'இன்றைய சிந்தனை..( 21.04.2019)..
.............................................................
'எதையும் ஈடுபாட்டுடன்''...
....................................................
எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும்.
மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டுங்கெட்டான் வழி. ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.
“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி செய்து முடிக்கப் போகிறேன்” என்று களத்தில் இறங்கிப் பாருங்கள்.
அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில் ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு மனதுடன் ஈடுபட வைக்கும்.
பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம் எதிர்கொள்ளும் விதமே தனி.
ஒரு டீ கடைகாரரிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடைக்காரருக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்...
அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் அது பெரும் அவமானம்..எனவே டீ கடைக்காரர் ஒப்பு கொண்டார்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தார்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினார்..
அவரது கதை முழுதும் கேட்ட அவர்,
" சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன"
என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றார்..இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார்.
" டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்..அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..ஒரு வாரம் கழித்து வந்தார் டீ கடைக்காரர்..இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..
இரண்டு வாரம் ஆனது..அப்போதும் அதே அறிவுரை..
போட்டி நாள் அருகில் வந்து விட்டது..டீ கடைக்காரர் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம்,
நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.. போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.."
வா.. முதலில் டீ சாப்பிடு" என்றார் கடைக் காரர்."சரி" என்று அமர்ந்தான் வீரன்...
அந்த டீ கடைக்காரர்,டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு விட்டான் பயில்வான்...இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான்.
இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி..போட்டியே வேண்டாம் என சென்றுவிடுகிறான்..
அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை..எனினும் சில வரிகள்..
ஆம் நண்பர்களே.,
நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டு கிறோம்..
எதையும் ஈடுபாட்டுடன் செய்வதை உங்கள் பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
எதைச் செய்தாலும் அதை முழுமையாகவும், முறையாகவும், முதன்மையாகவும் செய்ய வேண்டும் என்ற தாகம் எப்பொழுதும் உங்கள் நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
மனதில் ஊக்கமும்,உத்வேகமும் நிறைந்து
இருக்கும்போது செய்யும் வேலையில் ஈடுபாடும், முன்னேற்றமும் ஏற்படும்.
பிறகு என்ன,வெற்றி எப்போதும் உங்களுக்குத்தான்.!
No comments:
Post a Comment