கண்ணாடி சொல்லித்தரும் பாடம்..!!*
ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அந்தப் பெரியவரிடம் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அந்த பெரியவர் அடிக்கடி அந்த கண்ணாடியை எடுத்து பார்ப்பார்.
அதன் பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார்.
இதனை தொடர்ந்து அவரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் கவனித்து வந்தான்.
பெரியவரின் இந்த செய்கையானது இளைஞனுக்குக் குறுகுறுப்பை உண்டாக்கியது…!
*'அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதை எடுத்து உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை ஏதாவது மாயா ஜாலக் கண்ணாடியோ?’* என்று நினைத்தான்.
தொடர்ந்து பெரியவரின் செயலால் ஈர்க்கப்பட்டான்..
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அதுபற்றி அந்த பெரியவரிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்து
பெரியவரிடம் நேரில் சென்றான்.
*“ஐயா…!”*
*"என்ன தம்பி?”*
*“உங்கள் கையில் இருப்பது முகம் பார்க்கும் கண்ணாடிதானே?”*
*"ஆமாம்!”*
*"அதில் என்ன தெரிகிறது?”*
*"நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்! அவ்வளவுதான்... ஏன் கேட்கிறாய்..!”*
*"அப்படியானால் அதுவும் எல்லோரிடமும் இருப்பது போன்ற சாதாரணக் கண்ணாடிதானே அது?”*
*“ஆமாம்!”*
*"அப்படி என்றால் பிறகு ஏன் அதையே அடிக்கடி பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”*
இளைஞனின் கேள்வியை கேட்டதும் பெரியவர் புன்னகைத்தார்.
*“தம்பி... சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அதனை ஒவ்வொரு முறை எடுத்து பார்க்கும் போதும் அது தரும் பாடங்கள் நிறைய!”*
என்றார்.
இளைஞனுக்கோ ஆவல் அதிகமானது
*"பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”*
*"ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும்? எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்? என்பதை இந்தக் கண்ணாடியிடம் இருந்து கற்க முடியும்...! கற்கவும் வேண்டும்...”*
என்றார் பெரியவர்.
*“எப்படி?”*
*“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை! குறைப்பதும் இல்லை! உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?"*
*“ஆமாம்”*
*“அதே போல் உன் சகோதரனிடம், நண்பனிடம், உன் உறவுகளிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகைப்படுத்தியோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பை தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி நமக்கு சொல்லும் 'முதல் பாடம்'!”*
*“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்!. அடுத்து…?”*
*"கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையை காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடுகிறது... இல்லையா?”*
*“ஆமாம்!”*
*“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் அவரை பற்றி பேசக் கூடாது. இது கண்ணாடி நமக்கு கற்றுதரும் 'இரண்டாவது பாடம்'!”*
*“கிரேட்! அப்புறம்?”*
*"ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”*
*“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக பாதுகாப்பாக அல்லவா வைத்துக் கொள்கிறார்!”*
*“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் கண்ணாடி எப்படி முகக்குறையை காட்டும் போது, ஏற்று கொள்கிறோமோ, அதேபோல் அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால், கறையை போக்க, முகத்தை திருத்தி கொள்வது போல, அவர் சுட்டிக்காட்டிய குறைகளையும், திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் 'மூன்றாவது பாடம்'!”*
*"ஆகா.... அருமையான விஷயம்"*
*“இன்னும் ஆழமாக யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கலாம்!”*
என்றார் அந்த பெரியவர்.
இந்த விளக்கங்களை கேட்ட அந்த இளைஞன் வியந்து போனான்.
*"ஒரு கண்ணாடியில் இவ்வளவு விசயங்கள் இருக்கா?... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையான விஷயங்களே!!... நன்றி அய்யா.."*
என்று அந்த பெரியவருக்கு நன்றி கூறி விட்டு மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் சென்றான் அந்த இளைஞன்.
ஆமாம்...
அந்த பெரியவர் சொன்னது போலவே
*நம் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் கண்ணாடி போன்றவர்களே!!*
*ஒருவரைப்பற்றி மிகைப்படுத்தியோ, குறைத்தோ, பேசுவதும் கூடாது*
*ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசுவதும் கூடாது!!*
*ஒருவர் நமது தவறினை சுட்டிக்காட்டும் போது... ஏற்று கொள்ளாமல் இருப்பதும் கூடாது!!*
*கண்ணாடி சொல்லித்தரும் இந்த பாடங்களை நாமும் கடைபிடித்துதான் பார்ப்போமே!!!*
படித்ததில் பிடித்தது...
பகிர்வு பதிவு