மின்சார பல்பைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால், தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பட்டெனக் கூறிவிடுவீர்கள்.
அவர் மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஆயிரம் முறையாவது சோதித்துப் பார்த்திருப்பார்.
ஒரு நாள் எடிசனின் சோதனை வெற்றிபெற்றது. அவரது உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது எடிசன், அலுவலகப் பையனை அழைத்தார்.
‘‘இந்த பல்பைச் சோதனை செய்’’ என்றார் எடிசன்.
எடிசன் சொன்னவுடன் அவனுக்கு ஒரே பதற்றம். பல்பை வாங்கும்போதே தவறுதலாகக் கீழே போட்டுவிட்டான். எடிசனுக்குக் கோபம் வந்தது. ஆனால், ஒன்றும் சொல்லவில்லை. எடிசன் தன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவார் என்று அந்தப் பையன் பயந்தான்.
எடிசன் மீண்டும் ஒரு புதிய பல்பை உருவாக்கினார். மறுபடியும் அதே அலுவலகப் பையனை அழைத்தார்.
‘‘இந்தப் பல்பையாவது சரியாக வாங்கிச் சோதனை செய்’’ என்று சொன்னார் எடிசன்.
எடிசனின் இந்தச் செயல் அவரது உதவியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களுள் ஒருவர், ‘‘ஏற்கெனவே ஒருமுறை பல்பை உடைத்துவிட்டான், மீண்டும் அவனுக்கு எதற்கு வாய்ப்பு தர வேண்டும்?’’ என்று கேட்டார்.
இன்னொரு உதவியாளரோ, “மீண்டும் அவன் பல்பை உடைத்துவிட்டால் உங்கள் உழைப்பு வீணாகிவிடாதா’’ என எடிசனிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடிசன் பொறுமையாகப் பதில் கூறினார். “இந்தப் புதிய பல்பை உருவாக்குவதற்கு எனக்கு ஒரு நாள்தான் ஆனது. மீண்டும் அது கீழே விழுந்து உடைந்துவிட்டால், ஒரே நாளில் என்னால் புதிதாக இன்னொரு பல்பை உருவாக்கிவிட முடியும். ஆனால், இந்த வேலையை மறுபடி அவனிடம் ஒப்படைக்காவிட்டால், அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்துவிடுவான். அதை மீண்டும் அவ்வளவு எளிதாக அவனிடம் உருவாக்க முடியாது. அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை” என்று சொன்னார்.
#தலைவணங்குவோம் ♦♦♦
No comments:
Post a Comment