Monday, January 29, 2018

ஈரோடு...

ஈரோடு

ஏ.எம்.மெக்ரிகர் என்ற, ஆங்கிலேயர் தலைமையில் ஏழு நியமன உறுப்பினர்கள் கொண்ட, 'ஈரோடு நகர பரிபாலன சபை', *1871ல், செப்.,16ல்* அமைக்கப்பட்டது. இதுவே ஈரோடு வளர்ச்சிக்கு கால்கோள் நாட்டப்பட்ட நாள். அந்த வகையில், மஞ்சள் மாநகரம் என்றழைக்கப்படும் ஈரோடு, 146வது நினைவு நாளை கொண்டாடுகிறது. இந்த நாளைப் போற்றும் வகையில், ஈரோடு பற்றிய, சில சுவாரசியமான செய்திகளை பார்ப்போம்.தலைநகராக திகழ்ந்தது: கொங்கு, 24 நாடுகளில் ஒன்றான, பூந்துறை நாட்டின் பழம்பெரும், 32 ஊர்களில் ஈரோடு ஒன்று. இதில், 24 நாடுகளை, 4 கட்டமனையாக (மாகாணம்) பிரித்ததில் ஒன்றான, ஈரோடு கட்டமனையின் தலைநகராக ஈரோடு விளங்கியது. இங்கு ஒரு பெரிய மண் கோட்டை கட்டப்பட்டது.
அதில் சிறுபடையும் தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைகாரர், அட்டவணை போன்ற அதிகாரிகளும் இருந்தனர். மதுரை நாயக்கர், மைசூர் உடையார், திப்பு, ஐதர் கம்பெனிப் போர்களில் ஈரோடு கோட்டை மிக முக்கிய இடம் பெற்றது. இவற்றால் ஈரோடு பெரும் அழிவைக் கண்டது. '2,000 வீடுகள் இருந்த ஈரோட்டில் ஆள் அரவமற்ற, 400 வீடுகளே எஞ்சின' என்கிறார் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.

*அகழி மேடு அகில் மேடானது:* கடந்த, 1878ல் ஏற்பட்ட கொடிய தாது வருடப் பஞ்சத்தில், நிவாரண வேலைக்காக பெரிய மண்கோட்டை இடிக்கப்பட்டது.

கோட்டை மண்ணை அகழியில் கொட்டினர். அகழி மேடாகி இன்று, 'அகில்மேடு வீதி' எனப் பெயர் பெற்றது. திப்பு மறைவுக்குப் பின் (1799), கம்பெனியினர் பவானியைத் தலைநகராகக் கொண்டு அமைக்கப்பட்ட நொய்யல் வடக்கு மாவட்டத்தில், ஈரோடு இருந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம், 1804ல் உருவானபோது, *பெருந்துறை தாலுகாவுக்கு சேர்ந்த, ஒரு கிராமமாக* ஈரோடு இருந்தது; 1868ல் ஈரோடு தாலுகா ஏற்பட்டு, தாலுகா தலைநகரானது.

*ஈரோடை தான் ஈரோடாக மாறியது:* *பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற, இரண்டு ஓடைகட்கு* இடையில் அமைந்ததால், *ஈரோடை - ஈரோடு ஆயிற்று.*

ஈரோடு மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி என்ற பெயர்களையும் பெற்றதை தலபுராணம் கூறும்.
*ஈரோடு கோட்டை, ஈரோடு பேட்டை* என இரு பகுதியாக அழைக்கப்பட்டது. சோழர் காலக் கல்வெட்டு, *'ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேத மங்கலம்'* என்று கூறுகிறது.ராஜ்ய அபிஷேக விண்ணகரம்: ஈரோட்டில் மூன்று சிவன் கோவில், மூன்று பெருமாள் கோவில், மூன்று அம்மன் கோவில், மூன்று மாரியம்மன் கோவில் இருப்பது சிறப்புமிக்கது. சோழர் கட்டிய கொங்கு நாட்டு முதல் கோவிலும் (907 ல் பள்ளிகொண்ட பெருமாள் கோவில்), முதல் கொங்குச் சோழன் மகிமாலய இருக்குவேள் ஆன *வீரசோழன் கட்டிய கோவிலும் (932ல் மகிமாலீசுவரம்) காவிரிக் கரையில் கரிகாலன் கட்டிய கரிகால சோழீசுரமும்* இங்குள்ளது.

கொங்கு நாட்டை வென்ற பிற அரசர்கள், ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் வந்து, கொங்கு நாட்டு அரசராக முடிசூடுவது வழக்கம். அதனால் இக்கோயில் ராஜ்ய அபிஷேக விண்ணகரம் எனப்பட்டது.ஈ.வே.ரா., வீட்டில் தங்கிய காந்தி: ஈ.வே.ராமசாமி, 1917ல், ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராகி, மூன்றாண்டு பதவி வகித்தார். ஈரோடு விடுதலை இயக்கத்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செலுத்தியது. ஈரோட்டுக்கு நான்கு முறை வந்த *காந்தியடிகள், தம் இரண்டாவது வருகையின் போது, 1921, செப்.,25ல் ஈ.வே.ரா., வீட்டில்* தங்கினார்.

அன்று அவர் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் கள்ளின் கொடுமையைக் கூறினர். இதனால் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியலை காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்தார். இதுகுறித்து, *1921 டிச.,22ல் யங் இந்தியா* இதழில், *'ஈரோட்டுப் பெண்கள்' என்ற தலைப்பில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.* கள்ளுக்கடை மறியலை நிறுத்தி வைசிராயிடம் பேசலாம் என்று, சில தலைவர்கள் கூறியபோது, 'மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை.

அது ஈரோட்டு பெண்கள் இருவர் கையில் உள்ளது' என்று காந்தியடிகள் கூறினார்.1860ல் அரசு தொடக்கப் பள்ளி: காந்தியடிகளுக்கு அவர் வாழும்போதே, ஈரோட்டில், 1927, ஏப்.,9ல் மற்றும் 1939 அக்.,1ல் என இரண்டு சிலைகள் திறக்கப்பட்டன. கடந்த, 1822ம் ஆண்டு கணக்கின்படி, ஈரோடு உள்ளிட்ட அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் மக்கள் தொகை, ஆறு லட்சத்து, 38 ஆயிரத்து, 199 பேர். பள்ளி செல்பவர் எண்ணிக்கை, 8,930. படித்தோர் விழுக்காடு, 1.39 சதவீதம்.

அதிலும் பெண்கள் பள்ளி சென்றவர், 82 பேர் மட்டுமே. கடந்த, 1860ல் ஈரோட்டில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியாக அது விளங்குகிறது. இதையடுத்து, 1876ல் நகர பரிபாலன சபை டவுன் தொடக்கப்பள்ளி தொடங்கியது.முதல் கல்லூரி உதயம்: தாசப்பையர், அண்ணாசாமி அய்யங்காரும் சேர்ந்து, 1887ல் டவுன் உயர்நிலைப் பள்ளி தொடங்கி நடத்த முடியாமல், லண்டன் மிஷின் சபைக்கு விற்றனர்.

ஈ.வே.ரா., தந்தை வெங்கடநாயக்கரும், முதலாளி ஷக் தாவூதின் தந்தையார் அலாவுதீன் சாயயும் (டாக்டர் அமானுல்லா பாட்டனார்) எல்லாச் சமூகத்தாரையும் இணைத்து, 1899ல் மகாசன உயர்நிலைப் பள்ளி தொடங்கினர். *ஜூலை, 12, 1954ல் மகாசனக் கல்லூரியை ஆரம்பித்தனர்.* இதுவே மாவட்டத்தின் முதல் கல்லூரி, மகாசன கல்லூரி, சிக்கய்ய நாயக்கர் மகாசனக் கல்லூரியாகி, இன்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியாக உள்ளது.பாரதிக்கும் பங்குண்டு: கடந்த, 1927, ஏப்., 9ல் மூன்றாம் முறை நகராட்சித் தலைவராக இருந்த, சீனிவாச முதலியாரால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டி அருகே, *'சீனிவாசா பார்க்'* ஏற்படுத்தப்பட்டது. (பின்னர் பீப்பிள்ஸ் பார்க், வ.உ.சி., பூங்கா) காரனேஷன் ஹால், கட்டப்பட்டு அதில், *'காக்ஸ் ரீடிங் ரூம்'* திறக்கப்பட்டது.

திறப்பு விழா செய்தவர் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன். ஈ.வே.ரா., குடியரசு பதிப்பகம் தொடங்கி, 100க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டார். கி.பி. *1282ல் வெட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாயால்,* ஈரோடு வளம் பெற்றது.

கால்வாயின் கீழ் பெரும்பள்ளம் செல்ல, *1282ல் பாலம் கட்டப்பட்டது.*உலகப் பாலங்கள் நூலில், இது இடம் பெற்றுள்ளது. *வக்கீல் தங்கப்பெருமாள் பிள்ளை தொடங்கிய *பாரதி வாசக சாலை ஆண்டு விழாவுக்கு, ஜூலை, 31, 1921 அன்று பாரதியார் வந்தார*். இதுவே அவரின் கடைசி வெளியூர் பயணமாக அமைந்தது.

*மஞ்சள் மாநகரம்:* கடந்த, 1973ல் நூற்றாண்டு விழாவை, நகராட்சி கொண்டாடியது.

*டிச., 29, 2007ல் ஈரோடு நகராட்சி, மாநகராட்சி ஆனது.* ஈரோடு மஞ்சள் மார்க்கெட், இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது.
விசைத்தறியில் முன்னணியில் உள்ளது.

மத்திய, மாநில உதவியுடன் *ஆசியாவிலேயே மிகப் பெரிதாக கட்டப்பட்டுள்ள, 'டெக்ஸ்வெலி' ஜவுளி விற்பனை மையம்* ஈரோட்டில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி, லாரி போக்குவரத்தும் சிறப்பாக நடக்கிறது. தோல் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. புகழ் பெற்ற பெரிய பல்துறை மருத்துவமனைகள் பல உள்ளன.
போரையே வென்ற ஊர்: மரம் வளர்ப்பு, ஊனமுற்றோர் மறுவாழ்வில் சக்தி மசாலா நிறுவனம் சிறப்பான பணி செய்கிறது.

இந்திய அளவில் புகழ் பெற்ற பல கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. 1944ல் ஈரோட்டில் முதலில் தொடங்கப்பட்ட கலைமகள் மேல்நிலைப் பள்ளியில், உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. *ஈ.வே.ரா., நூற்றாண்டு விழாவையொட்டி, 1979, செப்.,17ல் அமைக்கப்பட்ட மாவட்டத் தலைநகரான ஈரோடு,* முன்பு ஏற்பட்ட போர்கள், புயல், பூகம்ப அழிவை வென்று, இன்று பற்பல துறைகளிலும் முன்னேறி வருகிறது. நகரின் முன்னேற்றத்தில் நாமும் பங்கெடுப்போம்.

நம் நகரை காப்போம்.- *புலவர் செ.ராசு, முன்னாள் தலைவர், கல்வெட்டு தொல்லியல் துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.*

நன்றி புலவர்.செ.ராசு...அவர்கள்...

Sunday, January 28, 2018

செங்கோடன்...சிறுகதை

வாரமலரில் வந்த சிறுகதை...
அதிகமாக மனதை சிதைத்த கதை.....
கண்களில் நீரை வரவழைத்த கதை......

பேருந்தை விட்டு இறங்கியதும், லேசாக, துாறல் ஆரம்பித்தது. மழை பிடிக்கும் முன், பள்ளிக்கு சென்று விட வேண்டும் என நினைத்து, வேகமாக அடியெடுத்து வைத்தேன். என் அவசரம் புரியாமல் செருப்பு அறுந்து தொலைத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்; செருப்புக் கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. சிறிது துாரம் சாலையோரம், குடைக்கு கீழ், அறுந்த செருப்புகளை தைத்துக் கொண்டிருந்தான், ஒருவன்.
அவன் அருகில் சென்று, ''இந்த செருப்பை கொஞ்சம் தைச்சிடுப்பா... ஸ்கூலுக்கு நேரமாகுது...'' என்று கூறி, கால்களில் இருந்து கழற்றினேன்.

நிமிர்ந்து பார்த்தவன், சட்டென்று எழுந்து நின்று, ''கண்ணன் சார்... என்னை தெரியலயா... நான்தான் உங்க மாணவன் செங்கோடன்...'' என்றான். 
''அட, செங்கோடனா... பாத்து ரொம்ப நாளாச்சுல்ல... அதான், அடையாளமே தெரியல. ஆமா, இங்க எப்படி,'' என்று கேட்டாலும், நினைவுகள் ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்றது.

என்னைப்போல் ஆசிரியரான என் அப்பாவிடம் படித்த மாணவர்கள், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, 'நான் இன்னவாக இருக்கிறேன்...' என்று பெருமையாக சொல்லி இனிப்பு தந்து, ஆசிர்வாதம் வாங்குவர்.

அதை பார்க்கும்போதெல்லாம், நானும் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதன்படி, ஆசிரிய பயிற்சி முடித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்து அரசு பள்ளியில், பணிக்கு சேர்ந்தேன்.

அரசு பள்ளி என்றாலே, அது ஏழைப் பிள்ளைகள் படிக்கும் இடமாகி விட்ட நிலையில், அவ்வூரிலிருந்து தனியார் பள்ளிகள் தொலைவில் இருந்ததால், ஓரளவு வசதியுள்ள பிள்ளைகளும் அப்பள்ளியில் படித்தனர்.

அதனால், எல்லா வகுப்பிலுமே, ஏழை மாணவர்களை தீண்டத்தகாதவர்களை போல் ஒதுக்கி வைத்திருந்தனர். முதல் நாள் வகுப்பில், மாணவர்களின் பெயரை கேட்டு, நட்பாக கை குலுக்கி வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தேன். 

அழுக்கு சட்டை, வறண்ட தலைமுடியுடன் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த அந்த மாணவன் மட்டும் என்னிடம் வரத் தயங்கினான். முன்னால் அமர்ந்திருந்த மாணவர்கள், 'சார்... அவனுக்கு கை கொடுக்காதீங்க... அவன் குளிச்சே இருக்க மாட்டான்...' என்றனர். 

அதை, காதில் வாங்காமல், புன்னகைத்து, 'இங்க வாப்பா... உன் பேர் என்ன...' என்றேன். 
'செங்கோடன் சார்...' என்றான்.
அவன் கையை பிடித்து குலுக்கி, 'குட்... நல்லா படிக்கணும்; பாடம் புரியலன்னா எப்ப வேணா எங்கிட்ட சந்தேகம் கேட்கலாம்; வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பாரு...' என்றேன்; தலையாட்டினான்.
வகுப்பு முடிந்ததும், ஓய்வு அறையில் இருந்த என்னிடம் வந்தான். 'செங்கோடா... பள்ளிக்கு வரும்போது தினமும் குளிக்கணும்; குளிச்சாதான் சுகாதாரமா இருக்க முடியும் என்ன...'
'சார், குளிச்சிட்டு தான் வர்றேன்; சோப்பு போட்டு குளிக்காததால் அப்படி தெரியுது. அம்மாகிட்ட சோப்புக் கேட்டா, திட்டுவாங்க...' என்றான்.

'உங்க அப்பா என்ன வேலை செய்றார்?' என்று கேட்டேன்.

'எங்கப்பா ரோட்டோரம் செருப்பு தைப்பார்; லீவு நாள்ல நானும் செய்வேன். அம்மா காலையில தோட்டத்துக்கு பூ பறிக்கும் வேலைக்கு போகும் போது, என்னையும், தம்பியையும் கூடவே அழைச்சுகிட்டு போவாங்க; நாங்க பூப்பறிச்சாத்தான், ஆயா கடையில இட்லி, தோசை வாங்கி தந்து, ஸ்கூலுக்கு அனுப்புவாங்க...' என்றான். 

'சரி சரி... நல்லா படிச்சு, உத்தியோகத்துக்கு போய், உங்கப்பா, அம்மா கஷ்டத்த போக்கணும், என்ன...' என்றதும், 'நான், நல்லாத்தான் சார் படிக்கிறேன்... எங்கம்மா காலையில பூப்பறிக்க கூட்டிகிட்டு போகாம இருந்தா, இன்னும் நல்லா படிச்சு முதல் ரேங்க் வாங்குவேன்...' என்றான். 

அவன் ரேங்க் கார்டை எடுத்து பார்த்தேன். எல்லா தேர்வுகளிலும் முதல் ஐந்து ரேங்குக்குள் பெற்றிருந்தான். மறுநாள், இரண்டு குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்புகளையும், எண்ணெய், பவுடர் டப்பாவையும் வாங்கி வந்து, 'இனிமே, துணிய நல்லா துவைச்சு உடுத்திட்டு வரணும்... நான், உங்க அம்மாகிட்ட பேசுறேன்; நீ படிப்பில் மட்டும் கவனத்த செலுத்து...' என்று கூறி, நான் வாங்கி வந்த பொருட்களை அவனிடம் கொடுத்தேன்.

கண்கள் கலங்க,'ரொம்ப நன்றி சார்...' என்றான்.
சக ஆசிரியர் ஒருவர், 'என்ன சார் இதுங்ககிட்ட எல்லாம் வெச்சுகிட்டு... ஒண்ணுத்துக்கும் படிப்பு ஏறாது. 'யூஸ்லெஸ்' பசங்க; கிளாஸ்ல பேனும் இல்ல, இவனுங்க குளிக்காம வர்ற ஸ்மெல்... இது எல்லாம் சகிச்சுட்டு, இந்த கிராமத்துல வேலை பாக்கிறதே பெரிய விஷயம். டிரான்ஸ்பருக்கு, முயற்சி செய்துட்டு இருக்கேன்...' என்று, என்னமோ தர்மத்துக்கு வேலை செய்வது போல் கூறினார்.

இவரைப் போன்று தான், இங்கிருக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள், பெற்றோர் எதுவும் கேட்பதில்லை என்பதால், வகுப்பில் ஒன்றுமே நடத்தாமல், காலத்தை போக்கி கொண்டிருந்தனர். ஆனால், நான், மாணவர்களை புத்தகங்களை படிக்கும் இயந்திரங்களாக மட்டும் ஆக்காமல், நல்ல மனித சமுதாயமாக வளர, என் வகுப்பை பயன்படுத்திக் கொண்டேன்.

என் வகுப்பில், ஒரு உண்டியல் வைத்தேன்.
'மாணவர்களே... உங்களால முடிஞ்சத இந்த உண்டியல்ல போடுங்க; ஒரு மாதம் சேர்ந்ததும், அதில் இருக்கிற காசுக்கு நீங்களே கடைக்கு போய், பிஸ்கெட், எண்ணெய், பவுடர் வாங்கி ஷெல்பில் வைச்சுடுங்க. அதை, ஏழை மாணவர்கள் எடுத்து பயன்படுத்திக்கட்டும்...' என்றேன். 

குழந்தைகளுக்கு வழி நடத்த ஆள் இருந்தால் போதும்; இந்த உலகையே புரட்டி போட்டு விடுவர். மாதந்தோறும் பிஸ்கெட், எண்ணெய், பவுடர் வாங்கி வைத்தனர். அது ஏழை மாணவர்களுக்கு பயன்பட்டது. அத்துடன், தாங்களாகவே, காலையில், பள்ளிக்கு வந்ததும், யாராவது ஒருவர் வகுப்பை துாய்மை செய்து, கரும்பலகையில், தினமும் ஒரு குறளை எழுதி வைத்தனர்.

அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக, சுதந்திர போராட்ட தலைவர்களின் பிறந்த நாட்களில், அவர்களின் பெயரைச் சொல்லி, ஒரு மரக்கன்றை நட செய்து, அம்மரத்திற்கு அருகில், ஒரு பலகையில் அத்தலைவரின் பெயரை, பெயிண்டால் எழுதச் சொன்னேன். ஒவ்வொரு மரத்திற்கும், ஒரு குரூப் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும், என்று வலியுறுத்தினேன்.

ஆறு மாதங்களுக்குள், நந்தவனமானது, பள்ளி. வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கினான், செங்கோடன். சக மாணவர்களும் வேற்றுமை மறந்து அவனுடன் நட்பு பாராட்டியும், சந்தேகங்களை கேட்டும், படித்தனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 100 சதவீதமாய் ஆனதில், பெரிதும் மகிழ்ந்தார், தலைமையாசிரியர்.

என் பிறந்த நாளை தலைமையாசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்ட மாணவர்கள், என் பிறந்த நாள் அன்று, ஒரு வேப்பங்கன்றை நட்டு, 'கண்ணன் சார், பல்லாண்டு வாழ்க...' என்று எழுதி வைத்தனர்.
மதியம், ஆசிரியர் ஓய்வு அறைக்குள் வந்த செங்கோடன், தயங்கியபடி, 'சார், தப்பா நினைச்சுக்காதீங்க... என்னால் முடிஞ்சது...' என்று ஒரு பார்சலை கொடுத்தான். 

குழப்பத்துடன் வாங்கி பிரித்தேன்; புத்தம் புதிய ஒரு ஜோடி செருப்பு! 'எங்கப்பா தைச்சது சார்...' என்றான்.
அவனை பரிவாக கட்டியணைத்து, 'செங்கோடா... நான் இதை மறுக்கிறேன்னு வருத்தப்படக் கூடாது; இதை வித்தா, 100 ரூபாயாவது கிடைக்கும். அது, உங்க குடும்பத்துக்கு பயன்படும். இதை, உன் அப்பாகிட்டயே தந்துடு... நீ படிச்சு, வேலைக்கு போன பின், உன் உழைப்பில் எது வாங்கித் தந்தாலும் வாங்கிக்கிறேன் சரியா...' என்றேன். 

கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தாலும், 'சரி சார்... நான் நல்லா படிச்சு, டாக்டராகி, நீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து பாப்பேன்...' கண்களில் உறுதியோடு சொன்னவனை, சாதனை சுடராய் பார்த்தேன்.
மூன்று ஆண்டுகளுக்கு பின், பணி உயர்வில், அங்கிருந்து என்னை வேறு ஊருக்கு மாற்றினர். அப்போது, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், செங்கோடன். அன்று கடைசி வகுப்பில், பிரிய மனமில்லாமல் கலங்கி அழுதான். அவனுக்குள் நம்பிக்கையை விதைத்து கிளம்பினேன்.

ஆறு ஆண்டுகளுக்கு பின், மறுபடியும் அதே பள்ளிக்கு மாறுதல்......

''ஐயா, நான் டாக்டராகி, உங்கள எங்கிருந்தாலும் பாப்பேன்னு அன்னைக்கு சொன்னேன்; ஆனா, திடீர்ன்னு எங்கப்பா செத்துப் போயிட்டார்... எனக்கு வேற வழி தெரியல. அம்மாவையும், தம்பியையும் நான் தான் பாத்துக்கணும். தம்பிய மட்டும் ஸ்கூல விட்டு நிறுத்தாம, படிக்க வெச்சுட்டிருக்கேன்; எப்பாடு பட்டாவது அவனை நல்ல நிலைக்கு கொண்டு வந்துருவேன்...'' என்றான் செங்கோடன்.

மரமாகி விழுது பரப்பும் என்று நினைத்திருந்த சில கன்றுகள், முளையிலேயே சிதைந்து போன காலத்தின் கொடுமையை நினைத்த போது, கண் கலங்கியது.

அதைக் கண்ணுற்று, ''எனக்கு இதுகூட பிடிச்சுதான் இருக்கு ஐயா... தம்பி படிச்சிட்டான்னா, ஒரு கடை திறந்திடுவேன்...'' என்றான், கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி! 

ஒரு இளம் தளிரின் ஆசையை, லட்சியத்தை தகர்த்து, மீண்டும் ஆரம்பப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது, வறுமை.

''உழைத்து பிழைக்கும் எந்த வேலையும் குறைவு இல்லப்பா... உன் தம்பி நிச்சயம் உன் கனவுகளை நிறைவேத்துவான்...'' என்றேன், நுாறு ரூபாயை நீட்டியபடி!

''பதினைந்து ரூபாதான் சார் ஆச்சு...'' என்று கூறி, பாக்கிப் பணத்தை தந்தான். வாங்க மனதில்லை என்றாலும், அவன் தன்மானத்திற்கு பங்கம் வரக்கூடாதென்று வாங்கிக் கொண்டேன்.

''சார், ஒரு நிமிஷம்...'' என்று, புத்தம் புதிய ஒரு ஜோடி செருப்பை கவரில் போட்டு,''இது, என் உழைப்பில் கொடுக்கிறது தான் சார்... ஆசையா கொடுக்கிறேன்... எனக்காக வாங்கிக்கணும்...''
இந்த முறை என்னால் மறுக்க முடியவில்லை; வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

இரண்டடி நடந்ததும், திரும்பிப் பார்த்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன், கையெடுத்து கும்பிட்டு, தலையாட்டினான். 
பள்ளிக்குள் நுழைந்தேன்; காந்தி, பாரதியார், காமராஜ் பெயர் கொண்ட மரங்கள், நெடிதாக வளர்ந்திருந்தன.

'இன்னொரு செங்கோடனின் கனவுகள், இந்த பூமியில் சிதையக் கூடாது இறைவா...' என்று மனதில் இறைவனை வேண்டியபடி வகுப்பிற்குள் நுழைந்தேன். 

நன்றி தோழமைகளே...

Saturday, January 27, 2018

தெரு விளக்கும் மரத்தடியும்....


கல்வி நூல் வரிசை புத்தக அறிமுகம் :39
புத்தகம்: தெருவிளக்கும் மரத்தடியும்
ஆசிரியர்: பேராசிரியர் ச.மாடசாமி.
   
         “ தடுக்கிவிட்டு நம்மை விழ வைப்பது பெரிய பாறாங்கற்களல்ல… சிறு கற்களே” என்று எங்கோ படித்ததாக ஞாபகம்!

          “தெருவிளக்கும் மரத்தடியும்” என்ற இந்நூலும் வகுப்பறை கற்பித்தலில் நாம் இடரும் சிறுசிறு இடங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. இந்நூல் புதிய தலைமுறை கல்வி இதழில் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களால் எழுதப்பட்ட 17 தொடர்கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை வெளிவந்த காலத்திலேயே சமூகத்தில் ஒரு பயனுள்ள உரையாடலை நிகழ்த்தியவை.

       உதாரணத்திற்கு எல்லோரும் படி ஏறுங்க.. என்பார்கள், ஆனால் பேராசிரியரோ படி இறங்குங்கள் என்று சொல்லி அதிர்ச்சியூட்டுகிறார்.. மூன்றாவது படிக்கும் ஒரு மாணவனின்  தந்தை தன் மகன் சரிவர படிப்பில் கவனம் செலுத்தவில்லை என மிகக் கவலையுடன் பேராசிரியருக்கு போன் செய்கிறார். அம்மாணவன் அதிகம் பணம் செலுத்திப் படிக்கும் ஒரு பள்ளியில் படிப்பதால், கொடுத்த பணத்திற்கு பையனின் கல்வியில் முன்னேற்றம் இல்லாதது கண்டு மனம் வருந்தி புலம்புகிறார் பையனின் தந்தை.. பல்வேறு கேள்விகளின் மூலம் படிப்பில் பையனுக்கு ஏற்பட்ட ஆர்வக்குறைபாட்டை உறுதி செய்து கொள்ளும் பேராசிரியர் ச.மா ,” ஓராண்டுக்குப் படிப்பை நிறுத்தி இஷ்டப்படி அவனை படிக்கவும், விளையாடவும் விட்டு திரும்பவும் அடுத்தாண்டு பள்ளியில் சேர்க்கலாம். இப்படிப் பல குடும்பங்களில் செய்திருக்கிறார்கள்” என ஆலோசனை வழங்குகிறார். இந்த யோசனையைச் சொன்னதும் பையனின் பெற்றோர்களுக்குப் பாம்பைப் பார்த்த பதற்றம். “ படிப்பை ஒரு வருஷம் நிறுத்தறதா? கன்டினீயுடி என்னாகுறது? என்ற பையனின் தந்தையைச் சமாதானப்படுத்தி படிப்பை ஓராண்டு நிறுத்த ஆலோசனை வழங்குகிறார். அரைமனதுடன் அவர்களும் சம்மதிக்க,  பேராசிரியரின் முயற்சி வெற்றியடைகிறது. முதல் ஓரிரண்டு மாதங்கள் சிரமமாக இருந்திருந்தாலும், புத்தகத்தையே தொடப் பயந்த அம்மாணவன் மெல்ல மெல்ல ஆசையாய் புத்தகங்களைத் தொட்டு பயணிக்க ஆரம்பிக்கிறான். தன் முயற்சி வெற்றி பெற்றதை படி இறங்கியவர்கள் தோற்பதில்லை என “ இன்னும் ஒரு படி இறங்குங்க” என்னும் கட்டுரையில் அழகுற விளக்குகிறார் ஐயா ச.மா.

   இவ்வாறு 17 கட்டுரைகளிலும் புதியப் புதிய, நம்மை புரட்டிப் போடும் உயிருள்ள செய்திகளைத் தந்துள்ளார்.  மேலிருந்து பார்க்கும் போது அமைதியாய் நகர்ந்து செல்லும் நதி அடி ஆழத்தில் மண்ணை, மணலை, கல்லை அறுத்துக்கொண்டு செல்வதைப்போல, எளிய வார்த்தைகளால் அலுங்காமல், மெல்லிய நகைச்சுவையுடன் கூறும் கருத்துக்கள், கற்பித்தல் பணியில் அழகுற நமக்குப் பயன்படுவது. நீண்ட நெடும் பயணம் செல்லும் நதி, தன் பயணத்தில் சேகரித்த வண்டல் எனப்படும் வளமான பொருட்களையெல்லாம் வயலில் பரப்பி வளமாக்குவதைப் போல, தன் கல்லூரிப்பணி, அறிவொளி இயக்கப் பணி என பல்வேறு தளங்களில் கிராமப்புற பின்னணி கொண்ட மாணவர்கள், மக்களிடம் கற்ற, கற்பித்த அனுபவமே பேராசிரியரின் எளிமையான எழுத்து நடைக்குக் காரணமாய் அமைகிறது.

  இந்நூலின் முன்னுரையே மிகச்சிறந்த நுட்பமான  கருத்துடன் துவங்குகிறது. “மேடை- ஒரு சடங்கு. களம் என்பது வாழ்க்கை. முழக்கமிட- அதிகாரம் செலுத்த- மிடுக்காய்த் தோற்றமளிக்க மேடையில் வாய்ப்பு  அதிகம். கலந்து நிற்க- பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள – அன்பு செலுத்த ‘களம்’ காத்திருக்கிறது. அன்பைத் தம்பட்டம்செய்வது களத்தின் இயல்பல்ல. “ Love and be silent” என்று கார்டீலியா(லீயர் அரசன்) சொன்னது களத்தில் இயல்பென்று கூறி மேடைக்கும் களத்திற்குமான நுட்பமான வேறுபாட்டை விளக்குகிறார்.

   படிப்பு குறைந்த, உழைப்பும் ஆர்வமும் மிகுந்த அறிவொளித் தொண்டர்களால் அறிவொளி இயக்கம் சிறப்புற நடந்த விதம் பற்றி விளக்கும்போது, முதல் ஆசிரியர் நாவலில்  தூய்ஷன் பாத்திரம் கண்முன் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த அறிவொளி வகுப்புக்களால் சமூகத்தின் பல சம்பவங்கள் வகுப்பறைக்குள் வந்ததை அழகுற விளக்குகிறார். சமூகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளாத வகுப்பறை ஒரு வகையில் சாரமற்ற நிலம்தான். படிப்படியாக அது புழுதி நிலமாகும். போடப்பட்ட விதைகள் முளைக்காத பொக்கு விதைகளாகும் என்று சமூகத்திடம் இருந்து வகுப்பறை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார்.

  வகுப்பறை உருவாக்கி வைத்திருக்கும் ஒழுங்கிலிருந்து விலகிச் செல்பவர்களை ஒழுங்கீனர்கள் என்று முத்திரை குத்தி குற்றவாளியாக்கும் இச்சமூகக் கட்டமைப்பை சாடுகிறார் ச.மா. “புரிந்து கொள்ளத்தான் கல்வி. விலகலைப் புரிந்து கொள்ளாத கல்வி ஒரு கல்வியா? அன்பு என்பதெல்லாம் அப்புறம்தான். புரிதல்தான் அடிப்படை. நல்ல ஆசிரியர் யார் என்ற விவாதம் அடிக்கடி நடக்கிறது. விலகலை அனுமதிக்கிறவர்தான் நல்ல ஆசிரியர் என்பது எப்போதும் என் கருத்து என விலகலை ஏற்றுக் கொள்வதன் அவசியம் பற்றி விளக்குகிறார்.

   எல்லாமே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அழகு, திறமை, வெற்றி ஒவ்வொன்றும் ‘இப்படித்தான்’ என வரையறுக்கப்பட்டிருக்கின்றன. வரையறைக்குள் வராததை கண்கள் கவனிப்பதில்லை. இதனால் வரையறைக்குள் வராத எளிய ஆளுமைகளையும் கண்டெடுக்க ஆசிரியர்களுக்கு நூறு கண் வேண்டும் என்கிறார். பயிற்சிகள் எல்லாம் கண்களைத் திறக்கத்தான்… வெளிச்சத்துக்கு வராத சிறு ஆளுமைகளைக் காணத்தான். சில நேரங்களில் அப்படி நடப்பதில்லை என தன் மனக்குறையைப் பதிவு செய்கிறார்.

   தனக்குத் தெரியாததை மாணவர்கள் முன் தெரியவில்லை என ஒப்புக் கொள்ளும் ஆசிரியர்கள் குறைவு. இதனைப் பற்றிக் கூற வருகையில், “கற்பிக்கையில் சில நேரம் நாம் தோற்றுப் போக நேரலாம். ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்வதன் மூலம் மாணவர்களின்  மனங்களை வெற்றி கொள்ள முடியுமே” என வெற்றியில் மட்டுமல்ல  தோல்வியை ஒப்புக் கொள்வதன் மூலமும் நாம் வெற்றியடைய  வழிகாட்டுகிறார்.

   நம் சிந்தனைகளில் மந்தைத்தனம் படியாதிருக்க, வித்தியாசமானவைகளுக்குள்ளும் உண்மையைத் தேட, ஒவ்வொன்றையும் அடையாளம் குறித்து டப்பாவுக்குள் அடைக்காத இயற்கையைப் போன்ற திறந்த உள்ளம் தேவை என்கிறார். குறிப்பாக பாடங்களைத் தேர்வு செய்கையில் நாம் கைக்கொள்ள வேண்டிய திறந்த மனத்தின் அவசியம் பற்றி அழகுற குறிப்பிடுகிறார்.

மாணவர்களைப் பேசவிடுங்கள் என்ற கட்டுரையில், “குழந்தைகளுக்கு வீடும் பள்ளியும் போதாது; அவர்களுக்கு, மூன்றாவது ஓர் இடம் வேண்டும்”  என்று கல்வியாளர் ஜான் ஹோல்ட் உடன் சேர்ந்து ச.மா அவர்களும் உரத்த குரல் தருகிறார். அந்த மூன்றாவது இடம் விதிகள், மதிப்பீடு, தரவரிசை போன்ற அபத்தங்களும் பாகுபாடுகளும் இல்லாத, ஒவ்வொரு குழந்தையும் நினைத்ததைப் பேச வும், விரும்பியதைக் கற்கவும்,வாய்விட்டுச் சிரிக்க ஓர் இடமாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

  இரண்டு நாள்களுக்கு முன் தந்தை இறந்த துக்கத்தில் தேர்வெழுத வந்து ஏதும் எழுதாமல் மன இறுக்கத்துடன் அமர்ந்திருந்த மாணவியைத் தேற்றி, இறுக்கத்தைத் தளர்த்தி தேர்வெழுத வைத்த சம்பவத்தைப் ஆசிரியருக்கு நிகர் யார்? என்ற கட்டுரையில் படிக்கும் போது துக்கமும் பூரிப்பும் ஒரு சேர நிகழ்கிறது.

காயப்படுத்தும் வார்த்தையைப் போல ஆபத்தானவை – பொய்யான ஊக்கம் தராம் வார்த்தைகள் என்பதை ஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி கதையுடன் சேர்த்துப் படித்து புரிந்து கொள்ளும் போது மனதில் ஆழப்பதிகிறது.

  ஆர்ப்பாட்டங்கள் நுட்பங்களைத் தோற்கடிப்பது மற்றொரு துயரம். ஆர்ப்பாட்டங்களுக்கு அகலமான வாய். கூசி ஒதுங்கும் நுட்பங்களை விழுங்குவது சுலபமானது என்று கூறும் ச.மா, பேச்சுப்போட்டியில் ஆர்ப்பாட்டமின்றி பேசிய மாணவன் தேர்வாளர்களால் பின்தள்ளப்படுவதை உணர்ந்து அவன் பேச்சின் நுட்பங்களை சபை முன் வைத்து அவனை முதல் மாணவனாய்த் தேர்ந்தெடுத்த சம்பவத்தைப் படிக்கும்போது உணர்ச்சியின் மேல்நிலையில் நான் இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

கற்கும் வேகத்திலும், கற்கும் விருப்பத்திலும்  குழந்தைகளுக்கிடையே வேற்றுமைகள் இருக்கின்றன. வேற்றுமைகளைக் கண்டு சிணுங்குவது அல்ல, வேற்றுமைகளை மதிப்பதுதான் ஆசிரியரின் முதல் கடமை. வித்தியாசமான திறமைகளோடு – படிப்பில் வித்தியாசமான வேகங்களோடு உள்ள பன்மைத்தன்மை கொண்ட வகுப்பறை புரிந்து கொள்ளும்படி கொடுப்பதுதான் கல்வி என Flexible curriculam அவசியத்தை ஓடி ஓடிக் கால்கள் புண்ணாகிப் போன வாத்துகள்.. என்னும் கட்டுரையில் விளக்குகிறார்
குழந்தைகளும் சரி, இளைஞர்களும் சரி – எங்களைக் கவனியுங்கள் என்று கெஞ்சுகிற நேரமும் இருக்கிறது; எங்களைக் கவனிக்க வேண்டாம் சற்று விலகி நில்லுங்கள் என்று சொல்லுகிற நேரமும் இருக்கிறது என்று கூறும் ச.மா, வகுப்பறையிலும், சுற்றுலா செல்லும்போதும் மாணவர்கள் ஒரே மாதிரி எவ்வாறு இருப்பார்கள் என வினா எழுப்பி, புரிந்து கொள்வோம் என முடிக்கிறார் “ கனிவான வார்த்தைகள் சில நேரம்! கறாரான விமர்சனம் சில நேரம்! என்ற கட்டுரையில்.

“ கற்பித்துப் பயனில்லை என்று கைவிடப்பட்டவருக்கும், கற்பிக்க முடியும் என நிரூபித்துக் காட்டுவதுதான் கல்வியின் உண்மையான சாதனை…” என உரத்த குரலில் முரசறைகிறார் நூலாசிரியர்.
  “ அசல் வாழ்க்கையை நெருங்கிப் பார்க்காதவன் எவனும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியாது. அசல் வாழ்க்கையின் வெப்பம், பனிக்கனவுகளைக் கலைப்பது மட்டுமல்ல, நம்மைப் புதுப்பிக்கவும் செய்கிறது. எனவே சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். வகுப்பறையை விட்டு சலித்த முகங்களோடு வெளியேறி, என்.எஸ்.எஸ் முகாமில் பங்கு கொள்ளச் சென்று பளிச்சிடும் புது முகங்களோடு திரும்பி வந்ததை நேரில் பார்த்த அனுபவத்தில் மேலுள்ள கருத்தைப் பதிவு செய்கிறார் நூலாசிரியர். மேலும் சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்குமான சந்திப்பு முக்கியமானது; ஏனெனில், இது இதயத்துக்கும் மூளைக்குமான சந்திப்பு… சந்திப்பு தொடர்ந்தால் மாற்றம் உறுதி; மலர்ச்சி உறுதி  என்கிறார் ச.மா.. எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

எதிலும் கால் ஊனவில்லை என குடும்பம் குற்றம் சாட்டுவதும், concentration இல்லை என ஒரு மாணவனை பள்ளி குற்றம் சாட்டுதுவதும் அன்றாட நிகழ்வு. இதனை ச.மா அழகாக “ ஒரு சிலர்தான் தனித்திறமைகளோடு இருக்கிறார்கள். பொருத்தமான வாய்ப்பு கிடைக்கும்போது பளிச்சிடுவார்கள்; பலரின் கவனத்தைப் பற்றிப் பிடிப்பார்கள். பெரும்பாலோர் பொது மனிதர்கள். தேடுவதும், அமர்வதும், திருப்தியின்றித் திரும்பத் தேடுவதுமாக அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. கால் ஊனவில்லை என்று குடும்பம் கவலைப்படுகிறது. Concentration இல்லை என பள்ளி குற்றம் சாட்டுகிறது. உடைந்து உடைந்து உருவாகும் சிறு சிறு ஆர்வங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்பது குடும்பங்களுக்கும் புரிய வேண்டும்; பள்ளிகளுக்கும் புரிய வேண்டும்” என விளக்குகிறார்.

கற்பித்தலின் பாரம் குழந்தைகளின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் மூச்சுத் திணற அழுத்திவிடக் கூடாது.
“ எதிர்காலத்தில்
எனக்கொரு
கிரீடம் வேண்டுமென்று
என் நிகழ்காலத்தைத்
தூக்கிலிடாதே அம்மா!”
    என்று குழந்தைகளைக் கதற விடக்கூடாது. குழந்தைகளுக்கான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்,
தேசத்தின் மிகச்சிறந்த அறிவாளிகளையும், படைப்பாளிகளையும், நிர்வாகிகளையும் அரசுப்பள்ளிகளே உருவாக்கி இருக்கின்றன. சுயநலம் விலக்கி, பொறுப்புணர்வோடு சிந்திக்கிறவர்கள் பலரும் அரசுப்பள்ளியில் இருந்து வந்தவர்களே. இருப்பினும் அரசுப்பள்ளிகள் இந்தியா முழுவதும் சோதனையைச் சந்திக்கும் காலம் இது. இத்தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடைபெறும் மாற்றம் இப்போது கொதிநிலை அடைந்திருக்கிறது.
அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா? அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்க வேண்டாமா? புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்க பலமாய் வர வேண்டாமா?  உரத்தக் குரலெடுத்து
இன்று புதிதாய்ப் பிறப்போம்!
தொடர்ந்து நடப்போம்!
சமூகத்தில் மாற்றத்தை விதைப்போம்!
என இந்நூல் வழியே முரசறைந்து நம்மை அழைக்கிறார்.
உங்கள் கைகளில் இந்நூல் தவழட்டும்!
புதியதோர் உலகம் பிறக்கட்டும்!
வாழிய பல்லாண்டு எங்கள் ச.மா ஐயா இம்மண் பயனுற!
நன்றி!
புத்தகம்: தெரு விளக்கும் மரத்தடியும்
ஆசிரியர்: பேரா.ச.மாடசாமி
பதிப்பகம்: புதிய தலைமுறை (2016)
விலை:80/- பக்கங்கள்:88
இவண்
இராமமூர்த்தி நாகராஜன்

நன்றி ஐயா...