவு எந்தவொரு பள்ளியிலும் கிடைக்கவில்லை. இப்பொழுதிருக்கும் பள்ளியில் ஏதாவது ஓர் பிரிவை தேர்ந்தெடுத்தால், அதில் அவனுக்கு பிடித்த பாடங்களை விட பிடிக்காத பாடங்களே அதிகம். NIOS யை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை, NIOS - ன் பாடப்பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களின் பாடப்பட்டியலை இங்கு சென்று காணலாம். https://www.nios.ac.in/departmentsunits/academic/senior-secondary-course-equivalent-to-class-xii.aspx
எப்படியும் பன்னிரெண்டாவது படிக்கும் நம் பிள்ளைகளை டியூஷன் ல் சேர்ப்போம். பள்ளிக்கும் சென்று வந்து பின்பு டியூசன் க்கும் சென்று வர நம் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். NIOS - ல் சேர்த்தால் டியூசன் மட்டும் போய் வந்தால் போதும், பள்ளிக்கு போக தேவை இல்லையே என்ற சந்தோஷம் பெற்றோர்களாகிய எங்களுக்கு இல்லாமல் இல்லை. மேலும் NIOS, நம் நகரங்களிலேயே சில பள்ளிகளின் பட்டியலை, வார கடைசி நாட்களில் சென்று நம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, நமக்கு அளிக்கிறது. அதிலிருந்து நமக்கு வசதியான பள்ளியை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சென்று practical classes ஐயும் attend செய்து கொள்ளலாம்.
மதி இம்முறையை தேர்ந்தெடுத்ததினால், பள்ளியில் படிக்கும் பாடங்கள் அல்லாமல் அவனுக்கு பிடித்தமான பாடங்களில் சில "Certification" ஐயும் முடிக்க முடிந்தது. அது கல்லூரியில் சேர்வதற்கான நேர்க்காணலில் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.
இம்முறையில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், NIOS குழுமம் வருடத்திற்கு அக்டோபர், ஏப்ரல் என இரண்டு முறை பரீட்சையை நடத்துகிறது. ஆகையால், நாம் நம் பாடங்களை பிரித்தும் எழுதிக் கொள்ளலாம். மதி, 3 பாடங்களை அக்டோபரிலும், 2 பாடங்களை ஏப்ரலிலும் எழுதி 80% உடன் தேர்ச்சி பெற்றிருக்கிறான்.
எல்லா மாற்று முறைக்கும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் இருக்கும். அதை போலத்தான் இம்முறைக்கும் சில எதிர்மறைகளும் இருக்கின்றன. பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களுடனான நேரத்தை அதிகம் இழக்கிறார்கள். மேலும் மதி, அவனுடைய vocabulary ஐ இழந்து வருவதாக மிகவும் வருத்தமடைந்தான். சில கல்லூரிகள் NIOS ல் படித்திருந்தால் admission கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு ஏன் இந்த தயக்கம் என்று தான் புரியவில்லை. ஆனால் பயன்களுடன் ஒப்பிடும் பொழுது, இது பரவாயில்லை என்றே தோன்றியது. ஒன்றை பெற மற்றொன்றை சில நேரங்களில் இழந்து தானே ஆகவேண்டும்.
இன்று மதி, இந்தியாவின் top 10 ன் ஒன்றான, புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் சட்டம் படிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறான். இப்பொழுதிருக்கும் பள்ளிக் கல்விக்கு மாற்றுமுறையில் செல்கிறோமோ என முதலில் மனதில் பயம் இருந்தது. ஆனால் எங்களின் ஊக்கமும் மதியின் உழைப்பும், இம்முறையை தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெற செய்திருக்கிறது.
இப்பதிவு கண்டிப்பாக எங்களை போன்ற சில பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.
NIOS - ன் link https://www.nios.ac.in/default.aspx
தேவை எனில் மேற்கூறிய சுட்டியை பயன்படுத்தி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பி. கு. : சொல்ல மறந்துவிட்டேன். மதி பன்னிரெண்டாவது படிக்க ஆன செலவு 1700/- ரூபாய் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் தலா 250 ரூபாய். இந்த 1700 ரூபாயில் புத்தக செலவும் அடக்கம்.
படத்தில் - மதி.
No comments:
Post a Comment