பிதகோரஷ்ஆசிரியர்கள் என்றால் யார்? வகுப்பில் பாடம் எடுப்பவர்கள் மட்டுமா? அல்ல.பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில்வித்தை, போர் முறைகள் ஆகியவற்றில் தேர்ச்சி அளித்த துரோணரும் ஆசிரியர்தான்.மாவீரன் அலெக்ஸாண்டர் தன் குறுகிய 32 வயது வாழ்க்கையில் பல நாடுகள் மேல் போர் தொடுத்து, வெற்றி கண்டு கிரேக்கப் பேரரசை நிறுவினார்.அவர் போரில் மட்டும் சூரர் அல்ல. பல பொருளாதாரத் திட்டங்களுக்கும், நாகரிக முன்னேற்றங்களுக்கும் முன்னோடி. தங்கக் காசுகளை முதன் முதலில் அவர்தான் புழக்கத்துக்குக்கொண்டு வந்தார்.உலக வாணிப வளர்ச்சிக்கு மிகவும் உதவிய செயல் இது. அவர் உருவாக்கிய அலெக்ஸாண்ட்ரியா நகரம் கல்வியிலும் அறிவு வளர்ச்சியிலும் முன்னணியில் நின்றது.அலெக்ஸாண்டர் சகல கலா வல்லவராக இருக்க முக்கிய காரணம் என்ன? அலெக்ஸாண்டரின் பதின்மூன்றாவது வயதிலிருந்து அவருக்கு அறிவும் வீரமும் கற்றுத் தந்த அரிஸ்டாட்டில் என்ற ஆசிரியர்.உலகில் விஞ்ஞானமும், தொழில்துறையும் முன்னேறுகிறதா? பொருளாதாரம் வளர்கிறதா? மத, மொழி, நாட்டு வேறுபாகளுக்கு நடுவே மனிதநேயம் உயிர்த்துடிப்போடு இயங்குகிறதா?- அந்தச் சாதனைகளுக்குப் பின்னே இருப்பது ஆசிரியர்களே.அந்த ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்?* தங்கள் அறிவை, அனுபவங்களை முழு விருப்பத்தோடு பிறரிடம் பகிர்ந்து கொள்பவர்கள்.* மாணவர்கள் நன்றியோடு இருப்பார்களா, தேவைகள் ஏற்பட்டால், நமக்கு உதவுவார்களா என்ற எண்ணங்களே மனதில் இல்லாதவர்கள்.* தங்கள் மாணவர்கள் தங்களைவிட உயரமான சிகரங்களை எட்டினால், பெருமைப்படுபவர்கள்.நாம் தினமும் நன்றியோடு நினைக்க வேண்டிய சில ஆசிரிய தெய்வங்களைச் சந்திப்போமா?பூகோள உருண்டை நமக்குப் பரிச்சயமான ஒன்று. பூகோள அறிவு வளர்வதற்கும், அமெரிக்கா போன்ற புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் மனிதனின் முதல் அடி பிதகோரஸ் தேற்றம் என்று கூடச் சொல்லலாம்.பிதகோரஸ் ‘கணித உலகின் தந்தை’ (Father of Numbers) என அழைக்கப்படுகிறார். ஆனால் கணிதம் என்கிற சிறு வட்டத்துக்குள் அடங்குகிற மேதை மட்டுமல்ல அவர். வானியல், தத்துவம், இசை எனப் பல துறைகளில் பிதகோரஸின் அறிவு ஒளிவிட்டது.பிதகோரஸ், ஸாமோஸ் என்ற கிரேக்கத் தீவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு வியாபாரி. தன் சிறு வயதில் தந்தையோடு பல ஊர்களுக்குப் போவார். இப்பயணங்கள் புது இடங்களைப் பார்க்கவும், புது மனிதர்களோடு பழகவும் அவருக்கு மிகவும் உதவின.பிதகோரஸின் முதல் ஆசிரியர் பெரெசைடெஸ் (Pherecydes). வானியல், தத்துவம் ஆகியவற்றில் தலைசிறந்த அறிஞர். இக்கலைகளில் அழுத்தமான அறிவை அவர் பிதகோரஸுக்கு வழங்கினார்.அறிவைத் தேடிய பிதகோரஸின் அடுத்த ஆசிரியர் அனாக்ஸிமாண்டர் (Anaximandar) என்ற கிரேக்கக் கணித மேதை. வானவியலிலும் இவர் வல்லவர். சூரிய கிரகணம் எப்போது வரும் என்று கண்டுபிடிக்கும் முறை இவரது ஆராய்ச்சியின் பலன்தான்.அறிவுலகின் உச்சியைத் தொட வேண்டுமானால், நீ எகிப்துக்குச் செல். மத குருக்கள் நடத்தும் ரகசியப் பள்ளிக்கூடங்களில் (Mystery Schools) கற்க வேண்டும்” என ஆலோசனை கூறினார் அனாக்ஸிமாண்டர். அதன்படி பிதகோரஸ் எகிப்து சென்றார்.இந்த மத குருக்கள் நடத்திய பள்ளிகள் குருகுலம் போன்றவை. கட்டுப்பாடுகள் அதிகம். ஒழுக்கத்தோடு இருப்பவர்களே அறிவு தேடத் தகுதியானவர்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.பிதகோரஸை மாணவனாக ஏற்றுக் கொள்ள அவர்கள் பல நிபந்தனைகள் விதித்தார்கள். அவற்றுள் முக்கிய நிபந்தனை, பிதகோரஸ் 40 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். வயிற்றுப்பசியைவிட அறிவுப் பசி அதிகம் கொண்ட பிதகோரஸ் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு ஏற்றார்.பிதகோரஸின் மன உறுதியையும், அறிவு தாகத்தையும் கண்ட மத குருக்கள் அவரைத் தங்கள் பள்ளியில் மாணவனாக அனுமதித்தார்கள். கணித அறிவுக்குப் புடம் போடவும் இசையில் ஞானம் பெறவும் இந்த உபவாசம் அவருக்கு உதவியது.எகிப்து நாடு பெர்ஷிய மன்னர்களால் கைப்பற்றப்பட்டது. பிதகோரஸ் மெஸபடோமியா நாட்டின் பாபிலோன் நகருக்கு அனுப்பப்பட்டார். இங்கே கணிதம், வானியல், இசை ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவும் தேர்ச்சியும் பெற்றார்.பிதகோரஸ் உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்தார். அவர் இந்தியா வந்ததாகவும் புத்தரின் கொள்கைகளை ஆவலோடு கேட்டு அறிந்ததாகவும் செவிவழிச் செய்தி கூறுகிறது.பிதகோரஸின் புகழ் பரவியது. பணமும் புகழும் கிடைத்தவுடன் ஆசிரியர்களை நன்றியோடு நினைக்கும் மனிதர்கள் கோடியில் சிலரே.அவர்களுள் ஒருவர் பிதகோரஸ். அவரது ஆசிரியர் பெரெசைடெஸ் உடல் நலமில்லாமல் உள்ளார் என்பதைக் கேள்விப்பட்ட பிதகோரஸ், ஆசிரியர் எனக்கு தெய்வம். அவருக்கு உதவுவது என் கடமை” என்று விரைந்தார்.மரணப் படுக்கையில் இருந்த பெரெசைடெஸ் க்கு எல்லாப் பணிவிடைகளையும் பிதகோரஸ் பக்தியோடு செய்தார். பெரெசைடெஸ் அமரரானதுவரை பல நாட்கள் இந்தச் சேவை தொடர்ந்தது.தான் தேசம் தேசமாகப் போய்த் தேடிய அறிவை மாணவர்களுக்கு வாரி வழங்க வேண்டுமென்ற தாகம் பிதகோரஸுக்கும் வந்தது.இத்தாலி நாட்டில் கல்வி நிலையம் தொடங்கினார். கட்டுப்பாடும் ஒழுக்கமும் இங்கே வேதங்கள். மாணவர்கள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். முதலில் தியானம் செய்ய வேண்டும். மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும்.சலனம் இல்லாத சிந்தனையும், புத்துணர்ச்சியும் அப்போது ஏற்படும். இந்தத் தெளிவோடு, ‘நேற்று என்னவெல்லாம் சிந்தித்தோம், என்ன செயல்கள் செய்தோம்?’ என்று மனதுக்குள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவற்றுள் சரியானவை எவை, தவறானவை எவை என்று எடை போட வேண்டும்.இந்த அனுபவ அறிவின் துணைகொண்டு, ‘இன்று என்ன செய்ய வேண்டும்? நேற்றைவிடச் சிறந்தவனாக மாற நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சிந்திக்க வேண்டும். இந்த அடிப்படையில் இன்றைய எண்ணங்களையும் செயல்களையும் திட்டமிட வேண்டும்.அடுத்தது சத்தான காய்கனிகள் நிறைந்த காலை உணவு. தனியாக நடை, உடற்பயிற்சி இவற்றில் கவனம் வேண்டும்.உடலும் மனமும் துடிப்போடு இருந்து மதியம் வரை படிப்பு. பகல் உணவு ரொட்டியும் தேனும். சிறு சிறு குழுவாக அமர்ந்து உண்ண வேண்டும்.உணவுக்குப் பின், பள்ளிப் பூங்காவில் மாணவர்கள் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்கலாம். பின் மறுபடியும் தனியாக நடை.மாலையில் எல்லாரும் அமர்ந்து சத்தமாகப் படிக்க வேண்டும். பின் இரவு உணவு. சீக்கிரமே தூங்க வேண்டும். அதற்கு முன் தியானம், மந்திர உச்சாடனம்.இக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள்.எண்பதாவது வயதில் மரணம் தம்மைத் தழுவும்வரை பிதகோரஸ் அறிவைத் தேடினார். தான் கற்றதை, பெற்றதை மாணவர்களோடு முழு விருப்பத்தோடு பகிர்ந்துகொண்டார்.பிதகோரஸின் தேற்றம் மட்டும்தானா அவர் சாதனை? இல்லை. அந்தப் பட்டியல் மிக நீளமானது. அவற்றுள் சில:* கல்விக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் முதல் தேவைகள்.* நாம் வாழும் பூமி பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு பகுதி.* இசை ஒவ்வொரு மனிதனிடமும் வெவ்வேறு சலனங்களை ஏற்படுத்தும்.* இசையால் உடல், மன நோய்களைக் குணப்படுத்தலாம்.* சரியான வழிகளைக் கைப்பற்றினால், மனித ஆத்மா கடவுளோடு இணைய முடியும்.பிற்கால விஞ்ஞான வளர்ச்சி, இவற்றுள் சில கொள்கைகளை உண்மை என நிரூபித்துவிட்டது.நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிதகோரஸ் என்கிற விளக்கில் தங்கள் அறிவு தீபங்களை ஏற்றிக் கொண்டார்கள். இந்த அகல் வரிசை, அடுத்த தலைமுறையில் வந்த பேரறிஞர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ வழியாக, இன்றைய பரம்பரை வரை தொடர்கிறது.ஓர் அறிஞருக்கு, வணக்கத்துக்குரிய ஆசிரியருக்கு உலகம் இதைவிட உயர்வாக வேறென்ன மரியாதை வழங்கிவிட முடியும்?
நன்றி...
மாணவர்கள் நலம் கருதி.....
ஆ.சிவா...
No comments:
Post a Comment