Saturday, January 27, 2018

தெரு விளக்கும் மரத்தடியும்....


கல்வி நூல் வரிசை புத்தக அறிமுகம் :39
புத்தகம்: தெருவிளக்கும் மரத்தடியும்
ஆசிரியர்: பேராசிரியர் ச.மாடசாமி.
   
         “ தடுக்கிவிட்டு நம்மை விழ வைப்பது பெரிய பாறாங்கற்களல்ல… சிறு கற்களே” என்று எங்கோ படித்ததாக ஞாபகம்!

          “தெருவிளக்கும் மரத்தடியும்” என்ற இந்நூலும் வகுப்பறை கற்பித்தலில் நாம் இடரும் சிறுசிறு இடங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. இந்நூல் புதிய தலைமுறை கல்வி இதழில் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களால் எழுதப்பட்ட 17 தொடர்கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை வெளிவந்த காலத்திலேயே சமூகத்தில் ஒரு பயனுள்ள உரையாடலை நிகழ்த்தியவை.

       உதாரணத்திற்கு எல்லோரும் படி ஏறுங்க.. என்பார்கள், ஆனால் பேராசிரியரோ படி இறங்குங்கள் என்று சொல்லி அதிர்ச்சியூட்டுகிறார்.. மூன்றாவது படிக்கும் ஒரு மாணவனின்  தந்தை தன் மகன் சரிவர படிப்பில் கவனம் செலுத்தவில்லை என மிகக் கவலையுடன் பேராசிரியருக்கு போன் செய்கிறார். அம்மாணவன் அதிகம் பணம் செலுத்திப் படிக்கும் ஒரு பள்ளியில் படிப்பதால், கொடுத்த பணத்திற்கு பையனின் கல்வியில் முன்னேற்றம் இல்லாதது கண்டு மனம் வருந்தி புலம்புகிறார் பையனின் தந்தை.. பல்வேறு கேள்விகளின் மூலம் படிப்பில் பையனுக்கு ஏற்பட்ட ஆர்வக்குறைபாட்டை உறுதி செய்து கொள்ளும் பேராசிரியர் ச.மா ,” ஓராண்டுக்குப் படிப்பை நிறுத்தி இஷ்டப்படி அவனை படிக்கவும், விளையாடவும் விட்டு திரும்பவும் அடுத்தாண்டு பள்ளியில் சேர்க்கலாம். இப்படிப் பல குடும்பங்களில் செய்திருக்கிறார்கள்” என ஆலோசனை வழங்குகிறார். இந்த யோசனையைச் சொன்னதும் பையனின் பெற்றோர்களுக்குப் பாம்பைப் பார்த்த பதற்றம். “ படிப்பை ஒரு வருஷம் நிறுத்தறதா? கன்டினீயுடி என்னாகுறது? என்ற பையனின் தந்தையைச் சமாதானப்படுத்தி படிப்பை ஓராண்டு நிறுத்த ஆலோசனை வழங்குகிறார். அரைமனதுடன் அவர்களும் சம்மதிக்க,  பேராசிரியரின் முயற்சி வெற்றியடைகிறது. முதல் ஓரிரண்டு மாதங்கள் சிரமமாக இருந்திருந்தாலும், புத்தகத்தையே தொடப் பயந்த அம்மாணவன் மெல்ல மெல்ல ஆசையாய் புத்தகங்களைத் தொட்டு பயணிக்க ஆரம்பிக்கிறான். தன் முயற்சி வெற்றி பெற்றதை படி இறங்கியவர்கள் தோற்பதில்லை என “ இன்னும் ஒரு படி இறங்குங்க” என்னும் கட்டுரையில் அழகுற விளக்குகிறார் ஐயா ச.மா.

   இவ்வாறு 17 கட்டுரைகளிலும் புதியப் புதிய, நம்மை புரட்டிப் போடும் உயிருள்ள செய்திகளைத் தந்துள்ளார்.  மேலிருந்து பார்க்கும் போது அமைதியாய் நகர்ந்து செல்லும் நதி அடி ஆழத்தில் மண்ணை, மணலை, கல்லை அறுத்துக்கொண்டு செல்வதைப்போல, எளிய வார்த்தைகளால் அலுங்காமல், மெல்லிய நகைச்சுவையுடன் கூறும் கருத்துக்கள், கற்பித்தல் பணியில் அழகுற நமக்குப் பயன்படுவது. நீண்ட நெடும் பயணம் செல்லும் நதி, தன் பயணத்தில் சேகரித்த வண்டல் எனப்படும் வளமான பொருட்களையெல்லாம் வயலில் பரப்பி வளமாக்குவதைப் போல, தன் கல்லூரிப்பணி, அறிவொளி இயக்கப் பணி என பல்வேறு தளங்களில் கிராமப்புற பின்னணி கொண்ட மாணவர்கள், மக்களிடம் கற்ற, கற்பித்த அனுபவமே பேராசிரியரின் எளிமையான எழுத்து நடைக்குக் காரணமாய் அமைகிறது.

  இந்நூலின் முன்னுரையே மிகச்சிறந்த நுட்பமான  கருத்துடன் துவங்குகிறது. “மேடை- ஒரு சடங்கு. களம் என்பது வாழ்க்கை. முழக்கமிட- அதிகாரம் செலுத்த- மிடுக்காய்த் தோற்றமளிக்க மேடையில் வாய்ப்பு  அதிகம். கலந்து நிற்க- பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள – அன்பு செலுத்த ‘களம்’ காத்திருக்கிறது. அன்பைத் தம்பட்டம்செய்வது களத்தின் இயல்பல்ல. “ Love and be silent” என்று கார்டீலியா(லீயர் அரசன்) சொன்னது களத்தில் இயல்பென்று கூறி மேடைக்கும் களத்திற்குமான நுட்பமான வேறுபாட்டை விளக்குகிறார்.

   படிப்பு குறைந்த, உழைப்பும் ஆர்வமும் மிகுந்த அறிவொளித் தொண்டர்களால் அறிவொளி இயக்கம் சிறப்புற நடந்த விதம் பற்றி விளக்கும்போது, முதல் ஆசிரியர் நாவலில்  தூய்ஷன் பாத்திரம் கண்முன் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த அறிவொளி வகுப்புக்களால் சமூகத்தின் பல சம்பவங்கள் வகுப்பறைக்குள் வந்ததை அழகுற விளக்குகிறார். சமூகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளாத வகுப்பறை ஒரு வகையில் சாரமற்ற நிலம்தான். படிப்படியாக அது புழுதி நிலமாகும். போடப்பட்ட விதைகள் முளைக்காத பொக்கு விதைகளாகும் என்று சமூகத்திடம் இருந்து வகுப்பறை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார்.

  வகுப்பறை உருவாக்கி வைத்திருக்கும் ஒழுங்கிலிருந்து விலகிச் செல்பவர்களை ஒழுங்கீனர்கள் என்று முத்திரை குத்தி குற்றவாளியாக்கும் இச்சமூகக் கட்டமைப்பை சாடுகிறார் ச.மா. “புரிந்து கொள்ளத்தான் கல்வி. விலகலைப் புரிந்து கொள்ளாத கல்வி ஒரு கல்வியா? அன்பு என்பதெல்லாம் அப்புறம்தான். புரிதல்தான் அடிப்படை. நல்ல ஆசிரியர் யார் என்ற விவாதம் அடிக்கடி நடக்கிறது. விலகலை அனுமதிக்கிறவர்தான் நல்ல ஆசிரியர் என்பது எப்போதும் என் கருத்து என விலகலை ஏற்றுக் கொள்வதன் அவசியம் பற்றி விளக்குகிறார்.

   எல்லாமே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அழகு, திறமை, வெற்றி ஒவ்வொன்றும் ‘இப்படித்தான்’ என வரையறுக்கப்பட்டிருக்கின்றன. வரையறைக்குள் வராததை கண்கள் கவனிப்பதில்லை. இதனால் வரையறைக்குள் வராத எளிய ஆளுமைகளையும் கண்டெடுக்க ஆசிரியர்களுக்கு நூறு கண் வேண்டும் என்கிறார். பயிற்சிகள் எல்லாம் கண்களைத் திறக்கத்தான்… வெளிச்சத்துக்கு வராத சிறு ஆளுமைகளைக் காணத்தான். சில நேரங்களில் அப்படி நடப்பதில்லை என தன் மனக்குறையைப் பதிவு செய்கிறார்.

   தனக்குத் தெரியாததை மாணவர்கள் முன் தெரியவில்லை என ஒப்புக் கொள்ளும் ஆசிரியர்கள் குறைவு. இதனைப் பற்றிக் கூற வருகையில், “கற்பிக்கையில் சில நேரம் நாம் தோற்றுப் போக நேரலாம். ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்வதன் மூலம் மாணவர்களின்  மனங்களை வெற்றி கொள்ள முடியுமே” என வெற்றியில் மட்டுமல்ல  தோல்வியை ஒப்புக் கொள்வதன் மூலமும் நாம் வெற்றியடைய  வழிகாட்டுகிறார்.

   நம் சிந்தனைகளில் மந்தைத்தனம் படியாதிருக்க, வித்தியாசமானவைகளுக்குள்ளும் உண்மையைத் தேட, ஒவ்வொன்றையும் அடையாளம் குறித்து டப்பாவுக்குள் அடைக்காத இயற்கையைப் போன்ற திறந்த உள்ளம் தேவை என்கிறார். குறிப்பாக பாடங்களைத் தேர்வு செய்கையில் நாம் கைக்கொள்ள வேண்டிய திறந்த மனத்தின் அவசியம் பற்றி அழகுற குறிப்பிடுகிறார்.

மாணவர்களைப் பேசவிடுங்கள் என்ற கட்டுரையில், “குழந்தைகளுக்கு வீடும் பள்ளியும் போதாது; அவர்களுக்கு, மூன்றாவது ஓர் இடம் வேண்டும்”  என்று கல்வியாளர் ஜான் ஹோல்ட் உடன் சேர்ந்து ச.மா அவர்களும் உரத்த குரல் தருகிறார். அந்த மூன்றாவது இடம் விதிகள், மதிப்பீடு, தரவரிசை போன்ற அபத்தங்களும் பாகுபாடுகளும் இல்லாத, ஒவ்வொரு குழந்தையும் நினைத்ததைப் பேச வும், விரும்பியதைக் கற்கவும்,வாய்விட்டுச் சிரிக்க ஓர் இடமாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

  இரண்டு நாள்களுக்கு முன் தந்தை இறந்த துக்கத்தில் தேர்வெழுத வந்து ஏதும் எழுதாமல் மன இறுக்கத்துடன் அமர்ந்திருந்த மாணவியைத் தேற்றி, இறுக்கத்தைத் தளர்த்தி தேர்வெழுத வைத்த சம்பவத்தைப் ஆசிரியருக்கு நிகர் யார்? என்ற கட்டுரையில் படிக்கும் போது துக்கமும் பூரிப்பும் ஒரு சேர நிகழ்கிறது.

காயப்படுத்தும் வார்த்தையைப் போல ஆபத்தானவை – பொய்யான ஊக்கம் தராம் வார்த்தைகள் என்பதை ஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி கதையுடன் சேர்த்துப் படித்து புரிந்து கொள்ளும் போது மனதில் ஆழப்பதிகிறது.

  ஆர்ப்பாட்டங்கள் நுட்பங்களைத் தோற்கடிப்பது மற்றொரு துயரம். ஆர்ப்பாட்டங்களுக்கு அகலமான வாய். கூசி ஒதுங்கும் நுட்பங்களை விழுங்குவது சுலபமானது என்று கூறும் ச.மா, பேச்சுப்போட்டியில் ஆர்ப்பாட்டமின்றி பேசிய மாணவன் தேர்வாளர்களால் பின்தள்ளப்படுவதை உணர்ந்து அவன் பேச்சின் நுட்பங்களை சபை முன் வைத்து அவனை முதல் மாணவனாய்த் தேர்ந்தெடுத்த சம்பவத்தைப் படிக்கும்போது உணர்ச்சியின் மேல்நிலையில் நான் இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

கற்கும் வேகத்திலும், கற்கும் விருப்பத்திலும்  குழந்தைகளுக்கிடையே வேற்றுமைகள் இருக்கின்றன. வேற்றுமைகளைக் கண்டு சிணுங்குவது அல்ல, வேற்றுமைகளை மதிப்பதுதான் ஆசிரியரின் முதல் கடமை. வித்தியாசமான திறமைகளோடு – படிப்பில் வித்தியாசமான வேகங்களோடு உள்ள பன்மைத்தன்மை கொண்ட வகுப்பறை புரிந்து கொள்ளும்படி கொடுப்பதுதான் கல்வி என Flexible curriculam அவசியத்தை ஓடி ஓடிக் கால்கள் புண்ணாகிப் போன வாத்துகள்.. என்னும் கட்டுரையில் விளக்குகிறார்
குழந்தைகளும் சரி, இளைஞர்களும் சரி – எங்களைக் கவனியுங்கள் என்று கெஞ்சுகிற நேரமும் இருக்கிறது; எங்களைக் கவனிக்க வேண்டாம் சற்று விலகி நில்லுங்கள் என்று சொல்லுகிற நேரமும் இருக்கிறது என்று கூறும் ச.மா, வகுப்பறையிலும், சுற்றுலா செல்லும்போதும் மாணவர்கள் ஒரே மாதிரி எவ்வாறு இருப்பார்கள் என வினா எழுப்பி, புரிந்து கொள்வோம் என முடிக்கிறார் “ கனிவான வார்த்தைகள் சில நேரம்! கறாரான விமர்சனம் சில நேரம்! என்ற கட்டுரையில்.

“ கற்பித்துப் பயனில்லை என்று கைவிடப்பட்டவருக்கும், கற்பிக்க முடியும் என நிரூபித்துக் காட்டுவதுதான் கல்வியின் உண்மையான சாதனை…” என உரத்த குரலில் முரசறைகிறார் நூலாசிரியர்.
  “ அசல் வாழ்க்கையை நெருங்கிப் பார்க்காதவன் எவனும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியாது. அசல் வாழ்க்கையின் வெப்பம், பனிக்கனவுகளைக் கலைப்பது மட்டுமல்ல, நம்மைப் புதுப்பிக்கவும் செய்கிறது. எனவே சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். வகுப்பறையை விட்டு சலித்த முகங்களோடு வெளியேறி, என்.எஸ்.எஸ் முகாமில் பங்கு கொள்ளச் சென்று பளிச்சிடும் புது முகங்களோடு திரும்பி வந்ததை நேரில் பார்த்த அனுபவத்தில் மேலுள்ள கருத்தைப் பதிவு செய்கிறார் நூலாசிரியர். மேலும் சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்குமான சந்திப்பு முக்கியமானது; ஏனெனில், இது இதயத்துக்கும் மூளைக்குமான சந்திப்பு… சந்திப்பு தொடர்ந்தால் மாற்றம் உறுதி; மலர்ச்சி உறுதி  என்கிறார் ச.மா.. எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

எதிலும் கால் ஊனவில்லை என குடும்பம் குற்றம் சாட்டுவதும், concentration இல்லை என ஒரு மாணவனை பள்ளி குற்றம் சாட்டுதுவதும் அன்றாட நிகழ்வு. இதனை ச.மா அழகாக “ ஒரு சிலர்தான் தனித்திறமைகளோடு இருக்கிறார்கள். பொருத்தமான வாய்ப்பு கிடைக்கும்போது பளிச்சிடுவார்கள்; பலரின் கவனத்தைப் பற்றிப் பிடிப்பார்கள். பெரும்பாலோர் பொது மனிதர்கள். தேடுவதும், அமர்வதும், திருப்தியின்றித் திரும்பத் தேடுவதுமாக அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. கால் ஊனவில்லை என்று குடும்பம் கவலைப்படுகிறது. Concentration இல்லை என பள்ளி குற்றம் சாட்டுகிறது. உடைந்து உடைந்து உருவாகும் சிறு சிறு ஆர்வங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்பது குடும்பங்களுக்கும் புரிய வேண்டும்; பள்ளிகளுக்கும் புரிய வேண்டும்” என விளக்குகிறார்.

கற்பித்தலின் பாரம் குழந்தைகளின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் மூச்சுத் திணற அழுத்திவிடக் கூடாது.
“ எதிர்காலத்தில்
எனக்கொரு
கிரீடம் வேண்டுமென்று
என் நிகழ்காலத்தைத்
தூக்கிலிடாதே அம்மா!”
    என்று குழந்தைகளைக் கதற விடக்கூடாது. குழந்தைகளுக்கான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்,
தேசத்தின் மிகச்சிறந்த அறிவாளிகளையும், படைப்பாளிகளையும், நிர்வாகிகளையும் அரசுப்பள்ளிகளே உருவாக்கி இருக்கின்றன. சுயநலம் விலக்கி, பொறுப்புணர்வோடு சிந்திக்கிறவர்கள் பலரும் அரசுப்பள்ளியில் இருந்து வந்தவர்களே. இருப்பினும் அரசுப்பள்ளிகள் இந்தியா முழுவதும் சோதனையைச் சந்திக்கும் காலம் இது. இத்தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடைபெறும் மாற்றம் இப்போது கொதிநிலை அடைந்திருக்கிறது.
அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா? அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்க வேண்டாமா? புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்க பலமாய் வர வேண்டாமா?  உரத்தக் குரலெடுத்து
இன்று புதிதாய்ப் பிறப்போம்!
தொடர்ந்து நடப்போம்!
சமூகத்தில் மாற்றத்தை விதைப்போம்!
என இந்நூல் வழியே முரசறைந்து நம்மை அழைக்கிறார்.
உங்கள் கைகளில் இந்நூல் தவழட்டும்!
புதியதோர் உலகம் பிறக்கட்டும்!
வாழிய பல்லாண்டு எங்கள் ச.மா ஐயா இம்மண் பயனுற!
நன்றி!
புத்தகம்: தெரு விளக்கும் மரத்தடியும்
ஆசிரியர்: பேரா.ச.மாடசாமி
பதிப்பகம்: புதிய தலைமுறை (2016)
விலை:80/- பக்கங்கள்:88
இவண்
இராமமூர்த்தி நாகராஜன்

நன்றி ஐயா...

1 comment:

iramuthusamy@gmail.com said...

பேரா.ச.மாடசாமியின் தெருவிளக்கும் மரத்தடியும் பற்றிய நூலறிமுகமும் விமரிசனமும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆசிரியர் வேறு நூல்களையும் எழுதியுள்ளாரா.