#எங்கே_நாணயம்?
எங்கள் வீட்டுக்கு ஒரு மீன்காரர் வந்து வாரம் ஒருமுறை மீன் கொடுத்துவிட்டு போவார். அவரிடம் பேரம் பேசமாட்டேன் என்பதால் அவரும் பெரிதாக ஆசைப்படமாட்டார். நியமான விலைக்கு கொடுப்பார். எனக்கு என்ன மீன் பிடிக்கும் என்று அவருக்கு தெரியும்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் மீன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
நல்ல மீன்களை விற்கும் முன் எங்க வீட்டுக்கு வந்துவிட்டு பிறகுதான் வேறு இடங்களுக்கு செல்வார். திடீரென்று ஒருநாள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார்.
ஏன் தயங்குறீங்க சும்மா சொல்லுங்கன்னு சொன்னேன். ரெண்டு மூணு நாளா வியாவரமே இல்ல கொஞ்சம் நெருக்கடி கொஞ்சம் பணம் வேணும் உங்களுக்கு ஒரு வாரத்துல திருப்பி தாரேன்னு கேட்டார்.
இப்படியான எளிய மனிதர்களின் உறவுகள் கெட்டு இருக்கிறது இப்படி பணம் கொடுத்து.
அவர்களை குற்றம் சொல்லவில்லை அவர்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் இடையவே நிறைய வாழ்கை போராட்டம் இதில் வாங்கும் கடனை திருப்பி கொடுக்க வாய்ப்பே இருக்காது. பிறகு நம் முகத்தில் எப்படி முழிப்பது என்று அச்சத்தில் நம்மை பார்க்கவே வர மாட்டார்கள்.
இப்படி ஏற்கனவே நிறைய பேரை இழந்து இருக்கிறேன். அதற்காக அவர்கள் மீது வருத்தமெல்லாம் இல்லை. அப்படியான எளிய மனிதர்களுக்கு கடன் கொடுத்து அவர்களை கடனாளி ஆக்கி விட்டோமே என்ற கவலை எனக்கு.
நான் அவரிடம் சொன்னேன் எனக்கு நீங்க கேட்ட பணம் தருவதில் ஆட்சேபனை இல்லை ஆனால் ஒரு கண்டிசன் இந்த பணம் உங்களுக்கு தீபாவளிக்கு நான் கொடுக்கும் பரிசா வச்சுக்கோங்க. அதை திருப்பி எல்லாம் தர வேண்டாம்னு சொன்னேன். அன்று அவருக்கு இருந்த பிரச்சினை அவ்வளவு போல சரி என்று சற்று தயக்கத்துடனேயே வாங்கிகிட்டு போனார்.
பிறகு ஒருவாரம் கழித்து அண்ணே நல்ல வஞ்சிரம் மீன் இருக்கு சும்மா ஸ்லைஸ் போட்டா பட்டாசா இருக்கும் வெட்டவான்னு கேட்டார். வஞ்சிரம் பொரிக்க கொஞ்சம் சாளை மீன் குழம்புக்கு என்று வாங்கி எவ்வளவு என்று கேட்டேன் 650 ரூவா ஆச்சுண்ணே. என்ன வஞ்சிரம் இவ்வளவு குறைவா இருக்குன்னு கேட்டதுக்கு கேரளாவுல ஈஸ்டர் அதுனால அங்கே போனா தான் வில கூடும் இல்லன்னா பொதுவா இந்த விலைதான் என்று சொல்லிட்டு போனார்.
இது போக அவர் மீனை சுத்தம் செய்து வெட்டி முடிப்பதற்குள் நிறைய விஷயங்கள் பேசி விடுவோம். அவர் மகன் ஒரு மரைன் எஞ்சினியர். ஆறுமாதம் கப்பலில் பணி மீதம் ஆறுமாதம் வீட்டில் இருப்பார். அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கேன் இந்த வேலை செட்டாவாது நீ வரும் போது வேலையை விட்டுட்டு வந்துடுன்னு சொல்லிட்டேன் அப்படின்னு நிறைய பகிர்ந்துக்குவார். அவனை படிக்க வைக்க நிறைய கடன் பட்டிருக்கார்.
அண்ணன் வீடு பக்கத்து தெருதான் அங்கேயும் மறக்காம கொண்டு போய் குடுத்துட்டு போங்கன்னு சொன்னேன் சரி என்று சென்று விட்டார். அபீஸ் கிளம்பும் போது எங்க வீட்டில் கேட்டாங்க வஞ்சிரம் என்ன விலை கொடுத்து வாங்கினீங்கன்னு. கிலோ ஐநூறு ரூபாய்னு வாங்கினேன்னு சொன்னேன். அண்ணன் வீட்டில் 850 ரூபாய்க்கு கொடுத்துட்டு போயிருக்கார் ஏன் இப்படி செஞ்சார்னு அடுத்த வாரம் வந்தா கேளுங்கன்னு சொன்னாங்க.
அப்போது தான் எனக்கு உரைத்தது. மனிதர் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கிறார் என்று. அவசரத்துக்கு என்னிடம் வாங்கிய காசை எனக்கே தெரியாமல் திருப்பி கொடுத்துட்டு போயிருக்கார். இப்படியான எளிய மனிதர்களிடம் தான் வாங்கிய காசை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற அந்த உன்னதமான எண்ணம் இருக்கிறது.
இது ஒருமுறை இரண்டு முறை அல்ல பலமுறை நடந்திருக்கு பல்வேறு மனிதர்களால்.
ஒருமுறை சென்னைக்கு பகல் பயணம் செல்லும் போது சேலத்தில் ஒரு வயதான பாட்டி எங்கள் ரயில் பெட்டியில் ஏறிச்சு. மாம்பழம் ஒவ்வொன்றும் மெகா சைசில் இருந்தது. என்ன விலை என்று கேட்ட போது ஒரு பழம் 80 ரூவா கண்ணு என்று சொன்னது குறைந்தது ஒன்றரை கிலோவாவது இருக்க வேண்டும் ஒரு பழம். சரி பாட்டி ரெண்டு பழம் கொடுங்கன்னு காசு கொடுத்து வாங்கிக்கொண்டேன்.
என்னிடம் வியாபாரத்தை முடித்து கொண்டு பாட்டி பக்கத்து பெட்டிக்கு போய் விட்டது.வண்டி ஜோலார்பேட்டை நெருங்கும் போது அந்த பாட்டியை பார்த்தேன் எல்லா பழங்களும் விற்று தீர்ந்திருந்தது. மெல்ல நடந்து வந்து என் அருகில் வந்தவுடன் பாட்டி மடியில் ஒரு பெரிய மாம்பழத்தை கட்டி வச்சிருந்தாங்க. எடுத்து என்கிட்டே கொடுத்தாங்க.
“பாட்டி ஏற்கனவே ரெண்டு பழம் வாங்கிட்டோம்ல போதும் எங்களுக்கு எங்க வீட்டில் மொத்தமே நாலு பேர்தான் இதுவே ரொம்ப அதிகம்” னு சொன்னதுக்கு அந்த பாட்டி
“இல்ல கண்ணு அந்த கோச்சுல எல்லாம் அம்பது ரூவாய்க்கு கொடு கொடுன்னு கேட்டு வாங்கிட்டாங்க. நீ என்கிட்டே பேரம் பேசல எனக்கு மனசே கேக்கல ராத்திரி தொண்ட குழில சோறு இறங்காது இந்த பழத்துக்கு நீ ஏற்கனவே காசு கொடுத்தாச்சு வாங்கிக்க கண்ணுன்னு சொல்லிச்சி”
அந்த பாட்டியின் நேர்மையை பார்த்து கண்களில் மெல்லிய நீர் படலம் படர்ந்து கண் ஓரங்களில் கண்ணீர் ஒதுங்கியது.
இப்படியான நேர்மையான மனிதர்களால் எளிமையானவர்களால் அழகான இந்த உலகம் பேரழகாகி விடுகிறது. காசு பணம் எல்லாம் மதிப்பில்லை இப்படியான மனிதர்களுக்கு அன்பை விதைப்போம் எல்லோரிடத்தும் என்ற வாழ்வியல் தத்துவங்களை நமக்கு எளிமையாக உணர்த்திவிட்டு போய் விடுகிறார்கள்.
மனிதர்கள் எவ்வளவு அன்பை விதைக்கிறார்கள் சக மனிதர்களிடத்தில் என்று நினைத்த போது எனது வாழ்வில் நான் சந்தித்த அன்பான மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள்.
பதிவில் பிடித்தது!
படித்தேன்!! பகிர்ந்தேன்!!! 🙏