Monday, June 30, 2014

நாம் ஏன் பொய் சொல்கிறோம்? சில உளவியல் உண்மைகள்


 
சரி சரி அத விடுங்க, நமக்கு எதுக்கு ஊர் வம்பெல்லாம்?! நாம பதிவுச் செய்தியப் பார்ப்போம். மேல சொன்ன பாட்டுல வர்ற மாதிரி இல்லைன்னாலும், நாம எல்லாரும் எதாவது ஒரு தருணத்துல, எதாவது ஒரு காரணத்துக்காக “பொய்” சொல்லத்தான் செய்றோம். அந்தப் பொய்கள்னால சில சமயங்கள்ல நல்லதும் நடக்குது, பல சமயங்கள்ல கெட்டதும் நடக்க வாய்ப்பிருக்கு இல்லீங்களா? இதப் போய் ஏன்னு கேட்டா சுத்த மடத்தனமா இருக்கேன்னு உங்கள்ல சில பேரு நெனக்கலாம். அதுதான் இல்ல?!

நம்மோட கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்குமே ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட (உளவியல்) காரணங்கள் இருக்குங்கிறத உங்கள்ல பலர் ஒத்துக்குவீங்கன்னு நெனக்கிறேன். அதேமாதிரிதான் நாம பொய் சொல்றதுக்கும் சில உளவியல் காரணங்கள் இருக்கு. அது என்னென்ன, அதனால வர்ற நல்லது கெட்டது என்னென்ன, இப்படியான சில விஷயங்களைப் பத்தி (விரிவா) அலசப் போற “அலசல்” பதிவுதான் இன்றைய பதிவு!

 நாம் ஏன் பொய் சொல்கிறோம்?
 இதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லணும்னா, “நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும்  நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும்”தான்னு  உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க?!
“பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் “சுயமரியாதையுடன்” நெருங்கிய தொடர்புடையது. ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான்” அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் ‘மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக’ உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன் !

பொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்!

உங்களுக்கே தெரியும்  நாம சொல்ற எல்லாப் பொய்களுமே தீமையானது அல்ல என்று! சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றாங்க!
தன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்ள, அல்லது தான் ஒரு எளிமையானவன் என்பதுபோல காட்டிக்கொள்ளவேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல. ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்துவிடுபவை என்பதால் சமுதாயத்தின் பார்வையில் அவை குற்றங்களே.
தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதிசயம்!
பல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கைதான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் (?) குணாதிசயம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்!

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப்போய்விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம்பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது!
உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்?! அடப் பாவிகளா…..!!
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, “ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே” என்றார்களாம். அட….இது நல்லாருக்கே!
சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அப்படிப்போடு…..! ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும்  விளைவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே?!
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல இருக்கிறது இது…….

“நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்?!”
 
“ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்தவேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன்மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காகவேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்?!” 

“பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சிகொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்”

“கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்”

நண்பர்களே….இப்படியே எழுதிக்கிட்டே போனா, நானே நிறைய பொய்யான விஷயங்கள எழுதினாலும் எழுதிடுவேன் அப்படீங்கிறதுனால?!  , நாம இந்தப் பதிவ இத்தோட நிறுத்திக்குவோம். நன்றி.

ஆமா, இந்தப் பதிவு பத்தி நீங்க எதாவது பொய்…..மன்னிக்கணும் கருத்து சொல்ல விரும்புறீங்களா? 
உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
 
அன்புடன் சிவா ....

No comments: