Thursday, April 06, 2017

சொர்க்கம் ....குட்டிக்கதை...



தினம் ஒரு குட்டிக்கதை.

சொர்க்கம் எங்கே இருக்கு?

பூவம்பூர் என்ற நாட்டில் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். நீண்ட வருடங்கள் பின்னர் பிறந்த குழந்தை என்பதால் அவனுக்கு அதிக செல்லம் கொடுத்தனர். இளவரசர் எது கேட்டாலும் அதனை உடனே நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரண்மனைக்கே வந்து அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தனர். இளவரசர் மிகவும் செல்லமாக வளர்ந்தார்.

ஒருநாள் இளவரசர் தன் நண்பர்களுடன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்.  தீடீரென ஒரு மரத்தின் மீது இருந்து கீழே விழுந்துவிட்டார். முழு தவறும் இளவரச்சருடையது தான். ஆனால் தன் கோபத்தை யாரிடமாவது காட்ட வேண்டுமே. முட்டியில் சிராய்ப்பு. கோபம் தலைக்கு ஏறியது. உடனே “இந்த மரம் தான் என்னை கீழே விழ வைத்தது. நாம் நாட்டில் இனி மரங்களே இருக்கக்கூடாது. எல்லா மரத்தையும் வெட்டுங்கள்” என்றார்.

மன்னனுக்கு செய்தி போனது. மன்னர் இது முடியாது என சொல்லிவிட்டார். இளவரசருக்கு மரங்கள் மீது இன்னும் கோபம் அதிகமானது. அவர் ஆட்சி பொறுப்பு ஏற்றுக்கொண்டதும் முதலில் மரங்களை வெட்டுவது என்ற கட்டளை போடுவேன் என்று சபதம் ஏற்றார். அதன்படியே சில வருடங்களில் மன்னர் இறந்துவிட இளவரசர் ஆட்சி பொறுப்பேற்றார். முதல் ஆணையே மரங்களை வெட்டுவது என்று தான். அமைச்சர்கள் எவ்வளவோ சொன்னார்கள், ஆனாலும் இளவரசர் கேட்கவே இல்லை.

நாட்டில் இருந்த எல்லா மரமும் வெட்டப்பட்டன. வேரோடு மரங்கள் சாய்ந்தன. சில காலம் அதனை விறகுகளாக பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. அதுவரையில் அவர்கள் நாட்டுவழியே ஓடிய நதிகளும் வேறு திசையில் போக ஆரம்பித்துவிட்டன. நாளுக்கு நாள் நிலைமை மோசமானது.

இளவரசர் மாறுவேடத்தில் நாட்டின் எல்லையில் சுற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டார். அப்போது ஒரு ஞானி நாட்டிற்குள் நுழைந்தார். அவர் பெயர் குர்மானி. அவருடனே இளவரசர் சென்று ஒரு குடிலில் தங்கினார். தான் இளவரசர் என சொல்லவில்லை. நாட்டினை பார்த்ததுமே ஞானி குர்மானிக்கு புரிந்துவிட்டது. இளவரசர் மாறுவேடத்தில் இருக்கின்றார் என்பது புரிந்தது. உடனே “நரகம் எப்படி இருக்கும் என யாரேனும் பார்க்க வேண்டும் என்றால் இதோ இந்த நாட்டினை காட்டலாம். நான் அடுத்தது  சொர்க்கத்திற்கு போகப்போகிறேன்” என்றார். இளவரசரும் அவருடன் ஐம்பது வீரர்களும் அவருடன் போவது என்று பேசினார்கள்.

பயணம் துவங்கியது. எட்டு மலைகள் நான்கு ஆறுகளை கடந்தார்கள். வழியில் ஆங்காங்கே இளைப்பாறி சென்றார்கள் “எப்போது சொர்க்கம்போல இருக்கும் நாடு வரும்” என்று இளவரசர் கேட்டார்.
ஞானி குர்மானி கொஞ்சம் யோசித்துவிட்டு இளவரசரை பார்த்து கூறினார். “இன்னும் சில மலைகளையும் ஒரு கடலையும் கடக்க வேண்டும்” என்றார்.

”அங்கே அப்படி என்ன விசேஷமாக இருக்கும்?”

“சொர்கத்தை வானத்தில் இருந்து பார்த்தால் வெறும் பச்சையாக இருக்கும். அதாவது நாடு முழுக்க மரங்கள் தான். மரங்கள் இருந்தால் நல்ல மழை வரும், நல்ல மழை இருந்தால் ஆறுகள் வற்றாமல் இருக்கும். மண் வளமாக இருக்கும். உணவுவிற்கு பஞ்சம் இருக்காது. எல்லா வளமும் பெற்ற செழிப்பான நாடு நான் சொல்லும் இடம்” என்றார்.

இளவரசருக்கு விஷயம் புரிந்தது. “சரி கிளம்பலாம்” என்றார் வீரர்களைப் பார்த்து. ஞானி காட்டிய வழிக்கு நேர் எதிராக கிளம்பி தங்கள் நாட்டிற்கு சென்றனர். தன் நாட்டில் உள்ள எல்லா குழந்தைகளையும் அழைத்தார். ஒவ்வொருவரும் இரண்டு மரங்களை வளர்க்க வேண்டும் என்றார். ஞானியை சந்தித்துவிட்டு வரும் வழியில் இருந்து நிறைய மரக் கன்றுகளை எடுத்து வந்தனர். முழு நேரப்பணியாக மரம் வளர்ப்பதில் கவனத்தை செலுத்தினார்கள்.

மரங்கள் வளர்த்தன. ஆறுகள் இவர்கள் நாட்டிற்கு வந்தன. அந்த ஞானி குர்மானி சில வருடங்கள் பின்னர் திரும்பி வந்தார். இளவரசர் அவரிடம் சென்று மரியாதை செலுத்தினார்.
“நான் சொன்ன சொர்க்கம் இது தான்” என்றார் ஞானி சிரித்தபடியே.

நன்றி ரமேஷ்.....

2 comments:

இராய செல்லப்பா said...

பயனுள்ள கதை.

Ajai Sunilkar Joseph said...

கதை அருமைதான்...
ஆனால்...
படத்தில் இருக்கும் வலிகளே
கொடுமையாக உள்ளது...!!!