Friday, August 30, 2024

மனைவி என்றும் மந்திர சாவி

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி...
 
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.. அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக, மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது...

கொல்லப் பட்டறை தொழில் ஒரு சமயம் நலிவுற்றது. அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. கொல்லன் சோகமே உருவாகி விட்டான். அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "எதுக்கு கலங்குறீங்க இந்த தொழில் இல்லைன்னா என்ன பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே.. அதை வெச்சு ராஜாவாட்டம் வாழலாமே" என்றாள்.

புது நம்பிக்கை, புது உற்சாகம்  கொல்லன் உள்ளத்தில்.  கொல்லன் இப்போது விறகுவெட்டி ஆனான். அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல்.. கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும் சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள்...
ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய் இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே".

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்... "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில், நம்ம வீட்டில் தினந்தினம்
நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும் இப்போ இப்படி வயிற்றைக்கட்டி வாழுறோமே அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு"..

"கண்ணு கலங்காதீங்க என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம் காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம் கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில் விறகு வெட்டியானவன் இப்போது விறகுக்கடை முதலாளியானான். வருமானம் பெருகியது. அப்புறமென்ன வீட்டில் கறிசோறு தான் ஆனால்...,

வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன? வந்தது கெட்ட நேரம் விறகு கடையில் தீ விபத்து.. அத்தனை மூலதனமும் கரிக் கட்டையாகி விட்டது தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,
"கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து
எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும்" என்றார்கள்....

மனைவி வந்தாள் கண்ணீரை துடைத்தாள் அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள். கண்ணீர் மல்க சொன்னாள் "இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு கரியாத்தானே ஆகியிருக்கு நாளைலயிருந்து கரி வியாபாரம் பண்ணுவோம்"..

தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.
'ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் அன்பு செலுத்தவும்' அன்பான மனைவி அமைந்தால் முடங்கி கிடக்கும் முடவனும் கூட  எவரஸ்ட் சிகரம் தொடுவான்..

நன்றி
பகிர்வு பதிவு...

Saturday, August 24, 2024

உன்னை இழந்து விடாதே..

உன்னை இழந்து விடாதே

ஒரு ஆசிரியர் 15 ஆண்டுகள் கழித்து தனது மாணவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று அழைத்திருந்தார். அனைவரும் அவர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் மிகவும் பிரபலமானவர்கள் அரசியல் போலீஸ் தொழிலதிபர் பேப்பர் கடை வைத்திருப்பவர்  துணிக்கடை வைத்திருப்பவர் அரசாங்க அதிகாரி அமைச்சர் என்று பல துறைகளில் பெரிய ஆட்கள்.

 அனைவருமே இது ஒரு அழகான வாய்ப்பாக கருதி ஒன்றாக வந்து சேர்ந்தார்கள் துணி வியாபாரி அமைச்சரிடம் சென்று எப்படிடா இருக்கிறாய் என்றும் பேப்பர் காரன் போலீஸ் அதிகாரியிடம் என்னடா இவ்வளவு குண்டு ஆயிட்ட என்றும் பேசினார்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களுக்கு பேச்சு வரவில்லை அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அதுவரை அந்த ஆசிரியர் அங்கு வரவே இல்லை.

 வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தார் சுட சுட தேநீரோடு சிலவகை கோப்பை எடுத்துக் கொண்டு வந்தார். அனைவரும் ஆசிரியர் வந்ததும் எழுந்து நின்று தேநீர் வாங்க அங்கே இருந்த கோப்பைகளை எடுக்க செய்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான கோப்புகளை தேர்வு செய்தார்கள்.

 ஒருவர் சில்வர் மண் பீங்கான் வெள்ளி கண்ணாடி போன்ற பல வகைகளை தேர்வு செய்தார்கள் ஆசிரியர் அமைதியாக பார்த்தார். எல்லோரும் இப்பொழுது கேட்கப் போகும் கேள்விக்கு உண்மையாக பதில் சொல்லுங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவரும் ஒரே மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று கேட்டார் அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது இல்லை சார்.

 பள்ளியில் படிக்கும் போது இருந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் இப்போது ஏதோ ஒன்று தடுக்கிறது அது என்ன என்று எங்களால் கூற முடியவில்லை இதோ என் அருகில் இருப்பவனிடம் நான் பயங்கரமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் இன்று ஏதோ ஒன்று அவனை நெருங்க முடியாமல் தடுக்கிறது என்று கூறினார். இந்தப் பாடத்தை புரிய வைக்கவே தான் நான் உங்களை அழைத்தேன். 

நீங்கள் அனைவரும் வெவ்வேறு துறையில் ஒவ்வொரு பதவியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் நீங்கள் அனைவரும் வாழ வேண்டியது உங்களது வாழ்க்கை தான் ஆனால் நீங்கள் எல்லோரும் உங்கள் துறையை தான் நம்பி மதிப்பதால் மற்றவர்களிடம் நெருங்க முடியவில்லை உங்கள் தகுதி துறை என்பது வேறு

 காபி கோப்பைகள் போல உங்களது பதவிகள் அலங்காரமாக  வேறுவேறு ஆக இருந்தாலும் நமக்கு தேவை அதில் உள்ளே இருக்கும் காபி தான் அதுபோல் நாம் பதவிகளில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த மகிழ்ச்சி நாம் அனைவருக்கும் உள்ளத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 உங்கள் பதவிகளை தகுதிகளை இல்லத்தில் நுழையும்போதே கழட்டி வைத்து விடுங்கள் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லத்தில் ஒருவனாகவும் வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நிறைய பெரிய இடங்களில் மகிழ்ச்சி இருப்பதில்லை ஆனால் சிறிய  குடிசையில் சந்தோஷத்தோடு சிரிப்பொலிக்கு இருக்கும்.

 அவர்கள் சிரிப்பதற்கு எந்த பதவியும் பணமும் தடுக்கவில்லை வசதியானவர்கள் தங்கள் பதவிகளை நினைத்து தங்கள் திறமைகளை நினைத்து இல்லத்தில் இன்பமாக இருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.. நீ வெளியில் பெரிய அதிகாரியாக இருக்கலாம் வீட்டுக்குள் உன் குழந்தைக்கு தந்தையாக உன் மனைவிக்கு கணவனாக உன் அப்பா அம்மாவுக்கு குழந்தையாக மாறி நடந்து பார் உன்னுடைய வாழ்வு இனிக்கும்.

 உன் பதவி அதிகாரத்தை உன் இல்லத்துக்குள் நுழைக்காதே உன் இன்பமான வாழ்க்கை எனும் தேநீர் உனக்கு கிடைக்காமல் போய்விடும்  

எழுத்தாளர் சாந்தி வெற்றிவேல்...

நன்றி
பகிர்வு பதிவு

Sunday, August 18, 2024

வாழ்க்கை தத்துவம்...

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை. 

அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். நான் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.

அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்..’

இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.

`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.

மூன்றாவது நாள். மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை... மற்றொன்றில் இல்லை.

அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.

`அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.
அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தேன். 

அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். என் கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.

நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!

எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்........

நன்றி...
பகிர்வு பதிவு

Sunday, August 11, 2024

புண்ணிய கணக்கு...!

பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...

300-ரூபாய்....
200-ரூபாய்க்கு வருமா? 
சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது....

அண்ணே இந்த வழியா போனா
நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...?
ரோட்டுக்கடைதான் சார்... 
அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்....  

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது....
ஒரு நடுத்தரவயது அம்மா,
அவரது நெற்றி மற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது.... 

வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.
இட்லி, தோசை என சாப்பிட்டோம்.

எவ்ளோம்மா?
60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
100-ரூபாய் கொடுத்தேன்...
மீதியை... சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா...
இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க...
சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா?

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ண... 

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...
இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
200-ரூபாய் போதும்
என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கணம் மூச்சு நின்றது.....

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.
உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து  விடுங்கள்...
புண்ணியம் நம்மை தேடி வரும்.
நன்றி..

பகிர்வு பதிவு

Thursday, August 01, 2024

நான்..யார்...?

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது!

வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன.

ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.

அதற்க்கு அவர் சொன்ன விடை -

“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படி செய்வது நமக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். 

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

நன்றி

பகிர்வு பதிவு